Wednesday, August 27, 2008

என்னை உலுக்கிய கவிதை



அண்மையில்தான் படிக்க நேர்ந்தது,பின்வரும் கவிதையை.முதல் நான்கு வரிகளைப் படித்ததுமே ,அதிலுள்ள உண்மையும் ,வேதனையும் பகீரென்று இருந்தது.மிக நேரடியாகவும்,எளிய நடையிலும் எழுதப்பட்ட கவிதை இது.படித்தவுடனே வலைப்பூவில் ஏற்றிவிடவேண்டும் என்று முடிவுசெய்து விட்டேன்.இனிவரும் நாட்களில் அவ்வப்போது இதுமாதிரி எனக்குப் பிடித்த,ரசித்த கவிதைகளை இங்கே மறுபார்வைக்கு வைக்கலாமென இருக்கிறேன்.என்ன சொல்கிறீர்கள்? இதுவரை படிக்கக் கிடைக்காதவர்களுக்கு நல்ல வாய்ப்பாகவும் இருக்கும்,நல்ல கவிதைகளை மேலும் பரவலாக்கிய மகிழ்ச்சியும் எனக்குக் கிடைக்கும்.கவிதாயினி மாலதி மைத்ரிக்கு அடியேனின் மனமார்ந்த பாராட்டுகள்.



தீப்பற்றி எரியும் நிர்வாணம்






நஞ்சருந்தியோ சுருக்கிட்டோ

தற்கொலைக்கு முனையும் பெண்கள்

முன் எச்சரிக்கையுடன் உள்ளாடைகளை

மறக்காமல் அணிந்துக்கொள்கின்றனர்

சொந்த உறவுகளால் தற்கொலைபோல்

கொல்லப்படும் பெண்கள்

இதில் விதிவிலக்கு



மரணத்திற்குப் பின்னான

தங்கள் நிர்வாணத்தை நினைத்து

அஞ்சும் அவர்களை

ஆடை ஒருபோதும் காப்பதில்லை

ஏனைய உறவுகளைப் போலவே

அவையும் துரோகம் இழைக்கின்றன



பிரேதப் பரிதோசனை வளாகத்தில்
சூன்யத்தை வெறித்தபடி கிடக்கிறது
மாண்ட பெண்ணின் சடலம்
காட்சிப்பொருளாய் கடை விரியும்
அழகியப் பெண்ணின் நிர்வாணம்
வக்கிரத்தின் விஷக் கொடி
சுவரெங்கும் படர்கிறது
கருத்தப் பச்சையுடன்
பிணவறைக் காப்பாளருக்கு
பொன் முட்டைகளைப் பரிசளிக்கும்

சிறப்பு விருந்தாளியான
நடிகையின் சில்லிட்ட சதை


தன் உடலுக்குத் தானே எரியூட்டி
மாளும் பெண் நெஞ்சுரத்துடன்
நிர்வாணத்துக்கும் வக்கிரத்துக்கும்
சேர்த்தே எரியூட்டுகிறாள்


- மாலதி மைத்ரி
அணங்கு செப்டம்பர் - டிசம்பர் 2007

8 comments:

Anonymous said...

மாலதி மைத்ரேயின் அபூர்வமான நல்ல கவிதைகளில் ஒன்று இது. ஏற்கனவே வலைத்தளங்களில் வாசிக்கக் கிடைக்கிறது என நினைக்கிறேன்.

puduvaisiva said...

Hi Muthuvel

that poem is very nice and it gives pain...

Give more good poem

yours new friend

Puduvai siva.

anujanya said...

ஆம், முன்னரே படித்திருந்தாலும், மீண்டும் படிக்கையில் மனவழுத்தம் அதிகமாகிறது. மிக்க வலி தரும் கவிதை.

அனுஜன்யா

ச.முத்துவேல் said...

உண்மைதான் அண்ணா.கீற்று.காம் ல்
பி(ப)டித்தேன்.ஏற்கனவே சொன்னதுபோல் மறுவாசிப்புக்கும்,என் போன்ற புது வாசகர்களுக்கும்.வருகைக்கு நன்றி.தொடர்ந்து எனக்கு எழுத வேண்டுகிறேன்.

ச.முத்துவேல் said...

நல்வரவு,புதுவை சிவா. நன்றிகளும்.

ச.முத்துவேல் said...

அனுஜன்யாவுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.கைமாறு கருதாத அன்புக்கும்,ஊக்கத்திற்கும்.

Unknown said...

Ethai Ninaithall en nenjam vedikkiradhu.

ச.முத்துவேல் said...

நல்வரவு பூர்ணிமா. வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி.