Sunday, October 25, 2009

சாளரத்தில் தெரியும் வானம் – தொடர்-கவிஞர் தென்றல்

என் பார்வையில் படைப்பாளிகள் - கவிஞர் தென்றல்

கவிஞர் தென்றல்

OLYMPUS DIGITAL CAMERA
நவீன கவிதைகள் என்பதில் கூறுமுறை ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. சொல்லப்படும் முறையும் நவீனத்தன்மையுடனும்,புதிதானதாகவுமிருப்பது.கவிஞர் தென்றலின் கவிதைகள் வித்தியாசமான, நூதனமான கோணங்களில் அவதானிக்கப்பட்டவைகளாக இருப்பது தனிச்சிறப்பு.வழக்கங்களிலிருந்து விடுபட்டு,புதியதொரு பார்வையுடன் பார்க்கப்பட்டிருக்கிறது.ஒன்றினை விளக்க உவமை பயன்படுத்தப்பட்டு, அது எதை விளக்கமுனைகிறதோ அதையும் சொல்வது உவமை, உவமேயம் என்று அறியப்படுகிறது. உவமையாக சொல்லப்படுவது மட்டுமே தனித்து நின்றும், போலவே , அது உணர்த்துவது வேறொன்றும்,ஒன்றுக்கும் மேற்பட்டதுமானதுமான தன்மை கொண்டதை படிமம் என்கிறோம். கவிஞர் தென்றலின் கவிதைகள் நிறையவே படிமக்கவிதைகளாக அமைந்திருக்கிறது.


பறத்தல் சுதந்திரத்தின் குறியீடாகப்பயன்படுகிறது.தென்றலின் சில கவிதைகளும் சுதந்திரத்தின் விழைவைக் கூறுகிறது.தலையீடுகளும், நிர்ப்பந்தங்களையும் வெறுக்கிறது.அதுபோலவே, மனிதர்களுக்கிடையிலான உறவுமுறைகளில் உள்ள சிக்கல்கள் குறித்த வருத்தத்தை சில கவிதைகளில் காணலாம்.அக் கவிதைகள் தன்னுணர்வாக, விரக்தியையும், சலிப்பையும், ஏமாற்றத்தையுமே கொண்டிருக்கின்றன.பெண்ணியம் சார்ந்த கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் கவிதைகளும் தொகுப்பில் இருக்கின்றன.
ஒரு விளையாட்டுச் சிறுமியின் மனப்பாங்கைத் தொலைத்துவிடாத இளம்பெண்ணின் அனுபவங்களாகவே இவர் கவிதைகளில் பூனை, பொன் வண்டு, ரோஜாத்தொட்டி, கிளி, தும்பி ஆகியவை மீண்டும் மீண்டும் இடம்பெறுகிறது.

நீல இறகு என்கிற இவரின் முதல்கவிதைத்தொகுப்பு, உயிர்மை வெளியீடாக வந்துள்ளது.சிறியதும், பெரியதுமான 89 கவிதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பு நல்ல கவிதைகளால் நிரம்பியிருக்கிறது.சிந்தனைகளில் இருக்கும் வீச்சு கவிதைகளின் கட்டமைப்பில் கூடிவரும்போது இன்னும் நல்ல கவிதைகளாகப்படும்.செறிவும், கவிமொழியும் அடுத்தத் தொகுப்புகளில் இவரிடம் நிச்சயம் முன்னேற்றம் கண்டிருக்கலாம்.

புதுச்சேரியைச் சார்ந்தவரான தென்றல் சென்னையில் மென்பொறியாளராகப் பணியாற்றுகிறார்.இளம் கவிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கவிஞர் தேவமகள் அறக்கட்டளை இவருக்கு கவித்தூவி விருதுகொடுத்துச் சிறப்பித்துள்ளது.


ஒற்றையடிப்பாதை

ஒற்றையடிப்பாதை
அதிகாரம் வாய்ந்ததாய்
திரும்பச் சொல்லும் இடத்திலும்
வளைந்துபோகும் இடத்திலும்
திரும்பவும்
வளையவும் வைக்கிறது.
முதுகில்
துப்பாக்கி முனை பதித்து
முன் நடத்தும்
கொள்ளைக்காரன்போல
நன்றாகத் தெரியும் அதற்கு
அவ்வழியே
பயணிப்போர் இல்லையென்றால்
புற்களால் தின்னப்பட்டு
மடிந்துபோகுமென்று
இருந்தபோதிலும் வெட்கமின்றி
ஓயாமல்
மிரட்டிக்கொண்டேதானிருக்கிறது
அவ்வழியே
போவோரையும் வருவோரையும்

பஞ்சின் கனவு


இலவு காத்த கிளி
ஒரு பக்கம் இருக்கட்டும்
தானும் ஒரு நாள்
மேகமாவதாய் எண்ணியிருந்த பஞ்சின் கனவு
தலையணையில் முடிந்தது

என் ஒரே கேள்வி


பெரிதாய் ஒன்றும் நான் கேட்கவில்லை
அன்று
நீங்கள் நம்பமாட்டீர்கள்
அப்போது யாவரும்
ஒருமாதிரியாய் என்னை
புரிகிறதா
அதைவிடுங்கள்
நீங்கள் இருக்கின்றீர்கள்
இதுபோதும்
இப்பொழுது
இங்கு
நான் கேட்கிறேன்
பிய்ந்து கிடக்கும் மீன் தலைக்கு
நான் யார்?
ஏன் வியர்க்கிறது உங்களுக்கு?

கேள்வி

யார் உடைத்தது
என்ற கேள்வி
முழுக்கண்ணாடிக்கு
அபத்தமாய்த் தெரிய
யாருமில்லா ஒரு பொழுது
விடை வேண்டி
விழுந்து நொறுங்கியது


நன்றி-தடாகம்
Thadagam_Logo_Eng

Wednesday, October 14, 2009

சாளரத்தில் தெரியும் வானம்#1-கவிஞர் மனுஷ்யபுத்திரன்

என் பார்வையில் படைப்பாளிகள் : கவிஞர் மனுஷ்யபுத்திரன்


      Thadagam : Muthuvel - Saalarathil Theriyum Vaanam
சாளரத்தில் தெரியும் வானம்

‘உங்கள்(மனுஷ்யபுத்திரன்) கவிதைகளின் வன்முறை மிக்க கசப்பு என்னை எப்போதுமே தாக்குவதில்லை.அதை தாண்டி அதிலுள்ள மென்மையான ஏக்கத்தினாலேயே நான் மனம் தீண்டப் பெறுவேன். அந்த வன்முறை தனக்குத்தானே செய்துகொள்ளும் பாவனையே என்றும் எண்ணிக்கொள்வேன்”
-ஜெயமோகன்

ஆத்மாநாம், சுகுமாரன், கலாப்ரியா ஆகியோர்களை முன்னோடியாகக் கொண்டு எழுதுவதாகக் கூறினாலும் கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனித்தன்மையோடு எழுதுபவர்.இன்றைய இளம் கவிஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளவர்.14 வயதில் கவிதை எழுதத் துவங்கி 16 வயதில் தனது முதல்கவிதைத் தொகுப்பு”மனுஷ்யபுத்திரன் கவிதைகள்” கொண்டுவந்தவர். இருந்தாலும் “என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்” என்கிற இவரின் இரண்டாவது தொகுப்பையே, முதலாவதாகக் கொள்ளுமாறு குறிப்பிடுகிறார்.இவைகளைத் தவிர ‘இடமும் இருப்பும்”, 'நீராலானது', 'மணலின் கதை', 'கடவுளுடன் பிரார்த்தித்தல்' ஆகிய கவிதைத்தொகுப்புகளையும் ‘எப்போதும் வாழும் கோடை', ‘காத்திருந்த வேளையில்' ஆகிய இரண்டு கட்டுரைத்தொகுப்புகளையும் கொண்டுவந்துள்ளார்.எப்போதும் வாழும் கோடை என்னும் கட்டுரை நூல் நவீன கவிதைகள் பற்றிய கருத்துகள்,விமர்சனக் கட்டுரைகள் கொண்ட நூல்.கவிதைகளைப்போலவே இவரின் உரைநடைக்கு சிறந்ததொரு சான்றாக இக் கட்டுரைத்தொகுப்பு நூல் அமைந்துள்ளது.மேலும் ‘உயிர்மை' மாத இதழ் மற்றும் உயிரோசை எனும் இணைய வார இதழின் ஆசிரியர்.உயிர்மை பதிப்பகமும் நடத்திவருகிறார்.

2002 ஆம் ஆண்டு இளம் படைப்பாளிகளுக்கான உயரிய தேசிய விருதான 'சன்ஸ்கிருதி சம்மான்', 2003 ல் அமெரிக்க இலக்கிய நண்பர்கள் குழு வழங்கிய'இலக்கியச் சிற்பி',2004 ல் இந்திய சமூக நீதி அமைச்சகத்தின் ‘தனி நபர் படைப்பாற்றலுக்கான'விருது ஆகிய விருதுகளை இதுவரை பெற்றிருக்கிறார்.

பனிமலையின் நதிபோல தெளிவானதும், துல்லியமானதும் ,சிலிர்ப்பும் கொண்டவை இவரது கவிதைகள்.'உரையாடல் தன்மை கொண்ட,அதே சமயம் செறிவூட்டப்பட்ட சொற்களையே கவிதைக்காக என் மனம் சார்ந்திருக்கிறது' என்கிற இவரின் கவிதைகள் மிகவும் உரையாடல் தன்மை கொண்டதாய் இருக்கின்றன.'ஒரு கவித்துவமான சொல்கூட இல்லாமல் கவிதையின் உக்கிரத்தை ஏற்றிய வரிகளை தமிழில் எழுதவேண்டும்'என்று கூறும் இவரின் கவிதைகள் துல்லியமான, எளிமையான சொற்களினால் ஆனது.வார்த்தைகளாக நீட்டிக்கப்படவேண்டிய வரிகளை ஒரு சொல், அல்லது ஓரிரு சொற்களில் வெளிப்படுத்திவிடும் செறிவும், சொல்லின் ருசியும் இவர் கவிதைகளிலும், உரை நடையிலும் உண்டு. ஆனாலும் அவை எளிமையான சொற்களாய் இருப்பது ஆச்சரியமூட்டுவது.வாசகனை சிரமப்படுத்தாமல் இட்டுச்செல்லும் கவிதை தொனியை கவிதையின் இயல்பான தன்மையாகவே படைத்திருக்கிறார்.பத்திகளாக எழுதுவது எளிய வாசகனுக்கும் உகந்ததும் வரவேற்கத்தகுந்ததுமாகும்.மனிதர்களுக்கிடையிலான உறவுகளையும், பிரிவுகளையும் உளவியல் ரீதியில் அணுகுகிறது இவர் கவிதைகள்.அதீத அன்பும் கூட ஒரு வன்முறையே என நேர்ப்பேச்சில் குறிப்பிட்டவர், இது பற்றி எத்தனை எழுதினாலும் எழுதித்தீரவில்லை என்று கூறுகிறார்.கவிதைகளைப்போலவே கவிதைகளுக்கான தலைப்புகளும் அலாதியானவை.தனித்துவமானவை.ஒரு உட்பொருளை எழுதுகையில் அதற்கு மிக நெருக்கமானதும், மிக யாதார்த்தமானதும், துல்லியதுமானவற்றை பட்டியலிடும் தன்மை இவர் கவிதைகளில் விரவிக்கிடக்கும்.ஒரு சிறு சூழலை,சம்பவத்தை முன்வைக்கும் கவிதைகள் பல கோணங்களில், பல தளங்களில் தன்னை அவிழ்த்துக்கொள்ளும் மர்மங்களும், பன்முகத்திறனும் கொண்டவை.ஆற்றமுடியாத துக்கத்தையே ஏற்படுத்தும் இவர் கவிதைகள் பதற்றத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தவல்லவை. அம்மா இல்லாத ரம்ஜான், அரசி போன்ற நெடுங்கவிதைகள் நிறைய எழுதியுள்ளார்.

காத்திருத்தலின்

காத்திருத்தலின்
கடைசி கண
நிரம்பி வழிதல்களுக்கும்
பிரிவின்
முதல் கண ஆவியாதல்களுக்கும்
நடுவே
இல்லை
இடையில் நிகழ்ந்தது
எதும் இல்லை

சிவப்புப் பாவாடை

சிவப்புப்பாவாடை
வேண்டுமெனச்சொல்ல
அவசரத்திற்கு
அடையாளமேதும் சிக்காமல்
விரலைக் கத்தியாக்கி
தன் தொணடையறுத்து
பாவனை இரத்தம் பெருக்குகிறாள்
ஊமைச் சிறுமி

அமைதி

நீரில்
இரவெல்லாம்
ஓசையற்று
உடைந்துகொண்டிருக்கிறது
நிலவு
ஒரு
விசும்பலற்று
அழுகின்றன
மீன்கள்
எந்த உராய்வுமற்றுச்
சுழல்கின்றன
நீர் வளையங்கள்
ஏதோ ஒரு மரத்தின்
பெருமூச்சுகளிலிருந்து நீங்கி
நெடுந்தொலைவாய்
பயணம் செய்கிறது ஓரிலை
நீரின்
அத்தனை அமைதிகளும் கூடி
யாருமற்ற கரைநோக்கி வந்துகொண்டிருக்கிறது
அக் குழந்தையின் உடல்

அழுகை வராமலில்லை

அழுகை வராமலில்லை
ஒரு வைராக்கியம்
உங்களின் முன்னால்
அழக்கூடாது

ஒரே ஒரு மீன்

மீன் தொட்டியில்
எல்லா நீரையும் வடித்த பிறகு
மீன்கள்
தம் பனித்த
உறைந்த கண்களால்
வெறுமனே
ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன
ஒருமீன்
துள்ளுகிறது
சும்மா
துள்ளுகிறது
யாரும் பதட்டமடையத்
தேவையில்லை
எனக்கு உறுதியாகத் தெரியும்
ஒரே ஒரு மீன்தான்
துள்ளுகிறது

நன்றி- தடாகம்

Thadagam_Logo_Eng

Sunday, October 11, 2009

என் பார்வையில் படைப்பாளிகள் - புதிய வாசகனின் புதிய முயற்சி

சாளரத்தில் தெரியும் வானம் - முன்னுரை - ச.முத்துவேல்

      Thadagam : Muthuvel - Saalarathil Theriyum Vaanam
சாளரத்தில் தெரியும் வானம்
என் பார்வையில் படைப்பாளிகள் - புதிய வாசகனின் புதிய முயற்சி
தடாகம் வாசகர்களுக்கு வணக்கம். நான் , எழுத்தாளர் பொன்.வாசுதேவனுடன் மதிப்பிற்குரிய மனுஷ்யபுத்திரனைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.
அப்போது வாசுதேவனின் கையிலிருந்த ரஸவாதி என்ற நூலின் தமிழாக்க நூலை வாங்கிப்பார்த்த மனுஷ்யபுத்திரன், அந்நூல் குறித்த மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் தெரியப்படுத்தினார்.இதுபோன்ற ஒரு நூல் தமிழில் வந்திருப்பது குறித்து எங்காவது, யாராவது நான்கு வரிகள் எழுதினால் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்று தன் எண்ணத்தை ஆதங்கத்தோடு தெரியப்படுத்தினார்.அச்சமயத்தில்தான் தடாகம் இதழில் எனக்கு ஒரு இடம் ஒதுக்கி தொடர்ந்து எழுத கவிஞர் நரனும், தடாகம் ஆசிரியரும் அன்போடு வற்புறுத்தியிருந்தனர். நான் இது பற்றி மனுஷ்யபுத்திரனிடம் குறிப்பிட்டு என் தயக்கங்களைப் பட்டியலிட்டபோது, அவர் என் தயக்கங்களை உதறி வாய்ப்புகளைப் பயன்படுத்தும்படி கூறினார். 'ஒரு வருட வாசிப்புப் பழக்கம் எப்படி உங்களை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திச் செல்கிறதோ, அதுபோல் எழுதிப்பழகுவதும் அடுத்தக் கட்டத்திற்கு இட்டுச் செல்லும்‘ என்றார். இவ் வரிகள் எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.எழுத்தாளர் பாவண்ணன் அவர்களும் மின்னஞ்சலில், படிக்கிற புத்தகங்களை பற்றி எழுதிப்பாருங்கள் என்று கூறியிருந்தார்.ஜெயமோகன், சுந்தரராமசாமி என எல்லாப் படைப்பாளுமைகளுமே இதையேதான் சொல்லியிருக்கிறார்கள்.” எழுது, எழுதுவதே எழுத்தின் ரகசியம்” என்கிறார் சுந்தர ராமசாமி.
இலக்கிய வாசிப்பில் நான் இரண்டு வயது குழந்தைதான். நான் வாசித்ததே மிகக் குறைவுதான் என்கிற நிலையில் படைப்பாளிகளைப்பற்றி எழுதுவதென்பது போதாமை நிறைந்ததாகவே இருக்கும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை.இருந்தபோதிலும் நான் வாசித்தவரையில்,வாசித்த படைப்புகளை மட்டும் முன்வைத்து படைப்பாளிகளை பற்றிய அறிமுகமாக எழுதலாமென்றிருக்கிறேன்.அறிமுகப்படுத்துவது மட்டுமே என் நோக்கம் என்றாலும் என் பார்வையில் அவர்களைப் பற்றிய எண்ணங்களையும் சேர்த்து எழுதப்போகிறேன். நன்கறிந்த படைப்பாளிகளை பற்றி எழுதுகிற அதே சமயத்தில் புதிய இளம்தலைமுறை படைப்பாளிகளையும் , அவர்களின் படைப்புகளையும் பற்றி எழுதுவது என் போன்ற புதிய வாசகர்களுக்கு பயனுள்ளதாகவும்,ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்கும்.தடாகத்தில் நான் எழுத இருப்பதின் பின்னணியும், காரணமும் இதுதான். ஒருவகையில் எழுதிப்பார்த்து என்னை வளர்த்துக்கொள்ள முயலும் தன்னலமும், அதேசமயத்தில் படைப்பாளிகளையும்,படைப்புகளையும் பற்றி அறிமுகப்படுத்தும் ஆக்கப்பூர்வமான எண்ணமுமே என்பதால் என் எழுத்துக்களில் உள்ள போதாமைகளை வாசக நண்பர்களும், சம்பந்தப்பட்ட படைப்பாளிகளும் பெரியமனதுடன் பொறுத்தருள வேண்டுகிறேன்.
உங்களின் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் தடாகம் ஆசிரியருக்கோ ,எனக்கோ தெரியப்படுத்தி ஆதரவு தருமாறு வேண்டுகிறேன். நன்றி.
ச.முத்துவேல்
நன்றி-தடாகம்.
Thadagam_Logo_Eng

Monday, September 14, 2009

பா.திருச்செந்தாழை

பா.திருச்செந்தாழை என்னும் இளைஞர் மதுரையைச் சார்ந்தவர்.கடவு நிகழ்வுக்குச் சென்றிருந்தபோது சந்திக்கமுடிந்தது. பார்த்தவுடன் பிடித்துப்போனது எனக்கு.அதற்குமுன்புவரை (இன்றுவரையும்)அவரின் ஓரிரு கவிதைகளையும், ஒரேயொரு கதையையும் மட்டுமே படித்திருந்தேன்.

‘உங்கள் கதைகளில்environment conciousஅதிகமாக இருக்கிறது.அதை தொடர்ந்து நன்றாகச் செய்யுங்கள்’ என்று பா.வெங்கடேசன் திருச்செந்தாழையிடம் சொல்லிக்கொண்டிருந்தார். எவ்விதத் தயக்கமும் இல்லாமல் திருச்செந்தாழை,’ எனக்குப் புரியவில்லை. தயவுசெய்து அதைத் தமிழில் சொல்லுங்கள்’ என்று சபையில் கேட்டுக்கொண்டார்.அதுதான் திருச்செந்தாழை. மளிகைக்கடையில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி. நிகழ்ச்சியில் உணவுவேளையின்போது அவர் செல்பேசியில்’ கேப்பை இந்தவிலை, அந்த விலை’ என்று பேசிக்கொண்டிருந்தபோதுகூட நண்பர் யாருடனோ நையாண்டி செய்கிறார் என்றுதான் இருந்தேன்.

காலச்சுவடில் சிறுகதைத்தொகுப்பு வந்திருக்கிறது.ஜெயமோகன் தன் வலைத்தளத்தில் சிறுகதைகளின் இன்றைய நிலைபற்றி எழுதும்போது குறிப்பிட்டுஇள்ள மிகச் சில படைப்பாளிகளுள் திருச்செந்தாழையும் உண்டு.

இம்மாத உயிர் எழுத்து இதழில் இடம்பெற்றுள்ள அவரின் கவிதைகளைப் படித்து நான்...

வேண்டாம். நீங்களே படித்துப்பாருங்கள். பிறகு சொல்லுங்கள்.

கவிதைகள்

கனத்த உன் முலைத் திரட்சியால்

வெட்கித் திரும்பும் கல் ஸ்திரியே

உள்ளங்கை தீபத்துடன்

உனது புராதனக் காத்திருப்பின்

எத்தனையாவது பயணி நான்

மண்டபத் தனிமையில்

நான் சப்பித் தணிய நீ

தளர்த்தி விடுவிக்கும்

கல் முலையின் குளிர்வில்

துடித்தடங்கும் யென் குறி

*

எழுதிய ‘ ந’ வின் நுனியில்

ஒரு அலகினைச் செருகினாள்

பக்கவாட்டு நெளிவுகளில்

சில சிறகுகளை பொதிந்துவிட்டு

சுழியின் கீழே வாலிலிழுத்தாள்

கொண்டுவந்த கடுகினை

மையத்தில் ஒட்டி முடித்தபொழுது

ஒருமுறை உடல் சிலும்பி

ந பறக்கிறது

பிறகான எனது ந விலெல்லாம்

ஒரு காகம் கரைகிறது

*

பின் திரும்பியே வராத

பிள்ளையின் அம்மாவிற்கு

அவ்வப்போது காணநேரிடும்

பைத்தியக்காரர்களின்

பிளாட்பார மரணங்கள்

பின்னிரவு நெடுங்காய்ச்சலை

பரிசளிக்கின்றன.

*

புகைக்கு பழகிய பருவத்தில்

மிதித்து நசுக்கிய சிகரட்டிற்கு

சற்று தள்ளி அமர்ந்திருந்த நாடோடி

அக்கினி பகவானை மிதிக்காதீங்க

என்றதை சொல்ல விரும்புகிறேன்.

*

ஒரு உதட்டை கடித்துறிஞ்சுவதுபோல

ஒரு துரோகத்தை சிதைத்து பழிதீர்ப்பதுபோல

கடைசி கணத்தில் தற்கொலையின்

ருசியை உணர்வதுபோல

விரும்பி நிகழ்த்துகிற விபத்தைப்போல

ஒரு சிகரட்டை மிதித்தணைப்பது

*

ஒரு

கணத்தின்

எந்த விளிம்பில்

காத்திருக்கிறது

அது

-பா. திருச்செந்தாழை

Wednesday, September 9, 2009

ஹேமா

தபால் பெட்டியில் புத்தகம் இருந்தது. அப்படியென்றால்? நம் கதை வந்திருக்கவேண்டும்! எடுத்துக்கொண்டு கதவு திறந்து உள்ளே போனேன்.ஷூக்களைக் கழட்டிவிட்டு நாற்காலியில் அமர்ந்து , புத்தகம் பிரித்தேன். என் கதையைத் தேடி, ஒருமுறை அதற்கான ஓவியங்களை ரசித்தேன். கதையின் தலைப்பு ஹேமா. ஆமாம். அதைவிட பொருத்தமான, ரசனையான, சுவாரசியமான, வசீகரமான, இன்னும் ஏராளமான …தலைப்பு எனக்குக்கிடைக்கவில்லை.மனமும் வரவில்லை.பின் கதையை ஒருமுறை மீண்டும் படித்துவிடத் தீர்மானித்து …துவங்கினேன் .
ஒரு கதையை, அதை எழுதினவன் மட்டுமே அதிகபட்ச எண்ணிக்கையில் படிப்பான் போலும்.மனதிற்குள் பலமுறை எழுதிப்பார்த்து, பேப்பரில்-இல்லையில்லை..இப்போதெல்லாம் கணினியில்- பிறகு சரிபார்த்தலுக்கென்று. மீண்டும் பிரசுரமான பிறகென்று.
"எனதுயிரே..எனதுயிரே.. உனக்கெனவே.."- செல் கொஞ்சியது.
மனைவி.
லேசான எரிச்சலுடன் "ம் .சொல்லு" என்றேன்.
"ம். என்னா பண்றீங்க. வேலையிலருந்து வந்தாச்சா? வீட்டுக்குள்ளேயே சிகரெட் புடிக்கிறீங்களா?.."
"இல்ல"
" ஏன் நானேதான் தினமும் ஃபோன் பண்ணணுமா? நீங்க ஒரு நாளாவது பண்ணியிருக்கீங்களா?.. நாளையிலருந்து நான் பண்ணவேமாட்டேன். எனக்குமட்டும் என்ன வந்துச்சி.."
அப்படித்தான் சொல்வாள். ஆனால், செய்யமாட்டாள்.அதாவது ஃபோன் பண்ணாமலிருக்கமாட்டாள்.
"இப்பத்தானெ வந்தேன். இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்து இப்படிக் கேட்டிருந்தா , அதில ஒரு நியாயம் இருக்குது.அதுக்கும் முன்னால நீயேதான் தினமும் பண்ணிடறயில்ல"
" சரி, ஊருக்கு இந்த வாரம் வர்..."
டொய்ங். செல் அணைந்துவிட்டது.இப்போதெல்லாம் ஏனோ தகராறு இதனுடன்.ஹேங்க் ஆகிவிடும். மீண்டும் ஆன் ஆவதென்பது பெரிய போராட்டம். கால் லாக்கெல்லாம்(calls log) அழிந்துவிடும். சரி. ஒருவகையில் நல்லதாய்ப் போயிற்று. அவளிடமிருந்து தப்பித்தோம். பின்ன! ஊருக்குப்போன இரண்டுவாரத்தில், தினமும் இதே பல்லவி. வேறொன்றும் இல்லையா பேச?
சரி,கதையைப் படிப்போம்.
*******
ஹேமா
மேற்குக் கோபுரத்துக்குப் பின்னால் என் வீடு. தெற்குக் கோபுரத்துக்கு அருகே ஹேமா வீடு.அவளைத்தாண்டித்தான் நான் போயாகவேண்டும்.
ஹேமா!
சொல்லும்போதே சிகரெட்டின் முதல் பஃப் இழுப்பதுபோலிருக்கிறது. அழகி. அவளைப்பற்றி அப்படி, இப்படி என்று நான் சொல்வதெல்லாம் வீண். அவள் அவள்தான்.அவளைப்பார்க்க , எங்கோ தொலைவிலிருக்கும் கல்லூரி மாணவர்கள் அதாவது எங்கள் அண்ணன்கள் எல்லாம் தேடி வருவார்கள். அவள் பள்ளி விட்டு வெளியேறும் சமயம் அவளைப்பார்க்கக் காத்திருப்பார்கள்.கல்லூரியில் இல்லாததா! எனக்கும் அன்றைய நாட்களில் கனவுதேவதை அவள்தான்.ஆனால், மனதிற்குள் மட்டுமே இருக்கும். ஊரின் கிழக்குக்கோடியில் இருக்கும் ராபின் சில கிலோமீட்டர் தொலைவையும் பொருட்படுத்தாமல், சைக்கிளை மேட்டில் மிதித்துக்கொண்டு என்னைத் தேடி வந்தான். என்னிடம் சைக்கிள் இல்லாததால் என்னை அழைத்துப்போக வருவதாகச் சொல்வான். ஆனால், சில நாட்களிலேயே தெரிந்துவிட்டது. ஹேமா! ஆமாம். அதுதான் காரணம்.ட்யூஷன் போகும்போது அவளைத்தாண்டி, அவளுக்கு இணையாக, அவளுக்கு முன்னால் செல்வதில் அவனுக்கு ஆறுதல். தலைமுடியெல்லாம் முன் மண்டையில் சுரண்டியிருப்பான். ஸ்டைல். அவள் வரும் வரை நேரம் கடத்த ஏதாவதொரு டீக்கடையில் டீ வேறு. உபயம் ராபின். அவன் மட்டும் சிகரெட் பிடிப்பான். நான் அநியாயத்துக்கு நல்லவன். புகைப்பதில்லை.ஆச்சரியமாகவும் பயத்தோடும் பார்த்தேன் ராபினை.அன்று கையில் ஒரு ரோஜா வைத்திருந்தான். எனக்கு உள்ளுக்குள் உதறல்.
மொட்டைமாடியில் கீற்றுக்கொட்டைக்குள் சிலரும் , சிலர் வெளியேயும் தரையில் அமர்ந்து மாதிரித் தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோதுதான் அது நடந்தது. நான், ஹேமா, பாபு, ராபின் ( சொல்லணுமா என்ன?)எல்லோருமே வெளியே
உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தோம். ராபின், பாபு, சதா என ஒவ்வொருத்தராக எழுந்து ஹேமாவைக் கடந்துபோவதும், வருவதுமாயிருந்தனர். அதே நேரம் மற்ற பையன்களைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புவேறு. ஹேமா இதையெல்லாம் கவனிக்காமல் பொறுப்பாக எழுதிக்கொண்டிருந்தாள்.
சதா என்னருகில் வந்து, " டேய்! ச்சீனு. அப்படியே நைஸா எழுந்துபோய் தண்ணிக குடிக்கப்போறாமாதிரி ஹேமாவைப்பாரு.ஜட்டி தெரியுது. "
அதற்குமேல் நின்றுபேசமுடியாத காரணத்தால் போய் அமர்ந்து, எழுதத்துவங்கினான். (?!) எனக்கு மனம் கனக்கத்துவங்கிவிட்டது. நிச்சயம் நான் போய்ப் பார்க்கப்போவதில்லை. ஆனால், இவர்கள் இப்படிப் பார்ப்பதையும், சிரிப்பதையும், அது எதையும் தெரியாமல் ஹேமா எழுதிக்கொண்டிருப்பதையும் எப்படி நிறுத்துவது.வயது வந்த ஒரு பெண்ணுக்கு இந்த உணர்வுகூடவா இல்லாமலிருப்பது! குட்டைப்பாவாடை போட்டுக்கொண்டு..ச்சே!
கதையைமுடிக்கவிடாமல் (காலிங்) பெல் காலிங்.கதவைத்திறந்தால் நட்டு வந்திருந்தான். கம்பெனியில மோட்டார் என் பிரச்சினைன்னா, பம்ப் அவன் பிரச்சினை. அதனாலதான் நடராஜன், நட்டு. வெளியில் கிளம்பிவிட்டோம். கதையைமுடிக்கவில்லை. இருந்தால் என்ன? நாம் எழுதியதுதானே.
••••
மனைவி ஊரிலிருந்து வந்துவிட்டிருந்தாள்.அலுவலகத்தில் சரியாக தேனீர் இடைவேளையில் , "எனதுயிரே..எனதுயிரே.. உனக்கெனவே.." யாரென்று தெரியவில்லை. புதிய எண்ணாக இருந்தது.
" ஹலோ?"
" மிஸ்டர் சீனுவாசன்?"பெண்குரல்.
" ஆமாங்க. "
" நான் ஹேமா"
"......."
"என்ன ஞாபகம் வரலையா? இல்ல..பல ஹேமாக்கள்ள எந்த ஹேமாங்கிற குழப்பமா? கதை படிச்சேன்"
சொல்லிவிட்டு வேண்டுமென்றே நின்றது குரல்.
எனக்கு கணத்திற்குள் மளமளவென எல்லாம் புரிந்துவிட்டது.என் கனவுக்கன்னியாக இருந்த ஹேமா. கதை படித்திருக்கிறாள். பரவாயில்லையே. இந்த மாதிரி நல்ல பழக்கமெல்லாம் கூட இருக்கா. படிச்சதோட இல்லாம சரியா புரிஞ்சுக்கிட்டு, என்னோட நம்பரை தேடிப்புடிச்சு வாங்கிப்பேசறாளே. எப்படியும் இருபது வருசமிருக்கும் பார்த்து. ஸ்கூல் முடிஞ்சப்பவே அவங்க அப்பாவுக்கு ட்ரான்ஸ்ஃபர். என்ன ஊருன்னுகூட எனக்குத் தெரியல.ச்சே. ஒரிஜினல் பேருங்களப் போட்டது தப்பாப்போச்சு.ஒருவேளை அவ வீட்டுக்காரரும் படிச்சிருந்தா எவ்ளோ கஷ்டப்படுவார்! இல்லயில்ல. நல்லதாப்போச்சு. இதோ ஹேமா பேசறாளே.
அதே நேரம் மனத்தின் வேகத்தை எண்ணி வியந்தது இன்னொரு மனம். ஒருகணத்திற்குள் எவ்வளவு தூரம்! வேகம்!
" என்ன சீனுவாசன். சத்தமேயில்லை. கதையெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்களா? ஆச்சரியமா இருக்குது. சந்தோசமாவும் இருக்குது. உங்க நம்பரத்தேடி, விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன்."
" அதெல்லாம் இருக்கட்டும். எப்படியிருக்கீங்க? புவனா, ஹெப்ஸிபா எல்லாம் எப்படி இருக்காங்க. அவங்களோட கான்டாக்ட் இருக்கா?"
"ம்ஹூம். நீங்க அதே ஊர்ல இருந்துக்கிட்டு என்னைக் கேட்டா என்ன அர்த்தம்? "
" இல்லை. நான் இப்ப ஊர்ல இல்ல. ஆனா அவங்க எப்படியிருக்கப்போறாங்க. நல்லா குண்டாகி இரண்டு மூனு பிள்ளைங்களோட.... மாமியாகியிருப்பாங்க. நீங்களும் அப்படித்தான் இருக்கணும்."
" நீங்க மட்டும் என்னவாம். அங்கிள் ஆகியிருப்பீங்க."
"ச்சேச்சே! நான் இன்னும் பாக்க சின்னப்பையன மாதிரிதான் இருக்கேன்னு எல்லாருமே சொல்றாங்க. உண்மைதான் அது."
" ம். இப்படியொரு நினைப்பு வேறயா? சரி , இருக்கட்டும். கதையைப் படிச்சிட்டு அழுதிட்டேன் தெரியுமா? முடிச்சிருந்தவிதம் ரொம்ப நல்லாயிருந்தது. அப்ப ஒருவாட்டி மறுபடி அழுதேன்."
" எனக்கு சங்கடமாயிருக்கு இப்போ. தப்பா நினைச்சுக்காதீங்க. அட்லீஸ்ட் பேரையாவது மாத்தி எழுதியிருக்கலாம் நான். ஸாரி."
" பரவாயில்ல. நான் அழுதது அத நினைச்சு இல்ல. உங்க எல்லார் ஞாபகமும் வந்துடிச்சி."
" அப்புறம் அதுல எனக்கும் உங்கமேல ஒரு இதுன்னு எழுதியிருந்தது வெறும் ஒரு சுவாரசியத்துக்குத்தான். தப்பா நினைச்சுக்காதீங்க. அதெல்லாம் கற்பனை."
" அப்படியா! நான் அதெல்லாம் உண்மைன்னு நம்பித்தான் அழுதது, ரசிச்சது, சந்தோசப்பட்டது எல்லாம்.. நீங்க.."
டொய்ங். பாடாவதி செல்போன்.

Thursday, August 20, 2009

ராழி








வணிக இதழ்களில் இடம்பெறும் ஓவியங்களைப் பார்த்தவுடனேயே யார் வரைந்தது என்பதைச் சொல்லிவிடமுடியும். அந்தளவுக்கு அவ் வோவியங்கள் நம்முடன் இரண்டறக் கலந்துவிட்டிருக்கிறது.ஒரே மாதிரியான முகச்சாயல்களுடைய மனிதர்கள் ஒவ்வொரு ஓவியருக்கும் பொதுவானது. ராமு என்பவர் பெயரை நான் வெகு நாட்களாக ராழி என்றே நினைத்திருந்தேன். அவர் அப்படித்தான் கையெழுத்திட்டிருப்பார். ஏதோ சுருக்கம்போல என நினைத்துக்கொண்டேன். ( என்னை மாதிரியே இன்னும் சிலரும் நினைத்திருந்தார்கள் என்று தெரியவந்தால் எனக்கு அது சற்று ஆறுதலாகக்கூட இருக்கும். இல்லையென்றால், கடைசிவரை வெட்கப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்). ஒருமுறை பள்ளித்தோழனோடு பேசிக்கொண்டிருக்கும்போது நான் ராழி என்று சொல்ல அவர்கள் வீட்டாரேச் சிரித்துவிட்டார்கள். பிறகுதான், அது ராமு என்று சொன்னார்கள்.


ம.செ.-மணியம் செல்வன் - வரையும் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அனாயாசமாகக் கிறுக்கப்பட்ட கோடுகளைப்போலிருக்கும்.அவர் வரையும் மனிதர்களின் கண்களில் எப்போதும் ஒரு சோகம் இழையோடியிருக்கும். என்னதான் சிரித்தமாதிரி வரைந்தாலும் அந்த சோகமிருக்கும். அச் சோகமே நம்மை அந்தப் படங்களிடம் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திவிடும். ‘உனக்கு என்ன பிரச்னைப்பா?’,’ ஏம்மா நீ இப்படியிருக்கே?’ என்று அந்த ஓவிய மனிதர்களிடம் கேட்கத்தோன்றுவதுபோல் ஒரு பரிவு ஏற்பட்டுவிடும். நாடோடித் தென்றல் படத்தின் விளம்பரச் சுவரொட்டிகளே (போஸ்டர்கள்) ம. செ. ஓவியத்தில்தான் இருந்தது. மேலும் டைட்டிலில் பிரபல ஓவிர்களின் ஓவியங்களையே காட்டும் சில திரைப்படங்களும் உண்டு.(ராஜபார்வை, நாடோடித்தென்றல், இந்திரன் சந்திரன் போன்றவை நினைவுக்கு வருகிறது).வட்டமுகம், சதுர முகம், ஏறின நெற்றி, சிரித்தமுகம் , குழந்தைமுகம் என்றெல்லாம் வகைப்படுத்திக்கொள்கிறோமே, அதுபோல் ஒவ்வொரு ஓவியர்களும் ஒவ்வொரு விதமான மனித முகங்களையே வரைந்திருப்பார்கள்.மாருதி வரையும் பெண்களைப் பார்த்து, பதின் பருவத்தில் கிளுகிளுப்பும், அலைக்கழிப்பும் அடைந்திருக்கிறேன்.ராமு, ஜெ.., போன்றவர்கள் வரையும் படங்கள் என்னை வசீகரிப்பதில்லை. அவர்கள் தவிர அரஸ், ஸ்யாம் என்று நிறைய பேர். இதழ்கள் சார்ந்தும், வகைமை சார்ந்தும் வெவ்வேறு ஓவியர்கள்.

என் முதல் கவிதை வெளியாகியிருந்தபோது அதற்கான ஓவியத்தைப் பார்க்கும் ஆவல் என்னிடம் மிகுதியாயிருந்தது.அலுவலகம் முடித்துவிட்டு நேராகக் கடைக்குச் சென்று புத்தகம் வாங்கிப்பார்த்தேன். மனோகர் வரைந்திருந்தார். மனம் நிறைவாயிருந்தது. பொருத்தமானதொரு சித்திரம்.அதிலொரு ஆனந்தம். அட! நாமும் ஒன்று எழுதி, அதுவும் புத்தகத்தில் அச்சாகி, அதற்கு ஒரு பிரபல ஓவியர் படம் வரைந்திருக்கிறாரே! அப்படியானால் நம்முடைய கவிதையை அவர் படித்திருப்பாரல்லவா!
குங்குமம் நடத்திய கவிதைத்திருவிழாவில் என் முதல் கவிதை வந்திருந்ததும், அவற்றை தேர்வுசெய்தவர் கவிப்பேரரசு வைரமுத்து என்பதும், அவர் தேர்வானவர்களையெல்லாம் அழைத்து சென்னையில் ஒரு பாராட்டுவிழா நடத்தினார் என்பதும் நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அந்தக்கூட்டத்திற்கு ஓவியர் மனோகர் அவர்களும் வந்திருந்தார். நான் அவரிடம் என் கவிதையை நினைவுபடுத்தி, அந்த ஓவியம் குறித்த என் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன்.அவர் கல்லூரியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்துகொண்டிருப்பதால், இதழ்களுக்கு நிறைய வரைவதில்லை என்று சொன்னார்.
இணையத்திலும், சில இதழ்களிலும் கூட ஏற்கனவே வரைந்து வைக்கப்பட்டுள்ள ஓவியங்களோ, அல்லது புகைப்படங்களோ தேடியெடுத்துப் பிரசுரிக்கிறோம். இப்படியோரு நிலை நீடிக்கும்பட்சத்தில் ஓவியர்களுக்கும், ஓவியங்களுக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதல்லவா? என்னதான் இருந்தாலும், ஒரு படைப்புக்கு ஏற்ற , தனிப்பட்டமுறையில் அதற்காகவே முக்கியத்துவம் கொடுத்து வரையப்படும் ஓவியங்களில் இருக்கும் நிறைவு மற்றதில் இல்லைதானே.

Thursday, July 30, 2009

நினைவில் காடுள்ள மிருகம்

நினைவில் காடுள்ள மிருகம்

மலையாளம்  சச்சிதானந்தன்

தமிழில் நிர்மால்யா
 
நினைவில் காடுள்ள மிருகம்
எளிதில் அடங்குவதில்லை
அதன் தோளில்
சதுப்பு நிலங்களின் குளிர்
அதன் முடிக்கற்றைகளில்
வனப்பூக்களின் கடும்நெடி
அதன் விழிமணியில்
பாறைகளில் தெறித்துவிழும்
காட்டுச் சூரியன்
அதன் வாயில் காட்டாறுகள்
சந்திக்கின்றன.
அதன் நாவில் காட்டுத்தேன்
ஊறுகிறது
அதன் செவிகளில்
இடிமேகங்கள் முழங்குகின்றன
அதன் ரத்தத்தில்
காட்டுயானைகள் பிளிறுகின்றன
அதன் இதயத்தில்
காட்டு நிலவுகள் பூக்கின்றன
அதன் சிந்தனைகள்
காட்டுப் பாதைகளினூடே
பாய்ந்து செல்கின்றன
நினைவில் காடுள்ள மிருகம்
எளிதில் அடங்குவதில்லை
என் நினைவில் காடுகளுண்டு

நன்றி- எழுத்தாளர் பாவண்ணன்

Monday, July 6, 2009

பழஞ்சோறு-அமல நாயகம்-சிறுகதைகள்

கண்மணி குணசேகரன், வா.மு.கோமு,மு.ஹரிகிருஷ்ணன் போன்ற படைப்பாளிகளின் வரிசையில் சொல்லத்தக்க, வரத்தக்க படைப்பாளியாக அமல நாயகம் என்கின்றவரை நான் பார்க்கிறேன்.ஆனாலும், இவர்களிடம் இருக்கும் ஏதோ ஒன்று அமல நாயகத்திடம் இல்லாதிருக்கிறது.பயிற்சி மற்றும் உழைப்பில் இதை அவர் பெற்றுவிடுவது சாத்தியம்.

அமல நாயகம் அவர்களை நீங்கள் யாரும் அறிந்திருந்தால், அது ஆச்சரியமானதுதான்.ஏனெனில், இவர் இதழ்களுக்கு படைப்புகளை எழுதி அனுப்பாமால், நேரடியாக தொகுப்பு கொண்டுவந்திருக்கிறார்.ஏற்கனவே கவிதைத் தொகுப்புகள் சில கொண்டுவந்திருக்கிறார். தங்கர்பச்சானின் செம்புலம் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருந்த “முந்திரித் தோப்பு” என்கிற கவிதைத் தொகுப்பைப் படித்தது நினைவிலிருக்கிறது. எப்போதாவது சற்று மிதமான வணிக இதழ்களில் இவரின் கவிதைகளை மட்டும் பார்த்திருக்க முடியும்.இவர் சிறுகதைகள் எதுவும் இதழ்களில் பார்த்திருப்பது கடினம்தான். அதனாலேயே இவர் பலருக்கும் தெரியாதவராக இருக்கிறார்.கடலூர் மாவட்டம் சாத்திப்பட்டு என்கிற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஆசிரியப்பணியில் இருந்து வசித்துக்கொண்டிருப்பது கடலூர்.கண்மணி குணசேகரன் போன்ற செம்புல படைப்பாளி.

25 சிறுகதைகளை கொண்ட இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் எந்தக் கதையுமே சோடை போனதில்லை என்பது என் கருத்து.5 கதைகள் மிக முக்கியமானது என்பதுவும்.காட்சியமைப்புகளை கலாபூர்வமாக விவரிப்பது, உணர்வு ஏற்படும் வகையில் எழுதுவது, தேவையற்ற பத்திகளை நீக்கவேண்டிய அவசியம் ஆகியவை இவரிடம் ஏற்படவேண்டிய முன்னேற்றங்கள்.தன் சொந்தக்கதைகளாக சிலதோடு நின்றுவிடாமல், ஊர் மக்களின் கதைகள் நிறையவும் எழுதியுள்ளார்.சிறுபிராயத்தில் நடந்ததைக்கூட துல்லியமாக நினைவுகூர்ந்து எழுதும் ஆற்றல் காணக்கிடைக்கிறது. நடு நாடு எனப்படும் செம்புல வட்டார கிராம வழக்குப் பேச்சில் உரை நடை அமைந்துள்ளது என்றாலும் எவ் வட்டாரத்தினருக்கும் இது பெருமளவில் சிரமம் ஏற்படுத்தாது.

மாரத்தான்,சில்லரை தேடி,வேலி, புருஷன் பொண்டாட்டி போன்ற கதைகளை படித்தபோது தாளமுடியாமல் சிரித்தது நினைவுக்கு வருகிறது.ஆனாலும் , வலியான வாழ்க்கையை கொண்ட வெள்ளந்தியான கிராமத்து மனிதர்களை நினைத்து கடைசியில் வருத்தமே மிகும்.

சிங்க பொம்ம,காளையரு தாத்தா,மஞ்சப்பை,பலி ஆடுகள் போன்ற கதைகள் குறிப்பிடத்தகுந்த முக்கியமான கதைகள்.வெள்ளந்தியான கிராமத்து மக்களை விசயம் அறிந்தவர்கள் எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்,அதைக்கூட அறிந்துகொள்ள முடியாமல், தன்னுடைய வாழ்க்கையை அவர்கள் வீணடித்துக்கொள்கிறார்கள், நிர்ப்பந்தமாகிவிடுகிறது போன்ற விசயங்களை முன்வைக்கும் கதைகள் .

இக் கதைகளைப் படித்துமுடித்திருந்த நாளிலேயே எழுதியிருந்தால ஓரளவாவது இவற்றின் தரத்திற்கு நெருக்கமாக நான் எழுதியிருக்கக்கூடும். ஆனால், படித்து சில வாரங்களாகிவிட்ட நிலையிலும், மனம் வேறு சூழல்களுக்கு சென்றுவிட்டு திரும்பிய காரணத்தாலும் ஆசிரியரின் உரையிலிருந்தே சில வரிகளை முன் வைப்பது பொருத்தமாய் இருக்கும்.

”என் கிராமத்து மனிதர்கள் எளிமையானவர்கள்.இனிமையானவர்கள்.உண்மையானவர்கள்.உணர்ச்சியானவர்கள்.எதை நம்பினார்களோ அதையே வாழ்பவர்கள், அதையே சொல்பவர்கள். அவர்களிடம் பொய் முகங்கள் இல்லை. இந்தப் பழஞ்சோறு எம் மக்களைப் பற்றிய மறு பதிவு.உயர்வையும், தாழ்வையும், வெற்றியையும், தோல்வியையும், முற்போக்கையும், பிற்போக்கையும் விவரிக்கும் வரலாற்று ஆவணம்.கருவிகளை நம்புகிற அளவுக்கு நாம் உறவுகளை நம்புவதில்லை,உறவு என்பது வெறும் சமன்பாடல்ல,கூட்டிக் கழித்துக் கொள்வதற்கு. உறவுகளை அறிந்து கொள்வதும் புரிந்துகொள்வதும் நம் சமூக மதிப்பீடுகளை உயர்த்தும். புதிய பரிணாமத்திற்கு இட்டுச் செல்லும்...

நம் மதிப்பீடுகளையும் பண்பாடையும், கலாச்சாரத்தையும் குற்றமான ஒன்றாக நாம் நினைக்கிறவர்களாய் இருந்தால், நாளை நம்முடையது என்று சொல்லிக்கொள்ள நம்மிடம் எதுவுமே இருக்காது...”

வம்சி புக்ஸ் நிறுவனத்தாரின் துணை நிறுவனத்தின் மூலம் நல்ல வடிவமைப்புடன் அச்சாகி வந்திருக்கிறது.

நூல் விபரம்
பழஞ்சோறு-சிறுகதைகள்
ஆசிரியர்-அமல நாயகம்(99527 45500)
முதற்பதிப்பு டிசம்பர் 2008
பக்கங்கள் 180
விலை ரூ.90.00

வெளியீடு
அமரபாரதி
பதிப்பாளர்&விற்பனையாளார்
84,மத்தலாங்குளத்தெரு,
திருவண்ணாமலை.
9443222997

Wednesday, June 17, 2009

பொம்மைக்காரி-சிறுகதை-பாவண்ணன்

இம்மாத (ஜூன்'09) உயிர் எழுத்து இதழில் வெளியாகியுள்ள பொம்மைக்காரி என்கிற சிறுகதையை பாவண்ணன் அவர்கள் எழுதியுள்ளார்.அண்மையில் நான் படித்த சிறுகதையில் மிகவும் பிடித்த கதையிது என்பது என் கருத்து.யதார்த்தவாதமான, இயல்பான இக்கதையைப் படித்துவிட்டீர்களா? படிக்காதவர்களை படிக்கத்தூண்டுவதும், படித்தவர்கள் விரும்பினால் தங்கள் கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்ளவுமே இப் பதிவு.

Saturday, June 13, 2009

ஸ்ரீ நாராயணகுரு

இந்தியா, ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டிருந்த காலத்தில் சமய நெறியிலும் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டன. மக்களைப் பிரித்தாளும் கொள்கையில் வல்லவர்கள் ஆங்கிலேயர்கள்.இந்தியாவில் இருந்த சாதி வேறுபாடுகளைத் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டனர்.சாதிகளின் ஏற்றத் தாழ்வுகள் மதங்களிலும் ஊடுருவியது.பல்வேறு காரணங்களால் விசுவரூபமெடுத்த சாதிப் போராட்டங்களிலிருந்து மக்களைக் காத்த மகான்களின் வரிசையில் முதன்மையானவர்,கேரளத்தில் 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நாராயணகுரு.சமய, சமுதாய உரிமைகளுக்காக அயராது அமைதி வழியில் உழைத்த நாராயணகுரு19 ஆம் நூற்றாண்டில் தோன்றி 20 ஆம் நூற்றாண்டில் மகா சமாதியடைந்த மகான்.எளிய குடும்பத்தில் பிறந்து, மாடு மேய்த்து , விவசாயம் செய்து, ஆசிரியராகப் பணியாற்றி,ஆயுர்வேதம் கற்று மருத்துவத்தொண்டாற்றி, தன் முயற்சியால் உயர்ந்து ஞான குருவானவர்.



ஓணம் திருவிழாவின் 3 ஆம் நாளான சதய நட்சத்திரத்திம் கூடிய நன்னாளில், 1854 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28 ஆம் நாள் அதாவது,கொல்லம் 1030 ஆம் ஆண்டு சிம்ம(ஆவணி) மாதம் 13 ஆம் நாள் நாராயணகுரு திரு அவதாரம் செய்தார். நாராயணகுருவின் தந்தை மாடன் ஆசானும் சிறந்த கல்வியாளர்.மலையாளம், தமிழ், சமஸ்கிருதம், சோதிடம்,ஆயுர்வேதம் என்று மாடன் ஆசான் பல துறைகளில் திறமைபெற்றவர்.குட்டியம்மை-மாடன் ஆசான் தம்பதியர் நான்கு குழந்தைகள் பெற்றனர். அவர்களில் மூவர் பெண்கள். ஒருவர் ஒப்பற்ற குரு நாதர் நாராயணகுரு.திருவனந்தபுரத்திலிருந்து வடக்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்பழந்தி என்கிற கிராமத்தில் வயல்வார வீட்டில் பிறந்தார். பிறந்தபோது குழந்தை நாராயணகுரு அழவேயில்லையாம்.

அக்கால கேரளத்தில் தீண்டாமை உச்சத்தில் இருந்தது.கீழ்ச்சாதியினர் உயர்சாதியினரிடம் 32 அடி தொலைவில் இருந்தே பேசவேண்டும் என்ற கொடிய வழக்கம் அங்கு நடைமுறையில் இருந்தது.நாராயணகுருவின் பெற்றோர் இது குறித்து அவரிடம் கூறி எச்சரிக்கை செய்திருந்தனர். நாணு இளமையிலேயே தீண்டாமைக் கொள்கையை வெறுத்தார்.நாராயணகுரு ஈழவர் சாதியில் பிறந்தவர் என்று அறிய முடிகிறது. இது அங்கே பிற்படுத்தப்பட்ட சாதி என்பதாகவே கணிக்க முடிகிறது. ஈழவரினும் தாழ்ந்ததாகக் கருதப்பட்ட சாதியினர் ஒருவர் வீட்டில் உள் நுழைந்து வந்த சிறுவன் நாராயணகுருவை பற்றி அவர் பெற்றோரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியானம் ,யோகம், பிரணாயாமம்,மருத்துவம்,என கற்றுத் தேர்ந்த நாராயணகுரு தமிழ், மலையாளம், சமஸ்கிருதம் ஆகிய மும் மொழிகளிலும் புலமை பெற்றவராவார்.தமது 24 ஆவது வயதில் மும்மொழிகளிலும் கவிதை இயற்றும் ஆற்றல் பெற்றுள்ளார்.தமிழில் தொல்காப்பியம், திருக்குறள், தேவாரம் ,திருவாசகம் ஆகியவற்றைக் கற்று அறிந்திருந்தார்.நாராயணகுருவின் இளமைப்பருவத்தில் உறவுப் பெண்ணொருத்தியை மணமுடிக்க அவரின் பெற்றோர் நினைத்தபோது மறுத்துவிட்டார்.அய்யாவுசாமி என்ற தமிழர், திருவனந்தபுரத்தில் அரசுப் பணியில் இருந்தவர்.அய்யாவுசாமி ஆன்மீக அறிவும் முற்போக்குச் சிந்தனைகளும் உடையவாராகத் திகழ்ந்தார்.யோகக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தார்.நாராயணகுருவுக்கு யோகக் கலையை பயிற்றுவித்தார்.மேலும் பல உபதேசங்களையும் கற்றுத் தந்தார்.அய்யாவுசாமியின் உபதேசத்தை நாராயணகுரு தமது வாழ்நாள் முழுதும் பின்பற்றி நடந்தார்.

நாராயணகுரு1888 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் நாள் அருவிப்புரத்தில் சமத்துவத் திருக்கோயிலை நிறுவினார்.”இங்கே அமைந்திருக்கும் கோயில் ஒரு முன் மாதிரியாக விளங்கவேண்டும், மனிதர்கள் யாவரும் உடன்பிறந்தவர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும். சாதி பற்றிய தவறான கருத்துகள் அழிக்கப்படவேண்டும். இக் கருத்துக்களை விளக்குவதற்காகத்தான் இந்த் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது” என்று கல்வெட்டில் பொறித்து வைத்தார் நாராயணகுரு.'ஒரே சாதி, ஒரே மதம், ஒரே கடவுள்” என்பதே நாராயணகுருவின் முக்கிய உபதேசம்.

நாராயணகுரு சாதி, மத வேறுபாடுகளைக் களைய ஆல்வாய் அத்வைத ஆசிரமத்தில் சர்வ மத மாநாட்டை நடத்தினார். ஆசியாவில் நடத்தப்பட்ட முதல் சர்வ சமய மாநாடு இதுவேயாகும்.உயர்கல்வி, சமஸ்கிருத அறிவு, தூய்மை, பண்பு, ஒற்றுமை ஆகிய ஐந்தின் மூலமே முன்னேறி, சமுதாயத்தில் முதல் நிலையைப் பெற முடியும் என்று கருதினார் நாராயணகுரு.கைத்தொழிலை வலியுறுத்தினார்.சுவாமிகளின் அமைதியான அணுகுமுறையினால் கேரளத்தில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டது.30 ஆண்டுகளில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கின. கல்வி, வழிபாட்டு உரிமை, வேலை வாய்ப்பு ஆகிய அனைத்துத் துறைகளிலும் கேரளம் முன்னேறியது.கேரள மக்கள் தங்களுக்குள் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் தொடர்ந்து முன்னேற்றம் பெற்று வருகின்றனர். இவை அனைத்துக்கும் குருதேவர் கொண்ட்டிருந்த தீர்க்க தரிசனமும் அமைதி வழியுமே காரணம்.

நாராயணகுரு தர்ம பரிபாலன யோகத்தின் முதல் செயலாளராகத் தொண்டாற்றியவர் மகாகவி குமரன் ஆசான். இவர், கேரள மாநிலத்தின் முன்னணிக் கவிஞர்களில் ஒருவர். தமது கவிதைகளின் வழியே சமத்துவக் கொள்கைகளை எடுத்துரைத்தவர்.நாராயணகுருவை மகாத்மா காந்தி அவர்கள் சந்தித்துள்ளார். 1925 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் நாள் இச் சந்திப்பு நடந்துள்ளது.”அழகு நிறைந்த திருவாங்கூர் ராஜ்ஜியத்துக்கு வந்தபோது, புண்ணிய ஆத்மாவான நாராயணகுருவைத் தரிசிக்கக் கிடைத்த அரிய வாய்ப்பினை என் வாழ்வின் பெரும்பேறாகவேக் கருதுகிறேன்” என்று காந்திக் குறிப்பிட்டுள்ளார்.தேசியக் கவிஞர் ரவீந்திரனாத் தாகூர் சந்திதுவிட்டு, “ நான் உலகின் பல இடங்களுக்கும் சென்று வந்துள்ளேன். ஆங்காங்கு பல சித்தர்களளையும் மகரிஷிகளையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனினும், மலையாள நாட்டில் இருந்த நாராயணாகுருவைச் சிறந்த அல்லது இணையான மகா ஞானியை நான் எங்கும் பார்த்ததில்லை. அந்த மகானின் யோகக் கண்களும் ஒளிர்விடும் முக தேஜஸும், என்னால் ஒருபோதும் மறக்க இயலாதவை” என்று குறிப்பிட்டுள்ளார்.பெரியார், ராஜாஜி, டாக்டர் ராதாகிருஷ்ணன் ,டாக்டர் ஜாகீர் உசேன் ஆகியோர்களும் நாராயணகுருவைச் சந்தித்துள்ளனர். மலையாள மனோரமா 1988 ஆம் ஆண்டு தனது நூற்றாண்டு விழாவில் பிரபலங்களில் முதன்மையானவராக பல நூறு பேர்களிடையே நாராயணகுருவை ஏக மனதாகத் தேர்ந்தெடுத்து உள்ளது.

நாராயணகுரு தமிழகத்தில் பல இடங்களுக்கு வருகை புரிந்திருக்கிறார்.இவரின் தர்ம பரிபாலன யோகம் தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் இயங்கி வருகிறது.”என்னை முதலில் புரிந்துகொண்டது தமிழ் நாடே” என்று பலமுறை நாராயணகுரு குறிப்பிட்டுள்ளார்.சென்னை வேப்பேரியில் உள்ள ஒரு சாலைக்கு ”திரு. நாராயணகுரு சாலை” என்றுப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.திருக்குறளில் மூன்று அதிகாரங்களை (கடவுள் வாழ்த்து,வான் சிறப்பு & நீத்தார் பெருமை)மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார் நாராயணகுரு. திருவண்ணாமலை சென்று பகவான் ரமணரை நாராயணகுரு சந்தித்துள்ளார்.இச் சந்திப்புப் பற்றி இன் நூலில் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் சுவையானவையாகும்.

1928 ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் நாள் நாராயணகுரு சமாதியடைந்தார்.கேரளத்தின் கயிறு, ஓடு முதலான தொழில்கள் உருவாகக் காரணமாயிருந்தவரும் சாதி, சமய வேறுபாடுகளைக் களைய தன்னை அர்ப்பணித்துக்கொண்டவருமான நாராயணகுருவை கேரள மக்கள் தெய்வமாக எண்ணுவதில் வியப்பேதுமில்லை.


- நிறைய படங்களுடன் கூடிய ஸ்ரீ நாராயணகுரு என்கிற நூலிலிருந்து.

பின் குறிப்பு_ நாராயண குரு பற்றிய திரைப்படம் மலையாளத்தில் எடுக்கப்படுவதாகவும் அதி நாராயணகுருவாக நடிப்பவர் தலைவாசல் விஜய் என்பதும் அண்மையச் செய்திகள். நாராயணகுருவின் பிம்பமாகத் தோன்றும் தலைவாசல் விஜய்க்கு கேரளத்தில் இப்போது ஏக மரியாதையாம்.

நன்றி-கிழக்கு பதிப்பகம்.

நூல் விபரம்

ஸ்ரீ நாராயணகுரு
ஆசிரியர்-பருத்தியூர் கே. சந்தானராமன்
112 பக்கங்கள்
விலை ரூ.60.

இந்நூலை இணையம் மூலம் வாங்க இங்கே சொடுக்கவும்