Monday, December 17, 2012

மீண்டும் வாழ்தல்


மீண்டும் வாழ்தல்

அடையாள அட்டை எண் 396
பணி ஓய்வு பெறும்போது
அடையாள அட்டை எண் 3342
பதினெட்டு பணிஆண்டுகள்  நிறைவுற்றிருந்தார்

இவர்களிருவருக்கும் முன்னும் பின்னும்
பல அடையாள அட்டைகள்
எனினும்
396க்கும் 3342க்கும் பல ஒற்றுமைகள்

396 வாழ்ந்த வாழ்க்கையையே
3342 மீண்டும் வாழ்வதும்
பெரிய வேறுபாடு
காலம் மட்டுமே என்பதையும்
3342 கண்டுணர்ந்தபோது
சலிப்பினால் இமைப்பொழுதில் இளைத்தார்

எஞ்சிய வாழ்நாட்களிலாவது
தனக்கெனவொரு தனித்த வாழ்வை
வாழ்ந்துவிடுவது என்று சூளுரைத்தார்
‘அந்த வாழ்க்கையும் யாராலாவது
வாழப்பட்டிருக்கலாமே’ என்று ஒலித்த அசரீரி 
வந்த திக்கில்
வெறுப்புடன் வெறுங்கையை வீசியதில்.
ஒரு மஞ்சள் மலரில் அமர்ந்திருந்த
சாகாவரம் பெற்ற வண்ணத்துப்பூச்சி
கலைந்து எழுந்து
அதே செடியின் இன்னொரு
மஞ்சள் மலரில் அமர்ந்து
உறிஞ்சத்தொடங்கியது

2 comments:

anujanya said...

இது முன்பே படித்த நினைவு. நல்ல கவிதை முத்து.

ச.முத்துவேல் said...

ஆமாம். மீள்பதிவுதான். புத்தகமாக வந்ததால் ஓராண்டாக, ப்லாகிலிருந்து நீக்கி வைத்திருந்தேன்.இப்போது மீண்டும் ஒவ்வொன்றாக வெளியிட யோசனை.
நன்றி !