Tuesday, July 5, 2016

வேள்வித்தீ-பிறன் இல் விழையாமை

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி
1

சற்று முன்னர்தான் ஒரு தகவல் படித்து முடித்தேன். ஆப்ரிக்க  நாடுகளின் கலாச்சாரத்தை பற்றிய பதிவு அது. அங்கு கற்பு போன்றதொரு விழுமியத்திற்கு ஒரு பெரிய முக்கியத்துவம் ஏதும் இல்லை என்பதான சாரம் கொண்டது.மேலும் சில வெளி நாடுகளுக்கும் இது பொருந்தலாம். பசி, தாகம், காமம் போன்ற அடிப்படை உணர்வுகளாலும், உடலமைப்பாலும் மனிதர்கள் உலகம் முழுவதும் பொதுவானவர்களே. ஆனால், இந்தியாவில் கற்பு என்ற ஒன்று போற்றப்படுகின்றது.இது மனிதர்கள் செய்துகொண்ட ஒரு சமூக ஏற்பாடு. மாறாக, ஆப்ரிக்காவில் இருக்கக்கூடிய ஒரு கௌசலைக்கும், அவள் குழந்தைக்கும் இப்படியொரு பரிதாப நிலை ஏற்பட்டிருக்காது என்று  பார்க்கும்போது இந்தியாவின் கலாச்சாரம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோமா, சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்கிறோமா என்று தோன்றுகிறது.


வேள்வித் தீ நாவலின் மையம் பிறன் இல் விழையாமைதான்.பிறன் இல் விழையாமை என்ற குறளதிகாரம் சொல்வது ஆணுக்கு மட்டும்  என்பதாகவே தோற்றம் தந்தாலும், (தன் கட்டுப்பாட்டோடு இருப்பது பேராண்மை என்று வள்ளுவர் வர்ணித்தாலும்,ன் விகுதி ,ள் விகுதி குறிப்புகள் இருந்தாலும்) இருபாலருக்கும் பொதுவாகவே சொல்லியிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன்.

ஒரு சராசரி தனிமனிதனின் வாழ்வில் உறவுகளும், நட்பும், அரசியல் சமூகமும் தவிர்க்க இயலாதைவையாகவும்,எப்படியெப்படியெல்லாம் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்ற ஒரு பார்வையையும் நாவல் அளிக்கிறது.இவைகளோடு சேர்ந்து தமிழகத்தில் சௌராஷ்டிரர்கள் பற்றிய ஆவணப் பதிவாகவும் நாவல் விளங்குகிறது.

கௌசலையின் தற்கொலையோடு நாவல் நின்றிருக்கலாம் என்று தோன்றியது. அதன்பிறகும் கண்ணனும், ஹேமாவும் சேர்ந்து வாழ்வதாக   நீட்டித்திருப்பது தேவைதானா, யதார்த்தம் என்று ஏற்றுக்கொள்வதா? என்று யோசிக்கவைக்கிறது.


கள்ள உறவு தெரிந்ததும், கௌசலை ஒரு புதிய பெண்ணாக , ராட்சசியாக மாறுவது கண்ணனுக்கும், ஹேமாவுக்குமே நம்ப முடியாத ஆச்சரியத்தை அளிக்கிறது. அப்போது அவள் பேசும் குத்தல் பேச்சுக்களும், கண்ணனின் நிலையும் சொல்லப்பட்ட பகுதி நாவலில் சிறப்பாக அமைந்திருக்கிறது.

2.
எம்வி வெங்கட்ராம் அவர்கள் எழுத்தில் நான் படிக்கும் முதல் படைப்பே வேள்வித்தீதான்.

நாவல் வாசித்துக்கொண்டிருந்தபோதும், வாசித்துமுடித்த பின்னும்கூட நாவலின் தலைப்பு குறிப்பு யோசித்துக் கொண்டிருந்தேன். ஏனெனில், நேரடியாக எங்கும் எம் வி வி விளக்கிவிடவில்லை. சுந்தரராமசாமியிடம் ஒரு ஆய்வு மாணவி வேள்வித் தீ பற்றி எடுத்த நேர்காணல் ஒன்றும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

மாண்வி: ‘வேள்வித்தீ’ என்ற தலைப்பை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சுரா: ’மொத்த வாழ்க்கை பிரச்னைகள்,சிக்கல்கள்,மேடுபள்ளங்கள் இவற்றை பற்றிய ஒரு படிவமாக வேள்வித் தீ என்ற படிமத்தை அவர் பயன்படுத்துகிறார்.வாழ்க்கையே ஒரு வேள்விதான்.அதை வேள்வியாகக் கொள்ளாமல்,பதற்றம் அடையாமல் அந்த வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையைச் சார்ந்தவர் அவர்.ஆனால் நடைமுறையில் நாம் உணர்வுபூர்வமாகவும்,ஆபாசங்களுக்கு உட்படும் கோபதாபங்களுக்கு உட்பட்டும் அந்த வாழ்க்கையை எதிர்கொள்வதால் பல்வேறுபட்ட சிக்கல்களை உருவாக்கிக் கொள்கிறோம்.அந்த அளவில் அது ஒரு தீ போன்றதுதான்.மனிதனை வந்து பொசுக்கக்கூடிய ஒரு அம்சமும் அதில் இருக்கிறது என்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு நல்ல படிமத்தை,அவருடைய பார்வை சார்ந்த ஒரு படிமத்தை, பயன்படுத்தியிருக்கிறார்’

இந்த விளக்கம் எனக்கு ஒரு பிடி கிடைத்தாற்போன்றுதான் இருந்தது. ஆனால், கொழுகொம்பின் நிறைவில்லை. என்னுடைய பார்வையில் கௌசலைதான் வேள்வித்தீ. கண்ணனும், ஹேமாவும் சாக்கடை. கௌசலை தீ. அதிலும் புனிதமான தீ. சாக்கடைக்கு எதிரான படிமம். சாக்கடையோடு சேர்ந்தால் அணைந்துவிடும்.

சாக்கடையோடு சாக்கடை சேர்வதாகத்தான் ஹேமா, கண்ணன் உறவை அவர் வார்த்தைகளில் எழுதுகிறார் எம்விவி.

’’ஒரு தப்புமில்லே.உனக்கும் எனக்கும் இதுதான் சரி.அப்படிச் சொல்றதும் தப்பு. நமக்கு இதுதான் வழி. சாக்கடையும் நாத்தமும்தான் நமக்குப் பிடிக்கும்.கௌசலைக்குச் சாக்கடை சாக்கடைதான். நாத்தம்  நாத்தாம்தான்.அவளுக்கு அசிங்கத்தைச் சகிக்க முடியல்லே.போயிட்டா’’ என்று ஹேமாவிடம் கண்ணன் சொல்கிறான்.

கௌசலையை தாண்டி ஹேமாவைத் தொட்டதால் கண்ண்ன் சாக்கடை. அதுமட்டுமல்ல கௌசலை தொட்ட ஒரு ஆணான கண்ணன்தான் ஹேமாவுக்கு. கற்பிழந்தவன். வேறுசிலர் தொட்ட ஹேமாதான் கண்ணனுக்கு.ஹேமாவுக்கு வேறுசில தொடர்புகள் முன்பாகவே இருந்ததாக குறிப்புகள் இடம்பெறுகிறது. கண்ணனும் ஹேமாவும் சேரும்போதுகூட ’இருவரும் கற்றவர்கள்’ என்கிறார்.

கௌசலை நெருப்பு. நெருப்பாகவே சாக்கடையும், நாத்தமும் தொடவிடாமலேயே தன்னை அழித்துக்கொண்ட புனித நெருப்பு.
இந்தியக் கலாச்சாரத்தின் பெருமைமிகு மாதிரி அவள். சமூகத்திற்கு ஒரு பாடமாக, எச்சரிக்கையாக  அற உலகம் வலியுறுத்துகிற ஒரு கதாபாத்திரம்.
வேள்வித் தீ ( நாவல்)
எம்.வி.வெங்கட்ராம்
காலச்சுவடு பதிப்பகம் (4ஆம் பதிப்பு)
ரூ.150

Thursday, June 18, 2015

பிரிக்கப்படாத புத்தகம்



என்னுடைய மதிப்பிற்குரிய முன்னாள் தொழிற்சங்க தலைவர் ஒருவருடைய புதுமனை புகுவிழா இன்று. மிக நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களை மட்டுமே அழைத்திருந்தார். ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் தலைவர் எப்படியிருப்பார் என்று அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பை எனக்களித்தவர். அவர் முன்னாள் ஆகிப்போனதன் பாதிப்புகளை கண்கூடாக கண்டுகொண்டிருக்கிறோம்.

சம்பிரதாயமான மொய் அன்பளிப்புகளை அவர் ஏற்கமாட்டார் என்று ஊகித்திருந்த்துபோலவேதான், நேரிலும் நடந்தது. புத்தகங்களை அன்பளிப்பாக தருவதை கம்யூனிஸ்டுகள் ஒரு வழக்கமாகவே வைத்திருந்த்தை பார்த்திருக்கிறேன். எங்கள் தலைவரும் நல்ல வாசகர்தான்.(கம்யூனிஸ்ட் தலைவர் என்று சொல்லிவிட்ட பிறகு இப்படி ஒரு விவரம் கொடுக்கப்படவேண்டியதில்லைதான்) பொறுப்புகள் வெகுவாக குறைந்த பணி ஓய்வு நேரத்தில் அவருக்கும் படிக்கும் வாய்ப்புகள் உள்ளது .எனவே, நானும் ஒரு புத்தகத்தை அன்பளிப்பாக அளிக்க முடிவு செய்தேன்.அவர் எதிர்பார்க்கமாட்டார் என்றபோதிலும்.

இங்கேதான் ஊசலாட்டம் துவங்கியது.எந்த புத்தகத்தை பரிசளிப்பது? என்னிடம் சில புத்தகங்கள் 2 பிரதிகள் உள்ளன. நவீன கவிதைகள் தொகுப்பை கொடுத்து நான் அவரை தண்டிக்க விரும்பவில்லை. விதி விலக்குகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டாம். படித்துமுடித்த புத்தகங்களை, பார்க்கும்போதே பழையதாக தெரியும் புத்தகங்களை கொடுப்பதும் சரியாக இருக்காது என்று எண்ணினேன். கண்ணாடி உறை பிரிக்கப்படாத சில புத்தகங்கள் இருந்தன.அவை அனைத்துமே ஒரு பிரதி மட்டுமே என்னிடம் உண்டு. இன்னும் என் தனிப்பட்ட நூலகத்தில் நான் படிக்காத பல புத்தகங்கள் பழசாகிக்கொண்டு எனக்கு ஒரு குற்ற உணர்வை அளித்தபடி, என்னை முறைத்துக்கொண்டிருக்கின்றன. பொலிவாக இருக்கட்டுமே என்று சில புத்தகங்களுக்கு கண்ணாடி உறைகளை பிரிக்காமலேயே வைத்திருக்கிறேன்.. அதில் ஒரு புத்தகம் சில ஆண்டுகளாகவே இருக்கிறது.அவற்றிலிருந்து ஒன்றைத் தருவதுதான் தனிப்பட்ட, முழுமையான அன்பளிப்பாக இருக்கும்.

ஆனால், எதை எடுத்துப்பார்த்தாலும் மனம் வரவில்லை. அன்பளிப்பாக பணம் கொடுப்பதாயிருந்தால் புத்திக்கு எதுவுமே தோன்றியிருக்காது.சரி, அன்பளிப்பாக தரவிருக்கும் புத்தகத்தை,அப்படி பணம் கொடுத்ததாக நினைத்து மீண்டும் வாங்கிக்கொள்வது சரியான ஏற்பாடாக இருக்கும். ஏற்கனவே, வாசிக்காத புத்தகங்கள் சேர்ந்துகொண்டே போகும் சூழலில், உண்மையில் இப்போது புத்தகங்கள் வாங்குவதை குறைத்துவிட்டேன் என்பதுதான் கசப்பான உண்மை.

அண்மையில் எனக்கு அன்பளிப்பாக வந்த ஒரு அயல் நாட்டு மொழி சிறுகதைகளின் தமிழாக்க புத்தகம் ஒன்றை கொடுத்துவிட முடிவுசெய்தேன். உலகின் ஏதோ ஒரு மூலையில் அமைந்த ஒரு நாட்டின், இதுவரை கேள்விப்படாத ஒரு மொழி பேசும் இனக்குழுவின் போராட்டங்களை,மீட்சியை சித்தரிக்கும் கதைகள் என்பது அதன் பின்னட்டை வாசகங்களிலிருந்து தெரிந்த்து.எனக்கு இப்படியொரு அன்பளிப்பே வரவில்லை என்று நான் நினைத்து சமரசம் ஆகிவிடவேண்டும். மேலும், என் வாசிப்பில் அந்த புத்தகம் இடம்பெற என்னுடைய தேர்வில் இன்னும் சில ஆண்டுகள் கூட ஆகலாம். எடுத்துக்கொண்டு போய் கொடுத்துவிட்டேன். எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார். நானறிந்தவரையில் அதுவரை அங்கு வந்திருந்த ஒரே அன்பளிப்பு இந்த புத்தகம்தான்.  நிகழ்வுக்கு வந்திருந்த இன்னொரு கம்யூனிஸ்ட் தலைவர் வேறு, அந்தப் புத்தகத்தை எடுத்துப்பார்த்து, அட! நல்ல புத்தகமாக இருக்கிறதே! என்று சொல்லி வயலின் வாசித்தார்.

திரும்பி வரும் வழியில் அந்தப் புத்தகம் பற்றிய ஏக்கமாகவே இருந்தது. அதனுடைய தலைப்பு இப்போது தீவிரமாக என் புத்தியில் ரீங்கரிக்கிறது. தலைப்பின் பின்னணியில் அமைந்திருக்க வாய்ப்புள்ள அந்தக் கதையையும், களத்தையும் மனம் கற்பனை செய்து ஏங்கியது. திரும்பிவராத பணத்தைவிட, திரும்பிவராத புத்தகங்களை நினைத்துக்கொண்டால்தான் மனம் துயரமடைகிறது.வீட்டில் விலைமதிப்புள்ள எத்தனையோ  பொருட்களை சரியாக பராமரிக்காமல் வீணடிப்பவனான நான் , இந்த புத்தகங்களை மட்டும் அடிக்கடி எடுத்து துடைத்து, வந்து சேரும் பாலிதீன் கவர்களில் அவற்றை பொதிந்துவைத்து, வீடு முழுக்க நிறைத்துவைத்து, வீட்டிலுள்ளவர்களிடம் வாங்கிக் கட்டிகொள்கிறேன்.

100 ரூபாய் பெறுமானமுள்ள ஒரு புத்தகம் ஒருபோதும் 100 ரூபாய்க்கு இணையானதல்ல.


Friday, February 27, 2015

சிறுவூடல் திருவிழா


மாநகரப் பேருந்து நிலையம் என்பதால்
பழக்கூடைக்காரியும்
அவள்மீது பட்டுக்கொண்டு அமர்ந்திருந்தவனும்
’டிப்டாப்’பாகவே இருந்தார்கள்
பழக்கூடைக்காரி கையில்
கிண்ணத்திலிருந்து உருட்டி எடுத்த
சோற்றுக்கவளத்தை நீட்டிக்கொண்டிருந்தாள்
அவன் வாய் மென்றுகொண்டும்
வலது கை கவளம் ஏந்திக்கொண்டும்
இடது கை போதும் எனச் சைகைக்
காட்டிக்கொண்டும் இருந்தன
பார்வையாலாயே கடிந்துகொண்ட
பழக்கூடைக்காரி
கொஞ்சூண்டு உருண்டையை
கிண்ணத்தில் சிந்தினாள்
அவன் மீண்டும் ’போதும்’ என
மீண்டும் கொஞ்சம் கிண்ணம் திரும்பியது
அவன் கண்களால் கெஞ்சிக்கொண்டிருந்தான்
அவள் பார்வையாலேயே மிரட்டிக்கொண்டிருந்தாள்
நான் நகர்ந்துவிட்டேன்
எனக்கு நிறைந்துவிட்டது
- நன்றி : ஆனந்தவிகடன்(4.3.15)

Wednesday, October 8, 2014

மெய் சிலிர்ப்பது சொற்ப நேரமே


எனது குழந்தைப் பருவம்
ஓடுதளத்தில்
மிகவிரைவாக ஓடிக்கொண்டிருப்பது
எனது கல்விச்சாலையின்
ஒவ்வொரு வகுப்புகளையும்
அது விரைவாக கடந்து செல்வதிலிருந்தே தெரிகிறது
சன்னலில் மாறும் காட்சிகளும்
அதன் ஓசையும்
புல்லரிக்கவைக்கிறது
இடுப்புப் பட்டை என்னை
இறுக்கிப்பிடித்திருக்கிறது

இப்போது என் இளமைப்பருவம்
விண்ணேறத் துவங்குகிறது
சக்கரத்தில் வழுக்கிச் சென்ற அதற்கு
இப்போது இறக்கைகள் முளைத்துவிட்டன
அது வானில் ஒருபக்கமாய் சாய்ந்து
அரைவட்டம் அடித்துத் திரும்புவது
திகிலும், குதூகலமுமாய் இருக்கிறது
என் ஊரின் மலையுச்சிக்கும் மேலான உயரத்தை
முதன்முதலாய் தாண்டுகிறேன்
மண்ணில் காணும் யாவையும்
நிமிடங்களில் சிறுத்துக்கொண்டேபோக
மேகங்களுக்கிடையில்  தடதடத்து ஊடுருவுகிறது

இப்போது எனது மத்திய பருவம்
தட்டையாக  நத்தையைப்போல் ஊர்ந்துகொண்டிருக்கிறது
பறந்துகொண்டிருப்பதே தெரியாமல்
எல்லா கணங்களும் ஒன்றுபோலவே இருக்கின்றன
என் சன்னல் திரை
அலைவரிசை துண்டிக்கப்பட்ட தொலைக்காட்சித்திரையாகிவிட்டது
கைக்கடிகாரம் மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது
இடுப்புப் பட்டையிலிருந்து விடுபட்டுவிட்டேன்
சக்கரை வியாதிக்காரனான நான்
மூத்திரம் பெய்ய எழுகிறேன்

இப்போது எனது முதுமைப்பருவம்
தரையிறங்கிக் கொண்டிருக்கிறது
தலைகீழாக

Saturday, October 4, 2014

கறிக்கடை காகம்



கசாப்புக் கடைக்காரனின்
தலைநிழல் சிறு கூரையே
எனது வசிப்பிடம்
இரைதேடி காடுமலை திரியவேண்டியதில்லை
அடியாழத்து சொச்ச நீரில் தாகத்தவிப்பாற
மூளையைப் பிழிந்து
கற்களை பொறுக்கிப்போட்டு
உயிர்த்தண்ணீர் அருந்தத் தேவையில்லை
கொத்தித் திருடி
கல்லடி பட்டு விரட்டப்பட வேண்டியதில்லை
கழிவோ துணுக்கோ
எல்லா வேளைக்கும் அசைவ விருந்து
யாருக்குக் கிடைக்கும்
கத்தியை எடுத்த கசாப்புக்கடைக்காரன்
இன்று கத்தியாலேயே செத்து
பெருவிருந்தாய் கிடக்கிறான் வீதியில்
ஈக்களை விரட்டி அமர்ந்து
கொத்தித் தின்கிறேன்

Friday, July 4, 2014

பொம்மைவானத்தில் ஒரு குருவிகள்




விழித்திருக்கும் வேளையின் மொழி
அறிவதில்லை கனவின் வாக்கியங்களை
                                -முகுந்த் நாகராஜன்
  

 பேருந்தொன்றின் கண்ணாடி, கல்லடிபட்டு உடைந்து விழுந்துவிடாமல் ஆனால் விரிசல்களாக நின்றுகொண்டிருந்ததைப் பார்த்தேன். கல்பட்ட மையத்திலிருந்து விரிசல்கள் எல்லாத் திசைகளிலும்,வெவ்வேறு நீள அளவுகளில் இருந்தது. கல்லடி பட்ட கணத்திலேயே விரிசல்கள்விழுந்துவிடுவதைப்போல், ஒரு படைப்பை/கவிதையை படித்து முடித்தவுடனேயே அதை நம் மனம்நன்றாக உணர்ந்துவிடுவதுண்டு. ஆனால், அவற்றை வார்த்தைகளாக மொழிபெயர்க்கும்போது போதாமை சிறிதளவாவது இருக்கும்.  நொறுங்கிய கண்ணாடியை ஓவியமாக வரைவதுபோன்றது இது. இதன்,இன்னொரு பக்கமும் இருக்கிறது. அது ரசித்து மகிழும் லயிப்பு மன நிலையைக் கடந்து,ஆய்வுகொள்ளும் தீவிரத்தை அடையும் அவஸ்தை நிலை. அயர்ச்சியளிப்பதாகவும் இருக்கும். தேர்ந்த விமர்சகர்கள் சில வாக்கியங்களிலேயே ஒரு ஆளுமையையோ, அல்லது தொகுப்பையோ எடுத்துச் சொல்லிவிடுவார்கள். இவர்கள் புகைப்படக்கருவி கொண்ட வித்தைக்காரகள்போல.அப்படியே நொடிகளில் கண்ணாடியை படம் எடுத்துவிடக்கூடியவர்கள்.

*** 

பரவசம் தரும் வினோதக் கற்பனைகளாலும், சுவைபட  மொழிதலுமான படைப்பூக்கம் நிறைந்த கவிதைகளாலானது ப.தியாகுவின் ‘எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை’ எனும் முதல் தொகுப்பு.தேவதச்சன், நரன், முகுந்த் நாகராஜன் போன்றோரிடத்தில் காணப்படும் சில கவிதைகளோடு ஒப்பிட்டு நினைவு கூரத் தோன்றும் வகையில் தியாகுவின் பல கவிதைகள்,மற்றும் செயல்பாட்டுத்தன்மை அமைந்திருக்கிறது. இவர்களைப் போலச் செய்தல் என்ற அர்த்தத்தில் அல்லாமல், அதேயளவு வித்தியாசமான பார்வைகளாலும், படைப்பூக்கத்துடனும் அமைந்திருக்கிறது.

சூரியன் பார்க்கமுடியாததை கவிஞன் பார்க்கிறான் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், ஒரு கவிஞனைப்போல் இன்னொரு கவிஞன் பார்க்காமல் வேறுவேறு விதமாகப் பார்க்கிறார்கள். தியாகுவின் கவிதைகளில் தற்குறிப்பேற்றம் மிகச் சிறப்பானது. (அதாவது, இயல்பான ஒன்றின்மீது ஆசிரியர் ஏற்றும் கற்பனையான அர்த்தம்).  இங்கே வர்ணிப்பதும் தற்குறிப்பேற்றம்தான் என்றாலும், வர்ணிப்பதை நான் இதில் சேர்க்கவில்லை. உதாரணமாக, சூரிய காந்திப்பூக்கள் முகம் காட்டி நிற்கும் திசையில்,தோட்டத்தில்  நுழையும் ஒருவன், தன் வருகையைத்தான் அவை லயித்துப்பார்க்கின்றன, அதனால்தான் சூரியன் கடுப்பாக தன்னை சுட்டெரிக்கிறான் என்று அர்த்தம் ஏற்றுவது  தற்குறிப்பேற்றம். அதேசமயம்சூரியகாந்தித் தோட்டத்தை, ’சூரியனின் அந்தப்புரம்’ என்று ’பெயரிடுவது’ (மிக அழகான) வர்ணனை. இப்படி இரண்டுவிதங்களிலும் தியாகு ரசிக்கவைக்கிறார்.

தியாகுவின் தற்குறிப்பேற்ற அழகால் பிரகாசிக்கும் சில கவிதைகளாக ’தாக்கவென’, ’மழைக்கவிதை’,போன்ற நிறைய கவிதைகளை சுட்டிக்காட்டமுடிகிறது. எடுத்துக்காட்டாக,

1.
கை கொள்ளுமளவுக்கு கற்கள்
தாக்கவென ஒரு கல்லை
மறு கையிலேந்தி
கண்சுருக்கி
குறி பார்த்து நிற்கும்
சிறுவனிடம்

ஒரேயொரு பாறை
ஓணானின் வசம்

நான்கு கால்களிலும்
பற்றித்தூக்கி
அவனை நோக்கி
எப்படி எறியப்போகிறதென்றுதான்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்

2.
உடல் நீத்த சிறுமீனின்
எலும்புக்கூடு
இரு உள்ளங்கைகளிடை வைத்து
மூடுகிறேன்
அஃது உடலாகிறது

போன்றவற்றைச் சொல்லலாம். (இந்தக் கவிதையில் அடுத்து வரும் 3 வரிகள் தேவையேயில்லை என்பது என் எண்ணம்) 

சுவைபட மொழிதலுக்கு எடுத்துக்காட்டாக பின்வரும் கவிதையைச் சொல்லலாம்.

// கண்ணாடியினுள்ளிலிருந்து ஒன்று
வெளியிலிருந்து ஒன்றாக
ஒன்றையொன்று
கொத்திக்கொள்கின்றன
ஒரு குருவிகள் //

கடைசி வரியைப் படிக்கும்வரை சாதாரணமான, வழக்கமான ஒன்றாக இருந்த கவிதை , ஒரு குருவிகள் என்பதைப் படித்ததுமே பரவசம் வந்து ஒட்டிக்கொள்கிறது. ’ஒரு குருவிகள்’, ’நல்ல ரொம்பது’ போன்ற சொற்றொடர்கள் மொழியை ஏமாற்றி, இலக்கணத்தைமீறி ஆனால் மொழியின் வழியாகவே சுவை சேர்க்கின்றன. மேலும், குறைந்த பட்ச வரிகளில், பொருத்தமான சொற்களோடு வரிகளை அடுக்கும் கச்சிதமான கவிதைமொழியும், அது தரும் பரவசமும் தியாகுவின் குறிப்பிடத்தகுந்த பலம்.நேரடிக்கவிதைகள் சில உண்டு. கண்ணாடி அம்மா, இலக்கங்களால் ஆனவன், போன்று பட்டியல் நீள்கிறது.

// ஒரு கை நீரள்ளி
மேல் தெளிக்கிறாள்
துணுக்குற்றதுபோல
கொஞ்சமே அசைந்துகொடுக்கிறது
இன்னும்
உயிரிருக்கும் ஒரு மீன்
அதைத்தான்
தேர்ந்தெடுக்கவேண்டும் நாம் //

யதார்த்தமும், குரூரமும் நிறைந்த இந்தக் கவிதை தொகுப்பின் நேரடிக்கவிதைகளுக்கும், தியாகுவின் ஒட்டுமொத்த கவிதைகளுக்கும் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு. பொம்மை வானம் என்ற கற்பனை அலாதியானது. நினைக்க நினைக்க இனிக்கும் பிரம்மாண்டம் கொண்டது. ’எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதம் இல்லை’ என்கிற தொகுப்பின் தலைப்பு நன்றாகவே இருந்தாலும் அதைவிட அழுத்தமானகவிதைகளும், சொற்றொடர்களும் தொகுப்பில் கிடைக்கின்றன. தொகுப்புக்கான தலைப்பில் இந்த பொம்மை வானத்தை, தியாகு பயன்படுத்தத் தவறிவிட்டார் என்றுதான் வருத்தமாக இருக்கிறது. அதுவும் நல்லதாகப் போயிற்று. இந்தக் கட்டுரையின் தலைப்பாக அவர் சார்பாக நான் சூட்டிவிட்டேன்.

பேச்சு வழக்கில் நகர்த்திச் சென்று முடிப்பது நெருக்கமாகவும், சுவையளிப்பதாகவும் இருக்கிறது. ’இனி நீங்கள் அழைக்கலாம் ஹல்லோ நிர்மல்’, ’பாருங்களேன் இங்கேயே  போஸ்ட் ஆபிஸ் இருந்திருக்கிறது’, ’இதை அவனிடம் சொல்லவில்லை’, என்று முடிக்கும் கவிதைகள் போன்றவை உதாரணங்கள்.

இனிப்பை சாப்பிட்டுவிட்டு தேநீர் அருந்தும்போது, தேநீரின் இனிப்புச் சுவை உள்ளதைவிட மட்டுப்பட்டு தெரியும். அதுபோல, தியாகுவின் சில கவிதைகள் வேறுசில கவிதைகளின் சுவையை கொஞ்சம் மட்டுப்படுத்திவிடுகிறது. தொகுப்பாக படிக்காமல் தனியாக படிக்கும்போது அதன் இயல்பான சுவை கூடுதலாய் தெரியும்.

தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளின் குறையாக, அவை அடுத்த வாசிப்பில் ருசிக்காமல் போய்விடுவதைச் சொல்லலாம். அனிச்ச மலரை முகர்ந்தாலே வாடிவிடும் என்பார்கள். அதுபோல, பல கவிதைகள் மீள்வாசிப்பில் தன் பரவசத்தை, புத்துணர்ச்சியை இழந்துவிடுகின்றன. முதல் வாசிப்பில் முழு நிலவைப்போல் தண்ணொளி தரும் கவிதைகள், மறு நாளிலேயே மங்கிவிடுவதுபோல் அடுத்தடுத்த வாசிப்பில் தேய்பிறை நிலவாகிவிடுகிறது. அடங்கா இன்பம் தரும் கவிதைகளும் இருக்கத்தான்செய்கின்றன.

இன்னொரு குறை அவற்றின் முழுமையற்ற நிலை. வர்ணித்தலும், தற்குறிப்பேற்றமும் கவிதையின் ஒரு அங்கம்தானே தவிர அவை மட்டுமே முழு கவிதையாகிவிடாது. விறகுவெட்டி, தேவதை கதையை மறு ஆக்கம் செய்த கவிதை, (இதே கதையை நான் மறுஆக்கம் செய்து ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். அதைவிட, தியாகுவின் கவிதை நன்றாக இருக்கிறது) யானை, பார்க்கலாம் நாம், கூண்டுப்பறவை,பைத்தியத்தின் வானம்,குமிழ்கள் அல்ல கிரகங்கள், தேன்சிட்டு போன்ற மேலும் பல கவிதைகள்தற்குறிப்பேற்றத்தோடு சேர்ந்து முழுமையானதாகவும் விளங்கும் கவிதைகளாக சொல்லலாம்..

குழந்தைமைக் கவிதைகளாலான தொகுப்புக்கள் நிறைய வெளியாகிறது. தியாகுவின் தொகுப்பும் ஆங்காங்கே குழந்தைமைக் கவிதைகள் கொண்டிருந்தாலும், குழைந்தைமைக் கவிதைகளின்  தொகுப்பு என்று குறுக்கப்படுவதை  நான் ஏற்கமாட்டேன்.
நான் அண்மையில் வாசித்தவற்றில் என்னை மிகவும் கவர்ந்த தொகுப்பு என்று சொல்வேன்.

- ச.முத்துவேல்

Monday, June 16, 2014

கண்ணாமூச்சி விளையாட்டு



எனது ஊரின்
பழங்காலச் சித்திரம் ஒன்று
என்னிடத்திலிருக்கிறது
மெருகு குறையாமல்

குட்டி வாடகை சைக்கிளில்
ஊரைச் சுற்றி பழகியபோது
கிடைத்தது

இன்றைய ஊரின் சித்திரத்தையும்
என் சித்திரத்தையும்
ஒப்பிட்டு பார்க்கவே பிடிக்கவில்லை
சீ..ச்சீய்...
மலையின் தியானத்தோடு
சந்தையின் இரைச்சலையா 

வேண்டுமானால்
நாங்கள் இருவர் விளையாடிய
கண்ணாமூச்சி விளையாட்டில்
கடைசிவரைக்கும் என்னால்
கண்டுபிடிக்கவே முடியாமல் போய்விட்ட
வரதராஜனிடமும்
இதேபோல் ஒரு படம்
நெஞ்சுக்குள் இருக்கும்
அதனுடன் ஒப்பிட்டு அழகு பார்க்கலாம்
அவன் எங்கேதான் ஒளிந்திருக்கிறானோ?

 நன்றி : ஆனந்தவிகடன்  (18.6.14)

Thursday, June 5, 2014

தொழிற்சாலையில் திரியும் பட்டாம்பூச்சிகள்

நவீன வாழ்க்கையின் சிக்கலை அதே காத்திரத்துடன் வெளிப்படுத்த மரபான பழைய வடிவங்களை உடைக்க வேண்டிய திருந்தது. அதன் பிரச்சினைகளும் மன அழுத்தங்களும் அவ்வளவு வீரியமிக்கதாக எழுந்தன. நவீனக் கவிதை இவ்வாறுதான் எழுந்தது எனலாம். அந்தத் துணிச்சல் தந்த உத்வேகத்துடன்தான் மரங்கொத்திச் சிரிப்பு கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது.

இந்தத் தொகுப்பில் மொத்தம் 79 கவிதைகள் உள்ளன. இக்கவிதைகள் அனைத்தும் ச.முத்துவேலின் அனுபவத்தில் விளைந்தவை. கவிதைகளுக்குள் இருக்கும் ஒவ்வொரு மனிதருடனும் காட்சியுடனும் முத்துவேலுக்கு ஒரு ஸ்திரமான தொடர்பு இருக்கிறது. இந்தத் தொடர்பு, உரையாடலாகவோ அக உணர்வாகவோ கவிதைகளில் வெளிப்படுகிறது. இத்தொடர்புப் புள்ளியில்தான் முத்துவேல் தன் கவிதைகளை உருவாக்குகிறார்.

பால்ய கால நண்பன், தனது குழந்தை, அக்கம் பக்கத்து வீட்டு மனிதர்கள் எனப் பெரும்பாலும் மனிதர்களையே முத்துவேல் தன் கவிதைக்குள் சித்திரிக்கிறார். பெரும்பாலான இன்றைய நவீனக் கவிதைகள் மனிதர்களைத் தவிர்த்த உலகையே ஆதாரமாகக் கொண்டுள்ளன. இதைத் தவிர்த்து தனக்குள் பாதிப்பை உண்டாக்கிய மனிதர்களுடான அக உணர்வுகளைக் கவிதைகளின் வழியாக வெளிப்படுத்த விரும்புகிறார் என்பது கவனத்துக்குரியது.

அணுமின்சக்திக் கூடத்தில் பணியாற்றும் முத்துவேலின் மனம், தொழிற்கூடப் பூங்காவில் புகுந்த பட்டாம் பூச்சியைப் பிடிக்க ஆர்வம் கொள்கிறது; பயணத்தில் பார்த்த பெண்ணின் கழுத்தில் இருந்த தடத்தைத் தூக்குக் கயிற்றின் தடம் எனப் பிரித்தறிகிறது; தன் பால்ய நண்பனின் தற்போதைய நிலை பரிதாபத்துக்குரியது என்பதைச் சொல்லாமலேயே உணர்கிறது. இன்னும் சில கவிதைக் காட்சிகளில் கரிசனம், பரிவு, சமூக எதிர்வினை ஆகியவற்றையும் முத்துவேல் வெளிப்படுத்துகிறார். இப்படித் தொடர்ந்து கவிஞனின் தனிப்பட்ட குணங்கள் உணர்ச்சிபூர்வ கவிதைகளாக ஆகியுள்ளன. இப்பண்பு தொகுப்புக்குப் பலம் சேர்க்கவில்லை. அதுபோல் கவிதைகள் அனைத்தும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவையாக இருந்தும் அவற்றின் ஆதாரப் பொருள் தெளிவாக வெளிப்படவில்லை.

முத்துவேல் கவிதைகளுக்கான மிக எளிய மொழியைக் கண்டடைந் துள்ளார். இவரது கவிதைகளுக்குள் முதல் வாசிப்பிலேயே யாரும் எளிதாக நுழைந்து, வெளியேறிவிடவும் முடிகிறது. எளிமையான கவிமொழி பலம் சேர்க்கும்; ஆனால் உறுதியான கட்டமைப்பும், ஆழமும் சிறந்த வாசக அனுபவத்திற்கு அவசியமானவை.


நாங்கள் பார்த்த துறைமுகத்தில் 
தரையோடு பிணைக்கப்பட்டு கப்பல் 
தண்ணீரில் தளும்பிக்கொண்டிருக்க
சுருட்டி மேலிழுத்து வைக்கப்பட்ட
சேறு உலர்ந்த நங்கூரத்தில்
அமர்ந்துகொண்டிருக்கிறது ஒரு பறவை

நங்கூரம் மண்ணுக்கானது
கப்பல் நீருக்கானது
சிறகுகள் வானிற்கானது
மூவுலகும் கைகுலுக்கும்
ஒற்றைப் புள்ளி
அவன் மட்டும் கண்டது. 

ஆற்றலுடன் வெளிப்பட்டுள்ள இந்தக் கவிதை ச.முத்துவேலின் அடுத்த தொகுப்பு சிறப்புடன் வெளிப்படும் என்பதைக் கட்டியம் கூறுகிறது.
                                                                     -மண்குதிரை
நன்றி : மண்குதிரை, தி இந்து தமிழ் நாளிதழ் ( 5.6.14)