Thursday, July 26, 2012

...மற்றும் பலர்தேரில் செல்லும் ஒருவர்
அல்ல நான்
இரயிலில் செல்லும் பலரில் ஒருவன்

என் முகத்தில் வந்தமரும் ஈ கூட
மீண்டும் மீண்டும் மொய்த்து
என்னிடம் அன்பு செய்வதில்லை

ஒரே வானின் ஒரே சூரியன்
அல்ல நான்
சிதறல் நட்சத்திரங்களில் மங்கலாய் மினுங்குபவன்

என் பிறந்த நாளை நினைவு வைத்திருந்து 
குறுஞ்செய்தி வாழ்த்தனுப்பும் மூன்று பேரின்
பிறந்த நாட்களையும் அறிந்திராதவன்

என் குடிசைக்கு வரும் ஒற்றையடிப்பாதை
புதர் மண்டி மூடிக்கிடக்கிறது

ஒரு நாள் முழுதும் என் அலைபேசிக்கு
ஒருஅழைப்பும் வராத நாட்கள்
நிறையவே உண்டு

எப்போதாவது யாரோ சிலர்
முணுமுணுக்கும் பாடல் நான்
இதுவரை எங்கும்
ஒலிபரப்பு செய்யப்பட்டதில்லை

எனக்கு விமானப் பயணம்
எப்போதாவதே வாய்ப்பதேபோல்
எப்போதாவதே எனக்கு
மேடை கிடைக்கிறது

என் பெயரும் பட்டியலில் உள்ளதென்றால்
அது மிக நீண்ட பட்டியலே

என் வருகைக்காக போக்குவரத்துகள்
திசை திருப்பப்படுவதில்லை
குறுக்கேக் கடக்க எப்போதாவதே எனக்கு
வெறிச்சோடிய சாலை தானாகவே வாய்க்கிறது

நீள நீளமாக நீண்ட வரிசையின் 
சிறுத்துத் தெரியும்
வால் நுனியில் நான் நிற்பது
உங்கள் கண்களுக்குத் தெரிகிறதா?

தலவிருட்சமோ தாலிப்பனையோ
அல்ல நான்
குப்பைமேனி அல்லது சிறுபுல்

மற்றும் பலரில்
நான்(உம்) ஒருவன்

எப்போதாவதே உங்கள் விழிகளின் வெளிச்சம்
என்மீது விழும்படி அமைகிறது
அவை என் வாழ்நாள் சாதனைத் தருணங்கள்
அப்போது நான் செத்துப்போயுமிருக்கலாம்

Wednesday, July 18, 2012

என் பெயர் சர்ப்ப காந்த்
மாநகரின் தண்டுவடச் சாலையோரங்களில்
நடந்து செல்வதற்கு இடம்விடப்படாதவர்கள்
வாழ அருகதையற்றிருக்க
எனக்கோ முகவரியுண்டு
படமெடுத்து ஆடும் சிறப்பு கொண்ட பாம்புகளில்
சினிமாவில் படமெடுத்து ஆடும் வரம் பெற்ற பாம்பு நான்
என்னை பல படங்களிலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்
ஆடி சனி படத்தில் இறுதிக் காட்சியில்
ஆடும் பாம்புகளின் கும்பலில்
இரண்டாவது வரிசையில்
(இடமிருந்து வலமாக) மூன்றாவது பாம்பு நாந்தான்
மகுடிகளுடன் மட்டுமே ஜோடிசேர்ந்து ஆடிஅலுத்துப்போன என்னை
மார்க்கட்டு சரிந்த முன்னாள் கதாநாயகி
கையெடுத்து விழுந்து வணங்கி என்முன் ஆடியபோது
அவள் மாராப்பு விலகியிருந்தது

கனவுலகை இப்போது காலை 10 மணிவரைக்கும்
இளம் நாயகியாகவே ஆண்டுகொண்டிருப்பவளின்
குளியலறைக் காட்சியில்
நீங்கள் என்னைப் பார்த்த நேரத்தில்கூட
நாயகியின் பளிங்குமேனியையே
அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் பேறுபெற்றேன்

காண்டினெண்டல் ஸ்டார் இல்மகா காந்த் படத்தில்
நெடுகிலும் நிறைய காட்சிகளில் நானும் நடித்ததே
எனது இதுநாள் வரையிலான வாழ்நாள் சாதனை
சென்ற ஆண்டு என் பெயர்
பத்ம சர்ப்ப விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு
கடைசி சுற்றில் கழண்டுகொண்டது
இசட்.புதூர் பஞ்சாயத்து பள்ளியில் நடந்த
சென்ற ஆண்டு விழாவில்
நானும் ஒரு சிறப்பு விருந்தினராய் பங்கேற்றேன்
இப்போது சர்ப்ப காந்த் என்கிற என் பெயர்
பிரசித்தமாகிவருகிறது
என் பூர்வீகம்,இயற்பெயர் எதுவென்று கேட்காதீர்கள்
நான் நல்ல பசியிலிருக்கிறேன்
என் வாய்தான் தைக்கப்பட்டிருக்கிறதே !