Friday, January 20, 2012

இது என்ன தலைப்பு?




மரங்கொத்திச் சிரிப்பு என்கிற என் கவிதைகள் தொகுப்பு நூலின் தலைப்பைப் படித்த சில நண்பர்கள் ‘அப்படின்னா என்ன? என்று கேட்டனர். நண்பன் இசை கூட கேட்டார். இசைக்கு நான் சொன்னேன்.மரங்கொத்திப் பறவை போடுற சத்தம் எக்காளமா சிரிக்கிற மாதிரி இருக்கும். ஆனா, அதை சிரிக்கிறதுன்னு சொல்லலாமான்னு எனக்கு  சந்தேகம் இருந்துட்டே இருந்தது.
தகவல் பிழையாக ஆகிவிடக்கூடாதேன்னு  யோசிச்சிட்டிருந்தேன். அதுக்கப்புறம், தி.ஜானகிராமனோட மோகமுள் நாவலை நான் இப்போதான் படிச்சு முடிச்சேன். அதுல ஒரு இடத்துல மரங்கொத்தி சிரிப்புன்னு வரும். இப்போ உன்னோட உறுமீன்களற்ற நதியாகட்டும், இளங்கோகிருஷ்ணனோட காயசண்டிகை தலைப்பாகட்டும். எத்தனை பேருக்கு அர்த்தம் தெரியும்? உறு ங்கிற வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்னன்னு உன்னோட கவிதைத் தொகுப்பை படிச்சதுக்கப்புறந்தான், தேடிப்படிச்சி தெரிஞ்சிக்கிட்டேன். அதுபோல இதுவும் இருக்கட்டும்


எப்படி ஒரு கவிதைக்குள் பொருத்தமாக குழந்தைகள் இடம்பெறும்போது, அந்தக் கவிதைக்கு ஒரு நெகிழ்ச்சி வந்துவிடுகிறதோ அதேபோல் பொருத்தமாக  பறவைகள் வந்துவிட்டாலும், அந்தக் கவிதைக்கு சிறகுகள் முளைத்துவிடுகிறது என்பேன்.

மரங்கொத்திச் சிரிப்பு என்கிற வரி என்னுடைய ஒரு கவிதையில், நான் செம்மையாக்கம் செய்யும்போதுதான் இடம்பெற்றது.அகநாழிகை இதழில் வெளியாகியிருந்த கவிதையில் திருத்தம் மேற்கொள்வதற்குமுன் பின்வருமாறு இருந்தது. (ஓரளவு, நல்ல வரவேற்பைப் பெற்ற கவிதை இது. கீழே கவிதை முழுமையாக இல்லை)

கடற்கரை வெளியில்
ஒருவன் தன் மகனை
உயரத் தூக்கி வீசி
பிடித்து
வீசி
பிடித்து
விளையாடிக்கொண்டிருந்தான்

அச்சமற்ற குழந்தையின்
முகத்தில் மகிழ்ச்சியலை
................................
................................

இவ்வரிகளை இவ்வளவு தட்டையாகச் சொல்லாமல் வேறெதாவது செய்யவேண்டும் என்று யோசனையிலிருந்தேன்.
அலுவலகத்தில் மழை சற்று பெய்து ஓய்ந்திருந்த ஒரு தேனீர் நேரத்தில்  தனியாக அமர்ந்திருந்தபோது அசரீரி போல் மரங்கொத்திப் பறவையின் சிரிப்புச் சத்தம் கேட்டது. குதூகலமாகிவிட்டேன்.திருத்திய பிறகு வந்த வரிகள் இப்படி

கடற்கரை வெளியில்
ஒருவன் தன் மகனை
உயரத் தூக்கி வீசி
பிடித்து
வீசி
பிடித்து
விளையாடிக்கொண்டிருந்தான்

முதல் பறத்தலை ருசித்த
மழலைப்பறவையின்
அச்சம் விலக்கியிருந்த கெக்களிப்பில்
மரங்கொத்திச் சிரிப்பலை
...

பொதுவாக என்னுடைய கவிதைகளில் உவமைகள், அலங்காரங்கள் இருப்பதில்லை. நேரடியாகவும், எளிமையாகவுமே இருக்கும். அந்த வகையில் நான் உவமையாய்ச் சொன்ன அரிதான ஒன்றாக இவ்வரி இருக்கிறது. தனித்துவமான தலைப்பாகவும் இருக்கும் என்று மரங்கொத்திச் சிரிப்பு என்று பெயர் தேர்ந்தெடுத்தேன்.

மரங்கொத்திச் சிரிப்பு என்கிற வரியை கூகிளில் தட்டச்சி தேடினால் ஒரு வலைப்பக்கம்கூட விடையாகக் கிடைக்கவில்லை. ஆனால், ஆங்கிலத்தில் இதே அர்த்தம் கொண்ட வரியைத் தேடியபோது,இவ்வரி  மிகவும் புகழ்பெற்றதாக தெரிகிறது. இப்போது தமிழிலும் இந்தக் குறை நீங்கும் என்று உங்களையெல்லாம் நம்பிச் சொல்கிறேன்.

2 நாட்களுக்கு முன், காலையில் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த ஒரு பாட்டின் வரிகளை கவனித்தபோது ஆச்சரியமாகிவிட்டது. என் தனித்துவமான தலைப்புக்கு வந்த சோதனையைப் பாருங்கள். ராஜாதி ராஜா படத்தில் வருகிற பாடல்.

சிலுசிலுவென குளிரடிக்குது அடிக்குது
சிறு அரும்புகள் மலர் வெடிக்குது வெடிக்குது
வனம் விட்டு வனம் வந்து
மரங்கொத்திப் பறவைகள்
மனம் விட்டுச் சிரிக்கின்றதே

மலையாளக் கரையோரம்..

கூகிளில் நான் தேடியவரை இப்பாடலை எழுதியவர் பெயர் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு, பாடலை எழுதியவர்  கவிஞர் வாலி என்ற தகவலை கவிஞர் மகுடேஸ்வரனிடம் கேட்டு அறிந்தேன்

                                 

5 comments:

பொன். வாசுதேவன் said...

இந்த பகிர்வு நல்லாயிருக்கு முத்துவேல்

நந்தாகுமாரன் said...

’மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி பாடல்’ எழுதியது கவிஞர் பொன்னடியான் என நினைத்திருந்தேன்

ச.முத்துவேல் said...

@ அகநாழிகை
நன்றி வாசு

@ நந்தா
எங்கிட்ட மோதாதே பாடலை எழுதியது பொன்னடியான் என்பது மட்டும் எனக்குத் தெரியும்

நன்றி

Unknown said...

"அன்பு நண்பரே உங்கள் வலையினை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி!

ச.முத்துவேல் said...

Paarthen veedu. nandri