ஜெ.மோ.பரிந்துரைத்த கவிதைகள் க.மோகனரங்கன்
கல் திறந்த கணம்
பெயரழிந்த ஊர்
அரவமற்ற பிரகாரம்
கரையழியா சரவிளக்கு
திரியெரிந்து பிரகாசித்தது இருள்
காலடியோசைக்கு
சடசடத்துப் பறந்தது புறாக்கள்
எச்சம் வழிந்த முலையொன்றில்
எதேச்சையாய் விரல்பட்டுவிட
உறுத்துப் பார்த்தது
கருத்த சிலை
திகைப்புற்றுக் கண் திருப்ப
காதில் விழுந்தது
நூறு நூறு வருடங்கள் கடந்து
உளியின் ஒலி
பரிசில் பாடல்
அனபைச் சொல்ல
அநேகமிருக்கிரது வழிகள்
மலர்களைத் தருவது
மரபும் கூட
வாழ்த்துச் சொல்லி
வந்த அட்டைகளுக்கும்
வண்ணக் காகிதங்களில் சுற்றப்பட்ட
வெகுமதிப் பொருட்களுக்கும்
நடுவே
தானென பூத்து வீசுமுன்
முகத்தினை கசங்கச் செய்வதில்லை
என் விழைவும்
மேலும்
வசீகரத்தின் பயங்கரத்தையும்
அன்பின் குரூரத்தையும்
பரஸ்பரம் அறியாதவர்களல்ல நாம்
உப்பின் கரிந்த நீர் பரவிய
என் தோட்டச் சிறுவெளியில்
கருகி உதிர்ந்தவை போக
எஞ்சிக் கிளைத்தது
இம் முட்கள் மட்டுமே
முனை முறிந்துவிடாமல்
காத்துவை
அடிக்கடி நகம் கடிக்குமுனக்கு
எப்போதாவதென் முகம் கிழிக்க
உதவும்.
தூது
நான்
வெளியேறக் காத்திருந்தது போல
மூடிக்கொள்கின்றன கதவுகள்
முதுகிற்குப் பின்
எப்போதும்
முத்திரையிடப்பட்ட உறையினுள்
குறுங்கத்தியோ
நழுவ விட்ட மோதிரமோ
ஓலை நறுக்கோ
யார் விட்டுச் சென்றது
யாரிடம் கையளிக்க வேண்டும்
தெரியவில்லை
தெருக்கள் முடிந்த வெளியோ
ஆசுவாசங் கொள்ளவும் விடாது
அவசரப் படுத்துகிறது
இப்போதும்
அழைப்புமணிகள்
பொருத்தப்படாத காலத்துள் நின்று
தட்டித்
திறந்து கொண்டிருக்கிறேன்
கதவுகளின் பின் கதவுகளை
காகிதத்தில் கிளைத்த காடு
விளையாட்டாய்
ஓரிலையை எழுதினேன்
பசுமை நிறத்தது
வியப்புற்று
பூவரைந்தேன்
வாசம் மணத்தது
கனியெழுத
இனிமை தித்தித்தது
கிளைகள் வேர்களென
முழுமரமும் எழுதினேன்
நிழலும் குளிர்வும்
வாய்த்தது
பெயரறியாப் பறவைகள் வந்து
இசைத்திருந்தன
மரம் பெருகி வனம் நிறைய
நனி பெரும் மனிதர்
நலியும் நகர் தொலைத்து
சடை வளர்த்து
இடையில் உரி தரித்தலையும்
ஏகாங்கியானேன்
-க.மோகனரங்கன்
7 comments:
அட்டகாசமா இருக்கு...
நன்றி... பகிர்தலுக்கு...
சொற்சிக்கனத்தில் கைதேர்ந்தவர் கவி க. மோகனரங்கன். கவிஞர்களால் வாசித்துப் பயிலவேண்டிய கவிஞர்களில் ஒருவரும் கூட.
இக் கவிதைகள் நான்கும் ஜெயமோகனின் தேர்வு என்றதும் நயம்.
@நல்வரவு ராஜ ராஜ(எத்தன!) ராஜன் . நன்றி
@நல்வரவு ராஜசுந்தரராஜன் சார். மோகனரங்கனின் நெடுவழித்தனிமை படித்த்போது, நானும் அவருடைய சொற்சிக்கனத்தை வியந்து ரசித்தேன். கச்சிதமான கவிதைகள்.
நவீனத் தமிழிழ்லக்கிய அறிமுகம் என்கிற நூலில் ஜெயமோகன் பரிந்துரைத்த கவிதைகளின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. அவற்றை ஒரு தொகுப்பாக இங்கே கிடைக்கச் செய்யலலாம் என்று திட்டம்
நன்றி சார்.
அருமையான கவிதைகள் முத்துவேல்..
நன்றி உழவன்
கவிதைகள் அனைத்தும் அற்புதம். தூது கவிதை ஒரு தபால்காரனின் உளக்கிடக்கையை அழுத்திச் சொல்கிறது. அனைத்தையும் ரசித்தேன்.
@ கீதா மதிவாணன்
நல்வரவு. உங்களின் வாசிப்பும், அவதானிப்பும் மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி
Post a Comment