Thursday, February 17, 2011

ஜெ.மோ.ப.மனுஷ்யபுத்திரன் கவிதைகள்

திசையறிதல்

எல்லா நன்றியறிதல்களும்
பதிலுபச்சாரங்களும்
உன்னைக் கொஞ்சம்
சிறுமைப்படுத்தவே செய்கின்றன‌

இன்றிலிருந்து உனது
எல்லாப் பரிசுகளையும்
நான் தரையில் விட்டுவிடுகிறேன்
ஈரம் காயாத நாய்க்குட்டிகளைப் போல‌
தம் திசைகளை
தாமே அறியட்டும்ன

மறுமுனையில்

உன் நாசியில்
விழுந்து உடைகிறது
என் பிரியத்தின்
ஒரு தனித்த மழைத் துளி

மழை வரலாம்
என்று நினைத்துக்கொண்டே நடக்கிறாய்
சாலையின் மறுமுனையில் இருக்கிறது
உன் வீடு

காற்ரை மூர்க்கமாய்
கடந்துகொண்டிருக்கின்றன‌
மறுமுனையறியாத‌
எண்ணற்ற மழைத் துளிகள்


ஒரு பெரிய அவமானத்திற்குப் பிறகு

நன்றாகக் குளிக்க வேண்டும்
வெ ந் நீராக இருந்தால் மிகவும் நல்லது
இருப்பதிலேயே நல்ல அதிகம் பயன்படுத்தாத‌
தெம்பூட்டும் ஆடையை அணியலாம்

தெருவில் இறங்கி நடக்கும்போது
அடிக்கடித் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை

அதிக இறுக்கம் அதிக இணக்கம்
இரண்டுமே நம்மைக் காட்டிக் கொடுத்துவிடும்
குழந்தைகளை இயல்பாகக் கொஞ்சவேண்டும்

மர்மமாகப் புன்னகைப்பவர்கள்
கேட்காமலேயே தம் பேச்சை மாற்றுபவர்கள்
செயற்கையாகப் பேச்சை மாற்றுபவர்கள்
எல்லோரையும் நாகரீகமாக வணங்கலாம்

சாதுரியமாக விரைவாக‌
தப்பிச் சென்றுவிட வேண்டும்
நாம் மதிக்கப்படும் ஒவ்வொரு இடத்திலிருதும்

தனித்த் அறை ஒன்றில்
மனங்கசந்து அழும்போது
கதவு தட்டும் ஓசைகேட்டு
கண்களைத் துடைத்துக்கொள்ள வேண்டும்

எல்லையற்றது
இந்த உலகின் தீமை
எல்லையற்றது
இந்த உலகின் கருணை

இறந்தவனின் ஆடைகள்

இறந்தவனின் ஆடைகளை
எப்படி பராமரிப்பதென்றே
தெரியவில்லை

இறந்தவனின் ஆடைகளை
அத்தனை சுலபமாய்
அணிந்துகொண்டுவிடமுடியாது
அதற்காகவே
காத்திருந்தது போலாகிவிடும்

அவை
இறந்தவனின் இடத்தில்
இருந்துவிட்டுப் போகட்டும்
என்றிருக்க இயலாது
இறந்தவர்களோடு
அவ்வளவு இயல்பாய்
உறவுகள் சாத்தியமல்ல

தானமெனக் கொடுக்கலாமெனில்
இறந்தவனின் சாயல்கள்
எதிர்பாரா இடங்களில்
எதிர்பாரா உடல்களிலிருந்து
நம்மை நோக்கி வரும்

இறந்தவனின் ஆடைகளை
அழித்துவிடலாம்தான்
இறந்தவனைத்
திரும்பத் திரும்ப அழிக்க‌
கைகள் நடுங்குகின்றன‌

இறந்தவனின் ஆடைகள்
ஆடைகள் போலில்லை
இறந்தவனின் தோலாக இருக்கிறது
   (அபு என்கிற பக்கீர் முஹம்மதிற்கு)

அந்தரங்கம்

எனக்குத் தெரியும்

ஓசைப்படாமல்
கதவு திறந்து வந்து

சுற்றுமுற்றும்
கவனித்துவிட்டு

பைய அருகிருந்து
குருடனின் சுயமைதுனம் பார்க்கும்
ஒரு ஜோடிக் கண்களை

என் யாசிக்கும் கைகளில்

என் யாசிக்கும் கைகளில்
வந்து கூடும் மேகக்கூட்டங்களில்
பெருகிச் செல்கின்றன‌
எல்லா மழைக் காலங்களும்

என் யாசிக்கும் கைகளில்
கருணைத் தீ பரப்பும்
முத்தங்கள் வெடித்து
ரேகைகள் நடுங்குகின்றன‌

என் யாசிக்கும் கைகளில்
வந்து புதைகிறது
சில்லிட்ட வார்த்தைகளோடு
ஒரு கசங்கிய முகம்

என் யாசிக்கும் கைகளில்
வழிந்தோடுகிறது
நோயாளியின் கசந்த வாந்தி

என் யாசிக்கும் கைகளில்
பறவைகள் இட்ட‌
எச்ச விதைகளிலிருந்து
அசைகிறது இப்பெருங் கானகம்

கொடுக்கும் கைகளின்
குரூரங்களற்ற‌
என் யாசிக்கும் கைகளைக்
கதகதப்பாய் மூடுகின்றன‌
உன் யாசிக்கும் கைகள்
               -மனுஷ்யபுத்திரன்











3 comments:

சி.பி.செந்தில்குமார் said...

இந்த வார விகடன்ல முத்துவேல்ங்கற பேர்ல ஒரு கவிதை பார்த்தேன் அது நீங்களா?

Ashok D said...

//சாதுரியமாக விரைவாக‌
தப்பிச் சென்றுவிட வேண்டும்
நாம் மதிக்கப்படும் ஒவ்வொரு இடத்திலிருதும்//

நெருக்கமாயிருந்த/ரசித்த வரிகள் :)

ச.முத்துவேல் said...

@சி.பி.எஸ்
வருகைக்கு நன்றி.அந்த முத்துவேல் வேறொருவர். நண்பர்தான்.அவர் எழுத வந்ததற்குப் பிறகுதான் நான் எழுத ஆரம்பித்தேன்.அதனால் என் பெயருக்கு முன்னால் ச போட்டு ச.முத்துவேல் என்றுதான் எழுதுவது.

@அஷோக்
நன்றி