Thursday, April 24, 2014

பால் பற்களின் மம்முட்டி நடனம்

பால் பற்களின் மம்முட்டி நடனம்

ஆடி வருகுதல் கண்டால் என் ஆவி தழுவுதடி… சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா…என்று பாரதி பாடிய கண்ணன் பாட்டுத்தான் எத்தனை உணர்வுபூர்வமானது ! கண்ணனை பிள்ளையாக பாவித்து பாரதி பாடியதும்கூட தமிழுக்கு புதிது கிடையாது, அது நம் பக்தி இலக்கியத்தின் தொடர்ச்சி. கு.அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு ஆகிய புகழ் பெற்ற கதைகளும் நினைவுக்கு வருகிறது. பிள்ளைத்தமிழ் என்ற ஒரு வகைமையே தமிழில் இருந்திருக்கிறது.

ஆனால், முகுந்த் நாகராஜனுக்குப் பிறகுதான் குழந்தைகளை வைத்து கவிதைகள் எழுதுவது, மிகவும் பரவலாகி இன்று எழுதி, எழுதி குவிக்கப்படுகின்றன.ஒவ்வொரு நாளும் தமிழ் நாட்டில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைவிட, குழந்தைகளை வைத்து எழுதப்படும் கவிதைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதை வணிகப்பத்திரிக்கைகளில் வரும் கவிதைகளைப் பார்த்தால் ஏற்றுக்கொள்வீர்கள். பாடப்படுகிறார்கள் என்கிற பேரில் இருவரும் சம அளவுக்கு கவிதைகளில் படாத பாடுபடுகிறார்கள். வணிகப்பத்திரிக்கைகளில் பக்கங்களை நிரப்பி, வாசக மனதை நீவிவிடும் இறகுகளாகவும், கிச்சு கிச்சு மூட்டும் பொழுதுபோக்கு அம்சமாகவும் ஆகிவிட்டிருக்கிறது குழந்தைகள் பற்றிய கவிதைகள். எத்தனை முறை கிச்சு கிச்சு மூட்டினாலும், கூசத்தானே செய்கிறது. என்னதான் எழுதியெழுதிக் குவித்தாலும், அவைகளுள் சிலவற்றில் கொஞ்சம் கவிதையிருக்கத்தான் செய்கிறது. ஏனெனில், அவை குழந்தைகளை பாடுகின்றன என்பதனால். ஒரு கவிதைக்குள் குழந்தை வந்துவிட்டாலே அதில் கொஞ்சம் கவிதை வந்துவிடுகிறது என்று நான் முன்னமேயே எழுதியிருக்கிறேன்.

பெரியவர்கள் அளவுக்கு குழந்தைகள் அறிவு முதிராதவர்கள். ஏனெனில், அறிவு நாள்தோறும் வளர்வது. ஆனால், புத்திசாலித்தனம் பிறப்பிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. குழந்தைகள் புத்திசாலிகள். இந்த இரண்டும் இணையும் புள்ளியில் நின்றுகொண்டுதான் குழந்தைகள் பெரியவர்களை வசீகரிக்கின்றன. மம்முட்டியின் நடனம்போல. அதனால்தான், கோயிலில் தோப்புக்கரணம் போடத் தெரிந்திருக்கும் அதேவேளையில், அல்லாவுக்கான வழிபாட்டுமுறை அதுவல்ல என்ற பேதம் தெரியவில்லை குழந்தைக்கு. அம்மா சாமிகிட்ட போயிட்டா என்று செத்துப்போனவளைப் பற்றி பெரியவர்கள் சொல்லும்போது, அப்படின்னா சாமி அம்மாவுக்கும் முன்னாலயே செத்துப்போச்சா என்று கேட்கிறது குழந்தை.

இன்னமும் சரியாக அறிந்துகொள்ளாமல் பரிச்சயத்தால் நாம் கடந்துவிட்டவைகளை, குழந்தைகள் புதிய பார்வையால் பார்த்து சிந்திக்கின்றன. நம்மையும் சிந்திக்கத் தூண்டுகின்றன. அறிவு என்கிற பேரால் நாம் கொண்டிருக்குக்கும் எச்சரிக்கைகளை, சூதுகளை சுட்டிக்காட்டி நம்முடைய அறிவை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்குகின்றன.குழந்தைகளின் பெருவாழ்வு மீண்டும் குழந்தைகளாக ஆகிவிடமுடியாத ஏக்கத்தை பெரியவர்களுக்கு உண்டாக்குகின்றன. குழந்தைகள் விரைவாகக் கற்றுக்கொள்கிறார்கள். பெரியவர்களுக்கும் கற்றுத் தருகிறார்கள்.ஒருவகையில், அவர்கள் கற்றுக்கொண்டே, வளர்வதில்தான் துயரமே தொடங்குகிறது.

சிறந்த தரிசனங்களை அளிக்கும், கவித்துவ தருணங்களை குழந்தைகள் ஏராளமாக அன்றாடங்களில் அருளிக்கொண்டேயிருக்கிறார்கள். அவைகளை கவிஞனின் விழிப்புணர்வோடு மொழியில் கைப்பற்றியவையே ஜானின் கவிதைகள். சில கவிதைகள் காட்சிகளை, நிகழ்வுகளை மட்டுமே படம்பிடித்து பதிவு செய்கிறது. சில கவிதைகளில் கவிஞரின் கோணமும் கலந்துவிடுகிறது. அப்படி கவிஞரின் கோணம் கலந்த கவிதைகளில் ’தேடுங்கள், உப்புத்தாரைகள், சிலைகளை இயக்குதல் போன்ற கவிதைகள் குறிப்பிடத் தகுந்தவை.

ஒரு இளம் தகப்பனாக பட்டறிவோடு எழுதப்பட்ட ஜான் சுந்தரின் முதல் தொகுப்பு இது. எனவே, இவருக்கு கவிதைகளோடு உறவு என்பது இளம் தகப்பனான பிறகுதான் என்றே எண்ண நேர்கிறது. குழந்தைகளாலேயே லேசாக கவிவாடை கமழத் தொடங்கியவராகியிருக்கிறார். ஆனாலும், இலக்கியம் பற்றிய புரிதலில் தன்னுடைய வயதுக்குரிய பக்குவமும், முதிர்ச்சியும் நன்கு கொண்டவராகவே இருக்கிறார். கவிதையுலகில் இன்றைக்கு தன்னுடைய இடம் எது என்பதை தெளிவாகவே தெரிந்துகொண்டு, அதை வெளிப்படையாய் அறிவித்துக்கொள்ள நெஞ்சில் துணிவும் நேர்மைத் திறமும் கொண்டிருக்கிறார். 13 ஆம் பக்கத்தில் வேதாகமத்திலிருந்து எடுக்கப்பட்டு மேற்கோளாக்கியிருக்கும் வரிகள் இதைத்தான் நமக்குத் தெரிவிக்கிறது. அதில் ஒரு வரி

…முழு நிலவின் இரவை நீங்கள் கொண்டாடுங்கள். அதேசமயம் சிறு மின்மினிப்பூச்சி, தன் வாழ்வைப் பாடவும் அனுமதியுங்கள்…

கம்பீரமான இந்தச் சரணாகதி, தொகுப்பு குறித்து நான் எழுப்பவிருந்த குறைபாடுகளை பெரிய அளவில் ஊமையாக்கிவிட்டது. குழந்தைக்கு எல்லாமாகித் தாங்கும் தாயைவிட நான் நன்கு தெரிந்தவன்போல் கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பது கேலிக்குரியதே என்று சொல்கிற மனம் கொண்டவராகவே ஜான் இருக்கிறார்.


ஜான் ஒரு சிறந்த பாடகர். இசைப்பள்ளி நடத்தும் தொழில்முறை இசைக்கலைஞர். எப்போதுமே ஒருவரின் இளமைப்பருவப் பாடல்கள்தான் மிகவும் நெருக்கமாகவும், எப்போதும் கூடவே வருவதாகவும் இருக்கும்.எனக்கும் பிடித்த கவிஞர் ’இசை’க்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட ஒரு கவிதை , கூட்டு ஸ்வரங்களின் ஈரம் மற்றும் பல கவிதைகளில் ஜான் சுந்தரின் இசையீடுபாட்டை காணலாம்.


முதல் வாசிப்பில் என்னைக் கவர்ந்த சில கவிதைகளை குறித்துவைத்திருந்தேன். இரண்டாவது வாசிப்பில் அவை என்னை ஏன் கவர்ந்தன என்ற ஆச்சரியத்தோடு கேள்வி எழுப்பிப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு சின்ன நெகிழ்ச்சி, மன சஞ்சலம் பழகிவிட்டதாகும்போது அதன் வீரியத்தை இழந்துவிடுகிறது. ’கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை’ என்பது ஒரு திரைப்பாடலின் வரி.

ஜானின் கவிதைகள் என்னை எந்தளவுக்கு அசைத்தன என்பதை சொல்லுகிறேன். படித்தவுடன் துள்ளி எழுந்து உட்காரவைக்கவில்லை அவை. உதடு பிரியாமல் ஒரு புன்முறுவலை உத்திரவாதத்தோடு அளித்தது.
பரோட்டா மாஸ்டரின் கனவில் விரியும் ஒரு காட்சியாக வருகிற, துவையல் அரைக்கும் தருணங்களில் புறங்கையால் கூந்தல் திருத்தும் கணப்பொழுது… நம்மையும் வசீகரிக்கிறது.

பூக்களிலிருந்து ரோஸ்மில்க் வாசம் வரும் அழகிய முரண்கள் கொண்ட குழந்தைகளின் உலகத்தால் ஆன கவிதைகளால் நிறைந்த தொகுப்பே ஜான் சுந்தரின் சொந்த ரயில்காரி. என்றாலும், அவற்றோடு மட்டும் நின்றுவிடாது தமிழ்ஈழம்,சுற்றுச்சூழல் போன்றவற்றில் அக்கறை கொண்ட பொதுவாக சில கவிதைகளும் எழுதியிருக்கிறார்.

வருங்காலங்களில் ஜானிடம் நாம் விரும்பும் வகையில், நிறைய எதிர்பார்க்கலாம் என்பதற்கு சான்றாக புரூஸ்லீ கவிதை நம்பிக்கை தருகிறது. சராசரியான இனப்பெருக்க பிராணியாக மட்டுமே தேங்கிவிடாமல், ஏதாவது மேற்கொண்டு செய்ய விரும்புகிறவனாக , பகுத்தறிவை பயன்படுத்த துடிப்பவர்களாக இருக்கும் மனிதர்களாலே உலகம் பல பயன்களையும், பாதைகளையும் அடைந்திருக்கிறது . ’ரொம்ப சுமாராகப் பாடுபவன்’ என்கிற கவிதை அடையாளம் தேடும் ஒருவனின் இந்தத் துடிப்பைத்தான் எனக்கு உணர்த்துகிறது. ஆனால், தனக்கு எது நன்குவரும், எது அருளப்பட்டிருக்கிறது என்பதை நன்றாக அறிந்து, அதில் ஈடுபடுபவனே பிரகாசிக்கிறான். இவை போன்ற மேலும் சில நல்ல கவிதைகளும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

கவிஞானாக விளங்குவதற்கு பல காரணிகள் தேவைப்படுகிறது. அதில் அன்பு ஒரு முதன்மையான காரணி. அதனால்தான் பெரும்பாலும், பதின்வயதில் காதல் கவிதைகளுடன் கவிதைகள் எழுதத் தொடங்குகிறார்கள். ஈர நிலத்தில்தான் விதைகள் முளைக்கின்றன.. அன்பு நெஞ்சமும், அனுபவமும், மொழியறிவும் ஜான் சுந்தரை கவிஞராக்கியிருக்கிறது.

Monday, April 14, 2014

பிரம்மராஜன் என் கனவில்

நேற்றிரவு பிரம்மராஜன் என் கனவில் வந்தார்.(சத்தியமாய் வந்தது பிரம்மராஜனேதான். எனவே பெயருக்கு வேறு எதுவும் கிளை காரணங்கள் கிடையாது) . சோலையில் நீரோடை ஒன்றின் அருகில் எதிரெதிரே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். கைகள் நீரோடையை துழாவிக்கொண்டிருந்தன.கால்களை ஒருக்களித்து ஒன்றன்மேல் ஒன்று போட்டு ஒருக்களித்து அமர்ந்திருந்தார். கண்ணாடி அணிந்த மழித்த முகத்தில் புன்னகை., ஜென் மயில் பற்றிய பேச்சு வந்தது. கவிதையைச் சொன்னார்.புரியவில்லை.இப்படிச் சொல்கிறேனே என்று தொடர்ந்தார். கவிதையாகவே சொன்னது கனவு கலைந்ததில் எனக்கும் மறந்துபோனது. கவிதை பேச்சு போலவே இருந்தது. பேச்சு கவிதையாகவே இருந்தது. ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் பறந்து போய்விட்ட ஒரு பறவையை தன் மனைவியுடன் தான் கண்ட அனுபவத்தைச் சொன்னார்.அதுவொரு சிட்டுக்குருவியா அல்லது ஊதா தேன்சிட்டா அல்லது இன்னமும் பெயர் தெரியாத ஒரு பறவையா என்று முடிவுக்கு வரமுடியாத நிலை அது. பறந்துவிட்ட பறவை நெஞ்சுக்குள் பல்வேறு வண்ணங்களிலும், தோற்றங்களிலும் இன்னமும் படபடத்துக்கொண்டேயிருக்கிறது. நான் அதற்கு ஒரு பெயரிட்டேன்.அதுதான் ஜென் மயில் என்றார். என்னருகில் படுத்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு எழுத்தாளர் உங்கள் அனுபவமும், விவரணைகளும் மிகவும் தோரணையாக தோற்றம் காட்டுவதுபோல் இருக்கிறது கவிதை என்றார். உண்மைதான். என்றாலும்,, அவை இவ்விடத்தில் மிகவும் இயல்பானதுதான் என்றேன் என்னைக் காட்டி, புருவங்களை உயர்த்தினார். ஹீ காட் இட் என்று சொன்னதாகவும் நினைவு. அவர் சொன்னது உண்மைதான்.

( ஜென் மயில் கவிதைக்கும், மேற்கண்ட பதிவிற்கும் தொடர்பில்லை)

Wednesday, April 9, 2014

மன்மதன் பா(ட்)டுகள்

மன்மதன் பா(ட்)டுகள்

1.
நரம்புகள் புடைக்க
பிசிறு தட்டிவிடாதபடி
சுதி மாறாமல்
மூச்சைப்பிடித்துக்கொண்டு
கவனத்துடன் பாடுகிறான் மன்மதன்
காமத்துப்பாடலை
இரவின் அமைதியில்
ஸ்டீரியோஃபோன் துல்லியத்துடன்
கண்கள் மூடி தியானித்து
நொடி
நொடி யாய்
ரசித்துக்கொண்டிருக்கிறாள் ரதி

2.
தன்னுடைய தாகத்தைத் தீர்த்துக்கொள்ள
தடாகத்தில் இறங்கிய மன்மதன்
சொந்தத் தாகத்தை மறந்து
இப்போது தடாகத்தின் தாகத்திற்கு
அல்லாடிக் கொண்டிருக்கிறான்
3 அ.
தொல்யுத்த விளையாட்டின்
முதல் சுற்று முடித்து
தளர்ந்து போய்க் கிடக்கிறான் மன்மதன்
உடனடி அடுத்த சுற்றுக்கு
உற்சாகமாக தயாராகிவிட்டாள் ரதி
3.ஆ
ரதியின் மூன்று சுற்றுக்கள்வரையும்
தன் முதல் சுற்றை நீட்டித்து வெல்ல
அவ்வப்போது சட்டத்திற்கு புறம்பாக
ஊக்க மருந்து உட்கொள்கிறான் மன்மதன்

4.
உப்புப் பெறாத
சமையலறைக் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட ரதி
மன்மதனை பழிவாங்குவதற்காக
படுக்கையறையில் கற்சிலையாகிக் கிடந்தாள்
முதன்முதலாக
கற்பழித்த அவமானத்திற்கு
ஆளானான் மன்மதன்