Thursday, January 31, 2013

உயிர் எழுத்து 4 கவிதைகள்

உறுபசி

சலிப்படைந்த உணவை
வெறுத்து
தூங்கிப்போனான்
வைராக்கியத்தோடு
உறங்காமல் பசி விழித்திருக்க
நள்ளிரவில்
தூக்கம் களைந்து
புரண்டு புரண்டு படுத்தும்
பசி துரத்த
தாளாமல் எழுந்து
பழைய சோற்றை
ஆவேசத்துடன் புசிக்கும்போது
பழைய சோற்றுக்கு
கண்களெல்லாம் ஆனந்தக் கண்ணீர்
உதட்டோரங்களில்
          கூர்வாளாய் மின்னும் கேலிப்புன்னகை

எஸ்.பி.பி மேல் சத்தியம்
வடக்கிலிருந்து
திரும்பிக்கொண்டிருந்தேன்
எஸ்.பி.பி இந்தியில்
பாடிக்கொண்டிருந்தார்
கர்னாடகாவில் கன்னடத்தில்
ஆந்திராவில் தெலுங்கில்
கேரளாவில் மலையாளத்தில்
உலகம் முழுக்க காற்றலைகளில்
விரவியிருக்கும் எஸ்.பி.பியின் குரல்
எஸ்.பி.பியையும் விடாது துரத்திக்கொண்டிருக்கும்.
சுற்றுலாத்தலத்தின் பாறையொன்றில்
பல பெயர்களின் கும்பலில்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற பெயர்
ஆங்கிலத்தில் புதிதாய்க் கீறியிருந்தது
தன் பெயரைப் பொறித்ததாகவும் இருக்கலாம்
எனினும் பொறித்தது
எனக்கும் பிடித்த பாடகர் எஸ்.பி.பி அல்ல
இது எஸ்.பி.பி யின் மேல் சத்தியம்
பாறையில் ஏன் பெயர்களை எழுதுகிறார்கள்?
நான் ஏன் கவிதைகள் எழுதுகிறேன்?


நிர்வாண நீர்
அம்மணம்
அசிங்கமாகிடாத
குழந்தை
நீரை
வாளியிலிருந்து
அள்ளியள்ளி
உச்சந்தலைக்கு மேல் வீசி வீசி
கைகொட்டிச் சிரிக்கிறது
கரைகள், கலன்கள் அணிவித்திருந்த
ஆடைகளைத் துறந்த நீர்
அந்தரத்தில் அம்மணமாய்
களியாட்டம் போட்டுவிட்டு
குழந்தையின் அம்மணத்தின் மேல்
நிர்வாணம் மறைக்க விரும்பா
நிர்வாண ஆடையாய் சரிகிறது


விலக்கப்பட்ட கனி

எங்களுடைய தோட்டத்திலேயே இருந்தாலும்
ஒரு கனி எனக்கு விலக்கப்பட்டிருக்கிறது
இன்னொரு எவனோ புசிப்பதற்காக காத்திருப்பதும்
இடையில் ஒருவன் அதை களவாட முயன்றதும்தான்
என் நெஞ்செரிச்சலான ஏப்பங்களாக வந்துகொண்டேயிருக்கிறது
இப்போது அந்தக் கனி இன்னமும் நன்கு பழுத்து நிற்கிறது
காப்பிக் குடிக்கும்போது கண்களை மூடினால்
கண்களுக்குள்  நிறங்களோடு நின்றாடுகிறது
கடலின் ஆழத்தில் நீந்திக்கொண்டிருக்கும்போதும்
அதன் சொக்கவைக்கும் மணம் நாசியில் ஏறி கிறங்கடித்ததால்
மூச்சுத்திணறி விரைந்து மேலே வந்தேன்
வனம் வனமாய் அலைந்து
திராட்சைப் பழங்கள் முதல்
பலாப்பழங்கள் வரை பறித்து
எனது பசியின் அறையில் நிரப்புகிறேன்
ருசி கொஞ்சம் ஆறியது போலிருக்கிறது
பசி தணிந்தது போல்தானிருக்கிறது
ல தேசத்துப் பழங்களாலும் நிரப்பப்பட்ட
எனது பசியின் அறை  
நடுவில் ஒரு சிறிய வெற்றிடத்தை
விட்டுவைத்திருக்கிறது
எனக்கு விலக்கப்பட்ட கனியின்
அளவிலேயே, உருவிலேயேயிருக்கிறது அவ்
விடம்

 நன்றி- உயிர் எழுத்து ஜனவரி’13

Wednesday, January 30, 2013

ஆனந்த விகடன் கவிதை

மாதவனும் இன்ன பிற குட்டிகளும்
முதன்முதலாகச் சீருடையும்
அலங்காரமாய் கழுத்துப் பட் 'டை' யும் அணிந்து
மழலையர் பள்ளி செல்லும் மாதவனை
அம்மா போட்டோ எடுத்துக்கொண்டாள்.

மாதவனுக்கும் இன்ன பிற குட்டிகளுக்கும்
வடிவங்கள் பற்றிய பாடத்தை
நடத்திய நாள் முதலே
உலகப் பொருட்கள் வடிவம் பெற்றன.

பிஸ்கட்டின் சுவையோடு ஒளிந்திருந்த செவ்வகத்தையும்
டிபன் பாக்ஸின் வட்ட வடிவத்தையும் கண்டுபிடித்து
தங்களின் ஆசிரியைக்கே சொல்லத் துவங்கிவிட்டனர்.

சுவர்களில் கைகளெட்டும் உயரங்களெல்லாம்
வடிவங்களாக வரைந்தும் அலுக்காததால்
அண்ணன்களின் நோட்டுகளில் கிறுக்கியும்
வாய் ஓயாமல் சொல்லியும் திரிகிறார்கள்.

நேற்று மாதவன் ஓவலான தன் தட்டில் விழுந்த
சர்க்கிளைப் பாதியாக்கி இரண்டு செமி சர்க்கிள்களாக்கினான்
அவற்றை மேலும் இரண்டிரண்டாக உடைத்து
நான்கு ட்ரையாங்கிள்களைச் சாப்பிட்டான்

  நன்றி ஆனந்தவிகடன் 30.1.13

Monday, January 21, 2013

ஆனந்தவிகடன் கவிதை

கற்பனையின் முகங்கள்


வீட்டுக்குள் புகுந்த பாம்பு
ஒளிந்துகொண்டது எங்கோ
கண்டுபிடித்துவிட்டால்
ஒளிந்திருக்கும் பாம்புக்கு
ஒன்றே இருப்பிடம்
காணாத பாம்புக்கு
வீடெங்கும் இடங்கள்
நூறு நூறு உடல்கள்
நூறு நூறு தலைகள்
நூறு நூறு அசைவுகள்.
       
 நன்றி ஆனந்தவிகடன்
                         23.1.13