Thursday, June 18, 2015

பிரிக்கப்படாத புத்தகம்



என்னுடைய மதிப்பிற்குரிய முன்னாள் தொழிற்சங்க தலைவர் ஒருவருடைய புதுமனை புகுவிழா இன்று. மிக நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களை மட்டுமே அழைத்திருந்தார். ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் தலைவர் எப்படியிருப்பார் என்று அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பை எனக்களித்தவர். அவர் முன்னாள் ஆகிப்போனதன் பாதிப்புகளை கண்கூடாக கண்டுகொண்டிருக்கிறோம்.

சம்பிரதாயமான மொய் அன்பளிப்புகளை அவர் ஏற்கமாட்டார் என்று ஊகித்திருந்த்துபோலவேதான், நேரிலும் நடந்தது. புத்தகங்களை அன்பளிப்பாக தருவதை கம்யூனிஸ்டுகள் ஒரு வழக்கமாகவே வைத்திருந்த்தை பார்த்திருக்கிறேன். எங்கள் தலைவரும் நல்ல வாசகர்தான்.(கம்யூனிஸ்ட் தலைவர் என்று சொல்லிவிட்ட பிறகு இப்படி ஒரு விவரம் கொடுக்கப்படவேண்டியதில்லைதான்) பொறுப்புகள் வெகுவாக குறைந்த பணி ஓய்வு நேரத்தில் அவருக்கும் படிக்கும் வாய்ப்புகள் உள்ளது .எனவே, நானும் ஒரு புத்தகத்தை அன்பளிப்பாக அளிக்க முடிவு செய்தேன்.அவர் எதிர்பார்க்கமாட்டார் என்றபோதிலும்.

இங்கேதான் ஊசலாட்டம் துவங்கியது.எந்த புத்தகத்தை பரிசளிப்பது? என்னிடம் சில புத்தகங்கள் 2 பிரதிகள் உள்ளன. நவீன கவிதைகள் தொகுப்பை கொடுத்து நான் அவரை தண்டிக்க விரும்பவில்லை. விதி விலக்குகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டாம். படித்துமுடித்த புத்தகங்களை, பார்க்கும்போதே பழையதாக தெரியும் புத்தகங்களை கொடுப்பதும் சரியாக இருக்காது என்று எண்ணினேன். கண்ணாடி உறை பிரிக்கப்படாத சில புத்தகங்கள் இருந்தன.அவை அனைத்துமே ஒரு பிரதி மட்டுமே என்னிடம் உண்டு. இன்னும் என் தனிப்பட்ட நூலகத்தில் நான் படிக்காத பல புத்தகங்கள் பழசாகிக்கொண்டு எனக்கு ஒரு குற்ற உணர்வை அளித்தபடி, என்னை முறைத்துக்கொண்டிருக்கின்றன. பொலிவாக இருக்கட்டுமே என்று சில புத்தகங்களுக்கு கண்ணாடி உறைகளை பிரிக்காமலேயே வைத்திருக்கிறேன்.. அதில் ஒரு புத்தகம் சில ஆண்டுகளாகவே இருக்கிறது.அவற்றிலிருந்து ஒன்றைத் தருவதுதான் தனிப்பட்ட, முழுமையான அன்பளிப்பாக இருக்கும்.

ஆனால், எதை எடுத்துப்பார்த்தாலும் மனம் வரவில்லை. அன்பளிப்பாக பணம் கொடுப்பதாயிருந்தால் புத்திக்கு எதுவுமே தோன்றியிருக்காது.சரி, அன்பளிப்பாக தரவிருக்கும் புத்தகத்தை,அப்படி பணம் கொடுத்ததாக நினைத்து மீண்டும் வாங்கிக்கொள்வது சரியான ஏற்பாடாக இருக்கும். ஏற்கனவே, வாசிக்காத புத்தகங்கள் சேர்ந்துகொண்டே போகும் சூழலில், உண்மையில் இப்போது புத்தகங்கள் வாங்குவதை குறைத்துவிட்டேன் என்பதுதான் கசப்பான உண்மை.

அண்மையில் எனக்கு அன்பளிப்பாக வந்த ஒரு அயல் நாட்டு மொழி சிறுகதைகளின் தமிழாக்க புத்தகம் ஒன்றை கொடுத்துவிட முடிவுசெய்தேன். உலகின் ஏதோ ஒரு மூலையில் அமைந்த ஒரு நாட்டின், இதுவரை கேள்விப்படாத ஒரு மொழி பேசும் இனக்குழுவின் போராட்டங்களை,மீட்சியை சித்தரிக்கும் கதைகள் என்பது அதன் பின்னட்டை வாசகங்களிலிருந்து தெரிந்த்து.எனக்கு இப்படியொரு அன்பளிப்பே வரவில்லை என்று நான் நினைத்து சமரசம் ஆகிவிடவேண்டும். மேலும், என் வாசிப்பில் அந்த புத்தகம் இடம்பெற என்னுடைய தேர்வில் இன்னும் சில ஆண்டுகள் கூட ஆகலாம். எடுத்துக்கொண்டு போய் கொடுத்துவிட்டேன். எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார். நானறிந்தவரையில் அதுவரை அங்கு வந்திருந்த ஒரே அன்பளிப்பு இந்த புத்தகம்தான்.  நிகழ்வுக்கு வந்திருந்த இன்னொரு கம்யூனிஸ்ட் தலைவர் வேறு, அந்தப் புத்தகத்தை எடுத்துப்பார்த்து, அட! நல்ல புத்தகமாக இருக்கிறதே! என்று சொல்லி வயலின் வாசித்தார்.

திரும்பி வரும் வழியில் அந்தப் புத்தகம் பற்றிய ஏக்கமாகவே இருந்தது. அதனுடைய தலைப்பு இப்போது தீவிரமாக என் புத்தியில் ரீங்கரிக்கிறது. தலைப்பின் பின்னணியில் அமைந்திருக்க வாய்ப்புள்ள அந்தக் கதையையும், களத்தையும் மனம் கற்பனை செய்து ஏங்கியது. திரும்பிவராத பணத்தைவிட, திரும்பிவராத புத்தகங்களை நினைத்துக்கொண்டால்தான் மனம் துயரமடைகிறது.வீட்டில் விலைமதிப்புள்ள எத்தனையோ  பொருட்களை சரியாக பராமரிக்காமல் வீணடிப்பவனான நான் , இந்த புத்தகங்களை மட்டும் அடிக்கடி எடுத்து துடைத்து, வந்து சேரும் பாலிதீன் கவர்களில் அவற்றை பொதிந்துவைத்து, வீடு முழுக்க நிறைத்துவைத்து, வீட்டிலுள்ளவர்களிடம் வாங்கிக் கட்டிகொள்கிறேன்.

100 ரூபாய் பெறுமானமுள்ள ஒரு புத்தகம் ஒருபோதும் 100 ரூபாய்க்கு இணையானதல்ல.