Sunday, October 25, 2009

சாளரத்தில் தெரியும் வானம் – தொடர்-கவிஞர் தென்றல்

என் பார்வையில் படைப்பாளிகள் - கவிஞர் தென்றல்

கவிஞர் தென்றல்

OLYMPUS DIGITAL CAMERA
நவீன கவிதைகள் என்பதில் கூறுமுறை ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. சொல்லப்படும் முறையும் நவீனத்தன்மையுடனும்,புதிதானதாகவுமிருப்பது.கவிஞர் தென்றலின் கவிதைகள் வித்தியாசமான, நூதனமான கோணங்களில் அவதானிக்கப்பட்டவைகளாக இருப்பது தனிச்சிறப்பு.வழக்கங்களிலிருந்து விடுபட்டு,புதியதொரு பார்வையுடன் பார்க்கப்பட்டிருக்கிறது.ஒன்றினை விளக்க உவமை பயன்படுத்தப்பட்டு, அது எதை விளக்கமுனைகிறதோ அதையும் சொல்வது உவமை, உவமேயம் என்று அறியப்படுகிறது. உவமையாக சொல்லப்படுவது மட்டுமே தனித்து நின்றும், போலவே , அது உணர்த்துவது வேறொன்றும்,ஒன்றுக்கும் மேற்பட்டதுமானதுமான தன்மை கொண்டதை படிமம் என்கிறோம். கவிஞர் தென்றலின் கவிதைகள் நிறையவே படிமக்கவிதைகளாக அமைந்திருக்கிறது.


பறத்தல் சுதந்திரத்தின் குறியீடாகப்பயன்படுகிறது.தென்றலின் சில கவிதைகளும் சுதந்திரத்தின் விழைவைக் கூறுகிறது.தலையீடுகளும், நிர்ப்பந்தங்களையும் வெறுக்கிறது.அதுபோலவே, மனிதர்களுக்கிடையிலான உறவுமுறைகளில் உள்ள சிக்கல்கள் குறித்த வருத்தத்தை சில கவிதைகளில் காணலாம்.அக் கவிதைகள் தன்னுணர்வாக, விரக்தியையும், சலிப்பையும், ஏமாற்றத்தையுமே கொண்டிருக்கின்றன.பெண்ணியம் சார்ந்த கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் கவிதைகளும் தொகுப்பில் இருக்கின்றன.
ஒரு விளையாட்டுச் சிறுமியின் மனப்பாங்கைத் தொலைத்துவிடாத இளம்பெண்ணின் அனுபவங்களாகவே இவர் கவிதைகளில் பூனை, பொன் வண்டு, ரோஜாத்தொட்டி, கிளி, தும்பி ஆகியவை மீண்டும் மீண்டும் இடம்பெறுகிறது.

நீல இறகு என்கிற இவரின் முதல்கவிதைத்தொகுப்பு, உயிர்மை வெளியீடாக வந்துள்ளது.சிறியதும், பெரியதுமான 89 கவிதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பு நல்ல கவிதைகளால் நிரம்பியிருக்கிறது.சிந்தனைகளில் இருக்கும் வீச்சு கவிதைகளின் கட்டமைப்பில் கூடிவரும்போது இன்னும் நல்ல கவிதைகளாகப்படும்.செறிவும், கவிமொழியும் அடுத்தத் தொகுப்புகளில் இவரிடம் நிச்சயம் முன்னேற்றம் கண்டிருக்கலாம்.

புதுச்சேரியைச் சார்ந்தவரான தென்றல் சென்னையில் மென்பொறியாளராகப் பணியாற்றுகிறார்.இளம் கவிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கவிஞர் தேவமகள் அறக்கட்டளை இவருக்கு கவித்தூவி விருதுகொடுத்துச் சிறப்பித்துள்ளது.


ஒற்றையடிப்பாதை

ஒற்றையடிப்பாதை
அதிகாரம் வாய்ந்ததாய்
திரும்பச் சொல்லும் இடத்திலும்
வளைந்துபோகும் இடத்திலும்
திரும்பவும்
வளையவும் வைக்கிறது.
முதுகில்
துப்பாக்கி முனை பதித்து
முன் நடத்தும்
கொள்ளைக்காரன்போல
நன்றாகத் தெரியும் அதற்கு
அவ்வழியே
பயணிப்போர் இல்லையென்றால்
புற்களால் தின்னப்பட்டு
மடிந்துபோகுமென்று
இருந்தபோதிலும் வெட்கமின்றி
ஓயாமல்
மிரட்டிக்கொண்டேதானிருக்கிறது
அவ்வழியே
போவோரையும் வருவோரையும்

பஞ்சின் கனவு


இலவு காத்த கிளி
ஒரு பக்கம் இருக்கட்டும்
தானும் ஒரு நாள்
மேகமாவதாய் எண்ணியிருந்த பஞ்சின் கனவு
தலையணையில் முடிந்தது

என் ஒரே கேள்வி


பெரிதாய் ஒன்றும் நான் கேட்கவில்லை
அன்று
நீங்கள் நம்பமாட்டீர்கள்
அப்போது யாவரும்
ஒருமாதிரியாய் என்னை
புரிகிறதா
அதைவிடுங்கள்
நீங்கள் இருக்கின்றீர்கள்
இதுபோதும்
இப்பொழுது
இங்கு
நான் கேட்கிறேன்
பிய்ந்து கிடக்கும் மீன் தலைக்கு
நான் யார்?
ஏன் வியர்க்கிறது உங்களுக்கு?

கேள்வி

யார் உடைத்தது
என்ற கேள்வி
முழுக்கண்ணாடிக்கு
அபத்தமாய்த் தெரிய
யாருமில்லா ஒரு பொழுது
விடை வேண்டி
விழுந்து நொறுங்கியது


நன்றி-தடாகம்
Thadagam_Logo_Eng

Wednesday, October 14, 2009

சாளரத்தில் தெரியும் வானம்#1-கவிஞர் மனுஷ்யபுத்திரன்

என் பார்வையில் படைப்பாளிகள் : கவிஞர் மனுஷ்யபுத்திரன்


      Thadagam : Muthuvel - Saalarathil Theriyum Vaanam
சாளரத்தில் தெரியும் வானம்

‘உங்கள்(மனுஷ்யபுத்திரன்) கவிதைகளின் வன்முறை மிக்க கசப்பு என்னை எப்போதுமே தாக்குவதில்லை.அதை தாண்டி அதிலுள்ள மென்மையான ஏக்கத்தினாலேயே நான் மனம் தீண்டப் பெறுவேன். அந்த வன்முறை தனக்குத்தானே செய்துகொள்ளும் பாவனையே என்றும் எண்ணிக்கொள்வேன்”
-ஜெயமோகன்

ஆத்மாநாம், சுகுமாரன், கலாப்ரியா ஆகியோர்களை முன்னோடியாகக் கொண்டு எழுதுவதாகக் கூறினாலும் கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனித்தன்மையோடு எழுதுபவர்.இன்றைய இளம் கவிஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளவர்.14 வயதில் கவிதை எழுதத் துவங்கி 16 வயதில் தனது முதல்கவிதைத் தொகுப்பு”மனுஷ்யபுத்திரன் கவிதைகள்” கொண்டுவந்தவர். இருந்தாலும் “என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்” என்கிற இவரின் இரண்டாவது தொகுப்பையே, முதலாவதாகக் கொள்ளுமாறு குறிப்பிடுகிறார்.இவைகளைத் தவிர ‘இடமும் இருப்பும்”, 'நீராலானது', 'மணலின் கதை', 'கடவுளுடன் பிரார்த்தித்தல்' ஆகிய கவிதைத்தொகுப்புகளையும் ‘எப்போதும் வாழும் கோடை', ‘காத்திருந்த வேளையில்' ஆகிய இரண்டு கட்டுரைத்தொகுப்புகளையும் கொண்டுவந்துள்ளார்.எப்போதும் வாழும் கோடை என்னும் கட்டுரை நூல் நவீன கவிதைகள் பற்றிய கருத்துகள்,விமர்சனக் கட்டுரைகள் கொண்ட நூல்.கவிதைகளைப்போலவே இவரின் உரைநடைக்கு சிறந்ததொரு சான்றாக இக் கட்டுரைத்தொகுப்பு நூல் அமைந்துள்ளது.மேலும் ‘உயிர்மை' மாத இதழ் மற்றும் உயிரோசை எனும் இணைய வார இதழின் ஆசிரியர்.உயிர்மை பதிப்பகமும் நடத்திவருகிறார்.

2002 ஆம் ஆண்டு இளம் படைப்பாளிகளுக்கான உயரிய தேசிய விருதான 'சன்ஸ்கிருதி சம்மான்', 2003 ல் அமெரிக்க இலக்கிய நண்பர்கள் குழு வழங்கிய'இலக்கியச் சிற்பி',2004 ல் இந்திய சமூக நீதி அமைச்சகத்தின் ‘தனி நபர் படைப்பாற்றலுக்கான'விருது ஆகிய விருதுகளை இதுவரை பெற்றிருக்கிறார்.

பனிமலையின் நதிபோல தெளிவானதும், துல்லியமானதும் ,சிலிர்ப்பும் கொண்டவை இவரது கவிதைகள்.'உரையாடல் தன்மை கொண்ட,அதே சமயம் செறிவூட்டப்பட்ட சொற்களையே கவிதைக்காக என் மனம் சார்ந்திருக்கிறது' என்கிற இவரின் கவிதைகள் மிகவும் உரையாடல் தன்மை கொண்டதாய் இருக்கின்றன.'ஒரு கவித்துவமான சொல்கூட இல்லாமல் கவிதையின் உக்கிரத்தை ஏற்றிய வரிகளை தமிழில் எழுதவேண்டும்'என்று கூறும் இவரின் கவிதைகள் துல்லியமான, எளிமையான சொற்களினால் ஆனது.வார்த்தைகளாக நீட்டிக்கப்படவேண்டிய வரிகளை ஒரு சொல், அல்லது ஓரிரு சொற்களில் வெளிப்படுத்திவிடும் செறிவும், சொல்லின் ருசியும் இவர் கவிதைகளிலும், உரை நடையிலும் உண்டு. ஆனாலும் அவை எளிமையான சொற்களாய் இருப்பது ஆச்சரியமூட்டுவது.வாசகனை சிரமப்படுத்தாமல் இட்டுச்செல்லும் கவிதை தொனியை கவிதையின் இயல்பான தன்மையாகவே படைத்திருக்கிறார்.பத்திகளாக எழுதுவது எளிய வாசகனுக்கும் உகந்ததும் வரவேற்கத்தகுந்ததுமாகும்.மனிதர்களுக்கிடையிலான உறவுகளையும், பிரிவுகளையும் உளவியல் ரீதியில் அணுகுகிறது இவர் கவிதைகள்.அதீத அன்பும் கூட ஒரு வன்முறையே என நேர்ப்பேச்சில் குறிப்பிட்டவர், இது பற்றி எத்தனை எழுதினாலும் எழுதித்தீரவில்லை என்று கூறுகிறார்.கவிதைகளைப்போலவே கவிதைகளுக்கான தலைப்புகளும் அலாதியானவை.தனித்துவமானவை.ஒரு உட்பொருளை எழுதுகையில் அதற்கு மிக நெருக்கமானதும், மிக யாதார்த்தமானதும், துல்லியதுமானவற்றை பட்டியலிடும் தன்மை இவர் கவிதைகளில் விரவிக்கிடக்கும்.ஒரு சிறு சூழலை,சம்பவத்தை முன்வைக்கும் கவிதைகள் பல கோணங்களில், பல தளங்களில் தன்னை அவிழ்த்துக்கொள்ளும் மர்மங்களும், பன்முகத்திறனும் கொண்டவை.ஆற்றமுடியாத துக்கத்தையே ஏற்படுத்தும் இவர் கவிதைகள் பதற்றத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தவல்லவை. அம்மா இல்லாத ரம்ஜான், அரசி போன்ற நெடுங்கவிதைகள் நிறைய எழுதியுள்ளார்.

காத்திருத்தலின்

காத்திருத்தலின்
கடைசி கண
நிரம்பி வழிதல்களுக்கும்
பிரிவின்
முதல் கண ஆவியாதல்களுக்கும்
நடுவே
இல்லை
இடையில் நிகழ்ந்தது
எதும் இல்லை

சிவப்புப் பாவாடை

சிவப்புப்பாவாடை
வேண்டுமெனச்சொல்ல
அவசரத்திற்கு
அடையாளமேதும் சிக்காமல்
விரலைக் கத்தியாக்கி
தன் தொணடையறுத்து
பாவனை இரத்தம் பெருக்குகிறாள்
ஊமைச் சிறுமி

அமைதி

நீரில்
இரவெல்லாம்
ஓசையற்று
உடைந்துகொண்டிருக்கிறது
நிலவு
ஒரு
விசும்பலற்று
அழுகின்றன
மீன்கள்
எந்த உராய்வுமற்றுச்
சுழல்கின்றன
நீர் வளையங்கள்
ஏதோ ஒரு மரத்தின்
பெருமூச்சுகளிலிருந்து நீங்கி
நெடுந்தொலைவாய்
பயணம் செய்கிறது ஓரிலை
நீரின்
அத்தனை அமைதிகளும் கூடி
யாருமற்ற கரைநோக்கி வந்துகொண்டிருக்கிறது
அக் குழந்தையின் உடல்

அழுகை வராமலில்லை

அழுகை வராமலில்லை
ஒரு வைராக்கியம்
உங்களின் முன்னால்
அழக்கூடாது

ஒரே ஒரு மீன்

மீன் தொட்டியில்
எல்லா நீரையும் வடித்த பிறகு
மீன்கள்
தம் பனித்த
உறைந்த கண்களால்
வெறுமனே
ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன
ஒருமீன்
துள்ளுகிறது
சும்மா
துள்ளுகிறது
யாரும் பதட்டமடையத்
தேவையில்லை
எனக்கு உறுதியாகத் தெரியும்
ஒரே ஒரு மீன்தான்
துள்ளுகிறது

நன்றி- தடாகம்

Thadagam_Logo_Eng

Sunday, October 11, 2009

என் பார்வையில் படைப்பாளிகள் - புதிய வாசகனின் புதிய முயற்சி

சாளரத்தில் தெரியும் வானம் - முன்னுரை - ச.முத்துவேல்

      Thadagam : Muthuvel - Saalarathil Theriyum Vaanam
சாளரத்தில் தெரியும் வானம்
என் பார்வையில் படைப்பாளிகள் - புதிய வாசகனின் புதிய முயற்சி
தடாகம் வாசகர்களுக்கு வணக்கம். நான் , எழுத்தாளர் பொன்.வாசுதேவனுடன் மதிப்பிற்குரிய மனுஷ்யபுத்திரனைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.
அப்போது வாசுதேவனின் கையிலிருந்த ரஸவாதி என்ற நூலின் தமிழாக்க நூலை வாங்கிப்பார்த்த மனுஷ்யபுத்திரன், அந்நூல் குறித்த மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் தெரியப்படுத்தினார்.இதுபோன்ற ஒரு நூல் தமிழில் வந்திருப்பது குறித்து எங்காவது, யாராவது நான்கு வரிகள் எழுதினால் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்று தன் எண்ணத்தை ஆதங்கத்தோடு தெரியப்படுத்தினார்.அச்சமயத்தில்தான் தடாகம் இதழில் எனக்கு ஒரு இடம் ஒதுக்கி தொடர்ந்து எழுத கவிஞர் நரனும், தடாகம் ஆசிரியரும் அன்போடு வற்புறுத்தியிருந்தனர். நான் இது பற்றி மனுஷ்யபுத்திரனிடம் குறிப்பிட்டு என் தயக்கங்களைப் பட்டியலிட்டபோது, அவர் என் தயக்கங்களை உதறி வாய்ப்புகளைப் பயன்படுத்தும்படி கூறினார். 'ஒரு வருட வாசிப்புப் பழக்கம் எப்படி உங்களை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திச் செல்கிறதோ, அதுபோல் எழுதிப்பழகுவதும் அடுத்தக் கட்டத்திற்கு இட்டுச் செல்லும்‘ என்றார். இவ் வரிகள் எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.எழுத்தாளர் பாவண்ணன் அவர்களும் மின்னஞ்சலில், படிக்கிற புத்தகங்களை பற்றி எழுதிப்பாருங்கள் என்று கூறியிருந்தார்.ஜெயமோகன், சுந்தரராமசாமி என எல்லாப் படைப்பாளுமைகளுமே இதையேதான் சொல்லியிருக்கிறார்கள்.” எழுது, எழுதுவதே எழுத்தின் ரகசியம்” என்கிறார் சுந்தர ராமசாமி.
இலக்கிய வாசிப்பில் நான் இரண்டு வயது குழந்தைதான். நான் வாசித்ததே மிகக் குறைவுதான் என்கிற நிலையில் படைப்பாளிகளைப்பற்றி எழுதுவதென்பது போதாமை நிறைந்ததாகவே இருக்கும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை.இருந்தபோதிலும் நான் வாசித்தவரையில்,வாசித்த படைப்புகளை மட்டும் முன்வைத்து படைப்பாளிகளை பற்றிய அறிமுகமாக எழுதலாமென்றிருக்கிறேன்.அறிமுகப்படுத்துவது மட்டுமே என் நோக்கம் என்றாலும் என் பார்வையில் அவர்களைப் பற்றிய எண்ணங்களையும் சேர்த்து எழுதப்போகிறேன். நன்கறிந்த படைப்பாளிகளை பற்றி எழுதுகிற அதே சமயத்தில் புதிய இளம்தலைமுறை படைப்பாளிகளையும் , அவர்களின் படைப்புகளையும் பற்றி எழுதுவது என் போன்ற புதிய வாசகர்களுக்கு பயனுள்ளதாகவும்,ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்கும்.தடாகத்தில் நான் எழுத இருப்பதின் பின்னணியும், காரணமும் இதுதான். ஒருவகையில் எழுதிப்பார்த்து என்னை வளர்த்துக்கொள்ள முயலும் தன்னலமும், அதேசமயத்தில் படைப்பாளிகளையும்,படைப்புகளையும் பற்றி அறிமுகப்படுத்தும் ஆக்கப்பூர்வமான எண்ணமுமே என்பதால் என் எழுத்துக்களில் உள்ள போதாமைகளை வாசக நண்பர்களும், சம்பந்தப்பட்ட படைப்பாளிகளும் பெரியமனதுடன் பொறுத்தருள வேண்டுகிறேன்.
உங்களின் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் தடாகம் ஆசிரியருக்கோ ,எனக்கோ தெரியப்படுத்தி ஆதரவு தருமாறு வேண்டுகிறேன். நன்றி.
ச.முத்துவேல்
நன்றி-தடாகம்.
Thadagam_Logo_Eng