எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ்
ஞான்றும்
விளியாது
நிற்கும் பழி
1
சற்று முன்னர்தான்
ஒரு தகவல் படித்து முடித்தேன். ஆப்ரிக்க நாடுகளின் கலாச்சாரத்தை பற்றிய பதிவு அது.
அங்கு கற்பு போன்றதொரு விழுமியத்திற்கு ஒரு பெரிய முக்கியத்துவம் ஏதும் இல்லை
என்பதான சாரம் கொண்டது.மேலும் சில வெளி நாடுகளுக்கும் இது பொருந்தலாம். பசி,
தாகம், காமம் போன்ற அடிப்படை உணர்வுகளாலும், உடலமைப்பாலும் மனிதர்கள் உலகம்
முழுவதும் பொதுவானவர்களே. ஆனால், இந்தியாவில் கற்பு என்ற ஒன்று
போற்றப்படுகின்றது.இது மனிதர்கள் செய்துகொண்ட ஒரு சமூக ஏற்பாடு. மாறாக,
ஆப்ரிக்காவில் இருக்கக்கூடிய ஒரு கௌசலைக்கும், அவள் குழந்தைக்கும் இப்படியொரு
பரிதாப நிலை ஏற்பட்டிருக்காது என்று
பார்க்கும்போது இந்தியாவின் கலாச்சாரம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோமா,
சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்கிறோமா என்று தோன்றுகிறது.
வேள்வித் தீ
நாவலின் மையம் பிறன் இல் விழையாமைதான்.பிறன் இல் விழையாமை என்ற குறளதிகாரம்
சொல்வது ஆணுக்கு மட்டும் என்பதாகவே
தோற்றம் தந்தாலும், (தன் கட்டுப்பாட்டோடு இருப்பது பேராண்மை என்று வள்ளுவர்
வர்ணித்தாலும்,ன் விகுதி ,ள் விகுதி குறிப்புகள் இருந்தாலும்) இருபாலருக்கும்
பொதுவாகவே சொல்லியிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன்.
ஒரு சராசரி
தனிமனிதனின் வாழ்வில் உறவுகளும், நட்பும், அரசியல் சமூகமும் தவிர்க்க
இயலாதைவையாகவும்,எப்படியெப்படியெல்லாம் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்ற ஒரு
பார்வையையும் நாவல் அளிக்கிறது.இவைகளோடு சேர்ந்து தமிழகத்தில் சௌராஷ்டிரர்கள்
பற்றிய ஆவணப் பதிவாகவும் நாவல் விளங்குகிறது.
கௌசலையின்
தற்கொலையோடு நாவல் நின்றிருக்கலாம் என்று தோன்றியது. அதன்பிறகும் கண்ணனும்,
ஹேமாவும் சேர்ந்து வாழ்வதாக நீட்டித்திருப்பது தேவைதானா, யதார்த்தம் என்று
ஏற்றுக்கொள்வதா? என்று யோசிக்கவைக்கிறது.
கள்ள உறவு
தெரிந்ததும், கௌசலை ஒரு புதிய பெண்ணாக , ராட்சசியாக மாறுவது கண்ணனுக்கும்,
ஹேமாவுக்குமே நம்ப முடியாத ஆச்சரியத்தை அளிக்கிறது. அப்போது அவள் பேசும் குத்தல்
பேச்சுக்களும், கண்ணனின் நிலையும் சொல்லப்பட்ட பகுதி நாவலில் சிறப்பாக
அமைந்திருக்கிறது.
2.
எம்வி
வெங்கட்ராம் அவர்கள் எழுத்தில் நான் படிக்கும் முதல் படைப்பே வேள்வித்தீதான்.
நாவல்
வாசித்துக்கொண்டிருந்தபோதும், வாசித்துமுடித்த பின்னும்கூட நாவலின் தலைப்பு
குறிப்பு யோசித்துக் கொண்டிருந்தேன். ஏனெனில், நேரடியாக எங்கும் எம் வி வி விளக்கிவிடவில்லை.
சுந்தரராமசாமியிடம் ஒரு ஆய்வு மாணவி வேள்வித் தீ பற்றி எடுத்த நேர்காணல் ஒன்றும்
புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
மாண்வி: ‘வேள்வித்தீ’ என்ற தலைப்பை
பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சுரா: ’மொத்த வாழ்க்கை
பிரச்னைகள்,சிக்கல்கள்,மேடுபள்ளங்கள் இவற்றை பற்றிய ஒரு படிவமாக வேள்வித் தீ என்ற
படிமத்தை அவர் பயன்படுத்துகிறார்.வாழ்க்கையே ஒரு வேள்விதான்.அதை வேள்வியாகக்
கொள்ளாமல்,பதற்றம் அடையாமல் அந்த வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்ற
நம்பிக்கையைச் சார்ந்தவர் அவர்.ஆனால் நடைமுறையில் நாம்
உணர்வுபூர்வமாகவும்,ஆபாசங்களுக்கு உட்படும் கோபதாபங்களுக்கு உட்பட்டும் அந்த
வாழ்க்கையை எதிர்கொள்வதால் பல்வேறுபட்ட சிக்கல்களை உருவாக்கிக் கொள்கிறோம்.அந்த
அளவில் அது ஒரு தீ போன்றதுதான்.மனிதனை வந்து பொசுக்கக்கூடிய ஒரு அம்சமும் அதில்
இருக்கிறது என்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு நல்ல படிமத்தை,அவருடைய
பார்வை சார்ந்த ஒரு படிமத்தை, பயன்படுத்தியிருக்கிறார்’
இந்த விளக்கம்
எனக்கு ஒரு பிடி கிடைத்தாற்போன்றுதான் இருந்தது. ஆனால், கொழுகொம்பின் நிறைவில்லை.
என்னுடைய பார்வையில் கௌசலைதான் வேள்வித்தீ. கண்ணனும், ஹேமாவும் சாக்கடை. கௌசலை தீ.
அதிலும் புனிதமான தீ. சாக்கடைக்கு எதிரான படிமம். சாக்கடையோடு சேர்ந்தால்
அணைந்துவிடும்.
சாக்கடையோடு
சாக்கடை சேர்வதாகத்தான் ஹேமா, கண்ணன் உறவை அவர் வார்த்தைகளில் எழுதுகிறார்
எம்விவி.
’’ஒரு
தப்புமில்லே.உனக்கும் எனக்கும் இதுதான் சரி.அப்படிச் சொல்றதும் தப்பு. நமக்கு இதுதான்
வழி. சாக்கடையும் நாத்தமும்தான் நமக்குப் பிடிக்கும்.கௌசலைக்குச் சாக்கடை
சாக்கடைதான். நாத்தம்
நாத்தாம்தான்.அவளுக்கு அசிங்கத்தைச் சகிக்க முடியல்லே.போயிட்டா’’ என்று ஹேமாவிடம்
கண்ணன் சொல்கிறான்.
கௌசலையை தாண்டி
ஹேமாவைத் தொட்டதால் கண்ண்ன் சாக்கடை. அதுமட்டுமல்ல கௌசலை தொட்ட ஒரு ஆணான கண்ணன்தான்
ஹேமாவுக்கு. கற்பிழந்தவன். வேறுசிலர் தொட்ட ஹேமாதான் கண்ணனுக்கு.ஹேமாவுக்கு வேறுசில
தொடர்புகள் முன்பாகவே இருந்ததாக குறிப்புகள் இடம்பெறுகிறது. கண்ணனும் ஹேமாவும்
சேரும்போதுகூட ’இருவரும் கற்றவர்கள்’ என்கிறார்.
கௌசலை நெருப்பு.
நெருப்பாகவே சாக்கடையும், நாத்தமும் தொடவிடாமலேயே தன்னை அழித்துக்கொண்ட புனித
நெருப்பு.
இந்தியக்
கலாச்சாரத்தின் பெருமைமிகு மாதிரி அவள். சமூகத்திற்கு ஒரு பாடமாக, எச்சரிக்கையாக அற உலகம் வலியுறுத்துகிற ஒரு கதாபாத்திரம்.
வேள்வித் தீ ( நாவல்)
எம்.வி.வெங்கட்ராம்
காலச்சுவடு பதிப்பகம் (4ஆம் பதிப்பு)
ரூ.150
1 comment:
எதேச்சையாகத்தான் தங்கள் பக்கம்.. வந்தேன்..
வேள்வித் தீ நான் படிக்கவில்லை. தங்களின் பார்வை மூலம் அறிகிறேன்.. சில கேள்விகள்...
தவறுக்கு தற்கொலையா.. தீர்வு?
ஜெயகாந்தனின் அக்னி பிரவேசம் கொண்டாடிய நாம் வேள்வித் தீ மூலம் இன்னும் பின் தள்ளப்படுகிறோம்..என்பது என் பார்வை...
Post a Comment