Tuesday, July 16, 2013

கதிர்பாரதிக்கு நிறையவே மச்சங்கள்

கதிர்பாரதிக்கு நிறையவே மச்சங்கள்



கவிதைகளுக்கு எழுதப்படும் விமர்சனம், கவிதைகளை விட விமர்சகனைப் பொருத்தே அமைந்துவிடக்கூடியதுதானே இயல்பு! நான் எழுதும் விமர்சனத்தில் என்னைக் காட்டிக்கொள்ளும் அச்சத்துடனும், தயக்கத்துடனுமே கதிர்பாரதியின் ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’ தொகுப்பைப் பற்றி தொடர்கிறேன்

கதிர்பாரதியின் இயற்பெயரைப் படித்துத் தெரிந்துகொண்டபோது ஏற்பட்ட காரணம் தெரியாத, அல்லது காரணம் தெரிந்த உற்சாகம், அடுத்த பக்கத்தைப் படித்தபோது வடிந்தே போனது. பின்னே என்னவாம்? எனக்கே எனக்கு மட்டும் கடுப்பேற்றக் கூடியது என்று நான் நம்பிக்கொள்ளும், அந்த வரிகள் இதுதான்.
’’ உலக ருசிகளையெல்லாம் ஒன்று திரட்டி என் மனைவி வைக்கும் மீன் குழம்பின் ருசிக்கு சமர்ப்பணம்’’
(எனக்கும்தான் கல்யாணம் ஆகிவிட்டது என்கிற தகவல், தெரியாதவர்களுக்காக)

கதிர்பாரதியின் முதல் தொகுப்பாகவே இருந்தாலும், பெருமையோடும், தைரியமாகவும் தமிழ்கூறும் நல்லுலகின் முன் வைக்கும் தகுதி படைத்த கவிதைகளின் தொகுப்பாகவே இருக்கிறது. பணியும், விருப்பமும் ஒன்றேயாக அமைந்துவிட்ட கதிர்பாரதியின் நற்பேறும், அனுபவமும், அவரது படைப்புகளிலும் வீணாகாமல் பிரதிபலிக்கிறது. கவிதைமொழி, உத்தி என்று கவிதையின் அம்சங்களில் நல்ல தேர்ச்சியோடு இருக்கிறது, கவிதைகள்.

தொகுப்பு குறித்த தொகுப்பான ஒரு பார்வையை வைக்குமுன், ஆங்காங்கே என் பார்வையை முன் வைக்கிறேன். வேறு யாருக்கு இது நெருக்கமாக இல்லாமல் போனாலும், கதிர்பாரதிக்கு நெருக்கமாய் இருக்கலாம்.

‘தூரத்தில் அதிரும் குளம்பொலிக்கேற்ப நுணா மரத்தடியில் ஏறி இறங்குகிறது மார்க்கச்சை ஒன்று’ என்கிற குறைந்தபட்ச சொற்களில் அமைந்த சிறிய வரியில், என் மனக்கண்ணில் விரியும் சலனக் காட்சி பெரியதாயிருக்கிறதால் மொழியை எண்ணி வியந்துபோனேன்.( கருப்பு வெள்ளை காலத்து திரைப்படமாகத்தான் ஓடியது).

உயிர்ப்பந்தல் போன்ற கவிதைகளில் தென்படும் கவிஞனின் விவசாய வாழ்வு எல்லோருக்கும் கிடைத்திடாத பாக்கியம். (இது என்ன? போகப்போக, கதிர்பாரதி, உலகத்திலுள்ள அனைத்து பாக்கியங்களும் கிடைக்கப் பெற்றவர் பட்டியலில் சேர்ந்துவிடுவார் போலத் தோன்றுகிறதே!)

’கண்களிலிருந்து ஒளியையும், கொங்கைகளிலிருந்து கூச்சத்தையும்’ என்கிற வரி என்னை நிறையவே சலனமடையச் செய்தது. கொங்கைகள் எப்போதுமே மீறல்கள். அவைகளில் சில கட்டுக்கடங்காத திமிறல்கள். ஆனால், கூச்சம் என்பது அடங்குதல், குறுகுதல், உள்வாங்குதல். ஆனாலுமே கூட கொங்கைகளின் பண்பாக கதிர்பாரதியின் கூற்று பிடித்திருந்தது. ஒரு ஆணாக என் மனம், கொங்கைகளின் விஷயத்தில்  இந்த இரண்டும் கலந்த தன்மையைத்தான் விரும்புகிறது போலும்.

சில கவிதைகளை எனக்கு நானே சிறு சிறு திருத்தங்களை செய்து எனக்குகந்த வகையில் வாசித்துக் கொண்டேன். உதாரணமாக, ‘’ஒரு பரோட்டா மாஸ்டர் உதயமாகிறான்’’ என்கிற நல்ல கவிதையின் கடைசி வரியை நீக்கிவிட்டு.

யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட, புனைவிலேற்றி சொல்லப்பட்ட கவிதைகளை, ஒரு படிமமாக்கி, அப்படிமத்திற்கு பொருந்துகிற ஒரு சூழலை, என் வாசிப்பின் வழி, நான் கண்டுபிடித்துக் கொண்டபோதுதான், அக் கவிதைகள் என்னை வந்தடைகின்றன.இம் மாதிரியான கவிதைகளும் தொகுப்பில் அடக்கம். கோழிக்கால குறிப்புகள் போன்று சில கவிதைகளில் கவிஞரே கண்டுபிடிப்பை எளிதாக்கிவிடுகிறார்.

‘கொண்டலாத்தி குகுகுகுக்கும் கோடை’ என்கிற கவிதை, வெளியிடப்பட்ட காலத்திலேயே என்னை மிகவும் வசீகரித்த கவிதை. வெகு நாட்கள் கழிந்த பின்னும், எத்தனை முறை வாசித்தாலும் அத்தனை முறைகளிலும், அதே வசீகரத்தையும், வாசிப்பின்பத்தையும் இக் கவிதை தக்கவைத்துக்கொண்டிருப்பதே சிறப்பு.

தொகுப்பில் தனித்தயொரு சாயலில், குரலில் அமைந்துள்ள ’லாபங்களின் ஊடுருவல்’ கவிதை சொல் சொல்லாகக் கவர்ந்தும், லௌகீகத்திலிருந்து விலகிய தத்தளிப்பான வாழ்க்கை கொண்டவர்களுக்கு ஆறுதலாகவும் அமைந்திருக்கிறது.

‘வேம்பின் புண்ணியத்தில் அத்தனைக் கசப்பாக இல்லை இந்தக் கோடை’ என்கிற வரியைப் படித்தபோது, ஒரு நிமிடம் தேவதேவனின் பக்கத்து இருக்கையில் கதிர்பாரதியை உட்கார்த்தி வைத்து அழகுப் பார்த்துக் கொண்டது என் உள்ளம்.

சில கவிதைகள், கவிஞனுக்கு ஏற்படுகிற தூண்டுதல்களை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கே ( தேவையில்லை என்றபோதும்) சவால் விடுகின்றன. ஆனால், மகன்களைப் பற்றிய கவிதையில் இந்த சவால் இல்லை. ’’மகன் தந்தைக்காற்றும் உதவி என்பது அவன் தரும் மழலை இன்பங்கள் மட்டுமே போதும். மற்றவையெல்லாம் உபரி’’ என்று ஒருமுறை முக நூலில் எழுதியிருந்தேன்.மகன்களால் நிறைய உதவி பெற்ற பாக்கியசாலியாகவும் இருக்கிறது கதிர்பாரதியின் வாழ்க்கை. ’இந்தாப்பா தண்ணி குடி’ என்கிற ஆறுதலெல்லாம் அதற்கும் மேலான கொடுப்பினையே. நிகழ்வுகளின் மீது, கவிஞன் வைக்கும் படைப்பூக்கமான சித்தரிப்புகளும், சிந்தனைகளும் கவிதைகளை மேலும் சிறப்பாக்குகிறது. கதிர்பாரதியின் கவித்திறனுக்கு எளிதில் சான்றளிக்கக் கூடியனவாக அமைந்துள்ளன மகன்களைப் பற்றிய கவிதைகள்.

சரி, குறைகள் என்று சொல்லிக்கொள்ளும்படியானவற்றை பட்டியலிட்டுவிடுகிறேன்.
-வாசகர்களிடம் நேரடியாக உரையாடும் தன்மையில் நிறைய கவிதைகளை எழுதியிருப்பது. அதிலும், வாசகர் தரப்பில் தானே காயை நகர்த்துவது.
- தமிழ்க் கவிதையில் நிறைய வடமொழிச் சொற்களை கலந்து எழுதியிருப்பது
-தொகுப்பை பக்கங்களின் எண்ணிக்கையில் தோராயமான பாதியாக பிரித்துக்கொண்டால், முதல் பாதி அளவுக்கு பின்பாதியில் சில கவிதைகள் வசீகரிக்காதது.
-விரிப்பின் கசங்களிலும், தலையணை பிதுங்களிலும்- என்கிற வரிகளில் எழுத்துப்பிழை

நடுத்தர வர்க்கத்தினரே பெரும்பாலும் எழுதிக்கொண்டிருக்கும் காலச் சூழலில், பாடுபொருட்களில் அப்படியொன்றும் பெரிய வேறுபாடுகளை பார்த்துவிடமுடியவில்லைதான். கவிஞனின் கூறுமுறையால்தான் கவிதைகள் கவனத்தை ஈர்க்கமுடியும். கதிர்பாரதி நன்றாகவே கவனத்தை ஈர்க்கிறார்.


ஈசல் வார்த்தைகள், மறியின் பச்சையக் கனவுகள், கண்களில் உப்புச் செடி, பத்துத் தலை காமம், மிதவையின் மேல் நோக்கி எழும் ஆன்ம வேட்கை, நீர்ப்பள்ளம் போன்ற கவித்துவமான படைப்பூக்கம் மிகுந்த சொற்றொடர்கள் வாசிப்பின்பத்தை அளிக்கின்றன. வேதாகம மொழிநடையின் தாக்கம் கவிஞரின் மொழியில் நன்கு கலந்திருக்கிறது. வாசித்து கசப்பாகும்படியாகவோ, ஏமாற்றமளிக்கும்படியோ ஒரு கவிதைகூட இல்லை.

மெசியாவின் பெயரால் தலைப்பிடப்பட்டிருந்தாலும், சாத்தானின் குரலே தொகுப்பின் நிறைய இடங்களில் ஒலிக்கிறது. தாபங்களின் சாபங்கள், வாழ்க்கையின் சுமையை சுமக்க முடியாமல் கையறு நிலையில் கொட்டி ஆற்றிக்கொள்ளும் வசைகள், புலம்பல்கள் அவை.
                                           -ச.முத்துவேல்

No comments: