Thursday, October 20, 2011

அம்மூவன்





நேற்று வே.பாபு தொலைபேசியில் அழைத்தார். இலக்கிய வாசகர்கள், படைப்பாளிகள் பேசும்போது நலமா என்று கேட்பதுபோல் சம்பிரதாயமானதும், அதே வேளையில் ஈடுபாடுடையதுமாக ஒரு கேள்வி உண்டு.அது, என்ன படித்துக்கொண்டிருக்கிறீர்கள்? என்பது. பாபுவும் கேட்டார். குறுந்தொகை படிக்கிறேன் என்றேன்.

ஆமாம், குறுந்தொகையை அங்கொன்று இங்கொன்றாக படித்திருக்கிறேன். முழுத்தொகுப்பாய் வாசித்துக்கொண்டிருப்பது இப்போதுதான். இதுவரை நான் படித்ததில் அம்மூவன் என்னைக் கவர்கிறார். நான் படித்துக்கொண்டிருக்கும் தொகுப்பு, நூலகத்திலிருந்து எடுத்தது. விளக்கவுரை கவிஞர் சக்தி என்றிருக்கிறது. நெய்தல் திணையில் வரும் வளையோய் என்று தொடங்கும் கவிதையை படித்துவிட்டு அசைபோட்டு, செரித்துக்கொண்டிருந்தேன். கவிதையும், உரையாசிரியர் கவிஞர் சக்தியின் விளக்கமும்

351. நெய்தல்

வளையோய்! உவந்திசின்-விரைவுறு கொடுந் தாள்
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த
ஈர் மணல் மலிர் நெறி சிதைய, இழுமென
உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு
உரிமை செப்பினர் நமரே; விரிஅலர்ப்
புன்னை ஓங்கிய புலால்அம் சேரி
இன் நகை ஆயத்தாரோடு
இன்னும் அற்றோ, இவ் அழுங்கல் ஊரே?




’’வளை அணிந்தவளே! விரைந்து செல்லும், வளைந்த கால்களை உடைய, வளையில் வாழ்கின்ற நண்டின் கூரிய நகங்கள் கோலஞ்செய்த ஈரமணலும், நீர் வழிகளும் சிதையும்படி இழும் என்ற ஓசை உடைய அலைகள் மோதி உடையும் துறையை உடையவருக்கு நீ உரிமையானவள் என நம் உறவினர்கள் செப்பினர். நான் மகிழ்ந்தேன். விரிந்த மலர்களை உடைய புன்னை மரங்கள் ஓங்கிய, புலால் நாறும் இச்சேரியின் இன் நகைக்கூட்டமும், இந்தக் கேடு கெட்ட ஊரும் இனியும் அலர் கூறுமோ?’’(தோழி கூற்று)



ஆஹா ! என்ன கவிதை ! பொதுவாகவே, சங்கக் கவிதைகளில் ஒன்றைக் கவனிக்கமுடிகிறது. ‘அந்த நாடனே, துறையைச் சேர்ந்தவனே’’ என்பதாக வருகிற நிலப்பகுதியின் அடையாளங்களும், குறிப்புகளும் வெறும் வர்ணனைகள் அல்லவென்பதே அது. அவை, கவிதையில் சொல்லப்பட்டிருக்கும் உள்ளடக்கத்திற்கு பொருத்தமான உவமைகளாக நிற்பதை, பெரும்பான்மையான கவிதைகளில் காணலாம். அதுபோல என்பதைத் தவிர்த்துவிட்டு, வர்ணனைகளாகவும், தனியே பிரிந்து நிற்பதுபோலும் ‘ நாடனே, ஊரைச் சேர்ந்தவளேஎன்று சொல்லும் பொதுத்தன்மை அன் நாட்களில் உத்தியோ என்னவோ? வளையோய் என்று துவங்கும் இந்தக் கவிதையிலும்,  நண்டுகள் கடல்மணலில் தீற்றிய கோடுகள் , ஊரார் சொன்ன அலர் பேச்சுகளுக்குப் பொருத்தமான உவமையாகிறது. ‘ நீர்வழிகளும் சிதையும்படி என்ற இடத்தில் எனக்கு சிந்தனைத்தடை ஏற்பட்டது. நீர்வந்த தடங்கள் என்கிற முடிவுக்கு வந்தேன். அதாவது அவதூறுகள் வந்துசேர்ந்த, வரக்கூடிய வாய்ப்புகள். இவையனைத்தையும் பிறகு, அலைகள் வந்து அழித்துச் செல்வதுபோல், உங்கள் இருவரின் அங்கீகரிக்கப்பட்ட உறவும், இதுவரையிலான அவதூறுகளையும், அவதூறுகளின் வழிகளையும் அழித்துவிடுகிறது. அந்தப் பேரலைகளின் முன் இவை எம்மாத்திரம்?

இந்தவேளையில்தான் என்னுடைய கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது. அதே நெய்தல் நிலக் கவிதைதான் இதுவும். வளையோய் கவிதையில் சொல்லப்பட்ட படிமத்தை, ஒரு சம்பவத்தோடு அவரே தொடர்புபடுத்திவிடுகிறார். எனவே, உவமையாகிவிடுகிறது. நான் எழுதியிருப்பது ஒரு படிமம் மட்டுமே.

 நேற்றுப் பெய்த மழை

கடலின் நீலத்தை
களங்கப்படுத்த முயன்று
தோற்றுக் கொண்டிருக்கிறது...
கரையில் கலக்கும்
புது வெள்ளம்..!

ஜூன் 2008 வார்த்தை இதழில் வெளியான கவிதையிது. இதற்கும், வளையோய் கவிதைக்கும் உள்ள ஒற்றுமைகள், வேற்றுமைகள் ஆகியவற்றை நீங்கள் அசைபோடுங்கள்.

/புன்னை மரங்கள் ஓங்கிய, புலால் நாறும் இச்சேரி/
என்கிற வரிகளையும் சேர்த்து.

புன்னை மலர்களை தலைவன், தலைவி காதலுக்கும், புலால் நாறும் சேரி என்பதை, ஊராரின் அவதூறு செய்யும் பண்பையும் குறிப்பிடுவதாக எண்ணிக்கொள்கிறேன்.
                                   



No comments: