Saturday, January 17, 2009

எஸ். ராமகிருஷ்ணனுடன் 2 நிமிடப் பேச்சு.

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு 10-01-08 ,சனிக்கிழமை சென்றிருந்தேன். நிறைய புத்தகங்களை வாங்கிவிடக் கூடாது என்ற தீர்மானத்தோடேயே போனது நகைப்புக்குரிய முரண். ஆனால்,புத்தகக் காட்சியரங்கிற்காக ஆவலோடு காத்திருந்தேன். ஏற்கனவே உள்ள புத்தகங்களையே இன்னமும் படிக்காமல் வைத்திருப்பதுதான் காரணம்.


அடையாளம் பதிப்பகத்தின் கடைக்குள் கண்மணி குணசேகரனின் உயிர்த் தண்ணீர் (சிறுகதைகள்), மற்றும் அ.வெண்ணிலாவின் ‘நீரில் அலையும் முகம்’ (கவிதைகள்), வாங்கிக் கொண்டிருந்தபோது, வாசலில் உரக்கவும், மிரட்டல்போலவும், ஒரு குரல் இலக்கியம் பேசிக்கோண்டிருந்தது.
யாரது என்று எட்டிப் பாரத்தால் நம்ம எஸ்.ராமகிருஷ்ணன். உடன் உரையாடிக் கொண்டிருந்தவர் ந.முருகேச பாண்டியன் அவர்கள். அவரை நேரில் பார்த்தபோது நன்கறிந்த இலக்கிய முகம் என்று மட்டும் பிடிபட்டுவிட்டது. ஆனால், யாரென்பது தெரியவில்லை. நல்ல வேளையாக, கடைக்காரர் அப்போதுதான் தொலைபேசியில் இவர்கள் இருவரும் இங்கிருக்கும் விபரத்தை யாருக்கோ சொல்லிக் கொண்டிருந்தார்.


மாலையில் உயிர்மை கடையில் இருப்பதாகத்தானே இணையத்தில் குறிப்பிட்டிருந்தார். என்று யோசித்தவாறு அவரிடம் போனேன். நான், எனது நண்பனும், வகுப்புத் தோழனுமான மணிமாறனுடன்தான் செல்வதாகத் திட்டம் வைத்திருந்தேன். ஆனால், அவனுக்கு அன்று முக்கியமான வேலை (உயர்நீதி மன்ற வழக்கறிஞர், நல்ல இலக்கிய வாசகன்) ஒன்று வந்துவிட்டதால் வரமுடியாத காரணத்தை வருத்தத்தோடுத் தெரிவித்திருந்தான். அவனுக்கு திரௌபதை கூத்துப் பற்றியும், நாடகங்கள் பற்றியும் அறிய வேண்டியிருந்தது. அதற்காக, எஸ்ரா வைச் சந்திக்கவேண்டும் என்பது எங்களின் திட்டமாயிருந்தது. ஆனால் அவனால் வரமுடியாமல் போகவே, நானே கேட்டுவிடுவது என முடிவு செய்து அவரிடம் போனேன்.
தங்கள் இணையப் பதிவுகளைப் படித்து வருவதாகச் சொன்னேன். நல்லாருக்கா என்று ஆர்வமாகக் கேட்டார். எனக்கு வேண்டியதைப் பற்றி விபரங்களைச் சொன்னேன். சிறிதும் தயங்காமல், ஆர்வத்தோடு உதவி செய்தார். அவருடைய செல்பேசி எண்ணை வேண்டுமானால் பெற்றுக்கொண்டு நண்பரைப் பேசச் சொல்லுங்கள் என்றார். நான் உடனடியாக, என் கைபேசியிலிருந்து அவனை அழைத்து, ‘ மணி, எஸ்ரா பேசறார். பேசு’ எனக் கொஞ்சமும் மரியாதையில்லாமல் அவர் முன்னாலேயே சொல்லிவிட்டேன். இப்போது வருத்தப்படுகிறேன்.அவர் விளக்கமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். நான் முருகேசபாண்டியன் அவர்களிடம் சற்று நேரம் மொக்கைப் போட ஒதுங்கினேன். எஸ்ரா பேசி முடித்ததும் நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டேன். (செல்பேசி எண்ணையும் கேட்டு வாங்கிக் கொண்டேன். யார் கேட்டாலும் தரமாட்டேன். ஆ.. அஸ்கு...புஸ்கு)


புத்தகக் காடசியரங்கில் நான் சந்தித்த மற்ற சில பிரபலங்கள் அழகிய சிங்கர், ரா.ஸ்ரீனிவாசன், பழனிவேள், மற்றும் உன்னதம் ஆசிரியர்(கௌதம சித்தார்த்தன் என்று நினைக்கிறேன்).


இரண்டு இளைஞர்கள்,தலையணை அளவான புத்தகங்களாகவே வாங்கிக் கொண்டிருந்தனர். வினோதமாகப் பார்த்தேன். ஒரு இளம்பெண் மற்றுமொரு இளைஞர் தமிழினியில் நம்ம தல ஜெமோ புத்தகங்களை என்ன ஏது என்றெல்லாம் ஆராயாமல், எல்லாவற்றிலிருந்தும் ஒன்றை எடுத்து வாங்கிக் கொண்டு போனார்கள். அட! நம்ம ஆளுங்க ! (ஆனா,நான் வாங்காமலே இப்படிச் சொல்லிக்கக் கூடாது)
.

Tuesday, January 13, 2009

கண்மணி குணசேகரனின் அஞ்சலை

அசலான , துல்லியமான எழுத்து


கண்மணி குணசேகரன் ,2007 ஆம் ஆண்டில், 40 வயதிற்கும் குறைந்த இளம்படைப்பாளிகளுக்கு அளிக்கப்படும் சுந்தர ராமசாமி விருது பெற்றவர்.

கண்மணி குணசேகரனின் அஞ்சலை என்கிற புதினம் தமிழினி பதிப்பகத்தின் இரண்டாவது பதிப்பாக வெளிவந்துள்ளது.

கண்மணி குணசேகரன் ஒரு சாதாரண ITI படித்த தொழிலாளி. அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் பணிபுரிகிறார். சிறுகதை,கவிதை, புதினம், கட்டுரைகள், எனப் பன்முகத்திறன்கொண்ட, தமிழின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளி.நடு நாட்டு சொல்லகராதி என்ற ஒன்றைத் தன் தனிப்பட்ட முயற்சியால் உருவாக்கியிருக்கிறார். ஒரு பல்கலைக்கழகமோ, பெரிய குழுவோ செய்ய வேண்டிய வேலையை தனி மனிதராகச் சாதித்திருக்கிறார். அதுவும், விளம்பர நோட்டீசுகள் போன்ற தாள்களைப் பயன்படுத்திப் பின்னால் வெள்ளைப் பக்கங்களில் எழுதித் தகவல் திரட்டியிருக்கிறார். எனவேதான், அவரே தன்னுடைய அஞ்சலை மற்றும் நடு நாட்டு சொல்லகராதி ஆகிய இரண்டையும் முத்திரைப் படைப்புகளாக குறிப்பிடுகிறார். அஞ்சலைப் போன்றொரு புதினத்தை ஒரு கிராமத்தான்தான், விவசாயிதான் எழுத முடியும். கண்மணி அப்படிப்பட்டவர்தான்.

அஞ்சலையின் சிறப்புகளாக நான் கருதும் சிலவற்றை (ஒழுங்கற்ற முறையில் ) பட்டியலிடுகிறேன்.
முதலாவதாக, ஒரு பெண்ணை மையமாக வைத்த புதினத்தை ஒரு ஆண் எழுதியிருப்பது வரவேற்கத் தகுந்தது. நடுநாடு என்று சொல்லப்படும் முந்திரிக்காட்டுப் பகுதியின் செம்மண் புழுதி, படிக்கிறவர்களின் கால்களிலும் ஒட்டிக் கொண்டுவிடும் அளவுக்கு இவரின் விவரிப்புகள் ,ஒரு திரைக்கதை போல எழுதப்பட்டுள்ளது. ஒரு கதையை 4 வரிகளிலும் சொல்லிவிடமுடியும்.400 பக்கங்களுக்கும் எழுதலாம். 400 பக்கங்கள் எழுத ஏதோ ஒரு திறன் தேவைப்படுகிறது.அது கண்மணிக்கு மிக நன்றாக வாய்த்திருக்கிறது.


ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால், அது ஒரு குழுவினரின் உழைப்பு. ஆனால், ஒரு திரைப்படைத்தை பார்ப்பதுபோல் நம் கண்முன் காட்சிகளை துல்லியமாக விவரிக்கிறார்.


பட்ட காலிலேயே படும். கெட்ட குடியே கெடும் என்பார்களே அதுபோல அமைந்ததுதான் அஞ்சலையின் வாழ்வு. அஞ்சலை என்கிற தலித் பெண்ணின்
வாழ்வில் மட்டும் ஏன்தான் இப்படியெல்லாம் நடக்கிறதோ என்கிற பச்சாதாபம் நமக்கே ஏற்படுகிறது.முதல் கணவன், ஆளே மாறிப்போய் ஏமாற்றுகிறார்கள் என்றால், இரண்டாவது கணவனின் பெயர்கூடத் தெரியாமல் திருமணம் நடக்கிறது.

”நேற்று மணக்கொல்லையில் விடிந்தபோது, இன்று தொளாரில் விடிந்தது”என்று ஒரு இடத்தில் சித்தரிப்பு வரும். இதுதான் அஞ்சலையின் வாழ்க்கை.

அஞ்சலை வரப்பில் நடந்துபோகிறாள் என்றால், அங்கிருப்பது வரப்பும், அவளும் மட்டும்தானா? அணில் இருக்கிறது.அது பழம் தின்னுகிறது. முந்திரி மரங்கள் இருக்கிறது. அந்த முந்திரி மரங்களைப் பற்றிய குறிப்புகளை விளக்குகிறார்.

தேங்காய் எண்ணெய் பனிக்காலத்தில் உறைந்துபோய் இருப்பதை ஒரு இடத்தில் குறிப்பிட்டிருப்பார்.

அவளின் கெட்ட நேரம் ஒரு கணவன் என்பது இல்லாமல் இருவருக்கு வாழ்க்கைப்பட நேர்கிறது. எனினும், சோரம் போவளாக இல்லை.

ஒரு கிழவன்/கிழவிக்கிருக்கும் அனுபவப் பக்குவத்தோடு எழுதியுள்ளார். அதிலும் பெண் வாழ்வை, வலியை, உணர்வை, பழக்க வழக்கங்களை எழுதியிருப்பது வியக்க வைக்கிறது.

”கையெடுத்துக் கும்பிட்டாள் பால் சுறாக்காரனையும்,தன் அக்கா வீட்டுக்காரனையும் மானசீகமாய்.,” என்று ஒரு இடத்தில் வரும். நெகிழவைக்கும் தருணங்கள் அவை.

”தண்ணீர் பட்டு நனைந்த தரை புழுதியடங்கிப் போயிருந்தது” என்று ஒரு இடத்தில் சம்பந்தமே இல்லாதது போல் ஒரு சித்தரிப்பு வரும். ஆனால், இது நுணுக்கமான, குறியீட்டு சித்தரிப்பு என்றே நான் கருதுகிறேன்.

ஒரு கட்டத்தில்,அஞ்சலை மற்றும் அவளின் நடு அக்காவும் உரையாடும்காட்சிகள் நெகிழ்ந்து கண்ணில் கண்ணீர் வரவழைத்து விடுகிறது.

”இல்லாதவளின் கதை” என்கிற தலைப்போடு இரண்டாவது பதிப்புக்கு கண்மணி முன்னுரை எழுதியுள்ளார். இதுதான் இக்கதையின் மையமோ என்று நான் யோசிக்கிறேன். இருக்கப்பட்டவளாக அவளது பெரிய அக்காவே இக்கதையில், இம்மையத்துக்கு வலு சேர்க்கும் உதாரணமாக வந்து போகிறாள்.

“அவசரத்துல அண்டாக்குள்ள கை நுழையலயாம்” போன்ற கிராமத்து சொலவடைகளும், உருவகங்களும் நிறைந்து காணப்படுகிறது.

இன்னும் நிறைய எழுதலாம். எனக்குத்தான் தெரியவில்லை.

நூல் விபரம்

அஞ்சலை ( புதினம்)
ஆசிரியர்-கண்மணி குணசேகரன்

யுனைடெட் ரைட்டர்ஸ் (தமிழினி)
63, பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை, சென்னை, 14.
விலை .ரூ.160
பக்கங்கள் 320

Monday, January 12, 2009

நெடுஞ்சாலையைக் கடந்துசெல்லும் நத்தை.

நெடுஞ்சாலையைக் கடந்துசெல்லும் நத்தை.

கவிஞர் மயூரா ரத்னசாமி அவர்களின் முதல் கவிதைத் தொகுப்பாக வந்துள்ள நூல்தான் ”நெடுஞ்சாலையைக் கடந்துசெல்லும் நத்தை.” கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான பரிசைப் பெற்றிருப்பதாக அறிய முடிகிறது.
வாழ்வைப் பித்து நிலையில் அல்லாமல் தத்துவார்த்தமாக அணுகும் நடைமுறை இவர் கவிதைகளில் உள்ளது.சிந்தனையில், நவீனத்தன்மை நன்றாகப் புலப்படுகிறது. கலவையான கவிதைகள் தென்பட்டாலும் பெரும்பாலும் நவீன கவிதைகள். காதல், நகைச்சுவை, உணர்ச்சிமயம், சாதாரணத் தன்மை கொண்ட கவிதைகள் எனவும் சில தென்படுகிறது. முதல் தொகுப்பு என்பதால் ஆரம்ப நிலையில் எழுதப்பட்ட, இதழ்களில் அச்சாகியும்விட்ட ,கவிதைகளை தொகுப்பில் இடம்பெறச் செய்திருக்கக்கூடும். எனினும் இவை மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தென்படுகிறது. அடுத்தத் தொகுப்புகளில், கவிதைகளில் நிச்சயம் அடர்ந்த ,செறிவுமிக்க, நவீன சிந்தனையுள்ள கவிதைகள் மட்டுமே நிறைந்திருக்கும் என்பது திண்ணம். கவிதாயினி அ.வெண்ணிலா மற்றும் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் அணிந்துரை எழுதியுள்ளனர்.

இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளாக நான் குறிப்பிடுவது இடங்கொடுத்தான்,உறிஞ்சான், உறவு, முகங்கள், செகப்பு, சித்திரம்- 1, போன்ற இன்னும் சில கவிதைகளையும் சொல்லமுடியும். நகரம் சார் வாழ்விலுள்ள சிக்கல்கள், செயற்கைத்தனம், நடைமுறை இயலாமைகள் “காவல்”, ”நகரத்து மழை” போன்ற கவிதைகளில் பகடியோடுப் பதிவாகி, பலவிதமான சிந்தனைகளை நம்முன் எழுப்புகிறது.கிராமத்தான்களை நகரவாசிகள் கேலி செய்கிறார்கள்.
மாறாக, நகரவாசிகளை கிராமத்தான்கள் கேலிசெய்யும்போது, அதிலுள்ள உண்மை நன்றாகவே சுடத்தான் செய்கிறது. காலுடைகாதை என்கிற கவிதையில் உண்மையிருப்பினும், என்னால் அதை நகைச்சுவைக்காக எழுதப்பட்டதாகவே எடுத்துக்கொள்ள முடிகிறது. மாதிரிக்கு நான் விரும்பிய சில கவிதைகள்.

இடங்கொடுத்தான்

இடதுக்கும் வலதுக்குமான
வேலைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன

வலதுகாலை முதலில்
எடுத்துவைக்கவேண்டும்
லாபமென்று சொல்லி
இரண்டாவதாக
உள்ளே வரவேண்டும் இடதுகால்

இடது கூடை சுமக்க
வலது கை பூப்பறித்தது
இரண்டும் தொடுத்து
இரண்டும் எடுத்துக் கொடுத்து
இரண்டும் சேர்ந்து வணங்கி
கற்பூரம் ஒற்றியபின்
விபூதி வாங்க வலதுகை முன்னே வரும்

வலது நீருற்ற இடதுகை
குண்டி கழுவ வேண்டும்
சாப்பாட்டைத் தொட்டுவிடக்கூடாது
கை மறதியாய்

கை தட்டும் ஓசை கேட்டு
திரும்புகையில்
வலது கையால் சைகை செய்தழைத்து
வலதுகை குலுக்கிப் பாராட்டினார்
திறமையாக கதிரடித்தீரென்று

திருச்செங்கோட்டில்
அருள்பாலிக்கும் அர்த்த நாரீஸ்வரா!

முகங்கள்

நிச்சயிக்கப்பட்ட முன்முடிவுகளை நோக்கி
நகர்ந்துகொண்டிருந்தது மாறுவேடப் போட்டி

ராஜா வேடத்தில் வாள்வீசி நடந்த சிறுவன்
கிரீடம் சரிய இறங்கி வந்து சொன்னான்,
“கழற்றிவிடு அம்மா தொப்பி கனக்கிறது”

உலக அழகி வேடமிட்ட ஒன்றாம்வகுப்புக் குழந்தை
மேடையில் சிறுநீர் கழித்து அம்மாவிடம் அடிபட்டது

காந்தி வேடதாரி கதராடை புரள வந்து
“குளிரெடுக்குது சட்டை போட்டுவிடு” என்றான்

வேஷம் கலைத்து விளையாடப் போய்விட்டனர்
குழந்தைகள்
பரிசளிப்பு விழாவில் கத்திக்கொண்டிருந்தனர்
பெற்றோர் வேடமிட்டவர்கள்.

செகப்பு

எல்லாருக்கும்
அக்காதான்
மருதாணி
வச்சு விடுவா

அக்கா அரைச்சு வச்சா
அப்பிடி செவக்கும்
கோவப்பழமாட்டா

கல்யாணத்துக்கு
முந்தின நாள்
வச்சுவிட்டா
கை நெறைய

செகப்பு நகத்தடியியிலெ
வெள்ளை முளைச்சப்ப
மத்தியான பஸ்சுலே
அக்கா வந்தா
தனியா

ஆரு வச்சு விட்டது
அக்கா கண்ணுக்கு
மருதாணி.


சித்திரம்: 1

அச்சிறுமி ஒன்றாம் வகுப்பு வாசிக்கிறாள்.
தொட்டியில் மீன் வளர்க்கிறாள்.ஓயாமல் துரத்தித் துரத்தியே ஒரு மீனைக்கொன்றுவிட்டது மற்றொரு மீன்.துரத்தும் மீனை வேறு தொட்டிக்கு மாற்றிய பிறகு ஒரு நாள் எந்த மீனும் பழையபடி நீந்துவதில்லை எனப் புகார் செய்தாள் அச்சிறுமி. அவளது அப்பா சுறு சுறுப்பா இருக்கிற மீனா, மத்த மீன்களைக் கடிக்காத ஜாதியா பார்த்து கொடுங்க என்றார். கடைக்காரர் யோசித்தபடி இருக்க, நல்லா நீச்சல் தெரிஞ்ச மீனாக கொடுங்க என்றாள் அச்சிறுமி.

நூல் விபரம்

நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தை( கவிதைகள்)
ஆசிரியர்: மயூரா ரத்தினசாமி
தொடர்புக்கு 9360789001

முதல் பதிப்பு: ஜூன் 2007
வெளியீடு : மயூரா பதிப்பகம்
37, தொட்டராயன் கோயில் வீதி,
காட்டூர்,கோயமுத்தூர் 641009
விலை ; ரூ. ௪0


Friday, January 2, 2009

ரசிகை-தபசி

இனிய வலைப்பூ நண்பர்களுக்கு

மனம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2009







கவிஞர் தபசி ”மயன் சபை”,”இன்னுமிந்த வாழ்வு”, ”குறுவாளால் எழுதியவன்”,”ஒரு நாளும் ஒவ்வொரு நாளும்”(1994), ”இன்னும் இந்த வாழ்வு”(2000) ”தோழியர் கூட்டம்” 2003, மற்றும் ”ரசிகை”(2003) ஆகிய கவிதைத் தொகுப்புகள் கொண்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.



ரசிகை தொகுப்பில் பின் அட்டையில் காணப்படும் வரிகள் இவ்வாறு உள்ளது. “ தபசியின் கவிதைகள் எளிய சொற்கட்டுகளால் ஆனவை. வாழ்வின் தத்துவப் பொருளை மன அமைதியுடன் வெளிப்படுத்துவதோடு, புற நிகழ்வுகளை, அவற்றுக்கேயான முரண் நகையுடனும், அங்கதச் சுவையுடனும் எடுத்தியபம்புவை.”

நவீன அகம் புறம் என்ற சிற்றிதழில்( காலாண்டிதழ் 9) இவரின் செவ்வி இடம் பெற்றிருந்தது. மிக அருமையாக இருந்தது. இவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் , இவரின் பதில்களும் எழுதத் துவங்கியிருக்கும் கவிஞர்களுக்கு பல திறப்புகளை ஏற்படுத்தித் தரும் என்று நம்புகிறேன். ”உணர்தலுக்கும், உணர்த்துதலுக்குமான இடைவெளி குறையும்போது நல்ல இலக்கியம் பிறக்கிறது” என்கிறார். எனில், எளிமைப்படுத்துவதைத்தான் இவர் ஆதரிக்கிறார் என்பதை இவரின் கவிதைகளும் எடுத்துக்காட்டுகிறது. இன்னும் கூட நீண்ட செவ்வியாக அமைந்திருக்கலாம் என்ற ஆவல் ஏற்படுகிறது.

“ நவீன கவிதைகளின் சுதந்திரத்தை உணர்ந்துகொள்பவர்களுக்கு வேறு வடிவங்கள் உவப்பானதாக இருக்காது” என்கிறார். இது என் நெஞ்சில் நிலைத்துவிட்ட ஒரு கூற்று. ரசிகைத் தொகுப்பில் உள்ள கவிதைகள் அல்லாமல், இன்னும் சில கவிதைகளை சில சிற்றிதழ்களில் படித்திருக்கிறேன். அந்தவகையில், ரசிகை தொகுப்பில், பல கவிதைகள் என்னை அவ்வளவாக பாதிக்கவில்லை என்றுதான் என் இன்றைய பக்குவத்தில் சொல்லமுடிகிறது. எனினும் ,இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஞானம் கவிதை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் பெற்ற சிறப்புடையது. உள்ளபடியே அழகான, ஆழமான, பகடித்தன்மை கொண்ட கவிதை. இது ஏற்கனவே புகழ்பெற்ற கவிதை என்பதால்

பலரும் இதைப் படித்திருக்கக்கூடும்.



ஞானம்



சித்தார்த்தனைப் போல்

மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு

நடுராத்திரியில்

வீட்டைவிட்டு

ஓடிப்போக முடியாது என்னால்



முதல் காரணம்

மனவியும்,குழந்தையும்

என்மேல்தான்

கால் போட்டுக்கொண்டு தூங்குவார்கள்

அவர்கள் பிடியிலிருந்து

தப்பித்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல



அப்படியே தப்பித்தாலும்

எங்கள் தெரு நாய்கள் எமன்கள்

லேசில் விடாது

என்னைப் போன்ற

அப்பாவியைப் பார்த்து

என்னமாய் குரைக்கிறதுகள்



மூன்றாவது

ஆனால்

மிக முக்கியமான காரணம்

ராத்திரியே கிளம்பிவிட்டால்

காலையில்

டாய்லெட் எங்கே போவது

என்பதுதான்.

-தபசி.