Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Sunday, August 23, 2020

இராசோவின் கதைமகளிர்

 


                          இராசோவின் 70க்கும் மேலான சிறுகதைகளைப் படித்து முடித்தபிறகு, (இராசேந்திர சோழன் கதைகள்,தமிழினி பதிப்பகம்) எனக்கு நினைவில் மேலோங்கி நிற்பவை அவருடைய ’இல்லறவியல்’ கதைகளும், அவற்றில் வரும் பொறையுடைய பெண்களுமேதான். ஆண்பெண் உறவின் சிக்கல், நெருக்கம் என்பது என்றென்றைக்குமானது. எல்லாத் தேசங்களுக்குமானது.

முதல் தோற்றம்


                         ’இராசோ பாலியல் கதைகள் எழுதியவர்,பெண்களின் காமம் பற்றி எழுதியவர்’ என்ற சில அறிமுகங்களோடு படிக்கத் துவங்கியவன் நான். அந்த முன்தீர்மானத்தோடு படித்துக் கொண்டே போனபோது, ஒரு கட்டத்தில் ’என்ன இவர்? பெண்களை இப்படிச் சித்தரிக்கிறார்? பெண்கள் ஆணிடம் கிடைக்கும் உடல்சுகம் என்ற  ஒன்றுக்கே முக்கியத்துவம் தருபவர்களா?, அந்த ஒன்றுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறவர்களா?’’ என்ற மேலோட்டமான எண்ணம் எழுந்தது. ’இடம்’ கதையில் வரும் கல்லூரிப் பெண், வாயாடி, திமிர் பிடித்தவள்...தங்கள் வீட்டில் குடியிருக்கும் மெக்கானிக் இளைஞனை அலட்சியப்படுத்துபவள்...ஒரு நாள் அந்த மெக்கானிக் இளைஞன் அவளை வன்புணர்வு செய்தவுடன் அவள் அப்படியே அடங்கிப் போகிறாள். அவனிடம் திமிர் காட்டுவதில்லை, வம்பு வைத்துக் கொள்வதில்லை.மாறாக, அடங்கி, ஒதுங்கிப் போகிறாள். ‘’ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே...ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே’’ என்ற சினிமாப் பாடல் வரி வேறு நினைவுக்கு வந்து தொலைத்தது. கமலஹாசன் சாரங்கபாணியாகி காலைத் தூக்கி வைத்து அழுத்தமாய் பாடுவதாகவும்  மனதில் ஆடியது. ’அதுபோலல்லவா இராசோவும் எழுதுகிறார்?!’. ‘இழை’ கதையில் வார்த்தைக்கு வார்த்தை கணவனிடம் வம்பிழுத்து இழுபறி ஆட்டம் நடத்திக் கொண்டிருந்தாலும்,எல்லா வேலைகளையும் போலவே  ’அந்த’ வேலையையும் இயல்பாய் நடத்துகிறாள் அவள்.  ’கோணல் வடிவங்கள்’ கதையில் கள்ளக் காதலனிடம் அவ்வளவு அடிபட்டாலும் பொறுத்துப் போகிறாள். ’புற்றில் உறையும் பாம்புகள்’ கதையில் வரும் வனமயில்,எதிர்வீட்டுக்காரன் தன்னைக் கண்காணிப்பதாக சீற்றம் காட்டுபவளாகவும், உண்மையில் அவள்தான் அவனை தொடர்ந்து கண்காணிக்கிறாள், தன்னைக் கண்காணிப்பதற்கும் வாய்ப்பளிக்கிறாள். தன்னுடைய சினேகிதியைப் போல தன்னால் எல்லை மீற முடியவில்லையே என்று உள்ளூரப் பொறுமுகிறாள். ’ஊனம்’கதையில் வரும் சாந்தா, கணவனை மதிக்காமல் அவனுடைய கெஞ்சல்களுக்கும் கட்டுப்படாமல் ஆண்களோடு பழகி,அவளுடைய கணவனின் தற்கொலைக்கு காரணமாகிறாள்.  ’நாய் வேஷம்’ கதையில் வரும் மனைவி, கணவனுக்கு தெரிந்தேயிருப்பதுபோல் ஊருக்கும் தெரிந்தே சோரம் போகிறாள். ’சூழல்’ கதையில் வரும் பெண் தொடர்ந்து கள்ள உறவு வைத்துக்கொள்கிறாள். தோது கதையில் வரும் பொன்னம்மாவின் மகள் படிக்கும் வயதிலேயே கர்ப்பம் தரித்து நிற்கிறாள். இவ்வாறாக, இராசோவின் கதைமகளிர் காமாந்தகிகளாகவோ, அல்லது காமத்தால் பாதிக்கப்பட்டவர்களாகவோ இருக்கிறார்கள்.மனத்தில் காமம் உள்ளவர்கள், செயலில் காமம் உள்ளவர்கள், காமத்தில் ஒழுக்கம் மீறுபவர்கள்...இவ்வாறு வாசித்துக் கொண்டே போகும்போது ’ருசிப்பு’ கதை வாசிப்பின்போதுதான் எனக்கு ஒரு திறப்பு கிடைத்தது. (ருசிப்பு கதை அதற்கானது அல்ல.எனக்கு அந்தக் கதையின் வாசிப்பின்போதுதான் நேர்ந்தது)

இரண்டாம் தோற்றம்

                உண்மையில்,இராசோ பெண்களை பெருமைப்படுத்தியே, உயர்வாகவே எழுதியிருக்கிறார்.ஆண்-பெண் என்ற இருமையை ஒட்டிக் காட்டி, அந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்த்துகிறார். அந்த வகையில் ஆண்களை இடித்தும், பெண்களை உயர்த்தியுமே எழுதியிருக்கிறார்.

           அவருக்கு அங்கீகாரம் அளித்த முதல் கதையான ‘எங்கள் தெருவில்’ இடம்பெறும் பவுனாம்பாள் அளிக்கும் சித்திரமே இவருடைய எல்லா பெண் கதாபாத்திரங்களுக்கும் பொருந்துகின்ற ஒரு முன்னோடியாக அமைந்துவிட்டது என பொதுமைப்படுத்தலாம். அதாவது, முதல் பார்வைக்கு எதிர்மறையான தோற்றம் காட்டுவதும், அதன்பிறகே  நல்லவிதமான தோற்றம் புலனாகும்படியும் அமைந்துவிட்ட பெண்கள்.’ரோதனை’ கதையில் வரும் சண்டைக்காரியான, வாயாடிப் பெண்தான் ஒரு கர்ப்பிணியின் வாந்தியைக் கழுவித் துடைத்து கரிசனம் காட்டுகிறாள். ’இழை’ கதையில் வரும் அந்த அவள், ‘’உங்களுக்கென்ன ! வேளாவேளைக்கி பொண்டாட்டியும் சாப்பாடும் இருந்துட்டாப் போதும்’’ என்று அவனைப் புரிந்துகொண்டு, அதற்காகவே அவனுக்குப் பரிமாறுபவள். ’ருசிப்பு’ கதையில் வரும் பெண்ணும் கணவனை அவன் இல்லாதபோது திட்டித் தீர்க்கிறாள்.சன்னதம் கூடிக்கொண்டே போகிறது.ஆனால், அவனைக் கண்டதும் அத்தனையும் வடிந்து போகிறது.

’’ ஐய, த! கைய வச்சிக்கினு சும்மா இரு.பசங்க எதுர்க்க..’’ என்று குழைகிறாள். இரண்டுமே உண்மைதான்.முதல் நிலை அவளுடைய ஆற்றாமை.இரண்டாவது நிலை அனுசரணை.

           தற்செயல் கதையில் வரும் வத்சலாவுக்கு தன்னைவிட அந்தஸ்து குறைந்த செல்வராசு தனக்குக் கணவனாக முடியாது என்று எண்ணி அவனிடம் அவனைப்போல் காதலேதும் இல்லாமல் , காமத்தை ஒரு விளையாட்டாக, நிகழ்த்திக் கொள்கிறாள்.//அவளுக்கு அது என்ன ஏதென்று புரியாத ஒரு பழக்கம்.சின்னக் குழந்தைகள் தின்பண்டத்திற்கு ஆசைப்படுவது மாதிரி.மனசில் எந்தவிதச் சிராய்ப்பும் இல்லை.எப்போதும் போலவே இருக்கிறாள்.அவன் ரொம்பக் கரைந்து போயிருப்பதைக்கூட அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை//.ஆனால், வருங்கால கணவனுக்கு உண்மையாகவும், பொறுப்பாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறாள்.

                     புற்றிலுறையும் பாம்புகள் கதையின் வனமயில் மனதில் காமவிழைவு இருந்தாலும், ,ஊருக்கும் பேருக்கும்  அஞ்சி வாழ்பவள். ’இடம்’ கதையில் வரும் கல்லூரிப்பெண்ணும், அவளுக்கு நேர்ந்த வன்புணர்வை எளிதாக எடுத்துக் கொள்ளமுடியாதவளாக இருக்கிறாள்.அவளை வன்புணர்வு செய்த மெக்கானிக் இளைஞன், அவளைப் பழி தீர்த்துவிட்டதாக எண்ணி, அதோடு அந்தச் சம்பவத்தை எளிதாகக் கடந்துவிடுகிறான். அவளால் அப்படி கடக்கமுடியவில்லை.அவள் அந்த ‘உண்மையை’ உள்ளுக்குள் வைத்துக்கொண்டு மனப்போர் நடத்திக் கொண்டிருக்கிறாள். நாய்வேஷம் கதையில் வரும் பெண், ‘இயலாத’ கணவனை மணந்துகொண்டு,   ஈடேற்றுவதாகவே பிழைப்பு நடத்துகிறாள்.’ஊனம்’ கதையின் சாந்தா,கணவனின் தற்கொலைக்குப் பிறகு விபரீதம் உணர்ந்தவளாக இடிந்துபோகிறாள்.

                 ’இடம்’ கதையில் வரும் இன்னொரு பெண் சாந்தா,தன்னிடம் அத்துமீறும் மெக்கானிக் இளைஞனை, பொறுத்துக் கொண்டு, மன்னித்து, தோழமையை தொடர்பவள்.

                    சொல்லப்பட்ட விதத்தில் ‘சூழல்’ கதைதான் சற்று பாலியல் கதைபோல் அமைந்துவிட்டது என்பது என் எண்ணம். என்றாலும், அந்தக் கதை கவனப்படுத்துவது 1.அவள் அந்த இளைஞனிடம் கொள்ளும் கரிசனமும், மற்றும் 2.அவளுடைய கணவன் நடந்த தவறை உணராமலும், 3.நடக்காத தவறுக்காக கொடுமைப்படுத்துவதுமாக நேர்ந்துவிட்ட விசித்திரத்தைச் சொல்லும் உளவியல் கூறுகளையும் சுட்டிக் காட்டுவதுதான்.

                  இராசோவின் கதைமகளிர் ’’எதுவொண்ணும் மனசுல வக்யாதவர்கள்’’. சகிப்புத் தன்மை கொண்டவர்கள். அவர்களுடைய ஆத்திரமும், புலம்பல்களும் அவர்களுக்கு ஒரு வடிகால் மட்டுமே. அவர்களுடைய தொணதொணப்புகளை கேட்பதற்கு ஆட்கள் கூட யாரும் தேவையில்லை. (கடவுளிடம் முறையிடுகிறார்கள் போலும்).  தானாகவே, எதிரில் யாரோ இருப்பதுபோல் கொட்டித் தீர்த்து இளைப்பாறிக் கொள்வார்கள்.

                  ஆண்கள் பெண்களைச் சுரண்டுபவர்களாகவும், பகல்தூக்க சொகுசுக்காரர்களாகவும்,சீட்டாடுபவர்களாகவும், பொய்யர்களாகவும், ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு வேறு நீதி என்ற ஆதிக்க மனம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

செம்பாகம் அன்று பெரிது

                காமத்தைத் தூண்டும் பாலுறவு விவரிப்புக் கதைகளாக அல்லாமல், காமத்தை ஆராயும் உளவியல் நுட்பங்கள் கொண்ட கதைகளே இராசோ எழுதியுள்ளார்

                    காமம் என்பது உயிர்களின் அடிப்படையான, இயற்கையான ஒரு விழைவு, மற்றும் செயல். உயிர்களின் வாழ்வில் காமத்தின் பங்கு பெரிது. எனவே, காமத்தைப் பற்றி பேசுவதோ, கதை எழுதுவதோ, ஆராய்வதோ தவிர்க்கப்பட வேண்டியது அல்ல. அம் மாதிரியான கதைகளை துணிந்து, வெளிப்படையாக எழுதியிருப்பது இராசோவின் துணிச்சலையும்,வெளிப்படைத் தன்மையுமே காட்டுகிறது.   காமம் நோயோ, குற்றமோ அல்ல.அளவில் கூடும்போதும், குறையும்போதும்தான் அது நோயாகவோ, குற்றமாகவோ மாறுகிறது.மனிதன் விலங்குகளினும் பகுத்தறிவால் பண்பட்டவன். அவன் உருவாக்கிய ’உலகத்தோடு ஒட்ட ஒழுகாமல்’ மீறிச் செல்வதே குற்றமாகிறது. இந்த உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பது,ஒரே புவிக் கோளத்தில், ஒரே காலத்தில், வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் மனிதர்களுக்கு வெவ்வேறாக இருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், ஒழுக்கம்,பண்பாடு,சட்டங்கள் போன்றவை  காலத்திற்கு காலம் மாறுவதுமாகவே இருக்கின்றன என்பதையும் பார்க்க வேண்டும். அதில் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்பது ஆணாதிக்கம். இதன் அர்த்தம், கற்பு நிலை என்ற ஒன்றை வலியுறுத்தினால், இருபாலருக்கும் பொதுவாக வைப்பதுதான் நியாயம் என்பதே. நீதிமன்றங்களில் தொடரப்படும் குடும்ப நல வழக்குகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகும் காலத்தில் தனபாக்கியம் போன்ற பெண்களும் அவள் கணவனைப் போன்ற ஆண்களுமாக எல்லாருமே இருந்துவிட்டால்,  நிறைய சிக்கல்கள் ’ரவ’ நேரத்தில் தீர்ந்துவிடும்.

                 இராசோவின் ஆண்-பெண் கதைகள், தனிமனிதர்களின் வாழ்விலும், சமூகத்திலும் காமத்தின் பங்கு எவ்வாறு, என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்துகிறது? அவற்றுக்கான கடந்தகால வரலாறு என்ன? வருங்காலத் தீர்வுகள் என்ன? என்பன போன்ற சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் கேளிவிக்குட்படுத்தி விசாரணைகளை முன்வைப்பதாகவே அமைந்துள்ளன.

                       இராசோவின் கதைகள் எளிமையாக சொல்லப்பட்டவை என்றாலும், வாசகனின் பங்கேற்பை கோரும் நுட்பங்களும், பல்வேறு சாத்தியங்களையும் கொண்டவை என்பதால் மீண்டும் மீண்டும் வாசிப்பைக் கோருபவையும்கூட. அரசியல் இயக்கம், சமூக விமர்சனக் கதைகளென்று சொல்லத் தக்கவையாக மற்ற கதைகளையும் இராசோ எழுதியிருக்கிறார். என்றபோதிலும் ஆண்பெண் உறவு பற்றி எழுதிய கதைகளே அவருக்கு  ஒரு தனித்தன்மையையும், அடையாளத்தையும், புகழையும் ஏற்படுத்திவிட்டிருக்கிறது

                                                  -ச.முத்துவேல்

 

Tuesday, May 15, 2012

பூரணி பொற்கலை- கண்மணி குணசேகரன்


புனைவுக் கலையில் பூரண நிலை


ஆத்திகக் கொள்கை கொண்ட மனிதர்களுக்கு கடவுள் நம்பிக்கையே கடைசித்துணையும், ஆறுதலுமாகும்.தன் எல்லா வலிகளையும், எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையோடு கடவுளிடம் இறக்கிவைத்து ஆசுவாசம் பெறுகிறார்கள். நல்ல பலன்கள் நடைமுறை வாழ்வில் நிகழும்போது, அந்தக் கடவுளே செய்ததாக நன்றிகூர்கிறார்கள்.கடவுளுக்குப் படையல், நேர்த்திக்கடன் ஆகியவை செலுத்தி மகிழ்கிறார்கள்.  ஏழை, எளிய, சிற்றூர் மக்களின் கடவுள்கள் அவர்களைப்போலவே ஏழ்மையோடும், சிறுதெய்வங்களாகவுமே இருக்கிறார்கள். மண்ணின் மனிதர்களைப்போலவே, மண் சாமிகள்.தெய்வத்திலும்கூட சிறு தெய்வங்கள், பெருந்தெய்வங்கள் என்று மனிதர்களுக்குள் பிரிவினை. தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

கண்மணி குணசேகரனின் அண்மைய சிறுகதைகளின் தொகுப்பு பூரணி பொற்கலை. மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் அத்தனைக் கதைகளுமே ஓரிழையை அடிப்படையாக, தொடர்ச்சியாகக் கொண்டு ஒரு வரிசையில் வைக்கத்தக்கவை.காவல் தெய்வமான அய்யனார்,அய்யனாரின் மனைவிகள் பூரணி, பொற்கலை, அய்யனாரின் சேவகர்கள், மற்றும் சிறுதெய்வங்கள் ஆகியோரை கதை மாந்தர்களாகவே  கொண்டு எழுதப்பட்டவை.மானுடர்களும், அமானுடர்களும் கதைகளுக்குள் கலவாமல் கலந்து கதை மாந்தர்களாகியிருக்கிறார்கள். இப்படி ஒரே சரடில் கற்பனைவளத்தோடு எழுதித்தள்ளும் திறன் இருப்பதை கண்மணி இலக்கிய உலகிற்கு இத்தொகுப்பின் மூலம் பெருமையோடு அறிவித்திருக்கிறார்.

கண்மணி குணசேகரனுடையது யதார்த்த வகை எழுத்து. இந்தத் தொகுப்பைப் பொருத்தவரை யதார்த்த எழுத்தோடு சேர்த்தும், சற்று அதிலிருந்து மாறுபட்டும், இலக்கிய உத்திகளை மிக இயல்பாகச் சேர்த்துக்கொண்டும், புனைவுகளின் வழியாக வாசிப்பு சுவாரசியமளிக்கும் வகையில் எழுதப்பட்டவை இக்கதைகள்.யதார்த்தங்களிலிருந்து விலகிய புனைவுகளின் வழியாக இலக்கியம் செயல்படும்போது, அதற்கு பன்முகத்தன்மை அளிக்கும் சாத்தியங்கள் கூடுகிறது. கவிதைகளிலேயே இவ்வுத்தி பெருமளவில் செயல்படுகிறது. இத்தொகுப்புக் கதைகளிலும்  நாம் காணும் அய்யனார் மற்றும் சுற்றத்தினர் ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விதமாக நமக்குக் காட்சியளிப்பார்கள். ‘ நாம வாழவச்ச மனுசாளுவோ, நம்ம வாழவச்சுப் பாக்காம வேரை வெட்டுதுங்க... வெந்நீரை ஊத்துதுங்க’ என்று சாமிகளே புலம்புவது, புறக்கணிக்கப்படுகிற பெற்றோர்களை, வாழ்ந்து கெட்டவர்களை, கலாச்சாரங்களை, கலைகளை என்று பல வகையில் நினைவுபடுத்திவிடுகிறார்கள். புனைவின் சாத்தியமே இங்குதான் சிறப்பாகச் செயல்படுகிறது.இவ்வாறு, சாமிகள் படிமங்களாக நின்று, பல்வேறு சூழலுக்குப் பொருந்திப்போகிறார்கள்.. பெண்ணியம் பேசுகிற, தலித்தியம் பேசுகிற, மாய யதார்த்தவாதம் என்கிற உத்திகளை இயல்பாக உள்ளடக்கிய,ஆனால் எளிமையாக சொல்லப்பட்ட கதைகள்.

நடைமுறை வாழ்வில் சாமிகள் எப்படி கதாபாத்திரங்களாக உலவுகிறார்கள்? என்றொரு கேள்வியெழுவது இயல்புதான். குற்றவாளிக்கு உறுத்துகிற மனசாட்சியாகவும், அச்சுறுத்துகிற கனவாகவும், இயற்கை  நிகழ்வுகளின் காரணிகளாக கற்பிக்கப்படுபவர்களாகவும் வருகிறார்கள் சாமிகள்.

படையல் என்கிற கதையில் வீரனாருக்கும், அய்யனாருக்குமே சண்டை மூள்கிறது. மாமன், மச்சான் சண்டைதான். இடையில் சமரசம் செய்துவைப்பவள் பூரணிதான்.என்னதான் சாமிகளென்றாலும், அவர்களும் சராசரி மனிதர்களைப்போலவே நடந்துகொள்கிறார்கள். எனவே, இங்கே சாமிகள் குறியீடுகளாகவே நிற்கிறார்கள்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் , நெய்வேலியைச் சுற்றியுள்ள மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் ஒரு பகுதியைச் சொல்கிறது, புழுதி எனும் கதை.

முன்பெல்லாம் மாட்டிறைச்சி  சற்று கமுக்கமான இடங்களில் விற்கப்பட்டு வந்தது.ஆனால், இன்று நகரங்களில்  நெரிசலான சாலையோரங்களில்கூட மாட்டிறைச்சி விற்கும் கடைகளும், அதில் வைக்கப்பட்டுள்ள மாட்டிறைச்சியும் பரவலாக காணமுடிகிறது. காலத்தால் ஏற்பட்டுள்ள இந்தச் சமூக நிலை மாற்றத்தை பதிவு செய்யும் இலக்கிய நுட்பமான, ஆவணமான ஒரு வாய்ப்பு ‘வேட்டை’ கதைக்குள் அமைந்திருக்கிறது.


உண்மை மனிதர்களுக்கும், சாமிகளுக்கும் தொடர்புபடுத்துகிற சந்தர்ப்பங்கள் புனைவின் உச்சம். பூரணி பொற்கலை கதையில் ஈயம் பூசும் குடும்பத்தைப் பார்த்து ஊர்த்தலைவன் மனம் பதைக்கும் இடம் அதற்குச் சிறந்த உதாரணம் என்று சொல்லலாம் .உடனே அதற்குப் போட்டியாக அரண் கதையில், மீண்டும் குடிப்பழக்கத்தைத் தொட நினைப்பவனை விரட்டி வந்து காப்பாற்றும் குதிரையையும் சொல்லலாம். இப்படி ஒவ்வொரு கதையும் ஒன்றோடொன்று போட்டி போட்டுகொள்ளும் வகையில் வரிசையில் தள்ளுமுள்ளு  கட்டி நிற்கின்றன.
நமது மண்ணின் சிறுதெய்வங்கள் வானத்திலிருந்து குதித்தவர்களில்லை. நம்மிடையே வாழ்ந்து மறைந்த நமது முன்னோர்களேதான். அவர்கள் செய்த தியாகங்களுக்காகவும், வஞ்சிக்கப்பட்ட ஆறாத்துயரங்களுக்காகவும், வீரதீரச் செயல்களுக்காகவும் வழிவழியாக போற்றப்பட்டு வந்து சாமிகளாகவே ஆகிவிட்டவர்கள். இக்கருத்தை சுட்டிக்காட்டுவதுபோல், சுவர் என்கிற கதையில் வருகிற மலையம்மாள் என்கிற குலசாமியைப் பற்றிய தகவல் கதைக்குள்ளேயே வருகிறது.

வாழ்ந்துமறைந்த நமது முன்னோர்கள் என்பதால்தானோ என்னவோ அவர்களுக்குள்ளும் சாதிய வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் உள்ளன போலும்.அந்தவகையில், தமுக்கு வீரன் கதை ஒடுக்கப்பட்டவனின் எழுச்சியை, தலை நிமிர்வை முன்வைக்கிற கதை. ஒடுக்குபவர்களுக்கு விடப்படும் எச்சரிக்கையும்கூட. நடு  நாட்டு வட்டார மொழியிலேயே சாமிகளும் பேசுவது புனைவின் சுவையைக் கூட்டுகிறது.

ஒவ்வொரு கதையும் சமூகத்துக்கான செய்திகளாக, அறிவுறுத்தல்களாக அமைந்திருந்தாலும் அவை போதனைக் கதைகளைப்போல் அல்லாமல் இயல்பாக, உணர்த்துகிற வகையில் சொல்லிச்செல்கிறது.

ஆணிகளின் கதை என்கிற கதை மட்டும் கண்மணி குணசேகரனின் வெள்ளெருக்கு சிறுகதைத் தொகுப்பில் முன்னமே இடம்பெற்றது. என்றாலும், பொருத்தப்பாடு கருதி இத்தொகுப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆணிகளின் கதை ஆவிகளின் கதைதான். இந்தக் கதையில் மட்டும் சாமிகளுக்குப் பதில் ஆவிகள். ஆவிகளின் கதைகள் நமக்கு உணர்த்துவதும்,சாமிகளின் கதை போலவேதான். குலசாமிகளின் கதைகளைப்போலவே, கதைகளில் வருகிற உவமைகளும் தனித்துவமான, மண்சார்ந்த வாழ்க்கையிலிருந்து வெளிப்படும் உவமைகள்தான்.


நெகிழ்ச்சியான காட்சிகளாலும், உரையாடல்களாலும் அதேபோல்  அங்கதச் சுவையாலும் சுவாரசியமான வாசிப்பனுபவத்தை தருகின்றன கதைகள். வாசிப்பின்போது, மௌனக் கரை உடைத்து சிரிக்காமலும், தழுதழுக்காமலும் இக்கதைகளை படித்துவிடமுடியாது எனலாம்.

எழுத்தாளர்கள் உருவாக்கப்படுவதில்லை. அவர்கள் பிறக்கும்போதே அத்தகைய திறனை, இயல்பாகக் கொண்டு பிறக்கிறார்கள், அதுவொரு மானுட நிகழ்வு என்றொரு கூற்று உண்டு. (ஒருவேளை மகாகவிகளுக்குமகா எழுத்தாளர்களுக்கு இக்கூற்று பொருந்தலாம் என்பது என் எண்ணம். சிறந்த கவிகளாக, எழுத்தாளர்களாக உருவாக தீவிரமான முயற்சியும், பயிற்சியுமே போதும் என்று எண்ணுகிறேன்) இக்கதைகளை படிக்கிறபோது இக்கூற்று உண்மைதானோ என்று நம்பத்தோன்றுகிறது. கண்மணி குணசேகரன் என்கிற கலைஞனின் எழுத்து வல்லமைக்கு சிறந்தவொரு சான்றாக, வெற்றிச்சின்னமாக , பூரணி பொற்கலை சிறுகதைத் தொகுப்பு பெருமை சேர்க்கிறது.தமிழினி வெளியீடாக வந்திருக்கிற இத்தொகுப்பில் எழுத்துப்பிழைகள் சற்று தென்படுகிறது.

சிறுதெய்வ வழிபாடுகள், சடங்குகள், நம்பிக்கைகள் ஆகியவை அறிமுகமேயில்லாத நகர, மாநகர வாழ் மக்கள்கூட இக்கதைகளை வாசிப்பதன் வழியாக அவற்றை அறிந்துகொள்ள முடியும். அவ்வாறு கதைகளை வாசித்தபிறகு சிற்றூர் பக்கம் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் சிறுதெய்வங்களின் சிலைகளை வெறும் சிலைகளாக பார்க்கமாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். அச்சிலைகள் உயிர்பெற்று கற்பனைக் கண்களுக்குள் துள்ளித்திரியும்.
                                                                                

Thursday, October 20, 2011

அம்மூவன்





நேற்று வே.பாபு தொலைபேசியில் அழைத்தார். இலக்கிய வாசகர்கள், படைப்பாளிகள் பேசும்போது நலமா என்று கேட்பதுபோல் சம்பிரதாயமானதும், அதே வேளையில் ஈடுபாடுடையதுமாக ஒரு கேள்வி உண்டு.அது, என்ன படித்துக்கொண்டிருக்கிறீர்கள்? என்பது. பாபுவும் கேட்டார். குறுந்தொகை படிக்கிறேன் என்றேன்.

ஆமாம், குறுந்தொகையை அங்கொன்று இங்கொன்றாக படித்திருக்கிறேன். முழுத்தொகுப்பாய் வாசித்துக்கொண்டிருப்பது இப்போதுதான். இதுவரை நான் படித்ததில் அம்மூவன் என்னைக் கவர்கிறார். நான் படித்துக்கொண்டிருக்கும் தொகுப்பு, நூலகத்திலிருந்து எடுத்தது. விளக்கவுரை கவிஞர் சக்தி என்றிருக்கிறது. நெய்தல் திணையில் வரும் வளையோய் என்று தொடங்கும் கவிதையை படித்துவிட்டு அசைபோட்டு, செரித்துக்கொண்டிருந்தேன். கவிதையும், உரையாசிரியர் கவிஞர் சக்தியின் விளக்கமும்

351. நெய்தல்

வளையோய்! உவந்திசின்-விரைவுறு கொடுந் தாள்
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த
ஈர் மணல் மலிர் நெறி சிதைய, இழுமென
உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு
உரிமை செப்பினர் நமரே; விரிஅலர்ப்
புன்னை ஓங்கிய புலால்அம் சேரி
இன் நகை ஆயத்தாரோடு
இன்னும் அற்றோ, இவ் அழுங்கல் ஊரே?




’’வளை அணிந்தவளே! விரைந்து செல்லும், வளைந்த கால்களை உடைய, வளையில் வாழ்கின்ற நண்டின் கூரிய நகங்கள் கோலஞ்செய்த ஈரமணலும், நீர் வழிகளும் சிதையும்படி இழும் என்ற ஓசை உடைய அலைகள் மோதி உடையும் துறையை உடையவருக்கு நீ உரிமையானவள் என நம் உறவினர்கள் செப்பினர். நான் மகிழ்ந்தேன். விரிந்த மலர்களை உடைய புன்னை மரங்கள் ஓங்கிய, புலால் நாறும் இச்சேரியின் இன் நகைக்கூட்டமும், இந்தக் கேடு கெட்ட ஊரும் இனியும் அலர் கூறுமோ?’’(தோழி கூற்று)



ஆஹா ! என்ன கவிதை ! பொதுவாகவே, சங்கக் கவிதைகளில் ஒன்றைக் கவனிக்கமுடிகிறது. ‘அந்த நாடனே, துறையைச் சேர்ந்தவனே’’ என்பதாக வருகிற நிலப்பகுதியின் அடையாளங்களும், குறிப்புகளும் வெறும் வர்ணனைகள் அல்லவென்பதே அது. அவை, கவிதையில் சொல்லப்பட்டிருக்கும் உள்ளடக்கத்திற்கு பொருத்தமான உவமைகளாக நிற்பதை, பெரும்பான்மையான கவிதைகளில் காணலாம். அதுபோல என்பதைத் தவிர்த்துவிட்டு, வர்ணனைகளாகவும், தனியே பிரிந்து நிற்பதுபோலும் ‘ நாடனே, ஊரைச் சேர்ந்தவளேஎன்று சொல்லும் பொதுத்தன்மை அன் நாட்களில் உத்தியோ என்னவோ? வளையோய் என்று துவங்கும் இந்தக் கவிதையிலும்,  நண்டுகள் கடல்மணலில் தீற்றிய கோடுகள் , ஊரார் சொன்ன அலர் பேச்சுகளுக்குப் பொருத்தமான உவமையாகிறது. ‘ நீர்வழிகளும் சிதையும்படி என்ற இடத்தில் எனக்கு சிந்தனைத்தடை ஏற்பட்டது. நீர்வந்த தடங்கள் என்கிற முடிவுக்கு வந்தேன். அதாவது அவதூறுகள் வந்துசேர்ந்த, வரக்கூடிய வாய்ப்புகள். இவையனைத்தையும் பிறகு, அலைகள் வந்து அழித்துச் செல்வதுபோல், உங்கள் இருவரின் அங்கீகரிக்கப்பட்ட உறவும், இதுவரையிலான அவதூறுகளையும், அவதூறுகளின் வழிகளையும் அழித்துவிடுகிறது. அந்தப் பேரலைகளின் முன் இவை எம்மாத்திரம்?

இந்தவேளையில்தான் என்னுடைய கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது. அதே நெய்தல் நிலக் கவிதைதான் இதுவும். வளையோய் கவிதையில் சொல்லப்பட்ட படிமத்தை, ஒரு சம்பவத்தோடு அவரே தொடர்புபடுத்திவிடுகிறார். எனவே, உவமையாகிவிடுகிறது. நான் எழுதியிருப்பது ஒரு படிமம் மட்டுமே.

 நேற்றுப் பெய்த மழை

கடலின் நீலத்தை
களங்கப்படுத்த முயன்று
தோற்றுக் கொண்டிருக்கிறது...
கரையில் கலக்கும்
புது வெள்ளம்..!

ஜூன் 2008 வார்த்தை இதழில் வெளியான கவிதையிது. இதற்கும், வளையோய் கவிதைக்கும் உள்ள ஒற்றுமைகள், வேற்றுமைகள் ஆகியவற்றை நீங்கள் அசைபோடுங்கள்.

/புன்னை மரங்கள் ஓங்கிய, புலால் நாறும் இச்சேரி/
என்கிற வரிகளையும் சேர்த்து.

புன்னை மலர்களை தலைவன், தலைவி காதலுக்கும், புலால் நாறும் சேரி என்பதை, ஊராரின் அவதூறு செய்யும் பண்பையும் குறிப்பிடுவதாக எண்ணிக்கொள்கிறேன்.
                                   



Sunday, April 11, 2010

இன்றைக்கும்…


இன்றைக்கும்…


குழந்தை பொறக்கறதுக்கான ட்யூ டேட் நெருங்கி வரவர சரண்யாவுக்கு ஒடம்பில வீக்கம் தெரிய ஆரம்பிச்சுடுச்சி.ஒருநாள் காலையிலேயே ஒடம்புக்கு ஒன்னும் முடியலன்னுச் சொன்னா. உடனே ஆஸ்பிட்டலுக்கு வண்டியிலக் கூட்டிக்கிட்டுப் போனேன். ஸ்பெஷலிஸ்டுங்கள்லாம் வர ஒன்பது மணீயாகும். இப்ப ட்யூடி டாக்டர் மட்டுந்தான். அவங்கள்லாம் புதுசா படிச்சுட்டு வேலைக்கு வர்றவங்க.எக்ஸ்பீரியன்சுக்காகவும், வெறும் எம்பிபிஎஸ் தான்ங்கிறதாலயும், இதுமாதிரி சின்னச் சின்ன அவசரத்துக்கு மட்டும் வைத்தியம் பாக்கிறவங்க. அப்படித்தான் ஒரு சின்ன வயசு டாக்டர் அன்னைக்கு இருந்தார். அவர்ட்ட போய் நின்னு இத மாதிரி பிரச்னையெல்லாம் இருக்குதுன்னு சொன்னதும் அவரும் நல்லா செக் பண்ண ஆரம்பிச்சார். எப்போ டேட் குடுத்திருக்காங்க,எத்தனை நாள்ல எவ்வளவு எடை கூடியிருக்குதுங்கிற விபரமெல்லாம் கேட்டாரு. பிரஷர் பார்த்தாரு. பாத்துட்டு லேசா முகத்தை கலவரமாக் காட்டுனாரு. மறுபடியும் பிரஷர் பார்த்தாரு. பாத்துட்டு, பொறுமையா சொன்னாரு. ‘பிரஷர் ரொம்ப அதிகமாயிருக்குது. இப்போதைக்கு நான் எழுதித் தர்ற மாத்திரைய சாப்பிடுங்க. ஒம்போது மணிக்கு கைனாகாலஜிஸ்டைப் பார்த்துடுங்க’ன்னு சொல்லி சீட்டு எழுதிக்கொடுத்தாரு.

ம்போது மணிக்கு கைனாகல்ஜிஸ்டுக்கிட்ட காமிச்சப்போ, அவங்களும் ‘பிரஷர் அதிகமாத்தான் இருக்குது. அட்மிட் பண்ணிடுங்க’ன்னு சொல்லிட்டாங்க. சரண்யாவுக்கு அட்மிட்டுன்னாலே கசக்கும். ஆஸ்பிட்டல்ல படுத்தப் படுக்கையா இருக்கிறதுன்னாலே அவளுக்கு ஏதோ கொடுமையான தண்டனை குடுத்தமாதிரி. என்னை பக்கத்துலயே இருன்னு சொல்லுவா. பொம்பிளைங்க எசகுபிசகா இருக்கிற மெடர்னிட்டி வார்டுல, என்னதான் தனித்தனி ரூமா இருந்தாலும், ஒரு ஆம்பள எந்நேரமும் உட்கார்ந்துக்கிட்டிருக்கமுடியுமா? போதாக்குறைக்கு மத்த வேலையெல்லாம் இன்னும் இருக்குதே. வீட்டுக்குப் போய் வேண்டிய துணிமணி, பாத்திரம் எல்லாம் எடுத்துக்கிட்டு வந்துக் குடுக்கணும். ஆஃபிஸ்க்கு லீவ் சொல்லணும். வீட்டுல பாத்திரம், துணிமணி எல்லாம் போட்டது போட்டதுபடியிருக்குமே.சரண்யாவ மெட்டர்னிட்டி வார்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போயி, அங்கயிருக்கிற நர்ஸ்க்கிட்ட டாக்டர் தந்த சீட்டக் காமிச்சு அட்மிஷன் போட்டுட்டு, அவங்க தந்த பேப்பர்லல்லாம் சைன் போட்டுட்டு, உடனே வாங்கிட்டுவரச் சொன்ன மருந்துங்களையெல்லாம் வாங்கிட்டுவர மருந்துக் கடைக்கு கிளம்பனேன். சரண்யாவுக்கு சாப்பாடு இனிமேல் ஆஸ்பிட்டல்லதான்ங்கிறதால ஒரு பிரச்னையில்ல. நான் ஓட்டல்லதான் சாப்பிட்டாகணும். என் வீட்டுக்குள்ள தினமும் ஒருமுறையாவது நான் போய்வர்ற வேலையில்லாத ஒரே இடம் சமையல் அறைதான். யோசிச்சுப்பாத்தாத்தான் தெரியுது. சமையலறைக்குப் போறதே எப்பவோ ஒருசிலவாட்டிதான்னு. கைக் கழுவ, தண்ணிக் குடிக்கன்னு அதெல்லாம் கூட எப்பவாவதுதான்.குடிக்கத் தண்ணிவேணுன்னாதான் சரண்யாக்கிட்ட சொன்னாப்போதுமே. அவளே எடுத்துக்கிட்டு வந்து உட்கார்ந்திருக்கிற இடந்தேடி எடுத்துக்கிட்டு வந்துக் கொடுத்துடறா. அவளுக்குந்தான் என்ன பெருசா வேலை இருக்குது? ஊர்ல எங்க அம்மாவோ, இல்ல அவங்க அம்மாவோ செய்ற வேலையோடயெல்லாம் பார்த்தா, இவ செய்றது ஒன்னுமேயில்ல. கிரைண்டர், மிக்ஸி, கேஸ் ஸ்டவ்,வாஷிங் மெஷின், கெய்ஸர், ஃப்ரிட்ஜ், டிவி,ன்னு எல்லா வேலையையும் செய்றதுக்குத்தான் மெஷினுங்க இருக்குதே. சட்னிக்கு மல்லாட்டை உறிக்கிற வேலைகூட இல்லை. ஸ்ட்ரெயிட்டா உறிச்சு வறுத்த மல்லாட்டையேதான் இப்ப கடையில விக்குதே. அட வெளியில போறப்பயாவது கொஞ்சம் நடக்கிறது உண்டா? அது எப்படி? வண்டியிருக்கும்போது நடந்துபோனா பாக்கிறவங்க என்னா நினைப்பாங்க.சரி போவுது. தனியா வாக்கிங்காச்சும் போறதுண்டா. அதுவுங்கிடையாது. அதுக்கெல்லாம் நேரமேது. இல்ல, இப்ப என்னா வயசாகியாப் போச்சு. வாக்கிங்லாம் போற அளவுக்கு.ஆம்பிளை இப்படி குளிக்க பாத்ரூமுக்குள்ளப் போறப்போ, இவ சமையல் ரூமுக்குள்ள நுழைவா. குளீச்சுக்கிட்டிருக்கும்போது மிக்ஸி ஓடற சத்தம் கேக்கும். குளிச்சுட்டு வர்ற அஞ்சு பத்து நிமிசத்துல பாத்தா தட்டுல டிஃபன் ரெடியாயிருக்கும்.ஆனா, இதையேன் ஃபாஸ்ட் ஃபுட்னு சொல்லிக்கமாட்டேங்கறாங்க.

கைகானலஜிஸ்ட் டாக்டரம்மா அவுட் பேஷ்ண்ட்ங்கள்லாம் பாத்து முடிச்சுட்டு லேபர் வார்டுக்கு வந்தாங்க. அதுக்குள்ள சரண்யாவுக்கு டாக்டரம்மா எழுதிக்குடுத்த ஊசியெல்லாம் போட்டிருந்தாங்க. வந்து சரண்யாவப் பாத்தாங்க. ‘என்னா சரண்யா. பயந்துட்டியா. ஏன் பயப்படுற. அதனாலதான் பிரஷர் இப்படி அதிகமாயிடுச்சி. பயப்படக்கூடாது, என்னா? ஆங். பாப்போம். பிரஷ்ர் குறையறதுக்கு ஊசி போட்டிருக்கோம். சாயந்தரம் வரைக்கும் குறையுதா இல்லையான்னு பாப்போம்’ அப்படின்னு சொல்லிட்டு வெளியே போயிட்டாங்க. சரண்யாவ ஆஸ்பிட்டல் ட்ரஸ்ல பாக்கவே கஷ்டமாயிருந்துச்சி. ஜெயில்ல கைதிகளுக்குக் குடுக்கிற மாதிரி பழைய சிவாஜி படத்துலல்லாம் காட்டுவாங்களே அந்த மாதிரி, மெல்லிசா கட்டங்கட்டமா போட்ட பாவாடை, சட்டைமாதிரி ஒரு அங்கி.ட்ரிப்ஸ் எல்லாம் வேற ஏறிக்கிட்டிருந்தது.

சாயந்தரம் வந்துபாத்த டாக்டரம்மா, செக் பண்ணிட்டு ரூமுக்குப் போயிட்டு, இன்னொரு டாக்டரம்மாக்கூட ரொம்ப நேரமா டிஸ்கஸ் பண்ணாங்க. அப்புறம் நர்ஸ் வந்து என்னைக் கூப்பிடறதாச் சொல்லிட்டுப் போனாங்க. நான் பதட்டத்தோட அவங்க ரூமுக்குள்ள போனேன்.’ ஒன்னும் பதட்டப்படாதீங்க. பிரஷர் குறையவே மாட்டேங்குது. ரொம்ப அதிகமாயிக்கிட்டே போகுது. அப்புறம் ஃபிட்ஸ் வந்துடலாம். இப்போதைக்கு பிரஷர் ஷூட் ஆகாம ஊசி போட்டிருக்கோம். பிரஷர் குறையலன்னா சிசேரியன் பண்ணி குழந்தைய வெளியே எடுத்துடணும். அதுதான் சேஃப். பிரஷர் குறைஞ்சிட்டா நார்மல் டெலிவருக்கு வாய்ப்பு இருக்குது.நீங்க என்ன செய்றீங்கன்னா, வீட்டுக்குப் போயிட்டு சரண்யாவுக்குப் போட்டுக்க ட்ரஸ் அப்பறம் வேற என்னென்னெ வேணுமோ எடுத்துக்கிட்டு வந்துடுங்க. பெரிய ஆஸ்பிட்டலுக்குத்தான் போகணும். வண்டி வச்சுருக்கிங்க இல்லையா. சரி, போயிட்டு வந்துடுங்க. ஒன்னும் அவசரமில்ல. நீங்க பாட்டுக்கு பதறி, வண்டிய எங்கயாவது போட்டு, அப்புறம் உங்களைப் பாக்கிற மாதிரில்லாம் ஆகிடவேணாம். என்னா சரியா?’ ன்னாங்க சிரிச்சுக்கிட்டே.பத்ட்டத்தைக் குறைக்கிறதுக்காகவே அப்படி சிரிச்சமாதிரி தெரிந்தது. நானும் பதிலுக்கு சிரிச்சுக்கிட்டே, சரின்னுட்டு கிளம்பினேன்.காலையிலேயே ஃபோன் பண்ணி சரண்யா அம்மாகிட்டச் சொல்லி வரச்சொல்லியிருந்தேன். அவங்களும் ஊர்லயிருந்து வந்துட்டு பஸ் ஸ்டேண்ட்லயிருந்து ஃபோன் பண்ணாங்க. நேரா போய் முதல்ல அவங்களைக் கூட்டிக்கிட்டு அப்புறம் வீட்டுக்குப் போனேன்.. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு, ஆஸ்பிட்டலுக்கு வந்து ஆம்புலன்ஸக் கூட்டிக்கிட்டு, பெரிய ஆஸ்பிட்டல் கிளம்பினோம். ஆம்புலன்ஸா, ஏதோ இத்துப்போன பழைய வண்டி மாதிரியிருந்தது. உள்ளே காத்தும் வரல. ஒன்னும் இல்ல. வெளியில நல்லா இருட்டிப்போய் மணி ஏழு மணிக்கு மேல ஆகியிருந்தது. ஒன்றரை மணி நேரம் ஆகும் பெரிய ஆஸ்பிட்டல் போக. ஆஸ்பிட்டல் கிட்ட வந்து ரயில்வே கிராசிங்ல கேட் போட்டுட்டான். இன்னும் டென்ஷன் ஏறிக்கிட்டே போகுது. அப்பத்தான் கூட வேலைசெஞ்ச சுந்தரம் மருமகக் கதை ஞாபகத்துக்கு வருது. அந்தப் பொண்ணுக்கும் பாவம் இதே மாதிரி பிரசவம் நெருங்கற நேரத்துல பிரஷர்தான். சரியா கவனிக்காம விட்டுட்டாங்களாட்டம் இருக்குது. வலிப்பெல்லாம் வந்து, பாவம் காப்பாத்த முடியாம செத்தேப்போச்சு. நல்லா வசதியான குடும்பந்தான். ஆனா, என்னா பண்றது?

ஒருவழியா ஆஸ்பிட்டல் போய்சேர்ந்து, சக்கர நாற்காலியில் உட்கார வச்சு, சறுக்குப்பாலம் வழியா , மேல்மாடிக்கு கூட்டிட்டுபோய் அட்மிட் பண்ணீயாச்சு. அங்கப்பாத்தா பெரிய டாக்டர் இல்லயாம். அவரு நாளைக்குத்தான் வருவாருன்னாங்க. அவரு சம்சாரமும் டாக்டர்தான். அவங்களும் நல்லா பக்குவப்பட்டவங்கதான்னு சொன்னாங்க. அவங்கதான் வருவாங்கன்னு சொன்னாங்க. அதேமாதிரி, அவங்களும் வந்து பாத்துட்டு, ஊசியெல்லாம் போட்டுட்டு, ஏற்கனவே எங்க டாக்டரம்மா சொன்னாமாதிரியே சொன்னாங்க. ‘பிரஷர் குறைஞ்சா நார்மல் டெலிவரியே பாத்துடலாம். முடிஞ்சவரைக்கும் நார்மல் டெலிவரிக்கு ட்ரை பண்றோம். இல்லேன்னா மட்டும் சிசேரியன் பண்ண வேண்டியதிருக்கும்’
எங்க? இங்கத்தான் சரணயாவுக்கு இருக்க இருக்க பயம் அதிகமாயிட்டே போகுதே.மாசமாயிருந்தா குழந்தை பொறக்கும்னு முன் கூட்டியே தெரியாதா? இவளுக்கு சொந்தக்காரப் பொண்ணு ஒருத்திக்கு, டெலிவரி ஆகும்போது ரொம்ப எசகு பிசகாயிப் போய் அவஸ்தைப்படுறதை கொஞ்ச வருஷங்களுக்கு முன்னால கூடவேயிருந்து பார்த்திருப்பாளாட்டம் இருக்குது. அது இவ மனசவிட்டு நீங்காமயிருந்துக்கிட்டு, இப்ப வந்து எல்லாரையும் தொந்தரவப் பண்ணிக்கிட்டிருக்குது. அதுவும் சிசேரியனைப் பத்தி கேள்விப்பட்டு ரொம்பவே பயந்துபோய் இருந்தா. ‘நல்லா கருவுக்குள்ள இருக்குற குழந்தைமாதிரி மடிச்சுவச்சு நடு முதுகுல ஊசி குத்துவாங்களாம். அது காலத்துக்கும் வலிச்சுக்கிட்டேயிருக்குமாமே’ன்னுட்டு எங்கிட்ட அவப் பேசியிருக்கிறா.இந்தக் காரணமெல்லாம் அவ மனசுலயிருக்குன்னு நானா நினைச்சுக்கிறது. இதும் தவிர வேற என்னஎன்ன புதுசு புதுசா கண்டுபுடிச்சு பயப்படறாளோ. இன்னும் ஒன்னே ஒன்னு மட்டும் என் மனசுக்கு நல்லாத் தெரியும். அது நான் சம்பந்தப்பட்டது. ஆமா, அவகூட நான் எப்பவும் இருந்துக்கிட்டேயிருக்கணுமின்னு நினைக்கிறவ அவ. இந்த நேரத்துல அவளுக்கு எதுனா ஏடாகூடாமா ஆகி,என்னைப் பிரியறதுன்னா அவளாலே நினைச்சிக்கூட பாக்கமுடியாதுன்னு எனக்குத் தெரியும்.ஆஸ்பிட்டல்ல மிட் நைட் வரைக்கும் பிரஷர் குறையவேயில்லன்னு தெரிஞ்சதும், சிசேரியன்தான்னு முடிவு பண்ணிட்டாங்க. அதுக்குண்டான மருந்து, மாத்திரையெல்லாம் கீழ போய் என்னை வாங்கிட்டு வரச்சொன்னாங்க. நானும் வாங்கியாந்து கொடுத்துட்டு , நீட்டுன பேப்பர்லயெலாம் கையெழுத்துப் போட்டுக்குடுத்துட்டு காத்துக்கிடக்க ஆரம்பிச்சுட்டேன். அதே நேரத்துல டெலிவரி பாக்கிறதுக்கு மூனு, நாலு கேஸ் ஒன்னொன்னா நடக்குது. அவங்கவங்க சொந்தக்காரங்க வாசல்ல நிக்கிறாங்க. அன்னைக்கு மட்டும் நடுராத்திரியிலருந்து விடியறதுக்குள்ள 5 பிரசவம் அந்த ஆஸ்பிட்டல்ல மட்டுமே ஆச்சு. நார்மல், சிசேரியன், பையன் ,பொண்ணுன்னு வரிசையா. சரண்யாவுக்கு பையன் பொறந்து வெளியிலெ எடுத்துக்கிட்டு வந்து காமிச்சுட்டுப் போனாங்க. சரண்யா எப்படியிரூக்கிறான்னு அவங்க அம்மா கேட்டதுக்கு எதுவுமே சொல்லாம உள்ளேப் போயிட்டாங்க. அப்புறம் சரண்யாவை மயக்க நிலையில ஸ்டெட்சர்ல வச்சு, ரெஸ்ட் ரூம்ல கட்டில்ல போட்டாங்க. கூடவே குழந்தையையும் போட்டுட்டுப் போனாங்க. ஆளே பயங்கரமா ஊதிப்போய் பெரிய பொம்மனாட்டி மாதிரியா இருந்தா. அர்த்த நாரீஸ்வரர் மாதிரி சரிபாதி ஒரு பக்கம் உடம்பே பயங்கரமா உப்பி, இன்னொரு பக்கம் உடம்பு அதைவிட கொஞ்சம் கம்மியா வீங்கி பாக்கவே ஐயோன்னு இர்ந்துச்சி. மயக்கத்துலயே வேற இருந்தா. மயக்கன்னும் சொல்லமுடியாது. கூப்பிட்டா தெரியுது. தூக்கத்துல கேக்குறமாதிரி, ‘ஆங்’ன்னு லேசா உடம்பை அசைக்கிறா. ஆனா. அதையே ரொம்ப சிரமப்பட்டு செய்றாமாதிரியும், திகிலாவும் தெரிஞ்சுச்சி.அப்பத்தான் அவமேல அப்படியொரு பரிவும் பாசமும் எனக்குத் திரண்டு வந்துச்சி. பிரசவத்துக்கு அப்புறம் என்னையோ, அவங்க அம்மாவையோ ஏன் தன்னோட குழந்தையக் கூடப் பாக்க முடியாதுங்கிற நிலைமை. அப்படியே அடிச்சுப்போட்டவளை மாதிரி அசந்துகிடந்தா. கூப்பிடறது மட்டும் எங்கியோ கனவுல கேட்கிற மாதிரி இருக்கும்போல. பையனப் பாத்தேன். நல்ல சிவப்பு.அப்ப அவன் பொய்ங்க்ன்னு சின்னதா ஒரு சத்தம் போட்டான். நாங்கேட்கிற அவன் மொதோக்குரல். ஒரு நாள் காலயில ஆரம்பிச்சு, அன்னைக்கு நடுராத்திரிக்குள்ள இவ்வளவும். இதுக்கப்புறம் நடந்ததெல்லாம் இதைவிட . சிசேரியன் பண்ணதால கட்டில்லயே அசையாம கிடக்கவேண்டியதுதான். தையல் பிரிஞ்சுடும்னுட்டு ஒருவாரங்கிட்ட அப்படி இருக்கச்சொல்லிட்டாங்க. சாப்பாடெல்லாம் கிடையாது. வெறும் ட்ரிப்ஸ்தான். அது ஒரு பாலிதீன் பையில மூத்திரமா வந்து சேர்ந்துடும். மத்தப் பொமபளங்கள்லாம் அழகா எழுந்து நடக்க ஆரம்பிச்சு, அழகா டிஸ்சார்ஜ் ஆகிப்போயிக்கிட்டிர்ந்தாங்க. சரண்யாதாம் ரொம்ப சிங்கினாதாம் புடிச்சுக்கிட்டுக் கிடந்தா. கையக்கால அசைக்கிறதுக்கே ஆஊன்னு கத்துவா. டாக்டரமா ஒரு நாள் வந்து நகரச்சொல்லியிருக்காங்க. இவ அசையக்கூட மாட்டேங்கறாளாம். ஆனா அசையற மாதிரியே ஆக்‌ஷன் மட்டும் ரொம்ப நேரம் காட்டறாளாம். டாக்டரம்மா புடிச்சி சரக்குன்னு இழுத்து நகர்த்திப்போட்டிருக்காங்க. இவ, ஐயோகுய்யோன்னு கத்தியிருக்கா..டிஸ்சார்ஜ் பண்ற அன்னைக்கி, ஒரு கார்வச்சு, அலுங்காம குலுங்காம கூட்டிக்கிட்டு வந்தேன். என் நண்பனோட கார்தான்.ஸ்பீட் பிரேக்கர்ல ரொம்பப் பொறுமையா , பக்குவமா ஓட்டிட்டு வந்தான். அவன் சுபாவத்துக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத செயல் அது. அப்படியும் சில நேரங்கள்ல அவன் பாணியில ஓட்டினான். சரண்யா, அவ அம்மால்லாம் பதறிப்போயிட்டாங்க. நானுந்தான். அப்புறம் அவன் கொஞ்சம் ஒழுங்கா ஓட்டிக்கிட்டு வர வீடு வந்து சேர்ந்தோம்.


ப்ப எம்பையன் யூ.கே.ஜீ. படிக்கிறானாலும், அன்னைக்கு அவன் போட்ட சத்தம் இன்னைக்கும் என் காதுல சொகமாக் கேட்டுக்கிட்டேயிருக்குது.கொஞ்ச நாட்களுக்கு முன்னால, மும்பை போயிட்டு திரும்பி ட்ரெயின்ல வந்துக்கிட்டிருந்தேன். இரவே புறப்பட்ட ரயில் மறு நாள் பகலில் ஊர்ந்துகொண்டிருந்தது. எனக்குப் பக்கத்து இருக்கையில் ஒரு வயதான பாட்டியம்மா இருந்தார்கள். தமிழ்தான். ஆனா, மராட்டி, இந்தியெல்லாம் தெரிந்திருந்தது.ஒரு நிறுத்தத்தில் ரிசர்வ்டு பெட்டியில நிறைய அன்ரிசர்வ்டெல்லாம் ஏறுனாங்க. காலேஜ் போற பசங்கதான் நிறைய பேர். உட்கார இடமில்லாம , நிக்கவே சிரமப்பட்டு நெருக்கிகீட்டு நின்னுக்கிட்டு வந்தாங்க. அதுல ஒரு இளம்பெண் கைகுழந்தையோடு இருப்பதைப்பார்த்ததைப் பார்த்ததும் என்னருகிலிருந்த அந்த வயதான தமிழ் பாட்டியம்மா கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து இடம் குடுத்தாங்க. அந்தப் பொண்ணு அப்படியொரு அழகு. ஒரு பணக்காரக் களை. நல்ல சிவப்பு. வழுவழு சருமம். கூட ஒரு பொம்பள இருந்தாங்க. ஆம்பள மாதிரியான ஒரு இறுக்கமான, கட்டான, காப்பேறிய உடம்பு. குள்ளமாயிருந்துச்சி. புடவைக் கட்டுல்லாம் பாத்தா ஆதிவாசிகள, ஞாபகப்படுத்தற மாதிரியாயிருந்தது. தோற்றமும் அப்படித்தானிருந்தது. அந்தம்மாதான் அந்த இளந்தாய்க்குத் துணையா வந்திருந்தது. வேலைக்காரப் பெண்மணியா இருக்கும் என்று யூகித்தேன். சரியா காத்து வராததால குழந்தை பொய்ங்ன்னு கத்திச்சு. எம்பையன் கத்துன மாதிரியே புதுசான குரல். அந்த வயசான காட்டுப்பொம்பளை குழந்தையைக் கையில வாங்கி ஃபேனுக்காத் துக்கிப்புடிச்சுக்கிக்கிட்டு நின்னுக்கிட்டே வந்தது. பாட்டியம்மாவும் அவங்கக்கிட்ட எதையெதையோ இந்தியிலயோ, மராத்தியிலோ பேசிக்கிட்டே வந்தது. ஒரு ஸ்டேசன்ல அவங்க இறங்கிட்டாங்க. அப்போ அந்தப் பாட்டியம்மா, ‘’ பாத்தியாப்பா. ஆஸ்பத்திரியிலருந்து குழந்தை பொறந்து நேரா அப்படியே வருந்துங்க. இப்பத்தான் குழந்தைப் பொறந்துச்சாம்’னு ஆச்சரியத்தோட சொன்னாங்க. அந்த வயசாளியம்மா அந்த இளந்தாயோட அம்மாதானாம். நான் ஆவலோட அவங்களை எட்டிப்பாத்தேன். தூரத்தில வயல் வெளிகளுக்கு நடுவில தொடுவானத்தை நோக்கிப் போறாமாதிரி போயிட்டிருந்தாங்க. அவங்கள விட்டு வேகவேகமா எங்களை, எங்க ட்ரெயின் தூர விலகிக்கிட்டே வந்துகொண்டிருந்தது

Monday, October 13, 2008

இனியாவது ஒரு விதி செய்வோம்.










முடிவே தெரியாத நீளமான குகைக்குள் பயணம் செய்ய நேர்வதாக கனவுவரும்போது,எப்பேர்ப்பட்ட தூக்கமாக இருந்தாலும் ,கலைந்து எனக்கு விழிப்பு ஏற்பட்டுவிடுகிறது.மூச்சுத்திணறலாகவும்,நெஞ்சு முழுக்க ஏதோ பாரம் அழுத்தி வலிப்பது போலவும் உணர்கிறேன்.மீண்டு(ம்) தூக்கம் வர நெடுநேரம் ஆகிவிடும்.ஒருமுறை,திரைப்படம் பார்க்க நண்பர்களோடு ஒரு சுமாரான,பழைய திரையரங்குக்குச் சென்றிருந்தபோது, நுழைவுச்சீட்டு தரும் இடம் மிக நீண்ட,ஒரு நபர் மட்டுமே செல்லக்கூடிய அளவு அகலத்தோடும்,எங்கோ தொலைவில் ஒரேயொரு சிறிய ஜன்னல் மட்டுமே வைக்கப்பட்டதுமாக,மூடப்பட்டுக் குகைபோல இருப்பதைக் கண்டநான், பயந்துபோனவனாக,படம்பார்க்கவே வரவில்லை என்று சொல்லியிருக்கிறேன்.இன்னொருமுறை சிறுபிள்ளையாய் இருக்கும்போது,மற்ற பிள்ளைகள் என்னை கொசுவலைக்குள் அடைத்து,நான் வெளியேற முடியாதவாறு பிடித்துக்கொண்டபோது,நான் அலறிக் கூச்சல்போட்டது இன்னமும் என்னாலேயே நம்ப முடியாததாகவும்,ஆச்சரியமாகவும், நன்றாக நினைவில் உள்ளது.கேளிக்கைவிளையாட்டு மையங்களில்(THEME PARK)நீண்ட குழாய்களின் வழியே சறுக்கி விளையாடுவது என்பது எனக்கு மிகப்பரிய சவாலாகப்பட்டது.பாதிவழியில் சிக்கிக்கொண்டால்..?நினைக்கும்போதே மூச்சுத்திணறுகிறது.(ஆனாலும் BLACK THUNDER சென்றிருந்தபோது சவாலில் வென்றுவிட்டேன்.சில சமயம் உண்மையைவிட ,கற்பனை அதீதமான உணர்வுகளை ஏற்படுத்திவிடுகிறது) அதாவது,இதுபோன்ற நேரங்களில் நானே நினைத்தாலும்,நினைத்தமாத்திரத்தில் என்னால் வெளியேவரமுடியாது.இப்போது ,நான் எதுகுறித்து எழுதவிருக்குறேன் என்று உங்களால் ஊகித்திருக்கமுடியும்.

அறிவியல் கண்டுபிடிப்புகள் எதுவுமே மனித உயிர்களைப் பலிவாங்குவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவையல்ல.ஆனால் அறிவியல் வளர,வளர ஆபத்துக்களும் ,விபத்துக்களும் பெருகிக்கொண்டே இருக்கிறது.சாலைப் போக்குவரத்தில்,தொடர்வண்டிகளில்,மின்சாரத்தால் என உயிர்ப்பலி தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.இவ்வாறு உயிர்ப்பலி வாங்கும் கண்டுபிடிப்புகள் எப்போது முழுமையடைகின்றன என்றால்,அந்த அறிவியலால் விபத்துக்கள் இல்லாத ஒரு நிலையை எட்டும்போதுதான்.இந்நிலையையும் உள்ளடக்கியதாகவே கண்டுபிடிப்புகள் இருக்கவேண்டும்.பாதுகாப்பு விதிமுறைகளும்,உறுதியான பின்பற்றலும் நடந்தேற வேண்டும்.
ஆழ்துளைக்குழாய்கள் அமைத்துத் தண்ணீர்த் தேவையை நிறைவேற்றும்பொருட்டு வளர்ந்த விஞ்ஞானம்,அதிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றவும் செய்யவேண்டும்.இதுவரை எத்தனையோ அப்பாவி சிறுவர்களை நாம் இழந்துவிட்டபோதிலும்,இன்றளவும் தொடர்கதையாகவே இருக்கிறது என்பது நாமனைவரும் வருந்தவேண்டிய,வெட்கப்படவேண்டிய ஒரு செயல்.குழந்தைகள் ஒன்றும் குடிபோதையில் குழிக்குள் விழுவதில்லை.சென்றவாரம்கூட 2 வயதேயான சிறுவன் 150 அடி ஆழக் குழிக்குள் விழுந்துவிட்டான்.இதில், அச்சிறுவனின்-சிறுவன்கூட அல்ல,குழந்தை-தவறு என்னவாக இருந்துவிடமுடியும்.150 அடி ஆழத்திற்குக் குழிதோண்டத் தெரிந்த விஞ்ஞானத்திற்கு அதிலிருந்துக் குழந்தைகளைக் காப்பாற்றத் தெரியவில்லை. ஏற்கனவேயுள்ள குழிக்கு இணையாக மற்றொரு குழி வெட்டுவதும்,ராட்சத இயந்திரங்களை வரவைப்பதும் ,ஒரு கட்டத்திற்கு மேல் மனிதர்களைவைத்தே மண்அள்ளுவதும்,சிறுவன் மூச்சுவாங்கும்பொருட்டு ,குழாய்கள் வழியாக காற்றுசெலுத்துவதும் என்று மணிக்கணக்கில்,நாள்கணக்கில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.அதுவரை, ஏதுமறியா அப்பிஞ்சுக் குழந்தையின் நிலையை,தவிப்பை சற்றே கற்பனை செய்து பாருங்கள்.போதாக்குறைக்கு குழிக்குள் நீர்மட்டம் வேறு உயரந்து கொண்டேயிருக்கிறது.நீங்கள் கற்பனைக்கு ஒதுக்கும் ஒரு வினாடி, இறந்த சிறுவர்களின் ஆன்மா சாந்தியடைவதற்கான பிரார்த்தனைக்கான நேரமாக இருக்கட்டும்.என்னதான் சூரரராகவே,வயதில் பெரியவர்களாக இருந்தாலுமேகூட,அந்த நிலையில் அவரால் என்ன செய்துவிடமுடியும்? இந்த மாதிரியான சூழலில் அக்குழந்தையின் நிலையை,தவிப்பை நான் விளக்கிக்கொண்டிருக்கப் போவதில்லை.அதை வெறும் சொற்களால் விளக்கிவிடமுடியாது.அவரவர் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கூட இத்தொடர் நிகழ்வுகளுக்கு வருத்தமும் ,கண்டனமும் தெரிவித்திருப்பது இங்கே குறிப்பிடத் தகுந்தது.
செய்ய வேண்டியது.
வேலையை முடித்ததும் குழியை மேலே மூடிவிட்டுச் செல்ல வேண்டும்.
சிறு பிள்ளைகள் அப்பகுதிக்கு வரமுடியாத அளவுக்குச் சுற்றிலும் தடுப்புகள் அமைக்க வேண்டும்.
இம்மாதிரி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்யாதவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்.அப்போதாவது பயந்து செய்வார்கள் அல்லவா.

வந்தபின் அவதிப்படுவதைவிட, வருமுன் காப்பதே சிறந்தது என்ற கூற்று இவ்விசயத்தில் மிகவும் பொருந்தும்.

  வெளியிட்டு மேன்மைப்படுத்தமைக்கு நன்றி-கீற்று.காம்
 15-10-08