விழித்திருக்கும் வேளையின் மொழி
அறிவதில்லை கனவின் வாக்கியங்களை
-முகுந்த் நாகராஜன்
பேருந்தொன்றின் கண்ணாடி, கல்லடிபட்டு உடைந்து விழுந்துவிடாமல் ஆனால் விரிசல்களாக நின்றுகொண்டிருந்ததைப் பார்த்தேன். கல்பட்ட மையத்திலிருந்து விரிசல்கள் எல்லாத் திசைகளிலும்,வெவ்வேறு நீள அளவுகளில் இருந்தது. கல்லடி பட்ட கணத்திலேயே விரிசல்கள்விழுந்துவிடுவதைப்போல், ஒரு படைப்பை/கவிதையை படித்து முடித்தவுடனேயே அதை நம் மனம்நன்றாக உணர்ந்துவிடுவதுண்டு. ஆனால், அவற்றை வார்த்தைகளாக மொழிபெயர்க்கும்போது போதாமை சிறிதளவாவது இருக்கும். நொறுங்கிய கண்ணாடியை ஓவியமாக வரைவதுபோன்றது இது. இதன்,இன்னொரு பக்கமும் இருக்கிறது. அது ரசித்து மகிழும் லயிப்பு மன நிலையைக் கடந்து,ஆய்வுகொள்ளும் தீவிரத்தை அடையும் அவஸ்தை நிலை. அயர்ச்சியளிப்பதாகவும் இருக்கும். தேர்ந்த விமர்சகர்கள் சில வாக்கியங்களிலேயே ஒரு ஆளுமையையோ, அல்லது தொகுப்பையோ எடுத்துச் சொல்லிவிடுவார்கள். இவர்கள் புகைப்படக்கருவி கொண்ட வித்தைக்காரகள்போல.அப்படியே நொடிகளில் கண்ணாடியை படம் எடுத்துவிடக்கூடியவர்கள்.
***
பரவசம் தரும் வினோதக் கற்பனைகளாலும், சுவைபட மொழிதலுமான படைப்பூக்கம் நிறைந்த கவிதைகளாலானது ப.தியாகுவின் ‘எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை’ எனும் முதல் தொகுப்பு.தேவதச்சன், நரன், முகுந்த் நாகராஜன் போன்றோரிடத்தில் காணப்படும் சில கவிதைகளோடு ஒப்பிட்டு நினைவு கூரத் தோன்றும் வகையில் தியாகுவின் பல கவிதைகள்,மற்றும் செயல்பாட்டுத்தன்மை அமைந்திருக்கிறது. இவர்களைப் போலச் செய்தல் என்ற அர்த்தத்தில் அல்லாமல், அதேயளவு வித்தியாசமான பார்வைகளாலும், படைப்பூக்கத்துடனும் அமைந்திருக்கிறது.
சூரியன் பார்க்கமுடியாததை கவிஞன் பார்க்கிறான் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், ஒரு கவிஞனைப்போல் இன்னொரு கவிஞன் பார்க்காமல் வேறுவேறு விதமாகப் பார்க்கிறார்கள். தியாகுவின் கவிதைகளில் தற்குறிப்பேற்றம் மிகச் சிறப்பானது. (அதாவது, இயல்பான ஒன்றின்மீது ஆசிரியர் ஏற்றும் கற்பனையான அர்த்தம்). இங்கே வர்ணிப்பதும் தற்குறிப்பேற்றம்தான் என்றாலும், வர்ணிப்பதை நான் இதில் சேர்க்கவில்லை. உதாரணமாக, சூரிய காந்திப்பூக்கள் முகம் காட்டி நிற்கும் திசையில்,தோட்டத்தில் நுழையும் ஒருவன், தன் வருகையைத்தான் அவை லயித்துப்பார்க்கின்றன, அதனால்தான் சூரியன் கடுப்பாக தன்னை சுட்டெரிக்கிறான் என்று அர்த்தம் ஏற்றுவது தற்குறிப்பேற்றம். அதேசமயம்சூரியகாந்தித் தோட்டத்தை, ’சூரியனின் அந்தப்புரம்’ என்று ’பெயரிடுவது’ (மிக அழகான) வர்ணனை. இப்படி இரண்டுவிதங்களிலும் தியாகு ரசிக்கவைக்கிறார்.
தியாகுவின் தற்குறிப்பேற்ற அழகால் பிரகாசிக்கும் சில கவிதைகளாக ’தாக்கவென’, ’மழைக்கவிதை’,போன்ற நிறைய கவிதைகளை சுட்டிக்காட்டமுடிகிறது. எடுத்துக்காட்டாக,
1.
கை கொள்ளுமளவுக்கு கற்கள்
தாக்கவென ஒரு கல்லை
மறு கையிலேந்தி
கண்சுருக்கி
குறி பார்த்து நிற்கும்
சிறுவனிடம்
ஒரேயொரு பாறை
ஓணானின் வசம்
நான்கு கால்களிலும்
பற்றித்தூக்கி
அவனை நோக்கி
எப்படி எறியப்போகிறதென்றுதான்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
2.
உடல் நீத்த சிறுமீனின்
எலும்புக்கூடு
இரு உள்ளங்கைகளிடை வைத்து
மூடுகிறேன்
அஃது உடலாகிறது
போன்றவற்றைச் சொல்லலாம். (இந்தக் கவிதையில் அடுத்து வரும் 3 வரிகள் தேவையேயில்லை என்பது என் எண்ணம்)
சுவைபட மொழிதலுக்கு எடுத்துக்காட்டாக பின்வரும் கவிதையைச் சொல்லலாம்.
// கண்ணாடியினுள்ளிலிருந்து ஒன்று
வெளியிலிருந்து ஒன்றாக
ஒன்றையொன்று
கொத்திக்கொள்கின்றன
ஒரு குருவிகள் //
கடைசி வரியைப் படிக்கும்வரை சாதாரணமான, வழக்கமான ஒன்றாக இருந்த கவிதை , ஒரு குருவிகள் என்பதைப் படித்ததுமே பரவசம் வந்து ஒட்டிக்கொள்கிறது. ’ஒரு குருவிகள்’, ’நல்ல ரொம்பது’ போன்ற சொற்றொடர்கள் மொழியை ஏமாற்றி, இலக்கணத்தைமீறி ஆனால் மொழியின் வழியாகவே சுவை சேர்க்கின்றன. மேலும், குறைந்த பட்ச வரிகளில், பொருத்தமான சொற்களோடு வரிகளை அடுக்கும் கச்சிதமான கவிதைமொழியும், அது தரும் பரவசமும் தியாகுவின் குறிப்பிடத்தகுந்த பலம்.நேரடிக்கவிதைகள் சில உண்டு. கண்ணாடி அம்மா, இலக்கங்களால் ஆனவன், போன்று பட்டியல் நீள்கிறது.
// ஒரு கை நீரள்ளி
மேல் தெளிக்கிறாள்
துணுக்குற்றதுபோல
கொஞ்சமே அசைந்துகொடுக்கிறது
இன்னும்
உயிரிருக்கும் ஒரு மீன்
அதைத்தான்
தேர்ந்தெடுக்கவேண்டும் நாம் //
யதார்த்தமும், குரூரமும் நிறைந்த இந்தக் கவிதை தொகுப்பின் நேரடிக்கவிதைகளுக்கும், தியாகுவின் ஒட்டுமொத்த கவிதைகளுக்கும் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு. பொம்மை வானம் என்ற கற்பனை அலாதியானது. நினைக்க நினைக்க இனிக்கும் பிரம்மாண்டம் கொண்டது. ’எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதம் இல்லை’ என்கிற தொகுப்பின் தலைப்பு நன்றாகவே இருந்தாலும் அதைவிட அழுத்தமானகவிதைகளும், சொற்றொடர்களும் தொகுப்பில் கிடைக்கின்றன. தொகுப்புக்கான தலைப்பில் இந்த பொம்மை வானத்தை, தியாகு பயன்படுத்தத் தவறிவிட்டார் என்றுதான் வருத்தமாக இருக்கிறது. அதுவும் நல்லதாகப் போயிற்று. இந்தக் கட்டுரையின் தலைப்பாக அவர் சார்பாக நான் சூட்டிவிட்டேன்.
பேச்சு வழக்கில் நகர்த்திச் சென்று முடிப்பது நெருக்கமாகவும், சுவையளிப்பதாகவும் இருக்கிறது. ’இனி நீங்கள் அழைக்கலாம் ஹல்லோ நிர்மல்’, ’பாருங்களேன் இங்கேயே போஸ்ட் ஆபிஸ் இருந்திருக்கிறது’, ’இதை அவனிடம் சொல்லவில்லை’, என்று முடிக்கும் கவிதைகள் போன்றவை உதாரணங்கள்.
இனிப்பை சாப்பிட்டுவிட்டு தேநீர் அருந்தும்போது, தேநீரின் இனிப்புச் சுவை உள்ளதைவிட மட்டுப்பட்டு தெரியும். அதுபோல, தியாகுவின் சில கவிதைகள் வேறுசில கவிதைகளின் சுவையை கொஞ்சம் மட்டுப்படுத்திவிடுகிறது. தொகுப்பாக படிக்காமல் தனியாக படிக்கும்போது அதன் இயல்பான சுவை கூடுதலாய் தெரியும்.
தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளின் குறையாக, அவை அடுத்த வாசிப்பில் ருசிக்காமல் போய்விடுவதைச் சொல்லலாம். அனிச்ச மலரை முகர்ந்தாலே வாடிவிடும் என்பார்கள். அதுபோல, பல கவிதைகள் மீள்வாசிப்பில் தன் பரவசத்தை, புத்துணர்ச்சியை இழந்துவிடுகின்றன. முதல் வாசிப்பில் முழு நிலவைப்போல் தண்ணொளி தரும் கவிதைகள், மறு நாளிலேயே மங்கிவிடுவதுபோல் அடுத்தடுத்த வாசிப்பில் தேய்பிறை நிலவாகிவிடுகிறது. அடங்கா இன்பம் தரும் கவிதைகளும் இருக்கத்தான்செய்கின்றன.
இன்னொரு குறை அவற்றின் முழுமையற்ற நிலை. வர்ணித்தலும், தற்குறிப்பேற்றமும் கவிதையின் ஒரு அங்கம்தானே தவிர அவை மட்டுமே முழு கவிதையாகிவிடாது. விறகுவெட்டி, தேவதை கதையை மறு ஆக்கம் செய்த கவிதை, (இதே கதையை நான் மறுஆக்கம் செய்து ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். அதைவிட, தியாகுவின் கவிதை நன்றாக இருக்கிறது) யானை, பார்க்கலாம் நாம், கூண்டுப்பறவை,பைத்தியத்தின் வானம்,குமிழ்கள் அல்ல கிரகங்கள், தேன்சிட்டு போன்ற மேலும் பல கவிதைகள்தற்குறிப்பேற்றத்தோடு சேர்ந்து முழுமையானதாகவும் விளங்கும் கவிதைகளாக சொல்லலாம்..
குழந்தைமைக் கவிதைகளாலான தொகுப்புக்கள் நிறைய வெளியாகிறது. தியாகுவின் தொகுப்பும் ஆங்காங்கே குழந்தைமைக் கவிதைகள் கொண்டிருந்தாலும், குழைந்தைமைக் கவிதைகளின் தொகுப்பு என்று குறுக்கப்படுவதை நான் ஏற்கமாட்டேன்.
நான் அண்மையில் வாசித்தவற்றில் என்னை மிகவும் கவர்ந்த தொகுப்பு என்று சொல்வேன்.
- ச.முத்துவேல்
No comments:
Post a Comment