Thursday, August 20, 2009

ராழி
வணிக இதழ்களில் இடம்பெறும் ஓவியங்களைப் பார்த்தவுடனேயே யார் வரைந்தது என்பதைச் சொல்லிவிடமுடியும். அந்தளவுக்கு அவ் வோவியங்கள் நம்முடன் இரண்டறக் கலந்துவிட்டிருக்கிறது.ஒரே மாதிரியான முகச்சாயல்களுடைய மனிதர்கள் ஒவ்வொரு ஓவியருக்கும் பொதுவானது. ராமு என்பவர் பெயரை நான் வெகு நாட்களாக ராழி என்றே நினைத்திருந்தேன். அவர் அப்படித்தான் கையெழுத்திட்டிருப்பார். ஏதோ சுருக்கம்போல என நினைத்துக்கொண்டேன். ( என்னை மாதிரியே இன்னும் சிலரும் நினைத்திருந்தார்கள் என்று தெரியவந்தால் எனக்கு அது சற்று ஆறுதலாகக்கூட இருக்கும். இல்லையென்றால், கடைசிவரை வெட்கப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்). ஒருமுறை பள்ளித்தோழனோடு பேசிக்கொண்டிருக்கும்போது நான் ராழி என்று சொல்ல அவர்கள் வீட்டாரேச் சிரித்துவிட்டார்கள். பிறகுதான், அது ராமு என்று சொன்னார்கள்.


ம.செ.-மணியம் செல்வன் - வரையும் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அனாயாசமாகக் கிறுக்கப்பட்ட கோடுகளைப்போலிருக்கும்.அவர் வரையும் மனிதர்களின் கண்களில் எப்போதும் ஒரு சோகம் இழையோடியிருக்கும். என்னதான் சிரித்தமாதிரி வரைந்தாலும் அந்த சோகமிருக்கும். அச் சோகமே நம்மை அந்தப் படங்களிடம் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திவிடும். ‘உனக்கு என்ன பிரச்னைப்பா?’,’ ஏம்மா நீ இப்படியிருக்கே?’ என்று அந்த ஓவிய மனிதர்களிடம் கேட்கத்தோன்றுவதுபோல் ஒரு பரிவு ஏற்பட்டுவிடும். நாடோடித் தென்றல் படத்தின் விளம்பரச் சுவரொட்டிகளே (போஸ்டர்கள்) ம. செ. ஓவியத்தில்தான் இருந்தது. மேலும் டைட்டிலில் பிரபல ஓவிர்களின் ஓவியங்களையே காட்டும் சில திரைப்படங்களும் உண்டு.(ராஜபார்வை, நாடோடித்தென்றல், இந்திரன் சந்திரன் போன்றவை நினைவுக்கு வருகிறது).வட்டமுகம், சதுர முகம், ஏறின நெற்றி, சிரித்தமுகம் , குழந்தைமுகம் என்றெல்லாம் வகைப்படுத்திக்கொள்கிறோமே, அதுபோல் ஒவ்வொரு ஓவியர்களும் ஒவ்வொரு விதமான மனித முகங்களையே வரைந்திருப்பார்கள்.மாருதி வரையும் பெண்களைப் பார்த்து, பதின் பருவத்தில் கிளுகிளுப்பும், அலைக்கழிப்பும் அடைந்திருக்கிறேன்.ராமு, ஜெ.., போன்றவர்கள் வரையும் படங்கள் என்னை வசீகரிப்பதில்லை. அவர்கள் தவிர அரஸ், ஸ்யாம் என்று நிறைய பேர். இதழ்கள் சார்ந்தும், வகைமை சார்ந்தும் வெவ்வேறு ஓவியர்கள்.

என் முதல் கவிதை வெளியாகியிருந்தபோது அதற்கான ஓவியத்தைப் பார்க்கும் ஆவல் என்னிடம் மிகுதியாயிருந்தது.அலுவலகம் முடித்துவிட்டு நேராகக் கடைக்குச் சென்று புத்தகம் வாங்கிப்பார்த்தேன். மனோகர் வரைந்திருந்தார். மனம் நிறைவாயிருந்தது. பொருத்தமானதொரு சித்திரம்.அதிலொரு ஆனந்தம். அட! நாமும் ஒன்று எழுதி, அதுவும் புத்தகத்தில் அச்சாகி, அதற்கு ஒரு பிரபல ஓவியர் படம் வரைந்திருக்கிறாரே! அப்படியானால் நம்முடைய கவிதையை அவர் படித்திருப்பாரல்லவா!
குங்குமம் நடத்திய கவிதைத்திருவிழாவில் என் முதல் கவிதை வந்திருந்ததும், அவற்றை தேர்வுசெய்தவர் கவிப்பேரரசு வைரமுத்து என்பதும், அவர் தேர்வானவர்களையெல்லாம் அழைத்து சென்னையில் ஒரு பாராட்டுவிழா நடத்தினார் என்பதும் நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அந்தக்கூட்டத்திற்கு ஓவியர் மனோகர் அவர்களும் வந்திருந்தார். நான் அவரிடம் என் கவிதையை நினைவுபடுத்தி, அந்த ஓவியம் குறித்த என் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன்.அவர் கல்லூரியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்துகொண்டிருப்பதால், இதழ்களுக்கு நிறைய வரைவதில்லை என்று சொன்னார்.
இணையத்திலும், சில இதழ்களிலும் கூட ஏற்கனவே வரைந்து வைக்கப்பட்டுள்ள ஓவியங்களோ, அல்லது புகைப்படங்களோ தேடியெடுத்துப் பிரசுரிக்கிறோம். இப்படியோரு நிலை நீடிக்கும்பட்சத்தில் ஓவியர்களுக்கும், ஓவியங்களுக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதல்லவா? என்னதான் இருந்தாலும், ஒரு படைப்புக்கு ஏற்ற , தனிப்பட்டமுறையில் அதற்காகவே முக்கியத்துவம் கொடுத்து வரையப்படும் ஓவியங்களில் இருக்கும் நிறைவு மற்றதில் இல்லைதானே.

13 comments:

"அகநாழிகை" பொன்.வாசுதேவன் said...

முத்துவேல்,
எளிமையான விஷயம் என்று தொலைபேசியில் சொல்லியிருந்தீர்கள். மிக அருமையான பதிவு. நுட்பமான விஷயம் இது. கவனித்தலும், நினைவில் வைத்துக்கொள்வதும் ஒரு எழுத்தாளனுக்கு மிக முக்கியம். ஒரு செயலை, காட்சியை, வாசித்ததை, அனுபவத்தை மீண்டும் எழுத்தில் கொண்டு வருவதில்தான் எழுதுபவனின் வெற்றி இருக்கிறது.
000
நான் ஓவியர் ஜெயராஜை கல்லூரி விழாவிற்கு அழைத்து வருவதற்காக சேத்துப்பட்டில் உள்ள அவர் வீட்டிற்கு சென்றிருக்கிறேன். அப்போது பழக்கம் உண்டு.
மனோகர் அவர்களையும், பாஸ்கரன் அவர்களையும் ஓவியக்கல்லூரியில் சந்தித்திருக்கிறேன். பாஸ்கரன் அவர்களின் பூனை ஓவியங்கள் குறிப்பிப்பட வேண்டியவை.
ஓவியர் ஸ்யாம் அவர்களை பத்திரிகையில் பணி புரிந்த போது அவருடைய வீட்டில் நேர்காணல் செய்வதற்காக சென்றிருக்கிறேன்.
கதைகளை கொடுத்து பொருத்தமான படத்தை வரையச் சொல்வார்கள். அவர்களும் கதையை வாசிப்பார்கள்.
000
தனித்துவமான பதிவு இது என்றே கருதுகிறேன்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

சேரல் said...

//இணையத்திலும், சில இதழ்களிலும் கூட ஏற்கனவே வரைந்து வைக்கப்பட்டுள்ள ஓவியங்களோ, அல்லது புகைப்படங்களோ தேடியெடுத்துப் பிரசுரிக்கிறோம். இப்படியோரு நிலை நீடிக்கும்பட்சத்தில் ஓவியர்களுக்கும், ஓவியங்களுக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதல்லவா? என்னதான் இருந்தாலும், ஒரு படைப்புக்கு ஏற்ற , தனிப்பட்டமுறையில் அதற்காகவே முக்கியத்துவம் கொடுத்து வரையப்படும் ஓவியங்களில் இருக்கும் நிறைவு மற்றதில் இல்லைதானே. //

True. Nalla padhivu

-priyamudan
sEral

தண்டோரா ...... said...

முத்துவேல்.அந்த சிறுமியின் படத்துக்கு ஒரு கவிதை எழுதுங்களேன்

மண்குதிரை said...

ungkal ezhuththu nadai pitiththirukkirathu.

thodarnthu ezhuthungkal.

D.R.Ashok said...

ராமு என்றே.
ம.செ. ஓவியம் தான் எனக்கு மிகவும் பிடிக்கும்.
சுஜாதா கதைகளுக்கு ஜெ வரைவார். அவர் ஒரு கிள்ளுப்பு(நல்ல கூட) ஒவியர்.
அரஸ் modern & stylish.
அமுதசுரவியின் அட்டையில் ஒவியமே அலங்கரிக்கும். இப்பொ தெரில.

கொசுறு செய்தி: நானும் ஒரு ஒவியனே.

இன்னொரு கொ.செ.: தண்ணிர் பாத்திர சிறுமியின் ஓவியம் அருமை. தத்ரூபம்.

யாத்ரா said...

இனிய பகிர்வு முத்து, மசெ ஓவியங்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும், பத்து வருடத்திற்கு முன்னால் அவரின் சில ஓவியங்களை நான் வரைந்து பார்த்திருக்கிறேன். போன வாரம் கூட 10 வருடத்திற்கு முன்பு வரைந்த அந்த ஓவியங்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஓவியங்கள் மௌனக் கவிதைகள்.

குடந்தை அன்புமணி said...

மணியம் செல்வம் அவர்கள் வரைந்த அட்டைப்படங்கள் அருமையாக இருக்கும். தேவியின் கண்மணி இதழுக்கு அவர்தான் அட்டைப்படம் வரைவார் ரொம்பவும் ரசிப்பேன்.

அரஸ் வரையும் ஓவியங்கள் ஏதாவதொரு நடிகர்-நடிகையரை ஒத்ததாக இருக்கும். ஸ்யாம் வரையும் பெண்கள் ஓவியம் நன்றாகத்தான் இருக்கும்.

Nundhaa said...

நல்ல பகிர்வு முத்து ... தற்போதுள்ள பத்திரிக்கை ஓவியர்களில் ஸ்யாம் எனக்கு மிகப் பிடித்தவர்

பா.ராஜாராம் said...

நல்ல பகிர்வு முத்து.
நல்ல எளிய நடை...வசீகரம்.

" உழவன் " " Uzhavan " said...

சில ஓவியங்களே முழுக் கருவை/கதையைச் சொல்லிவிடும். ஓவியங்களின் முக்கியத்துவம் குறித்த தங்களது பார்வை சிறப்பானதே!

வெண் தாடி வேந்தர் said...

//இணையத்திலும், சில இதழ்களிலும் கூட ஏற்கனவே வரைந்து வைக்கப்பட்டுள்ள ஓவியங்களோ, அல்லது புகைப்படங்களோ தேடியெடுத்துப் பிரசுரிக்கிறோம். இப்படியோரு நிலை நீடிக்கும்பட்சத்தில் ஓவியர்களுக்கும், ஓவியங்களுக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதல்லவா? என்னதான் இருந்தாலும், ஒரு படைப்புக்கு ஏற்ற , தனிப்பட்டமுறையில் அதற்காகவே முக்கியத்துவம் கொடுத்து வரையப்படும் ஓவியங்களில் இருக்கும் நிறைவு மற்றதில் இல்லைதானே. //

ஓவியர்கள் பணத்துக்காக மட்டும் வரைவதில்லை. மனத்துக்காகவும் வரைவர். எனவே, அவர்கள் வரைந்தவை, பின்னர் வெவ்வேறு இடங்களில் காணப்பட்டு பேசப்படும்போது அவர்கள் மகிழ்ச்சியேயடைவர் என்பது என் ஊகம்.

கடைசி வரி: சரி.

வெண் தாடி வேந்தர் said...

கதைகளுக்கோ, கவிதைகளுக்கோ வரையும் ஓவியங்கள் பேசவேண்டும். உயிரூட்டமுடையதாகவிருக்கவேண்டும். ஆனால், நம் ஓவியர்கள் பொம்மைகளத்தான் வரைவர். சிலர், (ஜெ) கவர்ச்சிப்பொம்மைகளை வரைவர்.

வர்ணம், மாருதி, ஜெ - இன்னும் உங்கள் எழுத்தில் காணப்படும் - பலர் பொம்மை ஓவியர்களே.

அரஸ் போன்றோரின் - நான் இரசித்தவர்களுள் - ஓவியஙகள் நம்மிடம் பேசும்.

ஓவியர்கள் - தங்கள் கலாச்சாரத்தின் கண்ணடிகள். அவர்களின் ஓவிய மாந்தர்கள் - அவர்கள் உறவுகளே. மணியனின் பெண்கள் பிராமணப்பெண்களே. மற்றவர்கள் - பொதுவாக தமிழ்ப்பெண்களே.

இதில் விதிவிலக்கு. ஜே. இவரின் ஓவிய மாந்தர்கள் - தமிழர்களல்ல. வெள்ளையர்கள்.

அவரின் கலாச்சாரம் பொதுத்தமிழ்க் கலாச்சாரத்திலிருந்து வேறுபட்டது. போர்த்துகீசியரது.

என்னை முழு திருப்திப்படுத்திய தமிழ் பத்திரிக்கை ஓவியர்கள் இல்லை.

மருது போன்றோரை இந்தக்கூட்டத்தில் நான் சேர்க்கவில்லை.

உங்கள் பதிவு, இன்னும் நன்றாக அலசி எழுதப்பட்டிருக்கலாம். ஓவியர்களைப்பற்றி.

வலைபதிவு நன்றாக உள்ளது. படங்கள் கலையுணர்வுடன் உள்ளன.

4.6.2009 குங்குமம் இதழில் தங்களின் வலைபதிவப்பற்றி அறிந்து இங்கு வந்தேன்.

ச.முத்துவேல் said...

=> நன்றி வாசு.

பிரபல ஓவியர்களை நீங்கள் சந்தித்திருப்பது எனக்கேப் புதியசெய்திதான்.இதுபோல் அடிக்கடி ஆச்சரிப்படுத்திக்கொண்டேயிருப்பவர் நீங்கள் என்பது மட்டும் நான் அறிந்தது.

=> நன்றி சேரல்

=> நன்றி தண்டோரா. நல்வரவு.முதல் பின்னூட்டம் என்று நினைக்கிறேன்.
உங்கள் கருத்தைப் படித்துவிட்டு அமைதியாகப் போய்விட்டீர்கள். நான் எப்படியெப்படியெல்லாமோ யோசித்துக்கொண்டிருக்கிறேன். ஏனெனில், உங்களைச் சந்தித்த அனுபவம் எனக்கிருக்கிறதே. மத்ததை போனில் பேசிக்கொள்கிறேன்.

=>நன்றி மண்குதிரை

=> நன்றி அஷோக்.அசத்தலான, ஆச்சரியமான செய்தியை கொசுறு என்று சொல்லிவிட்டீர்கள்.

=> நன்றி யாத்ரா
/ஓவியங்கள் மௌனக் கவிதைகள்.
இதுதான் யாத்ரா.

=> நன்றி அன்புமணி. கலக்குறீங்க.பதிப்பகத்தில் இருப்பவராச்சே.

=> நன்றி நந்தா

=> நன்றி பா.ராஜாராம் ஜீ.

=> நன்றி உழவன்

=> நன்றி வெண்தாடி வேந்தரே.
நிறைய தகவல்கள், கருத்துக்கள் பகிர்ந்திருக்கிறீர்கள். ஆர்வத்தோடு உங்கள் PROFILEயை முயன்றால், திறக்கவில்லை.

நான் கட்டுரை அளவுக்குக்கூட இதைக் கருதவில்லை.ஒருவகையில் இப்பதிவு, எழுதிப்பார்த்தது. அவ்வளவே.

மீண்டும் நன்றி.