Monday, July 18, 2011

ஜெ.மோ.பரிந்துரைத்த ராஜசுந்தரராஜன் கவிதைகள்


வறட்சி
வானுக்கு இல்லை இரக்கம்.பூமிக்கு
வெயில் என்று வருகிறது நெருப்பு
காற்றுக்கு விடைசொல்லி
துக்கித்து இருக்கிறது வீடு
அடி உறைகளும், கிணற்றுக்குள்
வாய்வறண்டு
சுருண்டுவிட்டன.
தாகித்து அணுகுகிற வாளிக்கு
என்ன சொல்வது பதில்?

கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகிய
பறம்பும் இன்று வெறும்பாறை.
காயம்

பூத்தபோது அடடா
அழகு என்றேன்.
காய்த்தபோது
காலில் குத்தியது நெருஞ்சி.

மேகங்கள் பொங்கி வெளுத்தது.
காற்றும் திசைமாறி மேல்கீழாய்ப் பாய்கிறது.
என்ன தந்தாய் நீ எனக்கு,
சில நரைமுடிகளைத் தவிர?

நம் அம்மணம்:
திரை என்று கொண்ட
ஆற்றோட  நாணல்ப் புதர்;
நீ அள்ளிப் பருகிய வாய்க்கால்-
இருக்கிறதா இன்னும்
உன் நினைவுகளில் ஈரம்?

நான் போகிறேன்.
வானம் கருக்கொண்டு மீண்டும் மழை வரலாம்
பூமி பூச்சூடி மேலும் பொலிவுறலாம்
மறப்பதற்கில்லை
நெருஞ்சிப் பரப்பின் மஞ்சள் வசீகரம்
சிலுவை
ஒடுங்கிவிட்டது ஊர்.

விளக்குகள் தலைகவிழ்ந்து நிற்கிற
தெருப்பாலையில்,
தனிமையில் மெனக்கெடும் மனித ஓர் உரு
அலைகிறேன்.

தாலிபட்டறியாத கழுத்தில் இவளைக்
கைம்மை கவிந்த முகம் வரித்துக் காணவா
விலகி மீண்டது என் பாதை?

அரையிருள் அந்தி அந்நாள்
இவள் அவன் மிதிவண்டிச் சுமைதூக்கி தொட்டு
இணங்கி அவனோடு குணுங்கியதாகக்
கண்கள் எனது கண்டதென்ன மாயை!

கெக்கலிக்கிறது ஆந்தைப் பெருங்குரல்.

நான் பற்றிக் கொணர்ந்த கை இந்நேரம்
மார்போடு மகவு அணைத்து
உறங்கிக்கொண்டிருக்கும்.

லாமா சபத்கானி? லாமா சபத்கானி?
இவள் விழிக்குரல் ஓல உருக்கம்
என் உளச்செவி சிலம்பச் சிலம்ப

அலைகிறேன்.

தகுதி

ஒரு பறவையிட்ட
எச்சத்தின்
நிழலில்
அயர்கிறோம் நானும் என் மந்தையும்
அது மரமாகி நிற்கிறபடியால்.



ஆரோகணம்

சுவர் தன் ஒருபகுதியைக்
கதவு என நெகிழ்க்கிறது

சுதை கறுத்த கோபுரம்
விடிவெயில் மொண்டு குளிக்கிறது

வெளி-
வெளியெங்கும் செறிகிறது ஒலி.

விசும்புக்கு நினிர்கிறது
ஒரு விமானத்தின் கதி.
எல்லை
அலை வறண்டது கடல்.
ஒளி வறண்டது வான்.
உயிர் வறண்டது காற்று.

நிலமெங்கும் சருகுகள்.
நெய்தவனே பிணமாகித் தொங்கக்
கிழிந்துபட்டது சிலந்திக்கூடு.

தெரிகிறது சாவின் பாசறை.
திரும்பாது இனி என் படை.

அம்மா
வெளிப்பட்டு வீறிச் செல்கிற நீராவி
ஒரு விசையாக மாறி
எந்திரங்களை உருட்டும்.
கொதிகலன் நாள்ப்பட நாள்ப்பட இற்றுப்போகும்.

வளர்ச்சிப் பாதையின் ஒரு கட்டத்தில்,
செடிகளுக்கு,
விதையிலைகள் வேண்டாதவையாகிவிடும்.

குஞ்சுகள்
கோழியாகும்.
சேவல்கள் கூட வரும்.
அடைகாத்த சிறகுகளில் இறகுகள் உதிர்ந்து விழும்.

காற்றோடுபோய்
அங்கங்கே வேரூன்றி விடுவன
வித்துகள்.

சாவிலும் கூடத்
தாயோடு வருவன
அடிவயிற்றுத் தழும்புகள்.


துண்டிப்பு

மழெ இல்லெ தண்ணி இல்லெ.

ஒரு திக்குல இருந்துங்
கடதாசி வரத்து இல்லெ.

அடைக்கலாங் குருவிக்குக்
கூடு கட்ட
என் வீடு சரிப்படலெ.

நான் ஒண்டியாத்தான் இருக்கேன்
இன்னும்.
             -ராஜசுந்தரராஜன்

No comments: