Thursday, April 12, 2012

உரைநடைக் கவிதை


சீருடை அணிந்து, கையில் சாப்பாட்டுக் கூடையுடன் அலுவலகப் பேருந்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்தேன்.சந்தடி குறைந்த சாலையில் ஒரு அணில் அடிபட்டுக் கிடந்து தவிப்பதை கண்டேன்.மரத்தின் மேலிருந்து விழுந்து அடிபட்டிருக்கலாம்.சிறிய இரத்தத் திட்டின்மேல் மிதப்பதுபோல் கிடந்த அணிலின் முகத்தில் அதன் கண்கள்..அப்பப்பா! அதில்தான் எத்தனை உணர்ச்சிகள்.அச்சம், தவிப்பு, உயிராசை,மன்றாடல், கவலை...   நகரக்கூடிய முடியாமல் கிடந்த அதன் தவிப்பை, எளிதில் வாகனங்களின் சக்கரங்கள் எளிமையாய் முடிவுக்குக் கொண்டுவரலாம்... குறைந்தது நான் அதை ஓர் ஓரமாக நகர்த்தலாம். நான் எளிதில் அணிலைக் கடந்துவிட்டேன். ஏன் என்று பேருந்தில் அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தேன். சில காரணங்களை கண்டேன்.

அ. அது அணிலின் விதி
ஆ.அணில் ஒரு அற்ப உயிர்.
இ.எனக்கு வேலைக்கு நேரமாகிவிட்டது. (ஒரு மணி நேரம் தாமதமாகச் செல்லக்கூடிய வாய்ப்பு எனக்கு அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருந்தும் நான் அணிலுக்காக அதைச் செலவிடத் தயாராயில்லை. அது தேவையற்றது என்று எண்ணினேன்)

ஈ. நான் புத்தனோ காந்தியோ அல்ல.(மாற்று ஆடை இல்லாதவர்களைக் கண்ட காந்தி அன்று முதல் அரை நிர்வாண உடை அணிந்தார். புத்தன் வழியில் கண்ட சில காட்சிகளால் தாக்கப்பட்டு இல்லறம் துறந்தான்)
உ. யாராவது பார்த்தால் என்னைக் கேலியாகப் பார்ப்பார்கள்..
ஊ. ...
எ. ...

இப்போது என்னைப் பார்க்க எனக்கு பரிதாபமாக இருக்கிறது