Wednesday, November 11, 2009

சாளரத்தில் தெரியும் வானம் – தொடர்-கவிஞர் முகுந்த் நாகராஜன்

என் பார்வையில் படைப்பாளிகள் - ச.முத்துவேல்

கவிஞர் முகுந்த் நாகராஜன்

நவீன கவிதைகள் என்றாலே புரியாமல் எழுதுவது என்கிற ஆரம்பக்கட்ட வாசிப்புப் புரிதலை தகர்த்தெறியும் கவிஞர்களுள் முகுந்த் நாகராஜன் மிக முக்கியமானவர் .இன்றைய தலைமுறைக் கவிஞர்களுள் குறிப்பிடத்தகுந்தவர். புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கும் யாராவது ஒருவர் பெரும்பாலும், பக்கத்திற்குப் பக்கம் புன்முறுவல் புரிகிறாரெனில் அவர் படிப்பது முகுந்த் நாகராஜனின் கவிதைத்தொகுப்பாகவும் இருக்கலாம்.குட்டிக்குட்டிக் கதைகளைப் போலிருக்கும் இவர் கவிதைகள் , கவிதைக்கான பிரத்யேகமான மொழி ஏதும் இல்லாமல் எளிய பேச்சு மொழியிலேயே இருப்பதால் சுவாரசியத்தோடு வாசகரை இழுத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை..எளிய மொழியில் கூறப்பட்ட நிகழ்வுகள்/ காட்சிகள் என்பதால் மனதில் நிலைக்கவும் நினைவு கூரவும் மிக எளிதாகிவிடுகிறது.இதனால் இவரின் கவிதைகள் பகிர்தலுக்கு உகந்ததாகவும், பரவலாகப் பேசப்படுவதற்கும் ஏதுவாயிருக்கிறது.அவ்வளவாகப் பதிவாகாத குழந்தைகளின் உலகை நிறையவும், நிறைவாகவும் பதிவு செய்பவர் முகுந்த். உன் –உனக்கு, என் – எனக்கு, என்பதுபோல் நான் – எனக்கு என்று சொல்லாமல் குழந்தைகள் ‘நானுக்கு’ என்று சொல்வதைப் பலரும் கண்டிருக்கமுடியும். குழந்தைகளின் பார்வை புதிய பார்வை. எவ்வித முன்முடிவுகளும், கற்பிதங்களும் அற்ற பார்வை. குழந்தைகளின் செய்கைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது நம்மை மறந்து புன்முறுவல் செய்துகொண்டிருப்போம். அதுபோன்ற செய்கைகளை , நிகழ்வுகளை அப்படியே எழுத்துக்குக் கடத்தி, கூடவே தம்முடைய ரசனையான, படைப்பூக்கம் மிக்க நவீன சிந்தனைகளோடும், கூறுமுறையோடும் கலந்து தருவதால் முகுந்தின் கவிதைகள் தரமானவையாகவும், தனித்தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது.


இவர் கவிதைகளில் திரும்பத் திரும்ப வருவது குழந்தைகள், பால்ய நினைவுகள், எளிய மனிதர்கள், குடும்பம், வீடு, தனிமை, பிரிவு, கிருஷ்ணன், நீலம், ரயில் பயணம் இன்ன பிற. பால்யத்தை தொலைத்துவிட்ட தவிப்பும், அதை ஈடு செய்துகொள்ளும் விதமாக தன் பால்ய நிகழ்வுகளை நினைவுகூர்ந்து மகிழ்ந்துகொள்வதாகவும் இருக்கிறது நிறைய கவிதைகள். மரபும், பாரம்பரியமுமான வாழ்விலிருந்து அன்னியப்பட்டு நமது தேவைகளுக்கேற்ப சடங்குகளை, வாழ்க்கைமுறைகளை மாற்றிக்கொண்டும், சுருக்கிக்கொண்டும், தொலைத்துக்கொண்டும் இருக்கும் நிலை குறித்த துயர் கொண்ட கவிதைகள் இவருடையது.பழையப் பெட்டியை, பரணை, அலமாரியைச் சுத்தம் செய்வதுபோல் இவர் தன் பால்யத்தை நினைவுகூர்ந்து எழுதுகிறார். இவரின் கவிதைகள் அனைத்தையும் ஓரளவுப் படித்துவிடும் ஒருவருக்கு, முகுந்த் பற்றிய வாழ்க்கைச்சித்திரம் நன்றாகவே பிடிபட்டுவிடும். அந்தளவுக்கு தன் வாழ்வனுபவங்களிலிருந்தும், அன்றாடங்களிலிருந்தும் எடுத்து எழுதப்படும் அசலானவை இவர் கவிதைகள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்தே நிறைய நல்ல கவிதைகள் எழுதியிருக்கிறார் என்பதிலிருந்து இவரின் அவதானிப்புத் திறனை வியக்காமல் இருக்கமுடியவில்லை.வேலைக்குச் செல்லும் நிர்ப்பந்தமான, இயந்திர வாழ்விலிருந்து விலக்கு அளிக்கும் விடுறை நாளை, கொண்டாடும் , அதற்கு ஏங்கும் மனப்பாங்கு சில கவிதைளில் தென்படுகிறது.
பேப்பர் போடும் பையன், சித்தாள், சீரியல் செட் போடுபவன், சுரங்க நடைபாதையில் பொம்மை விற்பவன், பூ விற்வள்,ரயிலில் காலண்டர் விற்கும் கண்பார்வையற்றவன் ஆகிய எளிய மனிதர்களின் மீதான அக்கறையோடு கவனிக்கப்பட்ட, அவர்களின் நிலைக்காக கழிவிரக்கம் கொள்ளும் இரங்கிய உள்ளம் வாசகரையும் துயர்கொள்ளச் செய்பவை. உறுத்தலை ஏற்படுத்தக்கூடியவை.பெண்களின் திறமை வீணடிக்கப்பட்டு சமையற்கட்டில் முடிந்துபோகும் பரிதாபமான, யதார்த்தமான சூழல்களையும் சில கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார்.
இணையம் மூலம் எழுதி, பிறகு தனிப்பட்ட முறையில் தொகுப்பை வெளியிட்டு பரவலான கவனம் பெற்ற இவரின் தன்னம்பிக்கை குறிப்பிடத்தகுந்தது.


இவரின் கவிதைத்தொகுப்புகளாவன,


1. அகி(டிசம்பர் 2003)
2. ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது( டிசம்பர் 2006)
3. கிருஷ்ணன் நிழல்


வீணாப்போனவன் என்கிற பெயரில் வலைப்பூவும் எழுதிவருகிறார்.இவரின் சில படைப்புகள் கிழே .,

சித்தாள் வாழ்ந்த இடம்


முப்பது கம்பெனிகளும்
இரண்டு வெளிநாட்டு வங்கிகளும் இருக்கும்
அந்தப் பெரிய கட்டிடத்தைத்
தன் மகனுக்கு அறிமுகப்படுத்தினாள்
அந்த சித்தாள்,
‘ நாங்கள் கட்டியது” என்று சொல்லி.
கட்டும்போது இருந்த இடம்
எல்லாம் காண்பித்தாள் வெளியே இருந்தபடியே.
முற்றிலும் மாறிப்போய்,
தான் உள்ளே கூட நுழைய முடியாததாய்
ஆகிப்போன அந்தக் கட்டிடத்தைப்
பெருமையுடன் பார்த்தாள்,
அந்த வங்கியின் நியான் போர்டு இருக்கும் இடத்தில்
புடவை காயப் போட்டது தனக்கு மட்டுமே தெரியும்
என்பதை திடீரென்று உணர்ந்தவளாக.


கிணறு இல்லாத ஊர்


கடைசியாய் ஒருமுறை சூடம் காட்டிவிட்டு,
வாடிப்போன எருக்கம்பூ மாலையை
கழற்றிவிட்டு,
களிமண் பிள்ளையாரைக் கிணற்றில் போட்டது
நேற்று மாதிரி இருக்கிறது.
நிறைய பிள்ளையார்களை விழுங்கிய என்
சின்னவயசின் பெரிய கிணறு
என் ஞாபகத்தில் மட்டும் இருக்கிறது.
ஃப்ளாட்டின் சின்ன அறையில்
கல்லுப் பிள்ளையாருக்குப் பூஜை செய்துவிட்டு
பக்கத்து ஃப்ளாட்காரர்களுடன்
கொழுக்கட்டை பரிமாறிக்கொள்வதும்
நன்றாகத்தான் இருக்கிறது
பிள்ளையார் படம் ஈமெயிலில் வந்ததும்
சந்தோசமாகத்தான் இருக்கிறது.
கிணறுதான் குறைகிறது.
அதை யாராவது அனுப்புகிறீர்களா
அட்டாச் பண்ணி?

மழை அளவு


’கன மழை’ என்றார்கள் டிவியில்.
கடந்த 25 வருஷங்களில்
பதிவான மழை அளவுகளைவிட
அதிகம் என்றும் சொன்னார்கள்.
பெரியவர்கள் ‘ நல்ல மழை’ என்றும்
இளைஞர்கள் ‘செமை மழை’ என்றும்
சொல்லிகொண்டார்கள்
‘எவ்ளோ தண்ணீ’ என்று
ஆச்சரியப்பட்டது குழந்தை.


மனப்பாட மீன்குட்டி


குறுகிய பால்கனியில்
முன்னும் பின்னும் நடந்து
பாடம் படிக்கிறாள் சிறுமி.
அவள் உதடுகள்
முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன
கண்ணாடித் தொட்டியின் மீன்குட்டியைப் போல்.


சொந்தமாக விழுந்து உடைந்த கோப்பை

விளையாட்டில் வீட்டுப் பொருட்களை
காலம் காலமாக
உடைத்து வருகின்றனர் குழந்தைகள்.
உடைந்த சத்ததுக்கும்
ஓடி வந்து பெரியவர்கள் போடும் சத்தத்துக்கும்
நடுவில் இருக்கும் மவுனத்தில்
சிதறிய துண்டுகளில் இருந்து
தப்பிக்கும் வாக்கியங்களை
இயற்றுகிறார்கள்.
போன வாரம் கண்ணாடிக் கோப்பை ஒன்றை
கை தவறி உடைத்த அதிமதுரா
அவள் அம்மாவுக்கு
'சொந்தமா விழுந்து உடைஞ்சி போச்சு'
என்ற வாக்கியத்தைப் பரிசளித்தாள்.
உடைந்த கோப்பை இருந்த இடத்தில்
அந்த வாக்கியத்தைப் பொருத்தி வைத்து
வருவோர் போவோரிடமெல்லாம் எடுத்து எடுத்துக்
காட்டிக் கொண்டிருக்கிறாள் அவள் அம்மா.


ஈரம் போக


கை, கால், முகத்தை எல்லாம்
ஈரம் போக துடைத்துக் கொண்டேன்.
இந்த நாக்கை என்ன செய்வது.

நன்றி- தடாகம்

Thadagam_Logo_Eng

10 comments:

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமை முத்துவேல்.

Ashok D said...

கவிதை எழுதுவதும்
வீணாய் போவதற்கும்
சம்மதம் உண்டோ?

ஒரு கவிதை
மற்றொரு கவிதையை
சுட்டியது அழகாய்.

‘எவ்ளோ தண்ணீ’ டாப்பு.

யாத்ரா said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க முத்து, நாம் கடந்து விடுகிற எளிய கணங்களிலெல்லாம் கவிதை இருக்கிறதுன்னு எழுதிக் காண்பித்தவர் முகுந்த். நான் அகி தொகுப்பை வாசித்த காலங்கள் இனிமையானவை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அழகாய் பகிர்ந்திருக்கிறீர்கள்.

சுமார் நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் கவிஞர் நா.முத்துக்குமாரின் பரிந்துரையின் பேரில் முகுந்த் அவர்களின் “அகி” தொகுப்பினை வாங்கி, படித்திருக்கிறேன்,
மீள்வாசிப்பு செய்யவேண்டும்.இப்போதான புரிதல் நிச்சயம் வேறுமாதிரியாக இருக்கும் :)))

கார்த்திகைப் பாண்டியன் said...

அட்டகாசமான கவிஞர்.. அவருடைய புத்தகத்தை படித்த பாதிப்பில்தான் குழந்தைகளின் உலகில் என்னும் கவிதையை நான் எழுதினேன்.. பகிர்வுக்கு நன்றி நண்பா

நந்தாகுமாரன் said...

முகுந்த் நாகராஜனின் ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது கவிதைத் தொகுப்பை தற்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன் ... :)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கண்டிப்பாக!
நானும் படிப்பதுண்டு!

அவருடைய கவிதைத் தொகுப்பு அண்மையில் வாசிக்கக் கிடைத்தது!

நன்று!

ச.முத்துவேல் said...

நன்றி ஸ்ரீ

நன்றி அஷோக்.

/கவிதை எழுதுவதும்
வீணாய் போவதற்கும்
சம்மதம் உண்டோ?/

நிச்சயமாய் உண்டுதான்.

நன்றி யாத்ரா. சரியாச் சொல்லியிருக்கீங்க

நன்றி அமித்து அம்மா. சீக்கிரம் படியுங்கள்.

நன்றி கார்த்திகப்பாண்டியன். அவரைப் படிக்கிறபோது நமக்கும் எழுதும் அவசம் ஏற்பட்டுவிடுவது உண்மைதான்.

நன்றி நந்தா.பெங்களூருவில் அடர்மழையாமே. அது நின்றாலும் முகுந்தின் சாரல்மழை மயக்குகிறதுதானே.படிக்கவில்லையென்றால் அகி கட்டாயம் படியுங்கள்.

நல்வரவு அத்திப்பட்டி ஜோதிபாரதி. நன்றி.

விநாயக முருகன் said...

முகுந்தின் மூன்று தொகுப்பையும் படித்துவிட்டேன்.

என் பங்கு சூரியனை நான் பல வழிகளில் செலவழித்துவிட்டேன் போன்ற யாருமே இதுவரை பதிவு செய்யாத சிறு சிறு புற உலகின் இயல்பான அவதானிப்புகளை இவரது கவிதையில் காணலாம்.சிலர் கவிதைகளை படிக்கையில் இவர் நம்மவர் எ‌ன்று மனதுக்குள் ஒரு நெருக்கம் எற்படும். (உம்:- கல்யாண்ஜி) இரவு நேர எப்.எம்மில் தனிமையில் பழைய பாடல்களை கேட்கும் பரவசம் ஏற்படும்.

எனக்கும் பிடித்த கவிஞர் முகுந்த் நாகராஜன். பகிர்வுக்கு நன்றி.

ச.முத்துவேல் said...

அனுபவிச்சு, அழகா சொல்லிட்டீங்க.
/இரவு நேர எப்.எம்மில் தனிமையில் பழைய பாடல்களை கேட்கும் பரவசம் ஏற்படும். /

INTERESTING. நன்றி வினாயக முருகன்.