Tuesday, May 15, 2012

பூரணி பொற்கலை- கண்மணி குணசேகரன்


புனைவுக் கலையில் பூரண நிலை


ஆத்திகக் கொள்கை கொண்ட மனிதர்களுக்கு கடவுள் நம்பிக்கையே கடைசித்துணையும், ஆறுதலுமாகும்.தன் எல்லா வலிகளையும், எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையோடு கடவுளிடம் இறக்கிவைத்து ஆசுவாசம் பெறுகிறார்கள். நல்ல பலன்கள் நடைமுறை வாழ்வில் நிகழும்போது, அந்தக் கடவுளே செய்ததாக நன்றிகூர்கிறார்கள்.கடவுளுக்குப் படையல், நேர்த்திக்கடன் ஆகியவை செலுத்தி மகிழ்கிறார்கள்.  ஏழை, எளிய, சிற்றூர் மக்களின் கடவுள்கள் அவர்களைப்போலவே ஏழ்மையோடும், சிறுதெய்வங்களாகவுமே இருக்கிறார்கள். மண்ணின் மனிதர்களைப்போலவே, மண் சாமிகள்.தெய்வத்திலும்கூட சிறு தெய்வங்கள், பெருந்தெய்வங்கள் என்று மனிதர்களுக்குள் பிரிவினை. தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

கண்மணி குணசேகரனின் அண்மைய சிறுகதைகளின் தொகுப்பு பூரணி பொற்கலை. மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் அத்தனைக் கதைகளுமே ஓரிழையை அடிப்படையாக, தொடர்ச்சியாகக் கொண்டு ஒரு வரிசையில் வைக்கத்தக்கவை.காவல் தெய்வமான அய்யனார்,அய்யனாரின் மனைவிகள் பூரணி, பொற்கலை, அய்யனாரின் சேவகர்கள், மற்றும் சிறுதெய்வங்கள் ஆகியோரை கதை மாந்தர்களாகவே  கொண்டு எழுதப்பட்டவை.மானுடர்களும், அமானுடர்களும் கதைகளுக்குள் கலவாமல் கலந்து கதை மாந்தர்களாகியிருக்கிறார்கள். இப்படி ஒரே சரடில் கற்பனைவளத்தோடு எழுதித்தள்ளும் திறன் இருப்பதை கண்மணி இலக்கிய உலகிற்கு இத்தொகுப்பின் மூலம் பெருமையோடு அறிவித்திருக்கிறார்.

கண்மணி குணசேகரனுடையது யதார்த்த வகை எழுத்து. இந்தத் தொகுப்பைப் பொருத்தவரை யதார்த்த எழுத்தோடு சேர்த்தும், சற்று அதிலிருந்து மாறுபட்டும், இலக்கிய உத்திகளை மிக இயல்பாகச் சேர்த்துக்கொண்டும், புனைவுகளின் வழியாக வாசிப்பு சுவாரசியமளிக்கும் வகையில் எழுதப்பட்டவை இக்கதைகள்.யதார்த்தங்களிலிருந்து விலகிய புனைவுகளின் வழியாக இலக்கியம் செயல்படும்போது, அதற்கு பன்முகத்தன்மை அளிக்கும் சாத்தியங்கள் கூடுகிறது. கவிதைகளிலேயே இவ்வுத்தி பெருமளவில் செயல்படுகிறது. இத்தொகுப்புக் கதைகளிலும்  நாம் காணும் அய்யனார் மற்றும் சுற்றத்தினர் ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விதமாக நமக்குக் காட்சியளிப்பார்கள். ‘ நாம வாழவச்ச மனுசாளுவோ, நம்ம வாழவச்சுப் பாக்காம வேரை வெட்டுதுங்க... வெந்நீரை ஊத்துதுங்க’ என்று சாமிகளே புலம்புவது, புறக்கணிக்கப்படுகிற பெற்றோர்களை, வாழ்ந்து கெட்டவர்களை, கலாச்சாரங்களை, கலைகளை என்று பல வகையில் நினைவுபடுத்திவிடுகிறார்கள். புனைவின் சாத்தியமே இங்குதான் சிறப்பாகச் செயல்படுகிறது.இவ்வாறு, சாமிகள் படிமங்களாக நின்று, பல்வேறு சூழலுக்குப் பொருந்திப்போகிறார்கள்.. பெண்ணியம் பேசுகிற, தலித்தியம் பேசுகிற, மாய யதார்த்தவாதம் என்கிற உத்திகளை இயல்பாக உள்ளடக்கிய,ஆனால் எளிமையாக சொல்லப்பட்ட கதைகள்.

நடைமுறை வாழ்வில் சாமிகள் எப்படி கதாபாத்திரங்களாக உலவுகிறார்கள்? என்றொரு கேள்வியெழுவது இயல்புதான். குற்றவாளிக்கு உறுத்துகிற மனசாட்சியாகவும், அச்சுறுத்துகிற கனவாகவும், இயற்கை  நிகழ்வுகளின் காரணிகளாக கற்பிக்கப்படுபவர்களாகவும் வருகிறார்கள் சாமிகள்.

படையல் என்கிற கதையில் வீரனாருக்கும், அய்யனாருக்குமே சண்டை மூள்கிறது. மாமன், மச்சான் சண்டைதான். இடையில் சமரசம் செய்துவைப்பவள் பூரணிதான்.என்னதான் சாமிகளென்றாலும், அவர்களும் சராசரி மனிதர்களைப்போலவே நடந்துகொள்கிறார்கள். எனவே, இங்கே சாமிகள் குறியீடுகளாகவே நிற்கிறார்கள்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் , நெய்வேலியைச் சுற்றியுள்ள மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் ஒரு பகுதியைச் சொல்கிறது, புழுதி எனும் கதை.

முன்பெல்லாம் மாட்டிறைச்சி  சற்று கமுக்கமான இடங்களில் விற்கப்பட்டு வந்தது.ஆனால், இன்று நகரங்களில்  நெரிசலான சாலையோரங்களில்கூட மாட்டிறைச்சி விற்கும் கடைகளும், அதில் வைக்கப்பட்டுள்ள மாட்டிறைச்சியும் பரவலாக காணமுடிகிறது. காலத்தால் ஏற்பட்டுள்ள இந்தச் சமூக நிலை மாற்றத்தை பதிவு செய்யும் இலக்கிய நுட்பமான, ஆவணமான ஒரு வாய்ப்பு ‘வேட்டை’ கதைக்குள் அமைந்திருக்கிறது.


உண்மை மனிதர்களுக்கும், சாமிகளுக்கும் தொடர்புபடுத்துகிற சந்தர்ப்பங்கள் புனைவின் உச்சம். பூரணி பொற்கலை கதையில் ஈயம் பூசும் குடும்பத்தைப் பார்த்து ஊர்த்தலைவன் மனம் பதைக்கும் இடம் அதற்குச் சிறந்த உதாரணம் என்று சொல்லலாம் .உடனே அதற்குப் போட்டியாக அரண் கதையில், மீண்டும் குடிப்பழக்கத்தைத் தொட நினைப்பவனை விரட்டி வந்து காப்பாற்றும் குதிரையையும் சொல்லலாம். இப்படி ஒவ்வொரு கதையும் ஒன்றோடொன்று போட்டி போட்டுகொள்ளும் வகையில் வரிசையில் தள்ளுமுள்ளு  கட்டி நிற்கின்றன.
நமது மண்ணின் சிறுதெய்வங்கள் வானத்திலிருந்து குதித்தவர்களில்லை. நம்மிடையே வாழ்ந்து மறைந்த நமது முன்னோர்களேதான். அவர்கள் செய்த தியாகங்களுக்காகவும், வஞ்சிக்கப்பட்ட ஆறாத்துயரங்களுக்காகவும், வீரதீரச் செயல்களுக்காகவும் வழிவழியாக போற்றப்பட்டு வந்து சாமிகளாகவே ஆகிவிட்டவர்கள். இக்கருத்தை சுட்டிக்காட்டுவதுபோல், சுவர் என்கிற கதையில் வருகிற மலையம்மாள் என்கிற குலசாமியைப் பற்றிய தகவல் கதைக்குள்ளேயே வருகிறது.

வாழ்ந்துமறைந்த நமது முன்னோர்கள் என்பதால்தானோ என்னவோ அவர்களுக்குள்ளும் சாதிய வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் உள்ளன போலும்.அந்தவகையில், தமுக்கு வீரன் கதை ஒடுக்கப்பட்டவனின் எழுச்சியை, தலை நிமிர்வை முன்வைக்கிற கதை. ஒடுக்குபவர்களுக்கு விடப்படும் எச்சரிக்கையும்கூட. நடு  நாட்டு வட்டார மொழியிலேயே சாமிகளும் பேசுவது புனைவின் சுவையைக் கூட்டுகிறது.

ஒவ்வொரு கதையும் சமூகத்துக்கான செய்திகளாக, அறிவுறுத்தல்களாக அமைந்திருந்தாலும் அவை போதனைக் கதைகளைப்போல் அல்லாமல் இயல்பாக, உணர்த்துகிற வகையில் சொல்லிச்செல்கிறது.

ஆணிகளின் கதை என்கிற கதை மட்டும் கண்மணி குணசேகரனின் வெள்ளெருக்கு சிறுகதைத் தொகுப்பில் முன்னமே இடம்பெற்றது. என்றாலும், பொருத்தப்பாடு கருதி இத்தொகுப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆணிகளின் கதை ஆவிகளின் கதைதான். இந்தக் கதையில் மட்டும் சாமிகளுக்குப் பதில் ஆவிகள். ஆவிகளின் கதைகள் நமக்கு உணர்த்துவதும்,சாமிகளின் கதை போலவேதான். குலசாமிகளின் கதைகளைப்போலவே, கதைகளில் வருகிற உவமைகளும் தனித்துவமான, மண்சார்ந்த வாழ்க்கையிலிருந்து வெளிப்படும் உவமைகள்தான்.


நெகிழ்ச்சியான காட்சிகளாலும், உரையாடல்களாலும் அதேபோல்  அங்கதச் சுவையாலும் சுவாரசியமான வாசிப்பனுபவத்தை தருகின்றன கதைகள். வாசிப்பின்போது, மௌனக் கரை உடைத்து சிரிக்காமலும், தழுதழுக்காமலும் இக்கதைகளை படித்துவிடமுடியாது எனலாம்.

எழுத்தாளர்கள் உருவாக்கப்படுவதில்லை. அவர்கள் பிறக்கும்போதே அத்தகைய திறனை, இயல்பாகக் கொண்டு பிறக்கிறார்கள், அதுவொரு மானுட நிகழ்வு என்றொரு கூற்று உண்டு. (ஒருவேளை மகாகவிகளுக்குமகா எழுத்தாளர்களுக்கு இக்கூற்று பொருந்தலாம் என்பது என் எண்ணம். சிறந்த கவிகளாக, எழுத்தாளர்களாக உருவாக தீவிரமான முயற்சியும், பயிற்சியுமே போதும் என்று எண்ணுகிறேன்) இக்கதைகளை படிக்கிறபோது இக்கூற்று உண்மைதானோ என்று நம்பத்தோன்றுகிறது. கண்மணி குணசேகரன் என்கிற கலைஞனின் எழுத்து வல்லமைக்கு சிறந்தவொரு சான்றாக, வெற்றிச்சின்னமாக , பூரணி பொற்கலை சிறுகதைத் தொகுப்பு பெருமை சேர்க்கிறது.தமிழினி வெளியீடாக வந்திருக்கிற இத்தொகுப்பில் எழுத்துப்பிழைகள் சற்று தென்படுகிறது.

சிறுதெய்வ வழிபாடுகள், சடங்குகள், நம்பிக்கைகள் ஆகியவை அறிமுகமேயில்லாத நகர, மாநகர வாழ் மக்கள்கூட இக்கதைகளை வாசிப்பதன் வழியாக அவற்றை அறிந்துகொள்ள முடியும். அவ்வாறு கதைகளை வாசித்தபிறகு சிற்றூர் பக்கம் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் சிறுதெய்வங்களின் சிலைகளை வெறும் சிலைகளாக பார்க்கமாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். அச்சிலைகள் உயிர்பெற்று கற்பனைக் கண்களுக்குள் துள்ளித்திரியும்.
                                                                                

No comments: