Monday, March 30, 2009

யாத்ராவை தெரிந்துகொள்ளுங்கள்அய்யப்ப மாதவனின் நிசி அகவல் விமர்சனக்கூட்டத்திற்குப் போயிருந்தபோது,அங்கு சந்தித்துக்கொண்ட படைப்பாளிகள் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக்கொண்டதைப் பார்த்தபோது,”இதென்ன? கொஞ்சம் அதிகப்படியா இருக்குதே! அப்படியே மேலை நாட்டுக் கலாச்சாரத்தை இதுலயும் கடைபிடிக்கறாங்களே?” அப்படின்னு நினைச்சேன்.ஆனா,இப்பதான் புரியுது,அதிலுள்ள அர்த்தம்.(இது மாதிரி நான் புரிந்துகொள்ள வேண்டியது இன்னும் நிறைய உள்ளது). யாத்ராவை நான் இப்போது நேரில் சந்தித்தால் நானும் அப்படித்தான் ஆரத் தழுவுவேன்.இப்போதைக்கு மானசீகமாய்.

குரு சுந்தர்ஜி கூட இவரை அறிமுகப்படுத்தி எழுதியிருந்தபோது, ‘நாமெல்லாம் இவர் கண்ணுக்கு ஏன் தெரிய மாட்டேங்கறோம்னு’ சின்னப்புள்ளத்தனமா யோசித்துப் பொறாமைப் பட்டேன்.ஆனா, அதுதான் குரு. சரியான கண்டுபிடிப்பு.

வலையுலகம் பக்கம் இப்போதுதான் வந்திருக்கும் இவர் வருகைக்கு நாமெல்லாம் மகிழவேண்டும். களிப்பு ஏற்படுத்தும் படைப்புகளை எழுதுபவர்கள் ஒரு ரகம்.மெல்லிய உணர்வுகள், தக்கையாய் மனதை மிதக்கவைக்கும் ரசனையான படைப்புகளை எழுதுபவர்கள்.

வலியை, அதிர்வுகளை, நிலைகுலைவை ஏற்படுத்தும் படைப்பாளிகள் ஒரு ரகம்.வலிகள்தான் நிறைய படைப்பாளிகளுக்கான பொதுவான அம்சமாக, அவர்களை எழுதவைக்கும் காரணியாக அமைந்திருப்பதை நான் பலரிடத்தில் பார்த்திருக்கிறேன்.இதுவே, அவர்களின் காத்திரமான படைப்புகளுக்கு அடித்தளம்.யாத்ராவின் கவிதைகளும் வலி மிகுந்ததாய்,அதிர்வுகளை ஏற்படுத்துவதாய் இருக்கிறது. இது பொதுவான ஒரு பார்வைதான். ரசனையான மற்றும் பலவிதமான கவிதகளையும் இவர் எழுதியுள்ளார்.
நிறைய படித்திருக்கிறார். வாசிப்பில்மிகத் தேர்ச்சி பெற்றவராயிருக்கிறார். ஒரு படைப்பாளியாய் இருப்பதினும் பெரியது, தேர்ந்த ஒரு வாசகனாய் இருப்பது. இதன் அருமையும், ஏக்கமும் எனக்கு நன்றாகவே தெரியும்.

இயற்பெயர் செந்தில்வேல். என் பெயரிலும் வேல் இருக்கிறது என்றெல்லாம் ,இவரோடு ஒப்பிட்டுக்கொண்டு மகிழ்ந்துகொள்கிறேன்.

இவரை இதழ்களுக்கு படைப்புகளை அனுப்பச் சொன்ன புண்ணியவான்களில் நானுமொருவன்.இதை இவர் மிகவும் சிலாகிக்கிறார். ஆனால், உண்மையில் இப்படியொரு பெருமையை, மகிழ்ச்சியை யாத்ரா எனக்கு அளித்ததற்கு நான்தான் அவருக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.(இந்த இடத்தில் வடகரை வேலன் அண்ணாச்சியை நினைக்கிறேன். இவர், இதுபோல், எப்போதும் மகிழ்ச்சியில் இருப்பவர்)இவரின் படைப்பு வேகம், ஆற்றல் மிகவும் ஆச்சரியமளிக்கிறது.இத்தனையையும் இவர்,ஏற்கனவே எழுதியது இல்லையாம். இப்போதுதான் எழுதிக்கொண்டு வருகிறாராராம்.ஏற்கனவே எழுதியவற்றை கிழித்துப் போட்டுவிட்டாராம். எவ்வளவு பெரிய இழப்பு என்று மனம் துடிக்கிறது.

தொடர்ச்சியாக உயிரோசை, நவீன விருட்சம், மற்றும் சில வலைத்தளங்கள் அவர்களாகவே விரும்பிக் கேட்டுப் பிரசுரம் செய்வது என துவக்க நிலையிலேயே பிரமிப்பூட்டுகிறார். இவர் அடையக் காத்திருக்கும் வெற்றிகள், உச்சம் வெகு தொலைவிலில்லை. அனேகமாக, வருகிற புத்தகக் கண்காட்சியில், இவரின் தொகுப்பு கிடைக்கப் பெறலாம்.

இது என்னைப்பொறுத்தவரை முழுக்க முழுக்க ஒரு சுய நலமானப் பதிவு.இவருக்கு கிடைக்கும், கிடைக்கப்போகும் வெளிச்சத்தை என் பக்கம் திருப்பிக்கொள்ளும் சுய நலம்.(எனவே,யாத்ரா,இப்பதிவுக்காக நன்றியையோ, நெகிழ்ச்சியையோ தெரிவித்து என்னைக் குற்ற உணர்வில் ஆழ்த்திவிடவேண்டாம் என்று, அன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.)

கவிஞனே, யாத்ரா! நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் சொல்லிக் கொள்வதில் முந்திக்கொள்கிறேன்.

21 comments:

Saravana Kumar MSK said...

//கவிஞனே, யாத்ரா! நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் சொல்லிக் கொள்வதில் முந்திக்கொள்கிறேன்.//

நான் ரெண்டாவது.. :)

Saravana Kumar MSK said...

//ஏற்கனவே எழுதியவற்றை கிழித்துப் போட்டுவிட்டாராம்.//

இவரை என்ன செய்ய..!!

ஆதவா said...

நல்லவேளையாக.... நாந்தான் அநேகமாக முதல் ஆளாக சொன்னேன்.... இதழுக்கு அனுப்பும் தரம் கவிதையில் இருக்கிரது என்று!!!!

ரொம்ப பெருமைதாங்க..... கூட இருந்த நபர் இன்னொருவரால் பதிவால் பாராட்டபடுகிறார் என்று!!!!

Anonymous said...

நெகிழ்ச்சியாக இருக்கிறது முத்துவேல்.

கற்றோரைக் கற்றோரே காமுறுவர்.

குடந்தைஅன்புமணி said...

யாத்ரா அவர்கள் மேன்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள்!

மண்குதிரை said...

உண்மைதான் முத்துவேல்

என் வாழ்த்துக்களும்

அனுஜன்யா said...

சமீப காலங்களின் பிரகாசமான வரவு யாத்ரா என்பதில் சந்தேகம் இல்லை. உயிர்மையும், நவீன விருட்சமும் அதை அங்கிகரித்தத்தில் நம்மைவிட யார் மகிழப் போகிறார்கள்! வாழ்த்துகள் அவருக்கும், வாழ்த்தும் உங்களுக்கும்.

அனுஜன்யா

narsim said...

தேர்ந்த வார்த்தைகளில் நல்ல பதிவு

யாத்ராவுக்கு வணக்கங்கள்..

ச.முத்துவேல் said...

@சரவணகுமார்
முதல் பின்னூட்டத்தற்கு நன்றி.
/இவரை என்ன செய்ய..!!/
நல்ல ஆதங்கம்:)

ச.முத்துவேல் said...

@ஆதவா
நீங்கள் அந்தப் புண்ணியவான்களின் பட்டியலிலிருப்பதை அறிவேன்.
/ரொம்ப பெருமைதாங்க..... கூட இருந்த நபர் இன்னொருவரால் பதிவால் பாராட்டபடுகிறார் என்று!!!!/

நீங்களும்தான் எழுதியிருக்கீங்க. ஆனா, ஒருத்தரையில்ல. பலரை.

ச.முத்துவேல் said...

@வடகரைவேலன் அண்ணாச்சி
நன்றி அண்ணாச்ச்சி.
/கற்றோரைக் கற்றோரே காமுறுவர்./
திருவாசகம்.அதுதான் அண்ணாச்சி.

ச.முத்துவேல் said...

@அன்புமணி
வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும் நன்றி.

ச.முத்துவேல் said...

@மண்குதிரை
யாத்ரா பின்பற்றுவர் பட்டியலில் நீங்கள் இருக்கிறீர்கள்.இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் உங்களைப் பற்றி.
நன்றி, மண்குதிரை.

ச.முத்துவேல் said...

@அனுஜன்யா
ஆமாம்.மகிழ்ச்சிதான். நன்றி.

ச.முத்துவேல் said...

@ நர்சிம்
வாங்க. நான் மிஸ் பண்ற கொஞ்சம் பதிவர்கள் என்கிற பட்டியலை நினைத்ததுமே, உங்கள் பெயர்தான் முதலில் நினைவுக்கு வரும்.அவ்வப்போது படித்துக்கொண்டு வருகிறேன்.
/தேர்ந்த வார்த்தைகளில் நல்ல பதிவு/
நீங்க சொல்றதாலயே சந்தோசம் அதிகமாயிருக்கு. நன்றி.

yathra said...

அன்புத்தோழர் முத்துவேல் அவர்களுக்கு,

இப்பொழுது தான் தங்கள் பதிவைப் பார்த்தேன். என்மேல் மென்மேலும் அன்பின் பாரங்களையேற்றியதில் சுமைதாங்கியென திக்குமுக்காடிப் போயிருக்கிறேன். என்ன எழுதுவதென்றும் இந்த அன்புகளையெல்லாம் எப்படி எதிர்கொள்வதென்றும் அறியாது திகைத்த வண்ணமிருக்கிறேன். முதலில் சுந்தர்ஜி அவ்ர்கள், தற்போது தாங்கள், சட்டென்று என்னை சொர்க்கத்தில் கொண்டு விட்டதாய் உணர்கிறேன். தங்களின் அன்புக்கு எப்படியெல்லாம் நன்றி சொல்வதென்று தெரியாத கையறு நிலையிலிருக்கிறேன்.
தற்போதும் அந்த உங்களிடமிருந்தும் மற்றும் அன்பு நண்பர்களிடமிருந்தும் இதழ்களுக்கு அனுப்பச்சொல்லி வந்த பின்னூட்டங்களை நினைவு கூர்கிறேன். உண்மையில் அதற்கு முன் அப்படியொரு எண்ணம் சற்றும் இல்லாமலிருந்தேன். இப்போது இதழ்களில் பிரசுரத்தைக் காண நேர்கையில் நன்றி என்ற சொல்லும் வெளிவரவியலாது தொண்டைக்குள் அடைக்கிறது.
மெல்லிய ஈரம் திரையிட்ட கண்களோடும், லேசான புன்சிரிப்போடும் இளவெயிலும் தூறலும் கலந்த உணர்வாய் உறைந்து போனேன் இந்த பதிவை வாசிக்கையில்.
உயிரோசையில் முதல் இரண்டு இதழ்களில் தங்களின் கவிதைகள் வெளிவந்திருந்தது, தொடர்ந்து தாங்கள் அனுஜன்யா மற்றும் அன்பர்களின் கவிதைகளை நவீனவிருட்சம், உயிரோசையில் வாசித்து மகிழ்ந்திருக்கிறேன். தங்களிடம் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். பதிவர் சந்திப்பு அல்லது மற்றைய இலக்கிய நிகழ்வுகளிலோ அனைவரையும் சந்திக்க ஆவலோடிருக்கிறேன்.

தவழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குழந்தையை அனைவரும் மாற்றி மாற்றி தோளில் சுமந்து அழுகையை ஓயப்படுத்தி சிரிப்பை அசைவுகளை ரசித்து,,,,,,,,,,,
இதை விட இந்த நேசத்தைவிட ஆறுதலான ஏந்துதலை விட அக்குழந்தைக்கு அத்தருணத்தில் வேறெதுவும் பெரிதாயிராது இவ்வுலகில். இப்படி என்னை உணரச்செய்யும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் மிக்க நன்றி.

இந்த வேல் விடயத்தில் உங்களுக்கு முன்னால் மகிழ்ந்தது நான்தான், என் இயற்பெயர் தங்களுக்கு தாமதமாகத்தானே தெரியும். முத்துவேல் தங்களின் வாழ்த்துகளில் மனம் நிறைந்திருக்கிறது. தங்களின் வாழ்த்துகளுக்கும் அன்பிற்கும் அனேக நன்றிகள்.

வலையுலகிற்கு வந்த பிறகு தங்களைப் போன்றவர்களின் நட்பில், இலையுதிர்ந்த மரத்தில் திடீரென்று அரும்புகளும் இலை பூ காய் கனிகளாக காட்சியளிப்பதாய் மகிழ்கிறேன். இங்கு வந்து வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் மிக்க நன்றி

அமிர்தவர்ஷினி அம்மா said...

பகிர்விற்கு நன்றி, இதுவரை படித்ததில்லை அவரின் கவிதைகளை. இனி படிக்க வேண்டும்.

ச.முத்துவேல் said...

@அன்பு யாத்ரா
உண்மையைப் பேசவோ, எழுதவோ புலமையும் புத்திசாலித்தனமும் தேவையில்லை. நான் எழுதியவை உண்மைகள். அதனால் இயல்பாகவே,பலரும் படித்துப் பின்னூட்டமிட்டிருக்கிறார்கள்.இதுவரை என் எழுத்துகளுக்கு அதிகப் பின்னூட்டம் பெற்ற பதிவு இதுதான். நான் தான் நன்றி சொல்லவேண்டும்.

ச.முத்துவேல் said...

@அமித்து அம்மா
நன்றி. இவரைப் படிக்கத் தொடங்கிவிட்டதற்கும்.

இராவணன் said...

மிக நன்றிங்க இந்த பதிவை இன்று படிப்பதில் மிகவும் மகிழ்ச்சி.

(http://yathrigan-yathra.blogspot.com/2009/05/blog-post_24.html)

இதை படித்து யாத்ராவை கொண்டாடிக்கொண்டிருந்த மனதிற்கு
இந்த பதிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

ச.முத்துவேல் said...

@இராவணன்
நல்வரவு.
ஆமாம், யாத்ரா கொண்டாடப்பட வேண்டிய கவிஞனேதான். நீங்கள் குறிப்பிடும் கவிதை, உங்கள் பின்னூட்டம் எல்லாமே சரி. நன்றி, இராவணன்.