Friday, March 6, 2009

ராணிதிலக்-நாகதிசை -தக்கை-செவ்வி

நவீன கவிதைகளின் இருண்மைத் தன்மைக்கான காரணங்களுள் நான் கருதும் ஒன்று, அதன் நுட்பம். உலகளாவிய பிரச்னைகள், அனைவருக்கும் பொதுவான அனுபவங்கள் ஆகியவற்றைப் பதிவிடும்போது அப்படைப்புகளின் தாக்கம் ஒரு பெரிய வட்டத்தைச் சென்றடைகிறது. செறிவான மொழியில்,புதிய உத்தியில் எழுதப்பட்டிருக்கும்போதும், ஓரளவாவது புரிந்துகொள்ள முடிகிறது. மாறாக, சின்னச்சின்ன அனுபவங்கள்,மிகவும் தனிப்பட்ட அகவயமான நுண்ணுணர்வுகள் ஆகியவற்றைப் பதிவிடும்போது,அதேவிதமான, அனுபவங்களும் ,தாக்கங்களும் ஏற்படாதவர்களுக்குப் புரிவது கடினமானதாயிருக்கிறது. இவ்விடத்தில் கவிஞர் விக்கிரமாதித்யனின் கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது.
உனக்குப் பிடித்த கவிதை
உன் கவிதை
எனக்குப் பிடித்த கவிதை
என் கவிதை
……….
மனுஷ்யபுத்ரன் அவர்களும்,”ஒரு கவிதை எத்தனைப் படித்தாலும் உங்களுக்குப் புரியவில்லையென்றால்,விட்டுவிடுங்கள். கவலைப்படவேண்டாம்.ஏனெனில், அது, உங்களுக்காக, எழுதப்பட்ட கவிதை அல்ல என்கிறார்.
ராணிதிலக் அவர்களின் நாகதிசை என்கிற கவிதைத் தொகுப்பு உயிர்மை வெளியீடு ஆகும். இவரின் பலமாக, நான் கருதுவது
1.மொழி வளம்
2.கவித்துவமான வர்ணனைகள்
பழந்தமிழ்ச் சொற்களை நிறையப் பயன்படுத்தியிருக்கிறார். மொழிப்பயன்பாட்டில்,சோதனைகள் செய்துள்ளார். வார்த்தைகளை உடைத்து இரு வேறு பொருள் தருவதாக, பயன் தருவதாக என்றெல்லாம் பிரமிப்பூட்டுகிறார்.
ஒரே தலைப்பில் நிறைய கவிதைகள் எழுதியிருப்பது (கைக்கிளை, நாகதிசை,அக்னி நட்சத்திரக் கவிதைகள்) ஆச்சரியமளிக்கிறது.
பெரும்பான்மையான கவிதைகள் காட்சிப்படுத்துதல்களை முன்வைத்தே, நம் கண் முன் விரிகிறது.
தக்கை என்ற சிற்றிதழில், இவரின் செவ்வி(பேட்டி) இடம்பெற்றுள்ளது. கவிதைகளில் ஈடுபாடும், துவக்க நிலையில் கவிதை எழுதிக்கொண்டிருக்கும் என் போன்றவர்களும், அவசியம் படிக்க வேண்டிய ஒரு செவ்வி என்பதால், அதைப் பரிந்துரைத்து, இணைப்பு கொடுத்துள்ளேன்.தொகுப்பிலிருந்து இரண்டு கவிதைகள் மட்டும் இங்கே.
கல்லறை நாள்
கல்லறை சுத்தம் செய்யப்பட்டு
மலர்களால் அலங்கரிக்கப்பட்டுவிட்டது
பிரார்த்தனை நடந்தேறியது
அவர்கள் வீடு திரும்பினர்
கனவில்,
கல்லறையின் கீழே,
ஓர் வயதான,
மலரால் அலங்கரிக்கப்பட்ட,
ஓர் எலும்புக்கூடு,
மலரின்
வாசனையில் சிரித்துக் கொண்டிருக்கிறது.
இடை,வெளி
ஒரு கண்ணாடி தம்ளர்
அதற்கு
இடையே
ஒரு மணி நேர
தூரத்தில் ஒரு தாள்.
தம்ளர்
இங்கே
கவிழ்ந்துகொண்டிருக்கிறது
தாள்
மிக தூரத்தில்
நனைந்துகொண்டிருக்கிறது.

அவசியம் படிக்க வேண்டியது:


4 comments:

ஆதவா said...

நல்ல பதிவு முத்துவேல்..

இருண்மைக்குள் மூழ்கியிருந்தாலும் இசங்கள் தோய்ந்த கவிதைக்குள் உறங்கிக் கிடக்கும் ஆழ்கருத்தை மொண்டு எடுக்கும் பொழுது நமக்கு உண்மையிலேயெ ஒரு புதிர் அவிழ்த்த திருப்தி கிடைக்கும்...

பெரும்பான்மையோர் என் கவிதைகளைப் புரியவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.. சொற்கள் அடக்கப்பட்டு வீண் வார்த்தைகள் வெட்டப்பட்டு எழுதப்படும் பொழுது கவிதையினுள் சென்று தமை நுழைக்க கஷ்டப்படுகிறார்கள்...

மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் பல படித்திருக்கிறேன்... அருமையான கவிஞர்...

ச.முத்துவேல் said...

@ஆதவா
/ஒரு புதிர் அவிழ்த்த திருப்தி கிடைக்கும்.../

உங்கள் பகிர்தலும், அனுபவபூர்வமான கருத்துக்களும், வரிக்கு வரி என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறது. பகிர்தல்களுக்கும், வருகைக்கும் நன்றி.

மனுஷ்யபுத்ரன்.. நான், உச்சப்பட்சத்தில் வைத்திருக்கும், விரும்பும் கவிஞர்.

யாத்ரா said...

எதற்காக இந்த வரிகள் நினைவு வந்ததென தெரியவில்லை,

ஆத்மாநாமுடையது

நீ பழைய மனிதன் என்றது ஒரு புத்தகம்
நீ புதிய மனிதன் தான் என்றது இன்னொரு புத்தகம்
நான் மனிதன் தானா என சோதித்துக்கொள்ளும் நிர்பந்தங்கள்

ச.முத்துவேல் said...

@யாத்ரா
நல்வரவு கவிஞரே.ஆத்மாநாம் படித்திருக்கிறீர்கள் .மகிழ்ச்சி. முதல் வருகைக்கும்,(அறிமுகத்திற்கும்), கருத்துப்பகிர்வுகளுக்கும் நன்றி.