Monday, October 6, 2008

என் வீடு எங்கே?



அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை.மணிமாறனுக்கும் விடுமுறை நாள்.
அதிசயமாய் மணிமாறன் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலிருந்தபடியால் அவன் மனைவிக்கும் மகிழ்ச்சியாயிருந்தது.ஓய்வாகப் படுத்துக் கொண்டு தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்தான். ‘குப்’பென்று வலது பக்க மார்பு ,தோள்பட்டை வலி எடுத்தது.தன் மனைவியை அழைத்து தைலம் தேய்த்துவிடச் சொன்னான்.அவளும் பதறிப்போனவளாக தைலம் தேய்த்துவிட்டாள்.இது என்ன புதுத் தொல்லையாக இருக்கிறதே என்று யோசித்தபோது, அன்று காலையில் கிரைண்டரை நகர்த்தி வைத்தது நினைவுக்கு வந்தது.அதன் விளைவுதான் என்று நம்பினான். கொஞ்ச நேரம் முன்பே லேசான வலி ஏற்பட்டிருந்தது என்றாலும் அலட்சியம் செய்துவிட்டான்.ஆனால் இப்போது வலி மிகவும் கடுமையாக இருக்கவே மருத்துவமனை செல்வதென தீர்மானித்தான்.’ஏதாவது ஒத்தடம் கொடுக்க ஏற்பாடு செய்’ என்று மனைவியிடம் சொன்னான்.அவளும் தெருவிலிருந்து கொஞ்சம் மணலை எடுத்து வந்து வாணலியில் இட்டு சூடுபடுத்தி துண்டில் சுற்றி எடுத்துவந்து ஒத்தடம் கொடுத்தாள்.சற்று ஆசுவாசமாகயிருந்தது.பிறகு,தன் இரு சக்கரவண்டியை எடுத்துக்கொண்டு தனியாகவே மருத்துவமனைக்குப் போனான்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால்,துறைவாரியான சிறப்பு மருத்துவர்கள் இருக்கமாட்டார்கள்.ஒரேயொரு பொது மருத்துவர் மட்டுந்தான்.மருத்துவமனை வளாகத்தில் தன் வண்டியை நிறுத்தியபோது ,வழக்கத்திற்கும் மாறாக,மருத்துவமனையே வெறிச்சோடிப் போயிருந்தது,ஞாயிற்றுக் கிழமை என்பதால்.யாரோ பின்னாலிருந்து அழைப்பதுபோல் உணர்ந்தான்.திரும்பிப் பார்த்தபோது,கூப்பிடு தொலைவில் ஒரு இளைஞன்,ஒரு இளம்பெண் மற்றும் ஒரு சிறுவன் நின்றுகொண்டிருப்பதை கவனித்தான்.’இவன்தான் அழைத்திருப்பானா?’ என்ற சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தபோது ,அம்மூவரும் இவனையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தபடியால்,சற்று நம்பிக்கையோடு அவர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.இப்போது சற்று தொலைவிலேயே அந்த இளம்பெண்ணை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.’இவள் முருகனின் மனைவியாயிற்றே! அப்படியென்றால்,அவள் பக்கத்தில்..அவன்..அவன்...முருகன்தானே? ஆமாம்.முருகனேதான்’ என்று மனதிற்குள் பேசிக்கொண்டான்.முருகன்,மருத்துவமனையில் கொடுக்கப்படும் உள்நோயாளிகளுக்கான ஆடைகள் அணிந்திருந்தான்.சக்கரம் வைத்த கம்பிக்கூடு போன்ற ஒரு நடைபழகும் சாதனத்தை கையில் பிடித்துக் கொண்டு,அதன் உதவியோடு நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.அந்த இடம் மருத்துவமனை நோயாளிகள் இளைப்பாறும் தோட்டம்.அவர்களை நெருங்குவதற்கு முன்னால் மணிமாறனுக்கு,முருகன் பற்றிய கடந்த கால நினைவுகள் மின்னல் வேகத்தில் சரசரவென வந்தது.

மணிமாறனும்,முருகனும் ஒரே நிறுவனத்தில் வெவ்வேறு பிரிவுகளில் பணிபுரிபவர்கள்.சமவயதுக்கார இளைஞர்கள்.நெருங்கிய நணபர்கள் இல்லையென்றபோதிலும்,நல்ல அறிமுகம் உள்ளவர்கள்.ஒருமுறை நிறுவனத்தில் நடத்தப்பட்ட நடனப்போட்டிக்கு,மணிமாறன்,முருகன் மற்றும் சில நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து பயிற்சி எடுத்து,மேடையில் ஆடி,முதல் பரிசையும் பெற்றார்கள்.இதுபோன்ற சமயங்களில் பழகுவதுதான்.மற்றபடி,அவ்வப்போது வழியில் எங்கேனும் சந்திக்க நேர்ந்தால்,கொஞ்சம் பேசிக்கொள்வதும்,கையசைப்புமாக சென்றுவிடுவார்கள்.அப்போதெல்ல்லாம் பரபரப்பாகவே தென்படுவான் முருகன்.வண்டியில் சீறிக் கொண்டு வேகமாய்த்தான் போவான்.நடனப்போட்டி முடிந்த அன்று வெற்றியை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் எல்லோரும் குடிக்கச் சென்றார்கள்.இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால் மணிமாறன் இதுபோன்ற சமயங்களில் மட்டுமே குடிப்பவன்.அதுவும் அளவோடுதான்.ஆனால்,முருகனோ நாள்தோறும் குடிப்பவன்.அதுவும் அளவில்லாமல்.

கிட்டத்தட்ட ஒரு வருடத்திறகும் மேலாகவே இருக்கும் முருகனுக்கு விபத்து நடந்து.ஒருநாள் இரவில், ஆளரவமற்ற ஒரு சாலையில் வண்டியில் போய்க்கொண்டிருந்தபோது பேருந்து இடித்துவிட்டதாம்.பிறகு நீண்ட நேரம் கழித்தே நள்ளிரவில் சில கிராமத்து மனிதர்கள் பார்த்திருக்கிறார்கள்.பலத்த அடியென்றும்,பிழைப்பதே கடினம் என்றும் பேசிக்கொண்டார்கள்.’குடிச்சி அழிஞ்சிப் போகுதுங்க.இதுங்களுக்கெல்லாம் வேணும்’என்று விஷயம் கேள்விப்பட்டபோது உடன்பணிபுரியும் ஒருவர் ஈவிரக்கம் இல்லாமல் பேசிக்கொண்டிருப்பதை இப்போது நினைத்தாலும் மணிமாறனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வரும்.சென்னையிலுள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சேர்த்திருந்ததாகவும்,சுயநினைவே இல்லாமலும்,கண்ணைத் திறக்காமலும் நெடு நாட்கள் இருந்ததாகவும் கேள்விப்பட்டிருந்தான்.ஆறேழு மாதங்களுக்குப்பிறகே கொஞ்சம் தேறி உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருந்ததையும் கேள்விப்பட்டிருந்தான்.உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்துவிட்டப் பிறகாவது போய்ப்பார்த்துவிட்டு வரலாம் என நினைத்துக்கொண்டிருந்தவன்,நண்பர்கள் சொன்னதைக் கேட்டு அந்த எண்ணத்தையே கொஞ்ச நாளைக்குத் தள்ளி வைத்து விட்டான்.’ஆளே அடையாளம் தெரியலப்பா.நாமப்போனா அவனால நம்மை யாரையும் அடையாளங்கண்டுபுடிக்க முடியல.நிக்கவே முடியல அவனால.ஒடஞ்சி ஒடஞ்சி விழறான்.பேச்சே வரல.ழே..ழே.. ழ்ழ..ழ்ழங்கிறான்.ரொம்பக் கொடுமை.ஏந்தான் போனோமோன்னு ஆயிடுச்சி.அவன் பொண்டாட்டியை கண்டிப்பாப் பாராட்டணும்ப்பா.இந்தச் சின்ன வயசிலேயே எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு பொறுப்பாப் பாத்துக்குது.நம்ம வீட்டுப் பொம்பளைங்கக் கூட இப்படியெல்லாம் பாத்துக்குவாங்களான்றது சந்தேகந்தான்.அப்பப்பா.ரொம்பக் கொடுமை’

இவையெல்லாம் நடந்துமுடிந்து சில மாதங்களுக்குப் பிறகு இன்றுதான்,கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து இதோ இப்போதுதான் மீண்டும் பார்க்கிறான்.இபோது அவர்கள் மூவரையும் நெருங்கிவிட்டிருந்தான்.
‘அண்ணா.என்னை வீட்டுக்குக் கூட்டினுப் போயிடுண்ணா’ என்றான் எடுத்த எடுப்பிலேயே.முருகனைப் பார்க்கவே கொடுமையாக இருந்தது.உருக்குலைந்து என்று சொல்வோமே அது இதுதான் என்று உணர்ந்தான்.ஆளே அடையாளம் தெரியாத அளவு சிதைந்து போயிருந்தான்.மொட்டையடித்து முடி முளைத்திருந்தது.காயம்பட்ட சுவடுகள் நிறைய, ஆடைகள் மூடப்படாத பாகங்களிலேயே தெரிந்தது.கழுத்துப் பகுதியில் தெரிந்த ஒரு குழி மணிமாறனை என்னவோ செய்வது போலிருந்தது.பலூனை ஊதிவிட்டு உள்ளுக்குள் இழுத்து ஒரு முடிச்சுப் போட்டால் அந்த இடத்தில் ஒரு குழி தெரியுமே அதுபோல இருந்தது.’இவனாலதான் இவன் மனைவியே நமக்குத் தெரியும்.ஆனா இப்ப என்னன்னா இவன் மனைவியை வச்சிதான் இவனை அடையாளம் கண்டுபுடிக்கிற மாதிரி ஆயிடுச்சே’என நினைத்துக்கொண்டான். அண்ணா என்று தன்னை அழைத்ததும் மணிமாறனுக்கு சங்கடமாயிருந்தது.பரவாயில்லையே அடையாளம் கண்டுகொள்கிற அளவுக்கு, பேசுகிற அளவுக்கு தேறியிருக்கிறானே என்று நினைத்து சந்தோசப்பட்டவனுக்கு வா போ என உரிமையாய் பேசியவன் அண்ணா என்கிறானே.அவனின்நிலை மேல் கொண்ட கழிவிரக்கமா அல்லது இன்னமும் தன்னை சரியாக அடையாளம் காணவில்லையா? சுதாரித்துக் கொண்டு பேசத்துவங்கினான்.’என்ன முருகா.எப்படி இருக்க?’
‘அண்ணா.என்னை வீட்டுக்குக் கூட்டினுப் போயிடுண்ணா’ என்றான் மறுபடியும்.
என்ன சொல்வதென்றே தெரியாமல் நின்றவன்,’இன்னுங்கொஞ்ச நாள்லே வீட்டுக்குப் போயிடலாம் முருகா’என்று சொல்லிக்கொண்டே அவன் மனைவியைப் பார்த்தான்
.’உங்க பேரு என்னா’ என்றாள்.’
மணிமாறன்’
’அதான் மணின்னுக் கூப்பிட்டாங்களா?’ என்றாள்.அப்படின்னா ஆளை நல்லாத் தெரியுது என்று உணர்ந்தான்.அவன் முதுகில் ஏதோ ஒரு பிளாஸ்டிக் பை லேசாக சட்டைக்குள்ளிருந்து நீட்டிக்கொண்டிருப்பது தெரிந்தது.அவனை அந்தப் பெண் கைத்தாங்கலாக்ப் பிடித்து,பிளாஸ்டிக் பையை வெளியே உருவி,அவனை ஒரு பெஞ்சில் உட்கார வைத்தாள்.மூத்திரப்பை போலும். இப்போது அவன் மனைவி,’ஆமா, வீட்டுக்குப் போலாம்னு சொல்றியே.வீடு எங்க இருக்குது?’என்றாள்.
’ஸ்கூல் பக்கத்தில’
‘எந்த ஸ்கூல், உன் பையன் படிக்கிறானே அந்த ஸ்கூலா? அந்த ஸ்கூல் பேரு என்னா?’
‘லாலிபாக்’ .லால்பாக் என்பதைத்தான் அவன் அப்படிச் சொன்னான்.
‘சரியாச் சொல்றாரா’ என்றான் மணிமாறன்.
‘இல்ல. அது நந்தவனம்.’
‘சரி,வீட்டுக்குப் போகணும்னு சொல்றியே.வீட்டுக்கு எப்டிப் போகணும்?’ அவன் மனைவி அவனை சோதித்துக் கொண்டிருந்தாள்.வைத்தியமும் கூடத்தான்.
‘லெப்டில போகணும்’ சாலையைக் காட்டியபடியே சொன்னான். அந்நேரம் ஒரு வடமாநிலத்து முதியவர் அவர்களை வேடிக்கைப் பார்த்தவாறு கடந்து சென்றார்.முருகன் அவரிடமும்,’அண்ணா என்ன வூட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுண்ணா.ஆஸ்பத்திரி வேணாம்ணா’ அழாத குறையாக கெஞ்சினான்.
முதியவர் மொழி தெரியாமல் திருதிரு வென விழித்தபடியே கடந்துசென்றார்.மணிமாறன் மீண்டும் முதுகுவலி நினைவுக்கு வந்தவனாக முருகனின் மனைவியிடம் சொல்லிவிட்டு அரை மனதோடு உள்ளே போனான்.சற்று நேரத்திற்கெல்லாம் வெளியில் வந்து மறுபடியும் தன் வண்டியை நகர்த்திக்கொண்டே அவர்களிடம் வந்தான்.இப்போதும் முருகன்,’ ’அண்ணா என்ன வூட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுண்ணா.ஆஸ்பத்திரி வேணாம்ணா’ என்றான்.வண்டியை நிறுத்திவிட்டு அவன் தோளை ஆதரவாகத் தொட்டுக்கொண்டு இந்த முறை,’நான் நாளைக்கு வந்து கூட்டிட்டுப் போறேன் முருகா.இப்போ வேற ஒரு இடத்துக்குப் போறேன்.சரியா?’ குழந்தையிடம் பேசுவதுபோல் பேசினான்.முருகனும் இப்போது ஒரு குழந்தை மாதிரிதானே என எண்ணினான்.அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் முருகனுக்கு வணக்கம் சொல்லியவாறே வந்துகொண்டிருந்தார்.யார்யாரெல்லாம் புதுப்பது நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.மணிமாறன் தயக்கத்தோடும்,கனத்த இதயத்தோடும் செய்வதறியா ஒரு மனநிலையில் வண்டியை எடுத்துப் புறப்பட ஆரம்பித்தான்.முருகனின் மகன் இதுவெதுவும் அறியாதவனாக சற்றுத் தள்ளி மணலில் விளையாடிக் கொண்டிருந்தான்.மணிமாறனின் முதுகுக்குப் பின்னால் ஒரு குரல் கேட்டுக்கொண்டிருந்தது.ஆம்புலன்ஸ் டிரைவரிடம் முருகன் சொல்லிக்கொண்டிருந்தான்.’அண்ணா,வண்டிய எடுத்துனு வாண்ணா.என்னக் கொண்டுபோய் வீட்டுல விட்டுடுண்ணா’


பின்குறிப்பு ; இந்த முருகனை ஒன்றரை வருடங்களுக்கு முன் செய்தித்தாளில் ஒரு நாள் நீங்கள்கூடப் புகைப்படத்தோடுப் பார்த்திருக்கலாம்.மாநில அளவில் கராத்தேப்போட்டியில் பரிசு வாங்கியப் புகைப் படம்தான் அது.



7 comments:

rapp said...

நெஞ்சை கலங்கச் செய்த கதை :(:(:(

Anonymous said...

முத்துவேல்,

கதை நல்லா இருக்கு.

ஏன் தமிழ்மணத்தில் இணைப்பதில்லை?

Anonymous said...

முத்துவேல்,

உங்கள் கவிதைகள் இரண்டை என் வலைப் பக்கத்தில் கொடுத்திருக்கிறேன். உங்கள் பெயரையும் சுட்டியும் இணைத்திருக்கிறேன்.

நன்றி

துளசி கோபால் said...

மனசுக்கு ரொம்பவே சங்கடமாப் போச்சு.

உண்மை உலகில் இப்படி எத்தனை முருகன்களோ(-:

'நடை' அருமையா இருக்கு.

ச.முத்துவேல் said...

rapp...
மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் வருகையும், கருத்துப்பதிவும். நன்றி.

வடகரை வேலவன்...
நன்றி.
தமிழ் மணத்தில் இணைத்துக்கொண்டுதான் உள்ளேன்.ஆனல்,சில சமயங்களில் இணைவதில்லை.கணினி பற்றி நிறைய அறிவு எனக்கில்லை.
என் கவிதைகளை இணைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியும்,உற்சாகமும் அளிக்கிறது.ரொம்ப நன்றி.

துளசிகோபால்...

சமூக அக்கறையோடுள்ள ஆதங்கம் தெரிகிறது. நடை பற்றி குறிப்பிட்டுப் பாராட்டியதை கவனத்தில் எடுத்துக்கொண்டு மகிழ்கிறேன். நன்றி

Anonymous said...

அன்பு நண்பரே!

மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் எழுத்து.

அதை பலருக்கும் அறிமுகப்படுத்தியதில் என்னுடைய பங்கும் இருப்பதில் மகிழ்ச்சி!

வடகரை வேலன் அண்ணாச்சிக்கும் நன்றி!

ச.முத்துவேல் said...

வெயிலான்...
வடகரை வேலவன் தளத்தில் பின்னூட்டம் எழுதியுள்ளேன்,உங்கள் பெயரும்சேர்த்து.கருத்துக்களுக்கும்,
பரிந்துரைத்தலுக்கும் மனமார்ந்த நன்றி.