Thursday, November 26, 2009

தமிழ்ஸ்டுடியோ.விற்கு நன்றி

”நல்ல இலக்கியத் தரம் வாய்ந்த பதிவுகள் தமிழில் சற்றுக் குறைவுதான். இருந்தாலும் அதற்கான முயற்சிகளில் பல்வேறு தரப்பட்ட ஆர்வலர்களும் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அது போன்ற நல்ல முயற்சிகளை அணைவரும் தொடங்க வேண்டும். தூறல் கவிதை எனும் இவரது வலைப்பூவின் பெயரே கவிதை நயமானது. மேலும் சிறுகதைகள், புத்தக அறிமுகம், கவிதைகள் என மிக சிறந்த கட்டுரைகளும், படைப்புகளும் இந்த வலைப்பக்கத்தில் உலா வருகின்றன. அதிலும் மிக முக்கியமாக ஸ்ரீ நாராயணகுரு பற்றிய புத்தக அறிமுகத்தை குறிப்பிட்டு ஆக வேண்டும். ஒரு சிலப் பதிவுகளை தவிர்த்து பார்த்தால் தமிழின் சிறந்த வலைப்பூக்களில் இதுவும் ஒன்று என்று கூறலாம். இங்கு பதிவிடப்பட்டுள்ள கட்டுரை குறித்த உங்கள் ஐயங்களை, கலந்துரையாடல்களை அவரது வலைப்பூவிலேயே தொடருமாறு கேட்டுக் கொள்கிறோம். இது நல்ல கட்டுரைகளை கொண்ட வலைப்பூக்களை அறிமுகம் செய்யும் பகுதி மட்டுமே.”





Tuesday, November 24, 2009

சாளரத்தில் தெரியும் வானம் – தொடர்-

என் பார்வையில் படைப்பாளிகள் - கவிஞர் இசை
isai
கவிஞர் இசை
வெவ்வேறு காலக்கட்டங்களில், சூழலில்,அனுபவங்களில், மனோ நிலைகளில் ஒரு கவிஞன் தன் கவிதைகளை எழுதுகிறான்.அவற்றை ஒரு தொகுப்பாகப் படிக்கமுடிகிறபோது, தொகுப்புகளின் அடிநாதமாய், ஒரு மையப்புள்ளி இருந்துவிடுகிறது. அந்த மையத்தை, ஒற்றுமையை ஒற்றைச்சொல்லிலோ அல்லது ஓரிரு வரிகளிலோ அடையாளப்படுத்திவிடமுடிகிறது. அந்த மையமே கவிஞனின் தனித்தன்மையாகிறது.சிறப்புத்தன்மையை அளிக்கிறது.அந்த வகையில் கவிஞர் இசையின் கவிதைகளின் அடிநாதமென இயலாமைகளைப் பற்றிய பரிகாசம் கலந்த குரல் எனச் சொல்லலாம் என நினைக்கிறேன்.
 
லௌகீக உலகின் நிர்ப்பந்திக்கப்பட்ட வாழ்வை வாழவிரும்புபவர்களுக்கு இரண்டே வழிகள்தான் உள்ளன.ஒன்று, விதிக்கப்பட்ட வாழ்வை மாற்ற முயல்வது. மற்றொன்று அதனோடு பணிந்து ஒத்துப்போய்விடுவது(.மடிந்துபோகுதல் வாழவிரும்புபவர்களுக்கான தெரிவல்ல)..இதையே கவிஞர் இசையின் கவிதை வரிகளில் சொல்லலாமெனில்
 
”ஒரு பிடிவாதமான சிறுமியை
பலம்பொருந்திய ஒற்றைக்கை
அனாயாசமாக இழுத்துச் செல்வதைப்போல”



இருந்துவிடுகிற வாழ்வில்

”இச்சாக்கடையில்
உறுமீன் ஏது
கிடைக்கிற குஞ்சுகளைக்
கொத்தித் தின்
என் கொக்கே”



எனச் சமரசம் செய்துகொள்ளவேண்டியதன் துயரை, அவலத்தை,இயலா நிலையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
பல்வேறு இயலாமைகளைப் பட்டியலிடுவதாக அமைந்துள்ள இவரின் கவிதைகள் எளிமையையும், இயல்பான வசீகரம் கொண்ட மொழியையும் கொண்டுள்ளது.துயரங்களையும் பரிகாசம் கலந்து எழுதுவது இவருடையத் தனிச்சிறப்பு.

”இன்றைய வாழ்க்கையின் லௌகீக நிகழ்வுகளுக்கும் தனது கனவுகளுக்குமிடையேயான முரண்கள், தவிர்க்கவியலாத சில சமரசங்கள், வாழ்க்கையின் இயல்பாகிப்போன குரூரங்களின் முன் ஒரு பார்வையாளனாகவே நிற்கும் இயலாமை என எல்லாமும் நகையுணர்வுடன் கூடிய கிண்டலான பார்வையில் கவிதைகளாக உருமாற்றம் பெற்றுள்ளன”
என்கிற வரிகள் ,இவரின் உறுமீன்களற்ற நதி தொகுப்பில் அமைந்துள்ள செறிவான, தெளிவான மதிப்புரை.

மேலும் கவிஞர் இசையின் பார்வையிலேயே அமைந்துள்ள பின்வரும் சுயமதிப்புரையை இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாயிருக்கும்.
 
‘என் கவிதைகள் துயரத்தையே அதிகம் பேசுகின்றன. ஆனால் துயரத்தை மட்டும் பேசு என்று நான் அதற்கு கட்டளையிடுவதில்லை. அப்படி கட்டளையிடவும் முடியாது. ஆனாலும் அவை துயரத்தையே தன் பேச்சாக தெரிவு செய்கின்றன. “நான் எவ்வளவு பெரிய சுக போகி . . . , களியாட்டுக்காரன் . . . , அறை அதிரச் சிரிப்பவன் . . . , எத்தனை காதல்களை கொள்பவன் . . . , எத்தனை காதல்களை கொடுப்பவன் . . . இப்படி அழுது வடியாதே” என்று எத்தனையோ முறை நான் கெஞ்சியாகிவிட்டது. ஆனாலும் “துயரத்தின் கைமலராக” இருப்பதையே அவை விரும்புகின்றன. இதை யோசிக்கையில் ஒவ்வொரு படைப்பாளிக்கும் தன் எழுத்தில் எதைச் சொல்ல வேண்டும் என்பதில் அவன் அறிந்தோ அறியாமலோ ஒரு தேர்வு இருக்கவே செய்கிறது என்று தோன்றுகிறது. அல்லது ஒவ்வொரு படைப்பாளிக்கும் அவன் படைப்பு மனத்தை தூண்டிவிடுவது சில குறிப்பிட்ட விஷயங்களாக அமைந்துவிடுகின்றன என்றும் கருதலாம். என் கவிதையில் தொழில்படும் அங்கத உணர்வே இந்த அழுகையின் அலுப்பிலிருந்து வாசகனை விடுவித்து ஒருவித புத்துணர்வையும் வாசிப்பின்பத்தையும் அளிக்கிறது என்று நான் கருதிக் கொண்டிருக்கிறேன்.”


”என் கவிதைகளில் சொற் சிக்கனம் இருக்க வேண்டும் என்பதைக் காட்டிலும் இசைத்தன்மை கூடி வர வேண்டும் என்பதையே நான் விரும்புவதாக சந்தேகிக்கிறேன். இசையின் பெரும் துடிப்பு எதுவும் என் கவிதைகளில் இல்லாத போதும், என்னளவில் ஒரு இசை அதில் இயங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்று விருப்புகிறேன். இதற்காக கவிதைக்கு தேவையற்றது என்று சொல்லப்படுகின்ற சில வாக்கியங்களையும் நான் கவிதையில் அனுமதிப்பதாக நினைக்கிறேன். இந்த வாக்கியங்கள் எனக்கான பிரத்தியேக கவிதை மொழி ஒன்றை உருவாக்குவதிலும் துணை செய்கின்றன என்று கருதுகிறேன்.”


புத்தாயிரம் ஆண்டிற்குப்பிறகு எழுதத்தொடங்கியுள்ள கவிஞர்களில் இசை-யின் வரவு மகிழ்ச்சியளிக்கிறது.இவரின் இயற்பெயர் ஆ.சத்தியமூர்த்தி.கோவை மாவட்டம் இருகூரில் வசிக்கிறார்.அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராகப் பணியாற்றுகிறார்.இவரின் கவிதைத்தொகுப்புகள்,

1.காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி(2002)
2.உறுமீன்களற்ற நதி(2007),காலச்சுவடு பதிப்பகம்.

இசைக்கருக்கல் (டங்கு டிங்கு டு) என்கிற வலைப்பூ எழுதுகிறார்.

உறுமீன்களற்ற நதியிலிருந்து சில கவிதைகள்
அழகான சொற்றொடர்


குரலுயர்த்த இயலாதது உனது நா
தழுதழுப்பதொன்றே அதன் இயல்பு
நீ காண்டீபம் உயர்த்தும்
ஒவ்வொரு முறையும்
யாருன் காலில் விழுந்து
மன்றாடுவது
மனைவியா குழந்தையா
பற்கடிப்பும் முணுமுணுப்புமே
நம் ஆகச்சிறந்த தீரச் செயல்கள்
என்றாகிவிட்டது
அழுவதற்கென்றே செய்யப்பட்ட
முகங்களைக் கொண்டு
அழுதுகொண்டிருக்கிறோம்
அழுதோம்
அழுவோம்
“கண்ணீர்த் துளிகள்
சாம்ராஜ்யங்களையே சரித்துவிடும்”
இது ஒரு அழகான சொற்றொடர் நண்பா.

தற்கொலைக்கு தயாராகுபவன்


தற்கொலைக்கு தயாராகுபவன்
பித்து நிலையில்
என்னென்னவோ செய்கிறான்
அவன் கையில்
குடும்ப புகைப்படமொன்று
கிடைக்கிறது .
அதிலிருந்து தனியே தன்னுருவை
பிரித்தெடுக்கும் முயற்சியில்
கத்தரிக்க துவங்குகிறான்
எவ்வளவு நுட்பமாக செயல்பட்டும்
கைகோர்த்திருக்கிற
தங்கையின் சுன்டுவிரல் நுனி
கூடவே வருவேனென்கிறது

ஒரு கூரான கத்திக்கு முன்னால்


ஒரு கூரான கத்திக்கு முன்னால்
உங்களால் செய்ய இயன்றதென்ன
ஒரு கூரான கத்திக்கு முன்னால்
நீங்கள் அற நெறிகளைப் பிரசங்கிக்கலாகாது
ஏனெனில்
உலகின் முதல் கத்தி
உண்மையைக் கிழிப்பதற்கென்றே வடிவு
செய்யப்பட்டது
ஒரு கூரான கத்திக்கு என்றுமே
தோல்வி பயம் தோன்றுவதில்லையாதலால்
சமரசத்திட்டங்கள் எதையும்
நீங்கள் முன்வைக்க இயலாது
ஒரு கூரான கத்திக்கு முன் தோன்ற
கடவுளர்க்கும் குலை நடுக்கம் உண்டென்கிறபடியால்
உங்கள் அபயக்குரல்கள் செவிமடுக்கப்படுவதில்லை
ஒரு கூரான கத்திக்கு முன்னால்
உங்களுக்கு நன்றாக நினைவிருக்கவேண்டும்
நீங்கள் சே குவேரா அல்ல
ஒரு கூரான கத்திக்கு முன்னால்
உங்களால் செய்ய இயன்றதென்ன
மன்னித்தருள வேண்டி
கத்தியின் கால்களைக் கட்டிக்கொண்டு
மன்றாடுவது அல்லது
அதன் கணக்கில் மேலும்
ஒரு வெற்றிப்புள்ளியைக் கூட்டி
துடிதுடித்தடங்குவது.

சகலமும்


சகலமும் கலைந்து சரிய,
அழுதழுதடங்கியவன்
தன்னருகே வந்து
குழைந்த நாய்க்குட்டியை
மெல்லமெல்லத் தடவிக்கொடுத்தான்
அது அவன்
உடலாகவும் இருந்தது

பிதாவே

ஒரு பந்தென இருக்கிறோம்
கடவுளின் கைகளில்
அவரதைத் தவறவிடுகிறார்
தொப்பென வீழ்ந்து விடாதபடிக்குத்
தன் பாதத்தால் தடுத்து
முழங்காலால் எற்றி
புஜங்களில் உந்தி
உச்சந்தலை கொண்டு முட்டி
இரு கைகளுக்கு இடையே
மாறி மாறித் தட்டி விளையாடுகிறார்
மறுபடியும் பாதத்திற்கு விட்டு
கைகளுக்கு வரவழைக்கிறார்
‘' நான் உன்னை விட்டு
விலகுவதுமில்லை;உன்னைக் கைவிடுவதுமில்லை''
பிதாவே தயவு பண்ணி எம்மைக் கைவிடும்.
நன்றி – தடாகம்
Thadagam_Logo_Eng

Wednesday, November 11, 2009

சாளரத்தில் தெரியும் வானம் – தொடர்-கவிஞர் முகுந்த் நாகராஜன்

என் பார்வையில் படைப்பாளிகள் - ச.முத்துவேல்

கவிஞர் முகுந்த் நாகராஜன்

நவீன கவிதைகள் என்றாலே புரியாமல் எழுதுவது என்கிற ஆரம்பக்கட்ட வாசிப்புப் புரிதலை தகர்த்தெறியும் கவிஞர்களுள் முகுந்த் நாகராஜன் மிக முக்கியமானவர் .இன்றைய தலைமுறைக் கவிஞர்களுள் குறிப்பிடத்தகுந்தவர். புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கும் யாராவது ஒருவர் பெரும்பாலும், பக்கத்திற்குப் பக்கம் புன்முறுவல் புரிகிறாரெனில் அவர் படிப்பது முகுந்த் நாகராஜனின் கவிதைத்தொகுப்பாகவும் இருக்கலாம்.குட்டிக்குட்டிக் கதைகளைப் போலிருக்கும் இவர் கவிதைகள் , கவிதைக்கான பிரத்யேகமான மொழி ஏதும் இல்லாமல் எளிய பேச்சு மொழியிலேயே இருப்பதால் சுவாரசியத்தோடு வாசகரை இழுத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை..எளிய மொழியில் கூறப்பட்ட நிகழ்வுகள்/ காட்சிகள் என்பதால் மனதில் நிலைக்கவும் நினைவு கூரவும் மிக எளிதாகிவிடுகிறது.இதனால் இவரின் கவிதைகள் பகிர்தலுக்கு உகந்ததாகவும், பரவலாகப் பேசப்படுவதற்கும் ஏதுவாயிருக்கிறது.அவ்வளவாகப் பதிவாகாத குழந்தைகளின் உலகை நிறையவும், நிறைவாகவும் பதிவு செய்பவர் முகுந்த். உன் –உனக்கு, என் – எனக்கு, என்பதுபோல் நான் – எனக்கு என்று சொல்லாமல் குழந்தைகள் ‘நானுக்கு’ என்று சொல்வதைப் பலரும் கண்டிருக்கமுடியும். குழந்தைகளின் பார்வை புதிய பார்வை. எவ்வித முன்முடிவுகளும், கற்பிதங்களும் அற்ற பார்வை. குழந்தைகளின் செய்கைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது நம்மை மறந்து புன்முறுவல் செய்துகொண்டிருப்போம். அதுபோன்ற செய்கைகளை , நிகழ்வுகளை அப்படியே எழுத்துக்குக் கடத்தி, கூடவே தம்முடைய ரசனையான, படைப்பூக்கம் மிக்க நவீன சிந்தனைகளோடும், கூறுமுறையோடும் கலந்து தருவதால் முகுந்தின் கவிதைகள் தரமானவையாகவும், தனித்தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது.


இவர் கவிதைகளில் திரும்பத் திரும்ப வருவது குழந்தைகள், பால்ய நினைவுகள், எளிய மனிதர்கள், குடும்பம், வீடு, தனிமை, பிரிவு, கிருஷ்ணன், நீலம், ரயில் பயணம் இன்ன பிற. பால்யத்தை தொலைத்துவிட்ட தவிப்பும், அதை ஈடு செய்துகொள்ளும் விதமாக தன் பால்ய நிகழ்வுகளை நினைவுகூர்ந்து மகிழ்ந்துகொள்வதாகவும் இருக்கிறது நிறைய கவிதைகள். மரபும், பாரம்பரியமுமான வாழ்விலிருந்து அன்னியப்பட்டு நமது தேவைகளுக்கேற்ப சடங்குகளை, வாழ்க்கைமுறைகளை மாற்றிக்கொண்டும், சுருக்கிக்கொண்டும், தொலைத்துக்கொண்டும் இருக்கும் நிலை குறித்த துயர் கொண்ட கவிதைகள் இவருடையது.பழையப் பெட்டியை, பரணை, அலமாரியைச் சுத்தம் செய்வதுபோல் இவர் தன் பால்யத்தை நினைவுகூர்ந்து எழுதுகிறார். இவரின் கவிதைகள் அனைத்தையும் ஓரளவுப் படித்துவிடும் ஒருவருக்கு, முகுந்த் பற்றிய வாழ்க்கைச்சித்திரம் நன்றாகவே பிடிபட்டுவிடும். அந்தளவுக்கு தன் வாழ்வனுபவங்களிலிருந்தும், அன்றாடங்களிலிருந்தும் எடுத்து எழுதப்படும் அசலானவை இவர் கவிதைகள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்தே நிறைய நல்ல கவிதைகள் எழுதியிருக்கிறார் என்பதிலிருந்து இவரின் அவதானிப்புத் திறனை வியக்காமல் இருக்கமுடியவில்லை.வேலைக்குச் செல்லும் நிர்ப்பந்தமான, இயந்திர வாழ்விலிருந்து விலக்கு அளிக்கும் விடுறை நாளை, கொண்டாடும் , அதற்கு ஏங்கும் மனப்பாங்கு சில கவிதைளில் தென்படுகிறது.
பேப்பர் போடும் பையன், சித்தாள், சீரியல் செட் போடுபவன், சுரங்க நடைபாதையில் பொம்மை விற்பவன், பூ விற்வள்,ரயிலில் காலண்டர் விற்கும் கண்பார்வையற்றவன் ஆகிய எளிய மனிதர்களின் மீதான அக்கறையோடு கவனிக்கப்பட்ட, அவர்களின் நிலைக்காக கழிவிரக்கம் கொள்ளும் இரங்கிய உள்ளம் வாசகரையும் துயர்கொள்ளச் செய்பவை. உறுத்தலை ஏற்படுத்தக்கூடியவை.பெண்களின் திறமை வீணடிக்கப்பட்டு சமையற்கட்டில் முடிந்துபோகும் பரிதாபமான, யதார்த்தமான சூழல்களையும் சில கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார்.
இணையம் மூலம் எழுதி, பிறகு தனிப்பட்ட முறையில் தொகுப்பை வெளியிட்டு பரவலான கவனம் பெற்ற இவரின் தன்னம்பிக்கை குறிப்பிடத்தகுந்தது.


இவரின் கவிதைத்தொகுப்புகளாவன,


1. அகி(டிசம்பர் 2003)
2. ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது( டிசம்பர் 2006)
3. கிருஷ்ணன் நிழல்


வீணாப்போனவன் என்கிற பெயரில் வலைப்பூவும் எழுதிவருகிறார்.இவரின் சில படைப்புகள் கிழே .,

சித்தாள் வாழ்ந்த இடம்


முப்பது கம்பெனிகளும்
இரண்டு வெளிநாட்டு வங்கிகளும் இருக்கும்
அந்தப் பெரிய கட்டிடத்தைத்
தன் மகனுக்கு அறிமுகப்படுத்தினாள்
அந்த சித்தாள்,
‘ நாங்கள் கட்டியது” என்று சொல்லி.
கட்டும்போது இருந்த இடம்
எல்லாம் காண்பித்தாள் வெளியே இருந்தபடியே.
முற்றிலும் மாறிப்போய்,
தான் உள்ளே கூட நுழைய முடியாததாய்
ஆகிப்போன அந்தக் கட்டிடத்தைப்
பெருமையுடன் பார்த்தாள்,
அந்த வங்கியின் நியான் போர்டு இருக்கும் இடத்தில்
புடவை காயப் போட்டது தனக்கு மட்டுமே தெரியும்
என்பதை திடீரென்று உணர்ந்தவளாக.


கிணறு இல்லாத ஊர்


கடைசியாய் ஒருமுறை சூடம் காட்டிவிட்டு,
வாடிப்போன எருக்கம்பூ மாலையை
கழற்றிவிட்டு,
களிமண் பிள்ளையாரைக் கிணற்றில் போட்டது
நேற்று மாதிரி இருக்கிறது.
நிறைய பிள்ளையார்களை விழுங்கிய என்
சின்னவயசின் பெரிய கிணறு
என் ஞாபகத்தில் மட்டும் இருக்கிறது.
ஃப்ளாட்டின் சின்ன அறையில்
கல்லுப் பிள்ளையாருக்குப் பூஜை செய்துவிட்டு
பக்கத்து ஃப்ளாட்காரர்களுடன்
கொழுக்கட்டை பரிமாறிக்கொள்வதும்
நன்றாகத்தான் இருக்கிறது
பிள்ளையார் படம் ஈமெயிலில் வந்ததும்
சந்தோசமாகத்தான் இருக்கிறது.
கிணறுதான் குறைகிறது.
அதை யாராவது அனுப்புகிறீர்களா
அட்டாச் பண்ணி?

மழை அளவு


’கன மழை’ என்றார்கள் டிவியில்.
கடந்த 25 வருஷங்களில்
பதிவான மழை அளவுகளைவிட
அதிகம் என்றும் சொன்னார்கள்.
பெரியவர்கள் ‘ நல்ல மழை’ என்றும்
இளைஞர்கள் ‘செமை மழை’ என்றும்
சொல்லிகொண்டார்கள்
‘எவ்ளோ தண்ணீ’ என்று
ஆச்சரியப்பட்டது குழந்தை.


மனப்பாட மீன்குட்டி


குறுகிய பால்கனியில்
முன்னும் பின்னும் நடந்து
பாடம் படிக்கிறாள் சிறுமி.
அவள் உதடுகள்
முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன
கண்ணாடித் தொட்டியின் மீன்குட்டியைப் போல்.


சொந்தமாக விழுந்து உடைந்த கோப்பை

விளையாட்டில் வீட்டுப் பொருட்களை
காலம் காலமாக
உடைத்து வருகின்றனர் குழந்தைகள்.
உடைந்த சத்ததுக்கும்
ஓடி வந்து பெரியவர்கள் போடும் சத்தத்துக்கும்
நடுவில் இருக்கும் மவுனத்தில்
சிதறிய துண்டுகளில் இருந்து
தப்பிக்கும் வாக்கியங்களை
இயற்றுகிறார்கள்.
போன வாரம் கண்ணாடிக் கோப்பை ஒன்றை
கை தவறி உடைத்த அதிமதுரா
அவள் அம்மாவுக்கு
'சொந்தமா விழுந்து உடைஞ்சி போச்சு'
என்ற வாக்கியத்தைப் பரிசளித்தாள்.
உடைந்த கோப்பை இருந்த இடத்தில்
அந்த வாக்கியத்தைப் பொருத்தி வைத்து
வருவோர் போவோரிடமெல்லாம் எடுத்து எடுத்துக்
காட்டிக் கொண்டிருக்கிறாள் அவள் அம்மா.


ஈரம் போக


கை, கால், முகத்தை எல்லாம்
ஈரம் போக துடைத்துக் கொண்டேன்.
இந்த நாக்கை என்ன செய்வது.

நன்றி- தடாகம்

Thadagam_Logo_Eng

Sunday, November 1, 2009

சாளரத்தில் தெரியும் வானம்-கண்மணி குணசேகரன்

என் பார்வையில் படைப்பாளிகள் - ச.முத்துவேல்


      Thadagam : Muthuvel - Saalarathil Theriyum Vaanam
சாளரத்தில் தெரியும் வானம்

கண்மணி குணசேகரன்

'இந்த உலகத்தில்
ஒரு கோடியே நூற்றியெட்டு
துயரங்கள் இருக்கின்றன.
வரலாறு,தத்துவம் மற்றும்
இலக்கியங்களால்
இன்னும் ஆயிரத்திற்கும் அதிகமான
துயரங்களைக் கண்டறிய முடியவில்லை.
(கவிஞர் இசையின் கவிதையிலிருந்து)


இவ்வுலகில் இன்னும் அறியப்படாத துயரங்கள் நிறையவே இருக்கின்றன.இலக்கிய வாசிப்பு என்பது நடுத்தர மக்களிடையேதான் அதிகம் என்று கணிக்கமுடிகிறது. நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களைப் பற்றிய வாழ்வியல் பதிவுகளே இதுவரை பதிவாகிக்கொண்டு வந்துள்ளது. ஏனெனில், எழுதியவர்களின் பின்புலம் அவ்வாறானதாய் இருந்திருக்கிறது.கல்வி வாய்ப்புகள் ஓரளவு பெருகியுள்ள தற்போதைய சூழலில், இலக்கியம் என்பதும் பல்வேறு தரப்பட்ட மனிதர்களிடமிருந்து வெளிப்பட்டு செழுமையாகத் திகழ்கிறது.ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களும் ஓரளவு கல்வி கற்று எழுதத்துவங்கியுள்ளனர்.இவர்களின் எழுத்து அனுபவப்பூர்வமானதாகவும்,புதிய வீச்சோடும் திகழ்கிறது.கண்மணி குணசேகரன் என்கிற படைப்பாளி இவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.


இவரின் கதை மாந்தர்கள் விளிம்பு நிலை மனிதர்கள்.கிராமத்து விவசாயக்கூலிகள், பன்றி மேய்ப்பவர், சாவு மேளம் அடிப்போர், நலிந்து வரும் கூத்துக்கலைஞர்கள் போன்றவர்களாவர். இந்த மனிதர்களின் அகவுலகம் பற்றி,இவர்களின் உலகம் சொற்பமானதாயிருப்பதை அறியச் செய்யும் எழுத்து.இவர் கதைகள் பேசுவது இம்மாந்தர்களின் வாழ்வு இன்னல்களை, சிக்கல்களை.ஒரு செய்திக்கும், இலக்கியப் படைப்புக்கும் இருக்கும் வேறுபாடு என்னவாக இருக்க முடியும்? அந்த வேறுபாட்டை இவர் தன் எழுத்தில் மிகவும் இயல்பாகத் தக்கவைக்கிறார்.ஒரு முதியவருக்கு இருக்கும் அனுபவத்தோடு இவரின் படைப்புகளைப் பார்க்கும்போது இவரின் அவதானிப்புத் திறன் ஆச்சரியமளிக்கும்.ஒரு கதையில் கதைசொல்லியின் குரல், உணர்வு ஆகியவற்றோடு நின்றுவிடாமல் அக் கதையில் வரும் எல்லாக் கதாபத்திரங்களின் உணர்வுகளையும்,சூழல்களையும்,அவர்களின் பார்வையையும் பதிவு செய்திருப்பார்.பெண்களின் மனவுணர்வுகளையும், அவர்களின் அந்தரங்கச் சிக்கல்களையும்கூட மிகத் துல்லியமாய் எழுதியிருக்கிறார்.இவரின் எழுத்துக்களம் கிராமங்கள். நடு நாடு என்று வர்ணிக்கப்படும் கடலூர்,விருத்தாச்சலம் சுற்றுவட்டார செம்புலக் கிராமங்கள். கிராம, வேளாண் வாழ்வின் நுண்தகவல்கள் அனுபவத்தின் விளைவால் இவருடைய ஆக்கங்களில் விரவிக்கிடக்கும். நவீன இலக்கியம் என்கிற பெயரில் உடலுறவுக்காட்சிகளை விலாவாரியாக எழுதிக்குவிப்பவர்கள் மத்தியில் அதுபோன்ற சூழலை எழுதும்போதுகூட மிக நாசூக்காக ஆபாசமில்லாமல் எழுதும் பண்பு இவரிடம் இருக்கிறது. நடு நாட்டு வட்டார மொழியிலும், யதார்த்தவாதத்தையும் எழுதுபவர்.சிறுகதை,கவிதை, புதினம், கட்டுரைகள், எனப் பன்முகத்திறன்கொண்ட, தமிழின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளி.


கண்மணி குணசேகரன் கடலூர் மாவட்டம், திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), அருகிலுள்ள மணக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர்.இயற்பெயர் அ.குணசேகர்.1971 ல் பிறந்த இவர் ,அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(I T I), இயந்திர வாகனப் பராமளிப்பாளராகப் பயிற்சி பெற்று,தற்போது,அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில்,பணி புரிகிறார்.திறந்த வெளிப் பல்கலைக் கழகம் மூலம்,இளநிலை வணிகம் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்.


நடு நாட்டு சொல்லகராதி என்ற ஒன்றைத் தன் தனிப்பட்ட முயற்சியால் உருவாக்கியிருக்கிறார். ஒரு பல்கலைக்கழகமோ, பெரிய குழுவோ செய்ய வேண்டிய வேலையை தனி மனிதராகச் சாதித்திருக்கிறார். அதுவும், விளம்பர நோட்டீசுகள் போன்ற தாள்களைப் பயன்படுத்திப் பின்னால் வெள்ளைப் பக்கங்களில் எழுதித் தகவல் திரட்டியிருக்கிறார். எனவேதான், அவரே தன்னுடைய அஞ்சலை மற்றும் நடு நாட்டு சொல்லகராதி ஆகிய இரண்டையும் முத்திரைப் படைப்புகளாக குறிப்பிடுகிறார். அஞ்சலைப் போன்றொரு புதினத்தை ஒரு கிராமத்தான்தான், விவசாயிதான் எழுத முடியும். கண்மணி அப்படிப்பட்டவர்தான்.செம்புலத்தின்மீது வலிந்து படியும் (நெய்வேலியின்) சாம்பல் கரியைப் பற்றிய கதைகளையும் நிறைய எழுதியிருக்கிறார்.


இவரின் ‘அஞ்சலை’ என்கிற புதினம் கோழிக்கோடு பல்கலைக் கழகத்தில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டுக்கான,இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது பெற்றவர்.


இவரின் படைப்புகளாவன;


1.தலைமுறைக் கோபம்- கவிதைகள்
2.காட்டின் பாடல் கவிதைகள்
3.கண்மணி குணசேகரனின் கவிதைகள் (முழுத் தொகுப்பு)
(காலடியில் குவியும் நிழல் வேளை)
4.வெள்ளெருக்கு - சிறுகதைகள்
5.ஆதண்டார் கோயில் குதிரை - சிறுகதைகள்
6.உயிர்த் தண்ணீர் - சிறுகதைகள்
7.அஞ்சலை - புதினம்
8.கோரை - புதினம்
9.நடு நாட்டு சொல்லகராதி


மேலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.கவிதைகளைவிட உரை நடையே இவரின் ஆகச் சிறந்த படைப்புக்களமாக இருக்கிறது.


அவரின் சில குறுங்கவிதைகள்


பாம்புச் சுவடு மீது
பதிந்து கிடக்கிறது
அழகாய்
பிஞ்சுப் பாதம்.
*
பள்ளிக் காலம்
கள்ளிக் கிறுக்கல்
இன்னும்
காயாத
பால் எழுத்து.
*
உதிர்ந்து கிடந்த
பூக்கள்...
அழகு.
கூட்டும்போதுதான்
குப்பையாகிவிட்டது.
*
ஏற்றிவிட்டுத்தான்
கரைத்தாள்.
கூழ் குடிக்கும் ஆசையில்
இறங்கி வந்துவிட்டது
வளையல்
*
கொலுசு இல்லா
பாத வெறுமையை
வளைத்து
நிறைவு செய்தது
வரப்பில் சாய்ந்த
தங்க மணிக் கதிர்.
*
கருவறை
சேதியறியா
பால் தாரை
சுரக்கிறது
இறந்தே பிறந்த
குழந்தைக்கும்
*
வாசலுக்கே வந்து
கதவைத் தட்டுகின்றன
கூடை அரும்புகள்.
கொடுத்துவைத்தவைதான்
நகரத்துத் தேனீக்கள்
*
கட்டு
காம்புகளுக்குத்தான்
இதழ்களுக்கல்ல
இடமாற்றத்திலும்
அழகாய்த்தான் பூத்தன
சரக்கூந்தல்
அரும்புகள்

நன்றி - தடாகம்
*

Thadagam_Logo_Eng