Saturday, October 5, 2013

சாவித்ரி 1941



நேற்று( 04.10.13) முரசு தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு சாவித்ரி திரைப்படம் திரையிடப்பட்டதை ஆர்வத்தோடு பார்த்தேன். சத்யவான்- சாவித்ரி என்கிற புராணக் கதைதான். ஷாந்தி ஆப்தே என்னும் இந்தி நடிகை, சாவித்ரியாக நடித்திருக்கிறார். தமிழில் நடித்த முதல் வ மாநில நடிகை இவர்தானாம். நாரதர் வேடத்தில் எம் எஸ் சுப்புலக்ஷ்மி நடித்திருந்தார். சத்யவானாக இப்படத்தின் இயக்குனர் ஒய் வி ராவ் என்பவரே நடித்திருந்தார்.  நல்ல அழகாய் இருந்ததோடு,  நன்றாக நடிக்கவும் செய்தார். எமனாக நடித்தவர் வி ஏ செல்லப்பா. இவர் பாடும் ஒரு பாடல் நன்றாக இருந்தது.

இப்படத்தில் நடிப்பதற்காகவே, சுமார் ஓராண்டுக்காலம், ஷாந்தி ஆப்தே தமிழ் கற்றுக் கொண்டாராம். தமிழ் கற்றுத்தந்தவர்கள் படத்தின் வசனகர்த்தாவான டி சி வடிவேல் நாயகர் மற்றும் இன்னொரு பெண்மணியாம். ஆனால், இந்தப் படத்தில்  தமிழ் பேச அப்படியொன்றும் சிரமம் ஷாந்தி ஆப்தேக்கு இருந்திருக்காது எனலாம். ஏனெனில், படத்தின் உரையாடல்கள் புராணக்காலத்து கதை என்பதாலோ, அல்லது 1941 கால கட்டம் என்பதாலோ, பெரும்பாலும் வடமொழிச் சொற்களையே நடிகர்கள் அனைவரும் பேசினர். ஆனால், 1941 காலகட்டம் என்று சொல்வதும் பொருத்தமான காரணமாக இருக்கமுடியாது. ஏனெனில், இதே காலக்கட்டத்தில் வெளிவந்த சபாபதி, இதற்கும் முந்தைய சில சமூகக் கதைப் படங்களையும் பார்த்திருக்கிறேன். பேச்சு மொழியில் இந்தப் படத்தினளவுக்கு வடமொழி நடைமுறையில் இருந்திருக்கவில்லை.ஷாந்தி ஆப்தே பார்ப்பதற்கு கொஞ்சம் ஆண்மைத்தனம் கொண்டவராக தெரிகிறார். சில க்ளோசப் காட்சிகளில் அழகாக இருக்கிறார்.

சத்யவானுடன் வீட்டில் தங்கியிருக்கும் காட்சியில் சாவித்ரி சமையல் செய்கிற ஒரு காட்சி இடம் பெற்றிருக்கிறது.விறகு அடுப்பு எரிவதும், சப்பாத்திக் கட்டையில் சப்பாத்தி திரட்டுவதாகவும் காட்சி இருக்கிறது. சத்யவான் காலத்திலேயே சப்பாத்திதான் சாப்பிட்டார்களோ? அதுவும், பூரிக்கட்டையில் உருட்டி, திரட்டி.

படத்தின் கதை மிகவும் சின்னது என்பதாலோ என்னவோ, படத்தை இழுக்க, திரைக்கதை அமைக்க திணறியிருக்கிறார்கள். கல்யாணத்தில் மந்திரங்கள் சொல்வது, யாகங்களில் மந்திரங்கள் சொல்வது போன்ற காட்சிகள் நீளமாக உள்ளது. ஒருமுறை யாகம் செய்யும் காட்சியில் கும்பலில் ஒருவராக மட்டுமே நின்றிருந்தார் வி என் ஜானகி.
கே.சாரங்கபாணி பார்ப்பனராக வந்து  நவீன பார்ப்பன மொழியில் பேசுகிறார். (படத்தில் பலர் பேசுவதும் இப்படியேதான்). எனக்கு, இவரைப் பார்த்தால் கே ஏ தங்கவேலுக்கு அண்ணனாக இருப்பாரோ என்று தோன்றும். டி எஸ் துரைராஜும் நடித்திருக்கிறார். கதையை இழுப்பதற்கு உதவியிருக்கிறார். அவ்வளவுதான்.

மாயாஜால காட்சிகள்  கொண்ட படம். ப்ரிண்ட்  நன்றாக இருந்ததால் ஒலியும் ஒளியும் நன்றாக இருந்தது.
நன்றி :   தி இந்து, ராண்டார் கை.