Saturday, June 26, 2010

புதிய வெளிகளைத் தேடி..- சு.தமிழ்ச்செல்வி


அண்மையில் நான் படித்தவற்றுள் நெஞ்சில் நிலைத்து நிற்கும் அனுபவமாய், மிகவும் குறிப்பிடத்தகுந்ததாய் அமைந்த நாவல் சு.தமிழ்ச்செல்வி அவர்கள் எழுதிய ’மாணிக்கம்’. இதற்குமுன் இவரது ஒரேயொரு சிறுகதையை மட்டும் படித்திருந்தேன்.


தனது முதல் படைப்பாகவே ஒரு நாவலை எழுதியிருப்பது, அந்த நாவலும் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு பெற்றது ஆகியவற்றினால் ஏற்படும் பிரமிப்பு சு.தமிழ்ச்செல்வி அவர்களின் மாணிக்கம் நாவலைப் படித்தபோதும் எழுந்தது. எந்த மேதமைத்தனத்தையும் வெளிக்காட்டாமல் எதார்த்தமான அசலான எழுத்து இவருடையது.



இலக்கியத்தில் அறியப்படாத, பதிவாகாத பகுதியான பழைய கீழைத்தஞ்சை பகுதியான , திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள கற்பக நாதர் குளத்தைச் சார்ந்தவர் இவர். இப்பகுதி கடலோர கிராம மக்களின் வாழ்வை அவர்களது வட்டார மொழியிலேயே பதிவு செய்து ஒரு புதிய வெளியை தமிழுக்குக் கிடைக்கச் செய்திருக்கிறார்.


மீன் பிடிக்க தெற்கேச் செல்லும் மனிதர்களின் கதை. தமிழகம் முழுவதற்கும் கிழக்கில்தானே கடல்? என்கின்ற வினாவோடு வரைபடத்தில் தேடியதில், மாணிக்கம் நாவலில் வரும் கடலோர கிராமங்கள் நாகப்பட்டணம் பகுதியில் மூக்குப் போன்று நீட்டிக்கொண்டிருக்கும் பகுதியில் அமைந்துள்ளவை. அங்கிருப்பவர்களுக்கு தெற்கில்தான் கடல். இந்த நாவலில் வருபவர்களும் மீனவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களல்ல. விவசாயம் பொய்த்துப்போய், வறுமையின் காரணமாக மீன் பிடிக்க நேர்ந்தவர்கள். முத்தரையர் சமூகத்தினர் என்பதாக அறியமுடிகிறது. தமிழகத்தின் ஏதோவொரு மூலையில் இருந்துகொண்டு நான் அறிந்திராத ஒரு பகுதியை, நிலத்தை, மக்களை , அவர்களின் வாழ்க்கைமுறையை, சம்பிரதாயங்களை, வட்டாரமொழியை, வாழ்வனுபமாகவே பெறுகிற வகையில் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.


விரிவான கதைசொல்லலும், தகவல்களின் களஞ்சியமாகவும் அமைந்துள்ளது நாவல்.

ஒரு படைப்புக்கு செவ்வியல் தகுதி எவ்வாறு கிடைக்கிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஆனால், செவ்விலக்கியம் என்ற அடையாளப்படுத்தப்பட்ட, நான் படித்திருக்கிற சில நாவல்களோடு ஒப்பிட்டுக் கொள்கையில் மாணிக்கம் நாவலை செவ்வியல் என்றே சொல்வேன்.
அவருடைய படைப்புகளைப் பற்றி அவரே எழுதிய கட்டுரையை இங்கே வெளியிடுவது நான் சொல்வதைவிட பலமடங்கு சிறப்பாகவும், பொருத்தமாகவும் இருக்கும் என்பதால் அக நாழிகை 2 வது இதழில் வெளியான கட்டுரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கட்டுரையை அளித்துதவிய அகநாழிகை ஆசிரியர் பொன்.வாசுதேவன் அவர்களுக்கு நன்றி.

புதிய வெளிகளைத் தேடி..
சு.தமிழ்ச் செல்வி

தமிழ் படைப்புகளில் புதி களங்களைத் தேடும் முயற்சியில் உத்வேகத்தை ஏற்படுத்திய போக்குகள் இந்திய/தமிழக அளவிலான அரசியல், கலாச்சார நிகழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதை அடையாளம் காண இயலும், அம்பேத்கர் மற்றும் பெரியார் எனும் இரு பெரும் அரசியல்/சமூக சக்திகளின் இயக்கங்கள் இத்தகைய மாற்றங்களுக்கு வழிவகுத்தன என்பதை நாம் மறந்து விட முடியாது. இந்தியச் சமுதாயத்தில் கல்வி பெறும் வாய்ப்பு சாதி மற்றும் பால் அடிப்படையில் மறுக்கப்பட்ட நிலையில் தங்களது அயராத போராட்டங்களின் மூலம் அந்நிலையை மாற்றி அமைத்தவர்கள் இவர்கள்.

இவ்விரு ஆளுமைகளின் நூற்றாண்டு விழாக்களும் இந்திய அளவில், பண்பாட்டுத் துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்கள் நிகழ்த்தின. கல்லி சனநாயகப்படுத்தப்பட்டதின் வாயிலாகவும், சமூக நீதி அடிப்படையில் வழங்கப்பட்டதன் வாயிலாகவும், நிகழ்ந்த மாற்றம் இது. குறிப்பாக, தலித்துகள்,பிற ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் பெண்கள் இவர்களது கலாச்சார வழிபாடுகள் ஒரு பெருவெள்ளமாகப் பொங்கி எழுகின்ற நிலைமை நாம் காண்கிறோம்.

இந்தியா எனும் பெரும் தேசியம் உள்ளடக்கியுள்ள பல்வேறு தேசிய இனங்களிலும் உள்ள வெளிச்சத்துக்கு வராத பல இனக்குழுக்களிலிருந்து இன்று பலர் எழுத வருகின்ற அற்புதம் நேர்ந்துள்ளது. ஏகாதிபத்தியமும், இந்திய தேசியமும் என்னதான் ஒற்றைக் கலாச்சாரத்தை கட்ட முனைந்தாலும் அவ்வாதிக்கத் தளைகளைத் தகர்த்து உயிர்த்துடிப்புள்ள தன்னுணர்வு பெற்ற இச்சமூகக் குழுக்களின் உயிரோட்டமுள்ள இயக்கம் தம்முடைய இருப்பை, தம்முடைய அடையாளத்தை வெளிப்படுத்தவே முனையும் என்பது இலக்கியக் களத்தில் இன்று நிரூபணம் ஆகியுள்ளது.

சாதிய மேலாண்மை மற்றும் ஆணாதிக்கச் சொல்லாடல்கள் நிரம்பிய கதையாடல் பரபரப்பாக விளங்கிய தமிழ் இலக்கிய வெளியின் எல்லைகள் இன்று பல்வேறு ஒடுக்கப்பட்ட சமூதாயத்தைச் சார்ந்த படைப்பாளிகளால் விரிவு படுத்தப்பட்டுள்ளதைக் காண்கிறோம், இப்படி தமிழ் இலக்கியத்தின் பன்முகத்தன்மைக்கு வலுச்சேர்த்த வகையில் பெண் எழுத்துக்கள் முக்கியமானவை. கதையாடும் உரிமையை இன்று பாலியல் தொழிலாளிகள், திருநங்கைகள் என விளிம்பு நிலை சமூகத்தினர் கைப்பற்றியிருப்பது நம் செந்தமிழ்த் தமிழுக்கு மேலும் அழகும், வலிமையும் சேர்க்கக்கூடியது.

தமிழ் இலக்கியச் சூழலில் அதிகம் வெளிச்சத்திற்கு வராத சில இனக்குழுச் சங்கங்களின், பண்பாட்டு அரசியல் வெளியை, அச்சமூகத்து உழைக்கும் பெண்களின் அகவெளியை, உடல் உழைப்பைக் கோரி நிற்கும் நில வெளியை, இக்குழுவில் புழங்கும் மொழி வெளியை எனது புதினங்களின் வழி கவனப்படுத்தியிருப்பதை குறிப்பிடத்தக்க அம்சமாகக் கருதுகிறேன்.

- 2


மாணிக்கம், அளம், கீதாரி, கற்றாழை, ஆறுகாட்டுத்துறை கண்ணகி என இதுவரை ஆறு புதினங்களை தமிழ்ப்புனைவிலக்கியத்திற்கு அளித்துள்ளேன். இவற்றில் மாணிக்கம், அளம், கற்றாழை ஆகிய மூன்று புதினங்களும் தமிழக இலக்கிய/அரசியல் வெளியில் அதிக அளவில் பிரதிநிதித்துவம்பெறாத முத்தரையர் சமூகத்தின் வாழ்நிலையை, பண்பாட்டை விவரிப்பவை. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி போன்ற பகுதிகளில் பெருமளவில் வசிக்கும் இவர்கள் ஒடுக்கப்பட்ட இனக்குழுவாக அடையாளம் காணப்படுவார்கள். ஒப்பீட்டளவில் தமிழகத்தில் பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அடைந்துள்ள அரசியல், சமூக, பொருளாதா உயர்வுகளை இவர்கள் இன்னும் எட்டவில்லை.

தமிழகத்திலுள்ள திராவிடக் கட்சிகளிலோ, பிற கட்சிகளிலோ இவர்களது எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் இவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. வியாபாரம், கல்வி போன்ற துறைகளிலும் இவர்கள் பின்தங்கியே உள்ளார். ஏழ்மையும், உழைப்பும் நிரம்பிய இவர்ளகது நிறை வாழ்வு தமிழ் இலக்கியத்தில் உரிய வகையில் பதிவு செய்யப்படாமல் இருந்தது.

இதுபோலவே, இராமநாதபுறம் பகுதிகளிலிருந்து தஞ்சை, திருச்சி, கடலூர் என தமது ஆடுகளுக்கான மேய்ச்சல் நிலங்களைத் தேடி இடம் பெயர்ந்து நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும் யாதவர் (அ) கோனார்களது வாழ்வியல் பதிவுதான் கீதாரி. 21 ம் நூற்றாண்டு அடைந்துள்ள அபார வளர்ச்சியின் சிறு இழையும் இவர்களை தீண்டிப்பார்க்கவில்லை. தமது நிலங்களிலிருந்து துண்டிக்கப்பட்ட அகத வாழ்வும், பிறரது நிலங்களையும், அரசு காடுகளையும் மேய்ச்சல் நிலங்களாகக் கொண்ட சார்பு வாழ்க்கை உண்டாக்கும் மனப் பதற்றமும் இவர்களிடம் ஒருவித அடிமை மனநிலையை கட்டமைத்திருக்கிறது. புற உலகில் ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சியோ, நகர மயமாக்கலோ இவர்களது வாழ்வில் எவ்விதத்திலும் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. கி.ராவின் ‘கிடை‘ க்குப் பிறகு கீதாரியில் விரிவான அளவில் இவர்களது வாழ்க்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆறுகாட்டுத்துறை வேதாரண்யம் அருகிலுள்ள ஒரு நெய்தல் கிராமம். இங்கு மீன்பிடித்து வாழும் வன்னியர்கள் பிற பகுதியில் வசிக்கும் வன்னியர்களிடமிருந்து தனிமைப்பட்டுள்ளனர். கவிஞர். பழமலய் இப்புதினத்திற்கு எழுதியுள்ள விமர்சனத்தில் இவர்களை மீன் பள்ளிகள் என்றழைக்கிறார். இவர்களிடம் பெண் எடுக்கவோ, பெண் கொடுக்கவோ பிற வன்னியர்கள் வருவதில்லை. இக்குழுக்களுக்குள் அகமண முறைதான் வழக்கிலிருந்தது வருகிறது. இத்தகையதொரு குறுங்குழு வாழ்வும் தமிழ் இலக்கிய வெளிக்கு புதியதாகவே கருதப்பட வேண்டும்.

வடமாவட்டங்களில் தலித் மற்றும் வன்னியச் சமூக பிண்ணனியில் உருவானது. கண்ணகி புதினம், சாதி/பால் ரீதியாக ஒதுக்கப்பட்ட பெண்ணின் ரௌத்ர வெளிப்பாடுதான் இப்புதிய கண்ணகி.

இப்படைப்புகளில் இச்சமூகத்தினரின் அரசியல், சமூக, பண்பாட்டு நிலைகள் புதின அழகியலையொட்டி, விவரணத் தன்மையற்று கலைப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களது இல்லச் சடங்குகள், பொது விழாக்கள், வழிபாட்டு முறைகள், ஏராளமான சொலவடைகள், தொன்ம நம்பிக்கைகள், என இப்புதினப் பரப்பில் நிரம்பியிருக்கும் தரவுகள் தமிழ் வாழ்வின் பன்முனத் தன்மையை அதன் செழித்த கூறுகளை உள்ளடக்கியிருப்பவை.

- 3

எனது புதினங்கள் யதார்த்த வாத வகைமைக்குள் அமைந்திருந்தாலும் அவை தூலமாக நாம் காணும் யதார்த்தங்கள் மட்டுமன்று. அனுபவத்தின் வாயிலாக கல்வியின் வாயிலாக எனக்குக் கிட்டியுள்ள சமூக அரசியல் பார்வைகளின் வழியே சில புதிய யாதார்த்தங்களை இப்புதினங்களில் உருவாக்கியுள்ளேன். இதன் மூலமே ஒரு கதை சொல்லி எனும் நிலையிலிருந்து ஒரு புதினப் படைப்பாளியாய் நான் மலர்ந்திருப்பதாக நம்புகிறேன்.

கதை சொல்வதில் பாரம்பரியமும், தொடர்ச்சியும் உள்ள தமிழ் மொழி எனக்கு மிகவும் ஒத்துழைப்பை வழங்குகிறது. நமது மரபான கதை சொல்லும் முறை இன்று பரிட்சார்த்தமான கதை கூறும் முறையின் சாத்தானக் கூறுகளை உள்ளடக்கியிருக்கிறது. புனைவும், மாயா வினோதங்களும், மர்மங்களும் நிரம்பிய நமது கதையாடும் முறைக்கு இணையானது. இத்தகையதொரு கதையாடல் முறையில் புனைவை வளர்க்கும் போது மனித குலத்தை முன்னெடுத்துச் செல்லும் புதிய மதிப்பீடுகளை ஊடுபாவாக புனைவு வழி நெய்கிறேன்.

உதாரணமாக, பெண்கள் ஒரு கம்யூனாக வாழ முடியும் எனும் ஒரு இலட்சியத்தை கற்றாழையில் நிலவும் யதார்த்தமாக கட்டமைத்திருக்கிறேன். ஒரு கணவன் இரு மனைவி என்பதை இயல்பாகக் கருதும்போது ஆறுகாட்டுத்துறை சமுத்திரவல்லியின் நிலைபாடும் கண்ணகி புதினத்தில் வரும் கண்ணகியின் முடிவுகளும் இயல்பானதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனும் மனப் பழக்கத்தை ஏற்படுத்தும் விழைவோடு கதைப் பின்னலை உருவாக்கியுள்ளேன்.

யதார்த்த வாத படைப்பில் ஒரு புனை கதையாளருக்கு இத்தகைய இலட்சிய வகை யதார்த்தங்களை கட்டுவது சிக்கலானதும், சவாலானதும் ஆகும். இது கத்தி முனையில் நடப்பதைப் போன்றது. புது வகை எழுத்தில் இப்புதிய மதிப்பீடுகளை குறியீடாகக் கூறி விட முடியும். ஆனால், யதார்த்த வகைமையில் நடைமுறைக்கு இந்நிகழ்வு ஒத்துவருமா எனும் கேள்வி வாசக மனதில் எழாத வண்ணம் இப்புதிய யதார்த்தை கட்டமைப்பது ஒரு புதின ஆசிரியருக்கு எழக்கூடிய சவால். இந்தச் சவாலை கற்றாழையிலும், ஆறுகாட்டுத்துறையிலும் வெற்றிகரமாகக் கடந்து வந்திருப்பதாகவே நம்புகிறேன். பரிட்சார்த்தமான புதிய வடிவங்களுக்கு மத்தியில் யதார்த்த வகை படைப்புகள் தன்னை புதுப்பித்துக் கொள்வதற்கு இவை முதன்மையான காரணங்களாக அமைகின்றன.

புதிய உள்ளடக்கங்கள், புதிய மதிப்பீடுகள் இலட்சிய வாத யதார்த்தங்களை நடைமுறை யதார்த்தங்களை சித்தரிப்பது போன்ற காரணிகள் யதார்த்த வகைமைக்கு புதிய அழகியலை அளிக்கின்றன.

- 4 -



இயற்கையை முன் எப்போதையும் விட நாம் வாழும் காலத்தில் மூர்க்கமான முறையில் அழித்து வருகிறோம். வெட்டவெளியினை மெய்யெனக் கொண்டாடியது நம் தமிழ் மரபு. ஆனால், அவ்வெயிளில் இயற்கையின் கருணையை அபகரித்துக் கொண்டு செயற்கையின் நஞ்சை பரப்பி வருகிறோம். இயற்கையோடு இயைந்த வாழ்விலிருந்து இன்று இயற்கைக்கு திரும்புவது பற்றி விவாதித்து வருகிறோம். மலைகள், காடுகளை அழித்து தார்ச்சாலைகள், இருப்புப் பாதைகள், கனிச் சுரங்கங்கள் என முன்னேறிக்கொண்டிருக்கிறோம். விளை நிலங்களெல்லாம் கான்கிரீட் காடுகளாகிவிட்டது. நகரமயமாக்கல். பூச்சிக் கொல்லி மருந்துகளும், செயற்கைக் கோளின் மின் காந்த அலைகளும் போட்டி போட்டுக் கொண்டு சிற்றுயிரிகளை பலிவாங்கி வருகின்றன.

உயிர்ச் சமநிலை, தட்ப வெட்பச் சமநிலை குலைந்து பிரபஞ்சத்தின் எதிர்காலம் அச்சமூட்டுவதாக இருக்கிறது. இத்தகையதொரு சூழலில் தான் இயற்கையின் அருமையை, அது தரும் கொடைகளை, நம் நோய் தீர்க்கும் மூலிகைகளை, விவசாய வாழ்வின் மகத்துவத்தை, விவசாயத்தோடு இணைந்த கால்நடை வளர்ப்பின் அவசியத்தை, கடல் சார் வெல்வங்களை எனது படைப்புகள் கலை அழகுகளாய் மிளிரச் செய்திருக்கின்றன.

இயற்கை நமக்குத் தாய் போன்றவள். அவள் தன் குழந்தைகளுக்கு ஒரு போதும் தீங்கு செய்வதில்லை. அவளது தொப்பூள் கொடிச் சொந்தங்கள் நாம். அளம் புதினத்தில் மிகக் கொடிய பஞ்சகாலம் வருகிறது. பசியும், பட்டினியும் தலைவிரித்தாடும் கோரச் சூழலில் இயற்கையின் கடைசி கருணையாக அதன் வறண்ட நிலத்தில் இன்னும் சில உணவுப் பொருட்கள் மிச்சமிருக்கவே செய்கின்றன. கொட்டிக் கிழங்கு, பனங்கிழங்கு, சாரணக் கீரை, தொம்மட்டிப் பழம், பலாப்பழம் என அப்பஞ்சத்திற்கு தன் பிள்ளைகளுக்குத் தர நிலத்தாய் தன்னிடம் கீதங்களை வைத்திருக்கவே செய்கிறாள்.

நாமோ அமுதசுரபிகளையும் பிச்சைப்பாத்திரங்களாக்குபவர்கள். நமது ஆறுகளில் கானல் அலையடிக்கிறது. இருப்புப் பாதைகளால் பிளவு பட்ட காடுகளிலிருந்து விலகுகின்றன யானைகள். வழி குழம்பி அலையும் அவை புகை வண்டிகளால் மோதப்பட்டு உயிர்விடுவதைக் காண்கிறோம். பச்சையத்தை இழந்து பிளாஸ்டிக் பந்தாகி விட்ட இப்பூவுலகை அதன் தொப்பூள் கொடி நிணத்தோடும், தாய்ப்பாலின் கவுச்சி வாடையோடும் என் புதினங்களில் நிறைத்திருக்கிறேன். இயற்கையின் ரகசியத்தை, அதன் ஆற்றலை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என ஒரு தாய்க்குரிய பரிவோடு இயற்கைக்கும், மனிதர்க்குமான நெருக்கத்தை, உறவை தொடர்ந்து கவனப்படுத்தி வருகிறேன். இயற்கைச் சமநிலை குலைந்து அதன் பேரிடர்களால் மனித குலம் சந்திக்கும் அழிவுகளிலிருந்து மீள இயற்கையுடனான நேசத்தை வலுப்படுத்துவது அவசியம். இதற்கு எனது படைப்புகள் உதவும் எனும் நம்பிக்கை எனக்கிருக்கிறது.

பாலை நீங்கலாக குறிஞ்சி, மருதம், நெய்தல் இந்நால்வகை நிலக்காட்சி படிமங்கள் விரவிக் கிடக்கும் எனது ஐந்து புதினங்கள் புவி வெப்பமடைதல் எனும் நவீன நெருக்கடியை விவாதிப்பதற்கான களங்களாகத் திகழ்வதை வாசகர்களும், விமர்சகர்களும் உணர முடியும்.

விவசாய நிலம், உப்பளம், மீன் பிடி கடல், மேய்ச்சல் நிலம், எனும் உழைப்புக் களங்களில் விரிகிறது. பெருமளவில் என் புதினப்பரப்பு. உழைப்புக் களங்களும், அதில் நிகழும் வேர்வைப் பாடுகளும், களப்பயணத்தின் மூலம் சேகரித்தத் தகவல்கள் அன்று. இயற்கையோடு இயைந்து பெற்ற ஒரு விவசாயக் குடும்பத்துப் பெண்யின் வாழ்வியல் படிப்பிணைகள் இவை. கடலோரச் சிற்றூரின் உப்புக் காற்றைச் சுவாசித்து வளர்ந்தது என் உயிர். அதன் குளிர்ச்சியும், வெம்மையும், என் எழுத்தெங்கும் நிறைந்திருக்கின்றது. ஓரிரு நாட்களில் களப்பயண நேர்காணல்களினால் கிடைக்கும் தரவுகளிலிருந்து கூட ஒரு படைப்பை உருவாக்கி விட முடியும். ஆனால், ஒரு படைப்பு மேலெழும்பி வளர்ந்து பிரகாரம் கொள்வது அதற்குள்ளிருக்கும் விவரணைகளில் மட்டும் அன்று. அதற்குள் இயங்கும் உயிர்த்துடிப்பில் தான். நிலமும், நீரும், காற்றும், வெப்பமும், ஆகாயமும் இணையாது புதினத்தில் செயல்படும் மனித வாழ்வு தட்டையானது. இப்பிரபஞ்சம் அதன் சிறு அலகான மனித உடலும் இந்த ஐம்பூதங்களாலானது. எனது புதினங்களில் இந்த ஐம்பூதங்களும் பாத்திரங்களாக இயங்குகின்றன. இவ்வகையில் இயற்கை முடிவுறாத படைப்பு வெளியாக எனது படைப்புகளின் ஊடாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

- 5
வாழ்க்கை துக்கமானது என்கிறார் பகவான் புத்தர். பெண்ணின் பேசித் தீராத பெருந்துயர் என்று புனைவுகளில் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. துக்கமும் என் வெளிதான். இது எழுதியெழுதி கடக்கப்பட வேண்டிய வெளி. பெண்களுக்கு இவ்வாழ்க்கை வழங்கியிருக்கும் கவித்துவமான பரிசு துக்கம் தான். ஆறாத ரணங்களையும், தழும்புகளையும், அணிகலன்களாக மாற்றிக் கொண்டவர்கள் நமது பெண்கள்.

‘கண்ணீரை சிந்த வைக்கும் எழுத்துக்கள்‘ எனும் மேட்டிமை விமர்சனங்களை நிறையவே எதிர்கொண்டிருக்கிறேன். இங்கே பெண்ணின் கொண்டாட்டங்கள் தற்காலிகமானவை. குறுகிய ஆயுள் கொண்டவை. குடும்ப அமைப்பில் பெண்ணின் சுதந்திரம் என்பது நமது ஆணாதிக்கச் சமூகம் உருவாக்கியுள்ள அதிகார மதிப்பீடுகளின் இரக்கத்தலிருந்து கசிவதாகவே இருக்கிறது. மாணிக்கம் புதினத்தில் வரும் சொல்லாயி தமிழ்ப் பெண்களின் ஓர் ஒற்றை அலகு. அவளிடம் இவ் அவலம் மிக வாழ்வை எதிர்கொள்ளத் தேவையான ஆற்றல் நிரம்பிக் கிடக்கிறது. ஆனால், தன் குடும்பத்தின் நலன், கௌரம் பொருட்டு அவள் எல்லா இழிவுகளையும் சகித்துக் கொள்கிறாள். இத்தகைய போராட்ட குணமும், சகிப்புத் தன்மையும் அளம் புதினத்தில் சுந்தராம்பாளிடம் இருக்கிறது. ஆனால் இந்த சகிப்பு மனோபாவம் அடுத்தடுத்த வளரும் தலைமுறைகளில் குறைந்து வருகிறது.

கணவர்கள் இல்லற அறத்தை மீறும் போது குடும்பத்திலிருந்து வெளியேறுபவர்களாக அளம் புதினத்தில் ராசாம்பாளும் கற்றாழையில் மணிமேகலையும், சத்யாவும் விளங்குகிறார்கள். இனியும் பெண்ணுக்கு பூவும் பொட்டுமே மற்றும் போதுமானதன்று. சுதந்திரமும், மரியாதையும் அவசியம் என்பதைப் புரிந்து கொண்டவர்கள் இவர்கள். இவர்கள் யாரும் பெண்ணிய வாதிகள் அல்லர். சாதாரண கிராமத்துச் சகோதரிகள். கல்வி கற்காதவர்கள். வாழ்வின் வெம்மையிலிருந்து உளொளி பெருக்கியவர்கள்.

அடுத்தாக, பெண் அனுபவிக்கும் முக்கியமான துயர்களுள் ஒன்று பாலியல் வன்முறைகள். கீதாரியில் வளர்ப்பு மகளையே சிதைக்கும் கொடூரமான ஆண் வக்கிரத்தை நீங்கள் சந்திக்க முடியும். பெண்ணின் துயரை எழுதுவது இரக்கத்தை யாசித்துப் பெற வேண்டி அன்று. அது நிதர்சனத்தின் காயத்திலிருந்து பெருகுகிற குருதி ஊற்று. அதற்குத் தேவை கண்ணீர் அல்ல, மருந்து.

பெண்ணின் பெருந்துயர் எனது புனைவின் ஒரு வெளி. அது சமூகத்திலிருந்து எழுவது. அத்துயருக்கான மாற்று வெளியை சமூகத்திலிருந்தும் உருவாக்குகிறேன். செல்லாயி, சுந்தராம்பாள் போன்றவர்கள் இத்தகைய துயரில் மூழ்கியவர்கள்.

ராசம்பாள், மணிமேகலை போன்றவர்களோ துயரிலிருந்து மீண்டெழுந்து வருபவர்கள். சுதந்திரத்தின் காற்றை சுவாசிக்க இப்பேருலகையே தம் குடும்பமாக கருதுபவர்கள். மிகவும் எளிய பிண்ணனி கொண்ட இவர்களை தம் ஆதர்சமாக ஏற்றுக் கொள்வதில் எனது சக பெண்களுக்கு மன ரீதியான எவ்விற தடைகளும் ஏற்படப்போவதில்லை.
- 6
உழைக்கும் பெண்களை மையமாக வைத்து எழுதும் எனது புதினங்களில் பாலியல் வெளிப்பாடு என விமர்சகர்கள் கருதுகின்றனர். பாலியல் ஒரு இயற்கைத் தூண்டல். அதனால் விளையும் துலங்கலும் இயல்பானதே. கிராமத்து உழைக்கும் பெண்ணின் பாலியல் மீறலை நீக்கு போக்கத்தான் கூறமுடியும். படைப்பில் அவற்றை வெளிப்படையாக பேசியாக வேண்டும் என்பது கட்டாயமொன்றுமில்லை. நாம் எடுத்துக் கொள்கிற உள்ளடக்கத்திற்கு எது தேவையோ அதைச் சொன்னால் போதுமென எண்ணுகிறேன். எனது பாத்திரங்கள், என்னுடைய சகோதரிகளாக, எனது தாய்களாக, தோழிகளாக இயங்குபவர்கள். அவர்களுக்கும் பாலியல் அபிலாஷைகள் இருக்கின்றன. ஆனால், அவர்கள் தங்களுக்குள் வகுத்துக் கொண்ட இல்லற நெறிகளுக்குள் இயங்குகிறார்கள். இவ்வில்லற நெறியை கற்பு எனும் வகைபாட்டிற்குள் அடக்கிவிட முடியாது. கற்றாழை பழநியம்மாளும் ஆறுகாட்டுத்துறையில் சமுத்திர வல்லியும், கண்ணகியும், இத்தகைய புதிய இல்லற நெறியை உருவாக்குபவர்கள்தான். பெண் தன் சுதந்திரத்தைப் பாதுகாக்கத் தெரிந்தவள். சுதந்திரத்தின் பொருட்டு அவள் சுயமரியாதையை இழப்பவள் அல்லள். இவை இரண்டும் இரு விழிகள் அவளுக்கு.


பெண் தன் உடலின் தேவையை அறிந்தவள். தன் உடலின் மீது
சமூகமும், அது உருவாக்கியுள்ள பண்பாட்டு மதிப்பீடுகளும், விதித்துள்ள தலைகளை அவள் மீறுவதென்பது ஒரு ஆற்றை கடலை நோக்கி இட்டுச் செல்லும் இயற்கையின் விதியை ஒத்தது. இம்மீறலை அதன் இயல்பான தொனியல் படைப்புகளில் சொல்லி வந்திருக்கிறேன். பெண்ணாக இருப்பதால் இன்னும் உரத்த குரலில் சொல்ல வேண்டும் என்பது அவசியமில்லை.

பெண் தன் ஆன்மாவை நேசிப்பது போல் தன் உடலையும் நேசிக்கிறாள். அதே சமயம் உடலுக்காக அவள் ஆன்மாவை மீறுவதில்லை. இங்கே ஆன்மா என்பது சமூகம் உருவாக்கியுள்ள ஒழுக்க மதிப்பீடுகள் எனும் அர்த்தத்தில் நான் கூறவில்லை. பெண்ணினுடைய மனசாட்சி என வேண்டுமானால் பொருள் கொள்ளலாம். என் படைப்புகளில் இயங்கும் பாலியல் வெளி அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவோ, பெண்ணியத் தோற்றத்திற்காகவோ செயல்படுவதன்று. அது பெண்ணின் விழைவுகளிலிருந்தே உருவாக்கப்படுவது. நமது மரபு வழி அமைந்த பண்பாட்டுக் கூறுகளில் உள்ள பெண்ணடித் தனங்களை நீக்கி புதிய பெண்ணிய அறங்களை, இல்லற அறங்களை உருவாக்கக்கூடியதாக அப்பாலியல் வெளி இருக்கிறது. கீழைத் தேய சமூகத்திற்கான பெண்ணியத் தத்துவங்களை உருவாக்கும் வகையில் வலிமையான மூலாதாரங்களாக இப்படைப்புகள் எங்ஞனம் திகழ்கின்றன என்பதை இலக்கிய விமர்சகர்கள் தான் ஆய்வு செய்ய வேண்டும்.
- 7
எனது படைப்புகளின் பலமாகக் கருதப்படுவது அதன் உரையாடல்கள். அவ்உரையாடல்களை மேற்கொள்பவர்கள் எத்தகைய இனக் குழுவைச் சார்ந்தவர்களாக இருக்கின்றார்களோ அவர்களது வழக்குகளிலேயே எழுதி வந்திருக்கிறேன். மொழி என்பது கருத்தைக் கடத்தும் வெறும் ஊடகமட்டுமன்று. அது தன்னுள் தான் புழங்கப்படும் சமூகத்தின் பண்பாட்டை, அரசியலை, அறிவியலை, சூழலியலை உள்ளடக்கி வைத்திருக்கிறது. நாட்டார் வழக்காற்றில் புழங்கப்படுகின்ற தொன்மக் கதைகள், பாடல்கள், விடுகதைகள், சொலவடைகள் போன்றவை ஒரு பண்பட்ட சமூகத்தின் பழமையை, கலாச்சார வளங்களை, அனுபவத்தின் கொடைகளை கொண்டிருக்கின்றன. இத்தகைய நாட்டார் வழக்காறு இன்றி ஒரு தொன்மச் சமூகத்தின் கதையாடல் முழுயடையாது.

ஒரு மொழியின் செம்மொழித் தகுதி என்பது அது எந்த அளவிற்கு பல்வேறு வட்டார வழக்குகளை உள்ளடக்குகிறது என்பதைப் பொருத்தே அமைகிறது. தேசியப் பேரினவாதம் எவ்வாறு தனக்குள் கொண்டிருக்கும் பல்வேறு தேசிய இனங்களின் அடையாளத்தை அழித்துத் தனது ஒற்றை அடையாளத்தை நிறுத்த முயலுகிறதோ, அது போலவே ஒரு தேசிய இனத்திலிருக்கும் ஆதிக்கச் சமூகம் தனது மொழியையும், பண்பாட்டையும் அத்தேசிய இனத்தின் அடையாளமாக கட்டமைக்க முயல்வது நாம் அறிந்ததே. இத்தகைய அதிகாரப்போக்கிற்கு மாற்றாக தமிழ்த் தேசியத்திற்குள் அடங்கியிருக்கும் பல்வேறு விளிம்பு நிலை குழுக்களின் குரல்களைப் பதிவு செய்வது என்பது அதிகாரத்திற்கு எதிரான ஒரு நவீன செயல்பாடாக் கருதப்பட வேண்டும்.
0
(அகநாழிகை )

Monday, May 10, 2010

சாளரத்தில் தெரியும் வானம் - தொடர் ச.முத்துவேல்


கவிஞர் வே.ராமசாமி
புதுக்கவிதை, நவீன கவிதை என்பதெல்லாம் வகைமை சார்ந்து நாம் பகுத்துக்கொள்வதே. இரண்டிற்கும் பொருள் ஒன்றேயல்லவா. பாடுபொருட்கள், கூறும் முறைகள், வெளிப்பாட்டு உத்தி, தொனி, போன்ற பல்வேறு கவிதைக் கூறுகளின் அடிப்படையில் இவ்வகைப்படுத்துதலை வகுத்துக்கொள்கிறோம். இதழ்களும், படைப்பாளிகளும் அடையாளப்படுத்தப்படுவதுகூட இந்த அடிப்படையில்தான். இந்தப் பிரிவினை அதிக அளவில் இயங்கும் இலக்கிய வடிவம் கவிதையாகவே இருக்கிறது. சிறுகதை, நாவல் ,கட்டுரை போன்ற வடிவங்களில் இயங்கும் பல படைப்பாளிகள் இரண்டுத் தளங்களுக்கும் பொதுவானவராகவே இயங்குவதை, ஏற்றுக்கொள்ளப்படுவதை நாம் காணமுடிகிறது. அதுபோல் இவ்விரண்டு வகைமை சார்ந்த தளங்களுக்கும் பொருந்திவரும் வகையிலும், இந்தப் பிரிபினையை தகர்த்துக்காட்டக் கூடியவகையிலும் சில கவிஞர்கள் இருக்கின்றனர். அந்த வரிசையில் ஒருவராக குறிப்படத்தகுந்த கவிஞர், வே.ராமசாமி.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். குரோட்டன்கள் எனது விரல்களின் நீட்சி என்றார் பழமலய்.(குரோட்டன்களோடு கொஞ்ச நேரம், கவிதைத் தொகுப்பு). ‘எனது /நரம்பெல்லாம் /இலைகள் /அரும்பின./ இடையன்/ தன் ஆடுகளுக்கு /என்னை /கட்டுவானாக, என்கிறார் வே.ராமசாமி. கவிதை என்பது பித்து நிலை. உணர்வெழுச்சிகளாலானது. அதனால்தானோ என்னவோ காதலிக்கத்தொடங்குபவர்கள் பெரும்பாலோர் கவிதையெழுதவும் தொடங்கிவிடுகின்றனர். ராமசாமியின் காதல் அவரின் பிறந்த மண்ணான செவக்காட்டின் மீதும், அம்மனிதர்களின் மீதும், உயிரினங்களின் மீதுமாயிருக்கிறது. இந்தக் காதலை நினைத்து வியப்புறாமல் இருந்துவிடமுடியாது. பிறந்து வளர்ந்த கிராமத்தைவிட்டு பொருள்தேடி நகரத்திற்கு வந்து போராடும் ஒரு இளைஞனின் சித்திரம் இவரின் கவிதைகள் வழி நமக்குக் கிடைக்கிறது. வறட்சியான தன் சொந்த மண் வாழ்வாதாரத்திற்கு ஏதுவாகயில்லாதபோதும், அதன் மீது உயர்வான எண்ணங்களும், கசிந்துருகும் காதலும் கொண்டிருக்கும் அதேவேளை வாழ்வாதாரம் அளிக்கும் நகரத்தை , அதன் நிர்ப்பந்தங்களை, போலித்தனங்களை, பகட்டை வெறுக்கும் ஒருவராகவே இவர் எழுத்தில் தெரிகிறார். நினைவில் காடுள்ள மிருகமாய் தன் செவக்காட்டைச் சுமந்துகொண்டிருக்கிறார். இக் கவிதைகளின் மூலம் வாழ்வின் அற்புதமான உணர்வுகள், நிகழ்வுகள், தருணங்களை உள்ளடக்கிய கவிதைகள் பலவற்றை எழுதியிருக்கிறார். வேளாண்மை சார்ந்த தகவல்களும், சொற்களும், அனுபவபூர்வமான, கலைபூர்வமான, தருணங்களும் நுட்பமாக இவர் கவிதைகளில் மிகுந்துள்ளது.

செவக்காட்டுப் பகுதியின் வறட்சியை உக்கிரமாகவும் துல்லியமாகவும் பதிவுசெய்கிறது இவர் கவிதைகள். இலக்கியம் எப்போதும் அவலங்களையே, துயரங்களையே பேசுகிறது. இவரின் பெரும்பாலான கவிதைகளின் உணர்வும் விரக்தி மனப்பான்மையே. சிறுகதை , நாவல் ஆகிய வடிவங்களில் விவசாயம் பற்றியும், விவசாயிகளின் நிலைபற்றியும் அறிந்துகொள்ளும் வகையில் எழுதுபவர்களைப் போல கவிதைகளின் வழியாக அறியத்தருகிறவர்களுள் வே.ராமசாமி முக்கியமானவர் என்று சொல்லமுடியும்.உவமைகள்கூட விவசாயம் சார்ந்த, கிராம வாழ்வு சார்ந்தவையாகவும், தனித்துவமானதாகவும், அசலானதாகவும்,சிறப்பானவைகளாகவும் இருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் சம்சாரிகள் என்று அழைக்கப்படுகிற விவசாயிகளின் அவல நிலையையும், சிறப்புக்களையும் கவிதைகளின் வழி அறியத்தருகிற இவர் தன்னுடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பை ‘உலகமெங்குமுள்ள விவசாயிகளுக்கு’ அர்ப்பணித்திருப்பதிலிருந்தே இவரின் பற்றுதல் விளங்கும்.அற்புதமான பல கவிதைகள், அல்லது ஒவ்வொரு கவிதையிலும் குறைந்தபட்சம் அற்புதமான சில வரிகளாவது நிச்சயம் வாசிப்பவர்களுக்குக் கிடைக்கக்கூடிய கவிதைகள். கவிதைகளின் இறுதியில் இவர் ஏற்படுத்தும் திருப்பங்கள், மற்றும் முத்தாய்ப்புகள் குறிப்பிடத் தகுந்தவை. உயிரினங்களின் மீதான இவரின் பரிவும், கனிவும் இயற்கையின் மீதான இவரின் நாட்டமும் இவர் கவிதைகள் மீது மிகுந்த மதிப்பை ஏற்படுத்த வல்லவை. சிறுகதைகள், திறனாய்வுகள் ஆகியவையும் எழுதிவருகிறார். செவக்காட்டுச் சித்திரங்கள் என்ற தலைப்பில் கல்கி வார இதழில் தொடராக எழுதியவை விகடன் பிரசுர நூலாக வெளிவந்துள்ளது.

இவரின் படைப்புகள்

1. ஏலேய் ( கவிதை தொகுப்பு, 2005 மதி நிலையம்)

2. கிணற்றுக்குள் முளைத்த மருதாணி (கவிதைகள் 2007 மதிநிலையம் வெளியீடு)

3. செவக்காட்டுச் சித்திரங்கள் ( விகடன் பிரசுரம்)

4.பூ மாரியும், தக்காளிச் செடியின் ஐந்து பழங்களும் -( சிறுகதைகள் அச்சில்)

ரெட்டைச்சுழி என்கிற திரைப்படத்தில் ‘பட்டாளம் பாரடா’ என்கிற பாடலின் மூலம், திரைப்பாடலாசிரியராக அறிமுகமாகியிருக்கிறார்.

வே.ராமசாமி, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோயில் வட்டம் மலையாங்குளம் கிராமத்தைச் சார்ந்தவர். தற்போது சென்னையில் வசிக்கிறார். இவரது வலைப்பூ http://ramasamyvee.blogspot.com/

ஏலேய், கிணற்றுக்குள் முளைத்த மருதாணி ஆகிய கவிதைத் தொகுப்புகளிலிருந்து சில கவிதைகள் மற்றும் நீளம் கருதி கவிதைகளிலிருந்து சில வரிகள் மட்டும் கீழே தருகிறேன்.

வழிவந்த ஆட்டுமந்தையின்
கால்தடங்கள்தோறும்
கச்சித முத்திரையாகின
பட்டாம்பூச்சிகளின்

வர்ண றெக்கைகள்

***

பனையைப்
பச்சைக் கண்ணாடியெனச்
சொன்னவன் யாரெனத்
தெரியாது போயினும்…

அவன் பிறந்தது
பூமியிலேயே
மிகச்சின்னஞ்சிறியதாய்
ஈனப்பட்ட
ஐந்துகால் ஆட்டுக்குட்டியை
நெஞ்சணைக்கிற
ஆட்டுக்காரன் மகள்
வாழுமிந்த
முல்லை நகரந்தான்

***

வாழ்வறு நிலை

என்னைப் போலல்லாது
எப்போதும் ஊரிலேயே வாழும்
வேலி மரங்களின் மேலே
பொறாமை நிரப்பினேன்

மனதின் சல்லிவேர்களில்
விழுந்துகொண்டேயிருக்கும்
நிகழ்வு கோடாரி

கனவுப் பொதியில்
தீப்பற்றியெரிய
கேட்பாரற்றுக்கூச்சலிடும்
ஆன்மா

பசிவாடை வீசும்

நகரத் தெருக்களில்
அலைந்த கால்களில்
பிசுபிசுக்கும் நிராகரிப்பு
துயரவெளிகளில்
நைந்து நைந்து
துளிர்விடத் தயங்கும்
நம்பிக்கை
திசைகளெங்கும்
அறைவாங்கி துடித்துவிழும்
உயிர்ப் பறவை
இக்கவிதையே பற்றுக்கோடானால்
கழியுமோ பிறவிப் பெருங்கடல்
முளைக்குமோ கருகுமோ
பாலை மணலில்
புதைந்த விதையாய்
கிடைக்கும் வாழ்வு

***

அன்னையிடமும்
உச்சபட்சமாய்
அடிவாங்கிய
குழந்தைபோலானதென்
நிலை

இன்று
பசிய சோள நாற்றில்
வாய் வைத்து
அலகில் அறைவாங்கிய
பசுவின் துயரோடு
பாதையில் போகிறேன்

புறா வாழ்வு

எச்சங்களால் அறியப்படும்
அதன் இருப்பிடம்
சிறுபிள்ளைகளும்
கல்லெறியும்படியானது

பழைய சோற்றை
கிணற்றுள் வீசும்
சிறுசப்தத்திற்கும்
அஞ்சிப் பறக்கும்
அவற்றின் பதற்றம்
எவ்வுயிரும் அறியாதது

முட்டைகளை
நீரில் தவறவிட்டு
மலங்க மலங்க
மின்கம்பத்தில் முழிக்கும்
நாள் முழுவதும்

பொரித்ததானாலும்
கிணற்றின் இடுப்பில்
கிளைத்த மஞ்சணத்திக்கு
தீயிடும்போதோ
உள்விவிழுந்த தென்னையோலைகளை
அகற்றுகையிலோ
அப்பாவின் கண்பட்டு
குழம்புக்கு வரும் குஞ்சுகள்

மறுநாள் தாய்ப்புறாக்களின்
கேவலில் நிறையும்
கிணறு

குயிலோசை

உழுது முடித்த ஓய்வில்
தகப்பன்
தயாரித்துத் தந்த
பூவரசு இலைச் சுருட்டில்
பீப்பி எழுப்பும்
அம்மணச் சிறுவனின் இசைக்குப்
பதிலிறுக்கத்தான்
காலமெல்லாம்
கூவித்திரிகிறது குயில்

செல்லும்
திசைஎல்லாம்
ஊழித்தீ
பிடித்து துரத்தினாலும்
பூத்து வெடிக்கிற
ஒரு பொழுதுவரை
பத்திரமா இரு

என் கனவே நீ

நன்றி - தடாகம்

Monday, May 3, 2010

சாளரத்தில் தெரியும் வானம் - தொடர் (கவிஞர் கே.ஸ்டாலின் )

என் பார்வையில் படைப்பாளிகள் - ச.முத்துவேல்


கவிஞர் கே.ஸ்டாலின்
பயணவழிக்குறிப்புகள் என்கிற முதல் கவிதைத் தொகுப்பிற்குப் பிறகு, எட்டாண்டு இடைவெளியில் கே.ஸ்டாலின் அவர்களுடைய இரண்டாவது தொகுப்பான ‘பாழ்மண்டமொன்றின் வரைபடம்' வெளிவந்திருக்கிறது.காட்சிகளின், நிகழ்வுகளின் கவித்துவ சிந்தனைப் பதிவுகளே ஸ்டாலின் கவிதைகள்.மிகுபுனைவு, திருகல்மொழி, அனாவசியமான இறுக்கங்கள் ஆகிவற்றைத் தகர்த்து எளிய வாசகரையும் சென்றடையும் வகையில் வெட்டவெளிச்சமாய் தன்னை முன்னிறுத்துபவை இவரது கவிதைகள். நிராயுதபாணியாய் நின்று வெற்றிவாகை சூடக்கூடியவை.ரசனை மிகுந்தவை.

படித்து முடித்ததும், நன்றாக இருக்கிறது என்ற ஒரு சிறிய தீர்மானத்தை மட்டுமே நிகழ்த்திவிட்டு நெஞ்சைவிட்டு அகன்றுபோகும் கவிதைகளைப்போலல்லாமல் ,

பேருந்தின் மேல்கம்பியை
பிடித்து வந்த
அழகான மருதாணி
விரல்களுக்குரிய
முகம் தேடி
தவிப்பும் துக்கமுமாய்

என்கிற இவரின் கவிதை வரிகளைப்போல் மனதில் நின்று தாக்கம் நிகழ்த்தக்கூடிய வல்லமை பெற்றவை இத்தொகுப்பிலுள்ள கவிதைகள். ‘டிஷ் ஆண்டனாவின் நிழலில் எங்கள் கிராமம்' என்கிற கவிதைத் தலைப்புக்குள்ளேயே வைத்திருக்கும் பொறியைப் போன்று, காலமாற்றத்தில் ஏற்படும் சீரழிவுகளையும், சிதையும் தொன்மங்களையும், அதே சமயம் எவ்வளவுதான் மாற்றம் கண்டிருந்தாலும் இன்று வரை மாறாத சில அவலங்களையும் சுட்டிக்காட்டும் கவிதைகள் உள்ளன.( கணேஷ் தியேட்டர்..)

இவரது கவித்துவமான கற்பனைவளம் அலாதியானவை.தொகுப்பு முழுதும் விரவிக்கிடந்து ரசிக்கத்தக்கவையாகவும், வியப்பளிக்ககூடியதாகவும் அமைந்துள்ளது.

நீ நடந்து வரும் பாதையில்
முகத்தைச் சந்திக்கும் நேர்க்கோட்டு வெற்றிடங்களெல்லாம்
கனவெளிகளில்
பூச்சொரிகின்றன.., என்கிற வரிகள் மற்றும்

அசைவின்மை நோக்கி
அசைந்தபடியிருக்கிறது
நீ எழுந்துசென்ற பின்னும்
உன்னைச் சுமந்திருந்த ஊஞ்சல் .., என்கிற வரிகள் உதாரணம்.

பிணம் தின்னும் தேவைதைகள்,பட்டுத் துணியிலிருந்து உயிர்த்தெழும் பட்டுப்பூச்சிகள்,’அப்போதுதான் வெட்டியெடுக்கப்பட்ட குழந்தையின் ஓர் உறுப்போ ‘என்பன போன்ற வரிகள் மறக்கமுடியாதவை.

கவிதை அழகிய பொய்களாலானது. நிறுவப்பட்ட கணிதச் சமன்பாடுகளையே, சமனற்றவையாக ஆக்கும் அழகிய பொய் கொண்ட வித்தியாசமானவொரு கவிதைத் தலைப்பு (a+b)2 ...

ஒரு கவிதையின் வீச்சு என்பது, அது வாசகனுக்குள் நிகழ்த்தும் தாக்கத்திற்கு நேர்விகிதத்தில் அமைந்திருக்கும்.இக்கூற்றை ஒரு கவிதையாக விளக்குவதாகவும், அதேசமயம் பொருத்தமான சாட்சியாகவும் விளங்கும் இவரது கவிதை..

வசந்தத்தின்
தளர்ந்த பிடியிலிருந்து
தன்னை விடுவித்துக்கொண்ட
பழுத்த இலையொன்று
எத்தனையாவது சுற்றில்
பூமியை வந்தடைகிறது என்பதாய் உணரப்படுகிறது
காற்றின் இருப்பு.

என்கிற கவிதையைச் சொல்லலாம்.

நகுலனுக்கு சுசீலா போல், இவருக்கு நித்யா.கவிஞரின் அன்புக்குரிய பாத்திரம்.காதலியாகவோ, மகளாகவோ,கற்பனையாகவோ எப்படியும் இருக்கலாம். காதல் கவிதைகள் என்று உணரத்தக்க நிறைய கவிதைகள் உள்ளன.ஆசிரியராகப் பணிபுரிவதாலோ என்னவோ, பரவலாக இவரது கவிதைகளில் குழந்தைகளின் உலகம் காணக்கிடைக்கிறது.

ஒரு தொகுப்பைப் பற்றி எழுத நேர்கிற சந்தர்ப்பத்தில், உண்மையான உற்சாகத்தோடும், தைரியமாகவும் கொண்டாடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருகிற வகையில் இத்தொகுப்பு இருக்கிறது என்று சுருங்கச் சொல்லலாம். இப்படி எழுத நேரிடுவதில் இருக்கும் சுதந்திரமும், நேர்மறையான சாதகங்களுமே எழுதுகிற எனக்கு உற்சாகமளிக்கிறது. தொகுப்பில் எதன் பொருட்டும்,செய்த கவிதைகளே இல்லாமல் அகத்தூண்டலில் உந்தப்பட்டு படைப்பூக்கத்துடன் எழுதப்பட்ட அசலான கவிதைகள் நிறைந்திருக்கும் தொகுப்பு இது.

கவிஞர் கே.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம்,திருவரங்கம் அஞ்சல் கள்ளிப்பாடி கிராமத்தைச் சார்ந்தவர். ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

பாழ்மண்டமொன்றின் வரைபடம்- கவிதைகள்

குழந்தைகளைக் குளிப்பாட்டும் விரல்கள்

குழந்தைகளைக்
குளிப்பாட்டும் விரல்கள்
எப்போதும்
சொர்க்கத்தின் சாவிகளை
சுழற்றியபடியிருக்கின்றன

பூத்தொடுப்பதும்
குழந்தைகளைக்
குளிப்பாட்டுவதும் ஒன்றுதான்
இரண்டிற்குப் பின்னரும்
விரல்கள் வாசம் பெறுகின்றன

வன்முறைக்குப் பழகிய
விரல்களை
குழந்தைகளின் மென்தேகம்
மெல்ல மெல்ல
மிருதுவாக்கி விடுகிறது

கூச்சத்தின்
முதல் கீற்று விழும் வேளை
மறுதலிக்கும் குழந்தைகளுக்கு
உங்கள் விரல்கள்
உடைந்த
விளையாட்டு பொம்மைகளாகின்றன

ஆற்றில்
தானே குளீக்கும் குழந்தைகள்
எந்த விரல்களையும் யாசிப்பதில்லை
அவர்களைத் தழுவிச் செல்லும் தண்ணீர்
தூரத்தில் துணீ துவைத்துக்கொண்டிருக்கும்
மலடி ஒருத்தியின் விரல்களை
குளிப்பாட்டிச் செல்கிறது

***

இல்லையென்று பதிலளிக்கும்
எல்லோர் வீட்டின் வாசலிலும்
தூக்கங்களைக் களவு கொள்ளும்
கனவொன்றை
விட்டுச் செல்கிறார்
தொலைந்துபோன மகனை
நள்ளிரவில்
தேடியலையும் அப்பா

***

தலைக்காயத்திலிருந்து
வழியும் உதிரமென
முகம் நனைக்கின்றன
உன் பிரியங்கள்
பாதுகாப்பெனக் கருதி
விழிகளை மூடிக்கொண்ட பின்னரும்
உதடுகளில் பட்டுக்
கரிக்கிறது
அதன் உதிரச் சுவை

***

அப்பாவின் டெய்லர்

அளவு சட்டையெல்லாம் வேண்டாம்
துணியை மட்டும்
கொடுத்துட்டு வா- என்பார் அப்பா
காதிலிருக்கும் பேனாவால்
புதுத்துணீயின் மூலையொன்றின்
கைகள் தோள்பட்டை
உடலின் அளவுகளை
மனப்பாடமாய் எழுதுவார்
அப்பாவி பிரத்யேக டெய்லர்
ஆயத்த ஆடைகள்
அறிமுகம் ஆகும் முன்னர்
உள் பாக்கெட் வைக்காமல்
இவர் தைத்த ஆடைகளை
சிறுவயதில் அணியாமலேயே
அடம் பிடித்திருக்கிறேன் நான்
விபத்தொன்றில்
உடல் நசுங்கி அப்பா இறக்க
அடையாளம் காட்டியது
காலருக்குப் பின்னிருந்த
எஸ்கே என்ற குறியீடுதான்
பெரிதாக்கப்பட்ட முகத்தையே
சில ஆண்டுகளாய்
நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க
இன்னமும்
இவர் நினைவுகளில்
வாழ்ந்துகொண்டிருக்கூடும்
அதே நீள அகலங்களுடன் அப்பா.

***

தனிமை

மரத்தடியில் விளையாடிய சிறுவர்கள்
வீடு திரும்பினர்
வீடு திரும்புதலென்பது
விளையாட்டின்
எந்த விதிகளுக்குட்பட்டதென்ற
விளங்காத குழப்பத்தில்
வெயிலை வெறித்தபடியுள்ளது
நிழல் மட்டும் தனித்து

வளர்ந்த குழந்தைகளை பார்த்தபடியிருக்கும்
உடைந்த பொம்மைகளின்
இமையா விழிகளில்
உறைந்திருக்கும்
உலகத்துத் தனிமையின்
உச்சபட்ச அவஸ்தை
***

பாழ்மண்டமொன்றின் வரைபடம்- கவிதைகள்

கே.ஸ்டாலின்
வம்சி புக்ஸ்,
19.டி.எம்.சாரோன்,திருவண்ணாமலை
9444867023,944322297

விலை ரூ.50.

நன்றி- தடாகம்
அகநாழிகை- சமூக, கலை ,இலக்கிய இதழ்.

Sunday, April 11, 2010

இன்றைக்கும்…


இன்றைக்கும்…


குழந்தை பொறக்கறதுக்கான ட்யூ டேட் நெருங்கி வரவர சரண்யாவுக்கு ஒடம்பில வீக்கம் தெரிய ஆரம்பிச்சுடுச்சி.ஒருநாள் காலையிலேயே ஒடம்புக்கு ஒன்னும் முடியலன்னுச் சொன்னா. உடனே ஆஸ்பிட்டலுக்கு வண்டியிலக் கூட்டிக்கிட்டுப் போனேன். ஸ்பெஷலிஸ்டுங்கள்லாம் வர ஒன்பது மணீயாகும். இப்ப ட்யூடி டாக்டர் மட்டுந்தான். அவங்கள்லாம் புதுசா படிச்சுட்டு வேலைக்கு வர்றவங்க.எக்ஸ்பீரியன்சுக்காகவும், வெறும் எம்பிபிஎஸ் தான்ங்கிறதாலயும், இதுமாதிரி சின்னச் சின்ன அவசரத்துக்கு மட்டும் வைத்தியம் பாக்கிறவங்க. அப்படித்தான் ஒரு சின்ன வயசு டாக்டர் அன்னைக்கு இருந்தார். அவர்ட்ட போய் நின்னு இத மாதிரி பிரச்னையெல்லாம் இருக்குதுன்னு சொன்னதும் அவரும் நல்லா செக் பண்ண ஆரம்பிச்சார். எப்போ டேட் குடுத்திருக்காங்க,எத்தனை நாள்ல எவ்வளவு எடை கூடியிருக்குதுங்கிற விபரமெல்லாம் கேட்டாரு. பிரஷர் பார்த்தாரு. பாத்துட்டு லேசா முகத்தை கலவரமாக் காட்டுனாரு. மறுபடியும் பிரஷர் பார்த்தாரு. பாத்துட்டு, பொறுமையா சொன்னாரு. ‘பிரஷர் ரொம்ப அதிகமாயிருக்குது. இப்போதைக்கு நான் எழுதித் தர்ற மாத்திரைய சாப்பிடுங்க. ஒம்போது மணிக்கு கைனாகாலஜிஸ்டைப் பார்த்துடுங்க’ன்னு சொல்லி சீட்டு எழுதிக்கொடுத்தாரு.

ம்போது மணிக்கு கைனாகல்ஜிஸ்டுக்கிட்ட காமிச்சப்போ, அவங்களும் ‘பிரஷர் அதிகமாத்தான் இருக்குது. அட்மிட் பண்ணிடுங்க’ன்னு சொல்லிட்டாங்க. சரண்யாவுக்கு அட்மிட்டுன்னாலே கசக்கும். ஆஸ்பிட்டல்ல படுத்தப் படுக்கையா இருக்கிறதுன்னாலே அவளுக்கு ஏதோ கொடுமையான தண்டனை குடுத்தமாதிரி. என்னை பக்கத்துலயே இருன்னு சொல்லுவா. பொம்பிளைங்க எசகுபிசகா இருக்கிற மெடர்னிட்டி வார்டுல, என்னதான் தனித்தனி ரூமா இருந்தாலும், ஒரு ஆம்பள எந்நேரமும் உட்கார்ந்துக்கிட்டிருக்கமுடியுமா? போதாக்குறைக்கு மத்த வேலையெல்லாம் இன்னும் இருக்குதே. வீட்டுக்குப் போய் வேண்டிய துணிமணி, பாத்திரம் எல்லாம் எடுத்துக்கிட்டு வந்துக் குடுக்கணும். ஆஃபிஸ்க்கு லீவ் சொல்லணும். வீட்டுல பாத்திரம், துணிமணி எல்லாம் போட்டது போட்டதுபடியிருக்குமே.சரண்யாவ மெட்டர்னிட்டி வார்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போயி, அங்கயிருக்கிற நர்ஸ்க்கிட்ட டாக்டர் தந்த சீட்டக் காமிச்சு அட்மிஷன் போட்டுட்டு, அவங்க தந்த பேப்பர்லல்லாம் சைன் போட்டுட்டு, உடனே வாங்கிட்டுவரச் சொன்ன மருந்துங்களையெல்லாம் வாங்கிட்டுவர மருந்துக் கடைக்கு கிளம்பனேன். சரண்யாவுக்கு சாப்பாடு இனிமேல் ஆஸ்பிட்டல்லதான்ங்கிறதால ஒரு பிரச்னையில்ல. நான் ஓட்டல்லதான் சாப்பிட்டாகணும். என் வீட்டுக்குள்ள தினமும் ஒருமுறையாவது நான் போய்வர்ற வேலையில்லாத ஒரே இடம் சமையல் அறைதான். யோசிச்சுப்பாத்தாத்தான் தெரியுது. சமையலறைக்குப் போறதே எப்பவோ ஒருசிலவாட்டிதான்னு. கைக் கழுவ, தண்ணிக் குடிக்கன்னு அதெல்லாம் கூட எப்பவாவதுதான்.குடிக்கத் தண்ணிவேணுன்னாதான் சரண்யாக்கிட்ட சொன்னாப்போதுமே. அவளே எடுத்துக்கிட்டு வந்து உட்கார்ந்திருக்கிற இடந்தேடி எடுத்துக்கிட்டு வந்துக் கொடுத்துடறா. அவளுக்குந்தான் என்ன பெருசா வேலை இருக்குது? ஊர்ல எங்க அம்மாவோ, இல்ல அவங்க அம்மாவோ செய்ற வேலையோடயெல்லாம் பார்த்தா, இவ செய்றது ஒன்னுமேயில்ல. கிரைண்டர், மிக்ஸி, கேஸ் ஸ்டவ்,வாஷிங் மெஷின், கெய்ஸர், ஃப்ரிட்ஜ், டிவி,ன்னு எல்லா வேலையையும் செய்றதுக்குத்தான் மெஷினுங்க இருக்குதே. சட்னிக்கு மல்லாட்டை உறிக்கிற வேலைகூட இல்லை. ஸ்ட்ரெயிட்டா உறிச்சு வறுத்த மல்லாட்டையேதான் இப்ப கடையில விக்குதே. அட வெளியில போறப்பயாவது கொஞ்சம் நடக்கிறது உண்டா? அது எப்படி? வண்டியிருக்கும்போது நடந்துபோனா பாக்கிறவங்க என்னா நினைப்பாங்க.சரி போவுது. தனியா வாக்கிங்காச்சும் போறதுண்டா. அதுவுங்கிடையாது. அதுக்கெல்லாம் நேரமேது. இல்ல, இப்ப என்னா வயசாகியாப் போச்சு. வாக்கிங்லாம் போற அளவுக்கு.ஆம்பிளை இப்படி குளிக்க பாத்ரூமுக்குள்ளப் போறப்போ, இவ சமையல் ரூமுக்குள்ள நுழைவா. குளீச்சுக்கிட்டிருக்கும்போது மிக்ஸி ஓடற சத்தம் கேக்கும். குளிச்சுட்டு வர்ற அஞ்சு பத்து நிமிசத்துல பாத்தா தட்டுல டிஃபன் ரெடியாயிருக்கும்.ஆனா, இதையேன் ஃபாஸ்ட் ஃபுட்னு சொல்லிக்கமாட்டேங்கறாங்க.

கைகானலஜிஸ்ட் டாக்டரம்மா அவுட் பேஷ்ண்ட்ங்கள்லாம் பாத்து முடிச்சுட்டு லேபர் வார்டுக்கு வந்தாங்க. அதுக்குள்ள சரண்யாவுக்கு டாக்டரம்மா எழுதிக்குடுத்த ஊசியெல்லாம் போட்டிருந்தாங்க. வந்து சரண்யாவப் பாத்தாங்க. ‘என்னா சரண்யா. பயந்துட்டியா. ஏன் பயப்படுற. அதனாலதான் பிரஷர் இப்படி அதிகமாயிடுச்சி. பயப்படக்கூடாது, என்னா? ஆங். பாப்போம். பிரஷ்ர் குறையறதுக்கு ஊசி போட்டிருக்கோம். சாயந்தரம் வரைக்கும் குறையுதா இல்லையான்னு பாப்போம்’ அப்படின்னு சொல்லிட்டு வெளியே போயிட்டாங்க. சரண்யாவ ஆஸ்பிட்டல் ட்ரஸ்ல பாக்கவே கஷ்டமாயிருந்துச்சி. ஜெயில்ல கைதிகளுக்குக் குடுக்கிற மாதிரி பழைய சிவாஜி படத்துலல்லாம் காட்டுவாங்களே அந்த மாதிரி, மெல்லிசா கட்டங்கட்டமா போட்ட பாவாடை, சட்டைமாதிரி ஒரு அங்கி.ட்ரிப்ஸ் எல்லாம் வேற ஏறிக்கிட்டிருந்தது.

சாயந்தரம் வந்துபாத்த டாக்டரம்மா, செக் பண்ணிட்டு ரூமுக்குப் போயிட்டு, இன்னொரு டாக்டரம்மாக்கூட ரொம்ப நேரமா டிஸ்கஸ் பண்ணாங்க. அப்புறம் நர்ஸ் வந்து என்னைக் கூப்பிடறதாச் சொல்லிட்டுப் போனாங்க. நான் பதட்டத்தோட அவங்க ரூமுக்குள்ள போனேன்.’ ஒன்னும் பதட்டப்படாதீங்க. பிரஷர் குறையவே மாட்டேங்குது. ரொம்ப அதிகமாயிக்கிட்டே போகுது. அப்புறம் ஃபிட்ஸ் வந்துடலாம். இப்போதைக்கு பிரஷர் ஷூட் ஆகாம ஊசி போட்டிருக்கோம். பிரஷர் குறையலன்னா சிசேரியன் பண்ணி குழந்தைய வெளியே எடுத்துடணும். அதுதான் சேஃப். பிரஷர் குறைஞ்சிட்டா நார்மல் டெலிவருக்கு வாய்ப்பு இருக்குது.நீங்க என்ன செய்றீங்கன்னா, வீட்டுக்குப் போயிட்டு சரண்யாவுக்குப் போட்டுக்க ட்ரஸ் அப்பறம் வேற என்னென்னெ வேணுமோ எடுத்துக்கிட்டு வந்துடுங்க. பெரிய ஆஸ்பிட்டலுக்குத்தான் போகணும். வண்டி வச்சுருக்கிங்க இல்லையா. சரி, போயிட்டு வந்துடுங்க. ஒன்னும் அவசரமில்ல. நீங்க பாட்டுக்கு பதறி, வண்டிய எங்கயாவது போட்டு, அப்புறம் உங்களைப் பாக்கிற மாதிரில்லாம் ஆகிடவேணாம். என்னா சரியா?’ ன்னாங்க சிரிச்சுக்கிட்டே.பத்ட்டத்தைக் குறைக்கிறதுக்காகவே அப்படி சிரிச்சமாதிரி தெரிந்தது. நானும் பதிலுக்கு சிரிச்சுக்கிட்டே, சரின்னுட்டு கிளம்பினேன்.காலையிலேயே ஃபோன் பண்ணி சரண்யா அம்மாகிட்டச் சொல்லி வரச்சொல்லியிருந்தேன். அவங்களும் ஊர்லயிருந்து வந்துட்டு பஸ் ஸ்டேண்ட்லயிருந்து ஃபோன் பண்ணாங்க. நேரா போய் முதல்ல அவங்களைக் கூட்டிக்கிட்டு அப்புறம் வீட்டுக்குப் போனேன்.. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு, ஆஸ்பிட்டலுக்கு வந்து ஆம்புலன்ஸக் கூட்டிக்கிட்டு, பெரிய ஆஸ்பிட்டல் கிளம்பினோம். ஆம்புலன்ஸா, ஏதோ இத்துப்போன பழைய வண்டி மாதிரியிருந்தது. உள்ளே காத்தும் வரல. ஒன்னும் இல்ல. வெளியில நல்லா இருட்டிப்போய் மணி ஏழு மணிக்கு மேல ஆகியிருந்தது. ஒன்றரை மணி நேரம் ஆகும் பெரிய ஆஸ்பிட்டல் போக. ஆஸ்பிட்டல் கிட்ட வந்து ரயில்வே கிராசிங்ல கேட் போட்டுட்டான். இன்னும் டென்ஷன் ஏறிக்கிட்டே போகுது. அப்பத்தான் கூட வேலைசெஞ்ச சுந்தரம் மருமகக் கதை ஞாபகத்துக்கு வருது. அந்தப் பொண்ணுக்கும் பாவம் இதே மாதிரி பிரசவம் நெருங்கற நேரத்துல பிரஷர்தான். சரியா கவனிக்காம விட்டுட்டாங்களாட்டம் இருக்குது. வலிப்பெல்லாம் வந்து, பாவம் காப்பாத்த முடியாம செத்தேப்போச்சு. நல்லா வசதியான குடும்பந்தான். ஆனா, என்னா பண்றது?

ஒருவழியா ஆஸ்பிட்டல் போய்சேர்ந்து, சக்கர நாற்காலியில் உட்கார வச்சு, சறுக்குப்பாலம் வழியா , மேல்மாடிக்கு கூட்டிட்டுபோய் அட்மிட் பண்ணீயாச்சு. அங்கப்பாத்தா பெரிய டாக்டர் இல்லயாம். அவரு நாளைக்குத்தான் வருவாருன்னாங்க. அவரு சம்சாரமும் டாக்டர்தான். அவங்களும் நல்லா பக்குவப்பட்டவங்கதான்னு சொன்னாங்க. அவங்கதான் வருவாங்கன்னு சொன்னாங்க. அதேமாதிரி, அவங்களும் வந்து பாத்துட்டு, ஊசியெல்லாம் போட்டுட்டு, ஏற்கனவே எங்க டாக்டரம்மா சொன்னாமாதிரியே சொன்னாங்க. ‘பிரஷர் குறைஞ்சா நார்மல் டெலிவரியே பாத்துடலாம். முடிஞ்சவரைக்கும் நார்மல் டெலிவரிக்கு ட்ரை பண்றோம். இல்லேன்னா மட்டும் சிசேரியன் பண்ண வேண்டியதிருக்கும்’
எங்க? இங்கத்தான் சரணயாவுக்கு இருக்க இருக்க பயம் அதிகமாயிட்டே போகுதே.மாசமாயிருந்தா குழந்தை பொறக்கும்னு முன் கூட்டியே தெரியாதா? இவளுக்கு சொந்தக்காரப் பொண்ணு ஒருத்திக்கு, டெலிவரி ஆகும்போது ரொம்ப எசகு பிசகாயிப் போய் அவஸ்தைப்படுறதை கொஞ்ச வருஷங்களுக்கு முன்னால கூடவேயிருந்து பார்த்திருப்பாளாட்டம் இருக்குது. அது இவ மனசவிட்டு நீங்காமயிருந்துக்கிட்டு, இப்ப வந்து எல்லாரையும் தொந்தரவப் பண்ணிக்கிட்டிருக்குது. அதுவும் சிசேரியனைப் பத்தி கேள்விப்பட்டு ரொம்பவே பயந்துபோய் இருந்தா. ‘நல்லா கருவுக்குள்ள இருக்குற குழந்தைமாதிரி மடிச்சுவச்சு நடு முதுகுல ஊசி குத்துவாங்களாம். அது காலத்துக்கும் வலிச்சுக்கிட்டேயிருக்குமாமே’ன்னுட்டு எங்கிட்ட அவப் பேசியிருக்கிறா.இந்தக் காரணமெல்லாம் அவ மனசுலயிருக்குன்னு நானா நினைச்சுக்கிறது. இதும் தவிர வேற என்னஎன்ன புதுசு புதுசா கண்டுபுடிச்சு பயப்படறாளோ. இன்னும் ஒன்னே ஒன்னு மட்டும் என் மனசுக்கு நல்லாத் தெரியும். அது நான் சம்பந்தப்பட்டது. ஆமா, அவகூட நான் எப்பவும் இருந்துக்கிட்டேயிருக்கணுமின்னு நினைக்கிறவ அவ. இந்த நேரத்துல அவளுக்கு எதுனா ஏடாகூடாமா ஆகி,என்னைப் பிரியறதுன்னா அவளாலே நினைச்சிக்கூட பாக்கமுடியாதுன்னு எனக்குத் தெரியும்.ஆஸ்பிட்டல்ல மிட் நைட் வரைக்கும் பிரஷர் குறையவேயில்லன்னு தெரிஞ்சதும், சிசேரியன்தான்னு முடிவு பண்ணிட்டாங்க. அதுக்குண்டான மருந்து, மாத்திரையெல்லாம் கீழ போய் என்னை வாங்கிட்டு வரச்சொன்னாங்க. நானும் வாங்கியாந்து கொடுத்துட்டு , நீட்டுன பேப்பர்லயெலாம் கையெழுத்துப் போட்டுக்குடுத்துட்டு காத்துக்கிடக்க ஆரம்பிச்சுட்டேன். அதே நேரத்துல டெலிவரி பாக்கிறதுக்கு மூனு, நாலு கேஸ் ஒன்னொன்னா நடக்குது. அவங்கவங்க சொந்தக்காரங்க வாசல்ல நிக்கிறாங்க. அன்னைக்கு மட்டும் நடுராத்திரியிலருந்து விடியறதுக்குள்ள 5 பிரசவம் அந்த ஆஸ்பிட்டல்ல மட்டுமே ஆச்சு. நார்மல், சிசேரியன், பையன் ,பொண்ணுன்னு வரிசையா. சரண்யாவுக்கு பையன் பொறந்து வெளியிலெ எடுத்துக்கிட்டு வந்து காமிச்சுட்டுப் போனாங்க. சரண்யா எப்படியிரூக்கிறான்னு அவங்க அம்மா கேட்டதுக்கு எதுவுமே சொல்லாம உள்ளேப் போயிட்டாங்க. அப்புறம் சரண்யாவை மயக்க நிலையில ஸ்டெட்சர்ல வச்சு, ரெஸ்ட் ரூம்ல கட்டில்ல போட்டாங்க. கூடவே குழந்தையையும் போட்டுட்டுப் போனாங்க. ஆளே பயங்கரமா ஊதிப்போய் பெரிய பொம்மனாட்டி மாதிரியா இருந்தா. அர்த்த நாரீஸ்வரர் மாதிரி சரிபாதி ஒரு பக்கம் உடம்பே பயங்கரமா உப்பி, இன்னொரு பக்கம் உடம்பு அதைவிட கொஞ்சம் கம்மியா வீங்கி பாக்கவே ஐயோன்னு இர்ந்துச்சி. மயக்கத்துலயே வேற இருந்தா. மயக்கன்னும் சொல்லமுடியாது. கூப்பிட்டா தெரியுது. தூக்கத்துல கேக்குறமாதிரி, ‘ஆங்’ன்னு லேசா உடம்பை அசைக்கிறா. ஆனா. அதையே ரொம்ப சிரமப்பட்டு செய்றாமாதிரியும், திகிலாவும் தெரிஞ்சுச்சி.அப்பத்தான் அவமேல அப்படியொரு பரிவும் பாசமும் எனக்குத் திரண்டு வந்துச்சி. பிரசவத்துக்கு அப்புறம் என்னையோ, அவங்க அம்மாவையோ ஏன் தன்னோட குழந்தையக் கூடப் பாக்க முடியாதுங்கிற நிலைமை. அப்படியே அடிச்சுப்போட்டவளை மாதிரி அசந்துகிடந்தா. கூப்பிடறது மட்டும் எங்கியோ கனவுல கேட்கிற மாதிரி இருக்கும்போல. பையனப் பாத்தேன். நல்ல சிவப்பு.அப்ப அவன் பொய்ங்க்ன்னு சின்னதா ஒரு சத்தம் போட்டான். நாங்கேட்கிற அவன் மொதோக்குரல். ஒரு நாள் காலயில ஆரம்பிச்சு, அன்னைக்கு நடுராத்திரிக்குள்ள இவ்வளவும். இதுக்கப்புறம் நடந்ததெல்லாம் இதைவிட . சிசேரியன் பண்ணதால கட்டில்லயே அசையாம கிடக்கவேண்டியதுதான். தையல் பிரிஞ்சுடும்னுட்டு ஒருவாரங்கிட்ட அப்படி இருக்கச்சொல்லிட்டாங்க. சாப்பாடெல்லாம் கிடையாது. வெறும் ட்ரிப்ஸ்தான். அது ஒரு பாலிதீன் பையில மூத்திரமா வந்து சேர்ந்துடும். மத்தப் பொமபளங்கள்லாம் அழகா எழுந்து நடக்க ஆரம்பிச்சு, அழகா டிஸ்சார்ஜ் ஆகிப்போயிக்கிட்டிர்ந்தாங்க. சரண்யாதாம் ரொம்ப சிங்கினாதாம் புடிச்சுக்கிட்டுக் கிடந்தா. கையக்கால அசைக்கிறதுக்கே ஆஊன்னு கத்துவா. டாக்டரமா ஒரு நாள் வந்து நகரச்சொல்லியிருக்காங்க. இவ அசையக்கூட மாட்டேங்கறாளாம். ஆனா அசையற மாதிரியே ஆக்‌ஷன் மட்டும் ரொம்ப நேரம் காட்டறாளாம். டாக்டரம்மா புடிச்சி சரக்குன்னு இழுத்து நகர்த்திப்போட்டிருக்காங்க. இவ, ஐயோகுய்யோன்னு கத்தியிருக்கா..டிஸ்சார்ஜ் பண்ற அன்னைக்கி, ஒரு கார்வச்சு, அலுங்காம குலுங்காம கூட்டிக்கிட்டு வந்தேன். என் நண்பனோட கார்தான்.ஸ்பீட் பிரேக்கர்ல ரொம்பப் பொறுமையா , பக்குவமா ஓட்டிட்டு வந்தான். அவன் சுபாவத்துக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத செயல் அது. அப்படியும் சில நேரங்கள்ல அவன் பாணியில ஓட்டினான். சரண்யா, அவ அம்மால்லாம் பதறிப்போயிட்டாங்க. நானுந்தான். அப்புறம் அவன் கொஞ்சம் ஒழுங்கா ஓட்டிக்கிட்டு வர வீடு வந்து சேர்ந்தோம்.


ப்ப எம்பையன் யூ.கே.ஜீ. படிக்கிறானாலும், அன்னைக்கு அவன் போட்ட சத்தம் இன்னைக்கும் என் காதுல சொகமாக் கேட்டுக்கிட்டேயிருக்குது.கொஞ்ச நாட்களுக்கு முன்னால, மும்பை போயிட்டு திரும்பி ட்ரெயின்ல வந்துக்கிட்டிருந்தேன். இரவே புறப்பட்ட ரயில் மறு நாள் பகலில் ஊர்ந்துகொண்டிருந்தது. எனக்குப் பக்கத்து இருக்கையில் ஒரு வயதான பாட்டியம்மா இருந்தார்கள். தமிழ்தான். ஆனா, மராட்டி, இந்தியெல்லாம் தெரிந்திருந்தது.ஒரு நிறுத்தத்தில் ரிசர்வ்டு பெட்டியில நிறைய அன்ரிசர்வ்டெல்லாம் ஏறுனாங்க. காலேஜ் போற பசங்கதான் நிறைய பேர். உட்கார இடமில்லாம , நிக்கவே சிரமப்பட்டு நெருக்கிகீட்டு நின்னுக்கிட்டு வந்தாங்க. அதுல ஒரு இளம்பெண் கைகுழந்தையோடு இருப்பதைப்பார்த்ததைப் பார்த்ததும் என்னருகிலிருந்த அந்த வயதான தமிழ் பாட்டியம்மா கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து இடம் குடுத்தாங்க. அந்தப் பொண்ணு அப்படியொரு அழகு. ஒரு பணக்காரக் களை. நல்ல சிவப்பு. வழுவழு சருமம். கூட ஒரு பொம்பள இருந்தாங்க. ஆம்பள மாதிரியான ஒரு இறுக்கமான, கட்டான, காப்பேறிய உடம்பு. குள்ளமாயிருந்துச்சி. புடவைக் கட்டுல்லாம் பாத்தா ஆதிவாசிகள, ஞாபகப்படுத்தற மாதிரியாயிருந்தது. தோற்றமும் அப்படித்தானிருந்தது. அந்தம்மாதான் அந்த இளந்தாய்க்குத் துணையா வந்திருந்தது. வேலைக்காரப் பெண்மணியா இருக்கும் என்று யூகித்தேன். சரியா காத்து வராததால குழந்தை பொய்ங்ன்னு கத்திச்சு. எம்பையன் கத்துன மாதிரியே புதுசான குரல். அந்த வயசான காட்டுப்பொம்பளை குழந்தையைக் கையில வாங்கி ஃபேனுக்காத் துக்கிப்புடிச்சுக்கிக்கிட்டு நின்னுக்கிட்டே வந்தது. பாட்டியம்மாவும் அவங்கக்கிட்ட எதையெதையோ இந்தியிலயோ, மராத்தியிலோ பேசிக்கிட்டே வந்தது. ஒரு ஸ்டேசன்ல அவங்க இறங்கிட்டாங்க. அப்போ அந்தப் பாட்டியம்மா, ‘’ பாத்தியாப்பா. ஆஸ்பத்திரியிலருந்து குழந்தை பொறந்து நேரா அப்படியே வருந்துங்க. இப்பத்தான் குழந்தைப் பொறந்துச்சாம்’னு ஆச்சரியத்தோட சொன்னாங்க. அந்த வயசாளியம்மா அந்த இளந்தாயோட அம்மாதானாம். நான் ஆவலோட அவங்களை எட்டிப்பாத்தேன். தூரத்தில வயல் வெளிகளுக்கு நடுவில தொடுவானத்தை நோக்கிப் போறாமாதிரி போயிட்டிருந்தாங்க. அவங்கள விட்டு வேகவேகமா எங்களை, எங்க ட்ரெயின் தூர விலகிக்கிட்டே வந்துகொண்டிருந்தது

Wednesday, April 7, 2010

என் பார்வையில் படைப்பாளிகள்-தொடர்-ச.முத்துவேல்


படைப்பாளிகள் அறிமுகம்-த.அரவிந்தன்


வெயிலோடு கலந்து

மரம் ஈனுகிறது

கொழுகொழுவென

நிழற்குழந்தை



ரசிக்காவிட்டால்

ஒரு துயரமுமில்லை



மிதிகளால் அழும்

குழந்தையைத் தூக்கி

இப்படியும் அப்படியுமாக

அசைத்து

தாலாட்டுகிறது காற்று



இதுதான், இவர்தான் .அரவிந்தன்.கவிதைகளில் கருத்துக்களையும், பயன்களையும் வலியுறுத்துபவர்களால் இக்கவிதையை சிலாக்கிக்காமல் இருக்கமுடியுமா? கவிதைகள் கருத்துச் சொல்லும் ஊடகங்களோ, பயன்படும் ஒரு பொருளோ மட்டுமே அல்ல. இந்தக் கவிதை தரும் பரவசம்,உத்வேகம், மீட்சி நமக்கு தேவையற்றதாகிவிடுமா? இவைதான் இக்கவிதைகளில் நாமடையும் பயன்பாடு.ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் கட்டிடத்தை கட்டிமுடித்திருந்தபோது, அதன் மேல்பூச்சில் சல்லிக் கற்களை பதிப்பித்து பூசியிருந்தார்கள். அழகுக்காக மட்டுமேதான். அதன் செலவுத்தொகை மட்டுமே பல லட்சங்களைத் தொட்டது. அந்த வழியில் போவோர் வருவோரில் பலரும் அந்தக் கட்டிடத்தை புகைப்படம் எடுத்துச் சென்றனர். வெறும் சுவர் மட்டுமே கட்டிடத்திற்கு போதுமெனும்போது, பூச்சுவேலையே கூட எதற்கு? இப்படி நாம் பயன்படுத்தும் ஒவ்வொன்றிலும் கலை நயத்திற்காகவும், படைப்புத்திறனுக்காகவும் முன்னுரிமை அளிக்கப்படுவதை காணமுடிகிறது.இந்தச் சிந்தனையே வளர்ச்சியின் காரணியாகிறது.உயிர்வாழ அரிசிச்சோறை உண்கிறவர்கள் ஐஸ்கிரீமையும், பால்கோவாவையும் ஏன் உருவாக்கினோம்? பசியும் ருசியும் உணவிலேயே கிடைத்துவிடும்போது, இவைகளுக்கென்ன வேலை என்று விட்டுவிடமுடியுமா? ‘ மனிதர்களுக்கு சிறகு முளைக்காத குறையை தீர்க்கவல்லவைதான் கவிதைகள்என்றார் கந்தர்வன்.

அதேசமயம் மேற்சொல்லப்பட்டதுபோன்ற கவிதைகளிலும் பயனில்லாமல் போகவில்லை. அது மிகவும் நுட்பமாய் .உணரத்தக்கது. இப்படி எழுதவும், ரசிக்கவும் வாய்த்த மேன்மைப்படுத்தப்பட்ட மனிதர்கள்களைச் சுமக்க பூமி மகிழ்கிறது என்பேன்.



இப்படி சொல்லின் ருசி கொண்ட கவிதைகள் நிறைய எழுதும் வல்லமை, இவரது சிறப்பு எனலாம்.ஆனால், இந்த ஒன்றை மட்டுமேக் கொண்டு எதைவேண்டுமானாலும் எழுதித்தள்ளிவிடாமல், அனுபவங்களுக்காகவும், சிந்தனைத்தெறிப்புகளுக்காகவும், கருத்துக்களுக்காகவும் காத்துக்கொண்டிருக்கிறார். தூண்டில் வீசிக் காத்திருக்கும் மனிதரைப்போல. மீனல்லாதவைகள் சிக்கினால் அவற்றை தூக்கி எறிந்துவிடுகிறார்.கவிதைகளைப் படிக்குபோதுஅட புதுசா இருக்கே!” என எண்ணும்படியான நிறைய இடங்களை சந்திக்க முடிகிறது. குழந்தைப் பருவ நினைவுகூரல், கிராம வாழ்வை தகவல்களுடன் முன்வைக்கும் வாழ்வனுபவம், கதைத்தன்மை கொண்ட கவிதைகள் என கவிதைகள் பரவலாக உள்ளன. ஒரு ஒளிப்படக் கருவியால் பதியப்பட்டதுபோல் காட்சிகளாக மட்டுமே வைத்துவிட்டு, கவிஞர் விலகி நின்று, அவர் பெற்ற சலனங்களை, வாசகருக்குள்ளும் நிகழ்த்திக்கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்ட கவிதைகளும் உள்ளன.( மிருதகரம்,படிவம்..,) கவிஞருக்கு உலக இலக்கிய வாசிப்புப் பரிச்சயம் இருப்பதை இவர் கவிதைகளின் வழியாகவே கண்டுகொள்ள முடிகிறது. டோரா புஜ்ஜி போன்ற சில கவிதைகள் அவ்வளவு தூரம் கவிதையாகிவிடமுடியவில்லை.குழந்தைகளின் உலகம் இவர் கவிதைகளீல் பரவலாக பதிவாகியுள்ளது.

1977 ல் பிறந்த .அரவிந்தன் பிறந்தது நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூரில். தற்போது சென்னையில் வசித்து வரும் இவர் தினமணி நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.1996 லிருந்து பல்வேறு பத்திரிக்கைகளில் பணீயாற்றிய அனுபவமுள்ளவர்.இவரின் முதல் கவிதைத் தொகுப்புபூமத்திய வேர்கள்' 2003 ல் வெளியானது.குழிவண்டுகளின் அரண்மனை என்கிற இந்தத் தொகுப்பு இரண்டாவது. கவிஞர் சுகுமாரன் அவர்களின் அணிந்துரையோடு வெளிவந்துள்ளது.இவரின் வலைப்பூ

குழிவண்டுகளின் அரண்மனை தொகுப்பிலிருந்து சில கவிதைகள்.

பூசணித் தாதி

விட்ட மழையிலிருந்தது
ஒதுங்கும் காடு
காக்கி கால்சட்டை அணிந்த சிறுவன்
பச்சை மிளிரலிலிருந்த
ஒரு பூசணிக் கொடியைக் கண்டான்
அதன் கொடிகளில் விழுந்து படர்ந்திருந்த
மின்னல் அவன் கண்களில் அடிக்க
ஒரு தாதியைப் போல் செயல்படத் தொடங்கினான்
இரு கைகளாலும்
அந்தப் பச்சிளம் பூசணிக் குழந்தையின்
கால் பகுதியைப் பிடித்தான்
குலுங்கி வலியால் துடித்த
தாயின் சத்தத்தைக் கவனியாது
வெடுக்கென இழுத்தான்
அதன் பிசுபிசுப்பான ஈரத் தலையை
மார்போடு அணைத்து
வீட்டிற்கு விரைந்தான்
அவன் அம்மாவிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு
அவன் கண்களில்
அவன் தந்தையாக ஏறிநின்று
பகிர்வளித்த சந்தோஷத்தில் குதித்தான்.

வால்கள் வரையும் இதயம்

நீலக் குழைவுநுழைவுகளை
பார்வையில் பறக்கவிட்டு
நெருப்பாய் நெளிந்து
புளிய மரத்தோரம் நிற்பவள்
வருந்தி பார்க்கலானாள்
சேர்மையிலிருந்த இரு தும்பிகளை
பிடிபடலுக்கு நடுங்கி
வேகம் கூட்டி
கிளை மோதி
சுவர் மோதி
மின்கம்பி மோதி
அந்தரத்தில் புணர்ந்தவற்றின் சுற்றலில்
தொடர் ஓட்டங்கள் கிழித்து
காய்ந்திருந்த அவள் காயங்களின் வடுக்கள்
ரணமாகி இரத்தம் கொட்டின
கரும்பாறை அழுத்தலில்
மூச்சு திணறி
பெண்தும்பியின் முதுகெலும்புகள் முறிகிற
ஓசைகளின் பிரமை
காதுகளுள் குதிக்க
அவள் பிண்ட சராசரமும்
வேட்டுகளாய் வெடித்தன
பொறுக்கமாட்டாது
பிரித்துவிட
கல்லெடுத்து குறிபார்த்தவள்
தன் ஒப்புமை கயமைக்காக
அவளையே ஓங்கிஓங்கி இடித்துக்கொண்டு
பெரும் சத்தத்துடன் அழத்தொடங்கினாள்
தும்பிகளின் வால்கள் வளைந்து பிணைந்து
வரைந்திருந்த இதயப்பூர்வம் கண்டு.

பூனையின் உலக இலக்கியம்

எலி சாப்பிடாத
ஒரு பூனையை எனக்குத் தெரியும்

வீட்டிற்கு வரும்
லியோ டால்ஸ்டாய், அன்ரன் செக்கோவ், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி
காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ், ஜோர்ஜ் லூயி போர்ஹே
மரீயா லூயிஸô பொம்பல், மார்கெரித் யூர்ஸ்னார்,
இஸபெல் அலெண்டே, நவ்வல் அல் ஸôதவி
நதீன் கோர்டிமர், ஆல்பெர் காம்யூ, ஆஸ்கர் ஒயில்ட் - எனச்
சகலரின் எழுத்தையும் படிக்கும்

மழையில் நனையும்
ஒரு பூனைக்குட்டி மீது
பரிதாபம் கொள்ளும் பெண் பற்றி
எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய
'மழையில் பூனை'* சிறுகதையை
ஒரு குளிர்காலத்தில் சொன்னதிலிருந்து
அந்தப் பூனைக்குக் கட்டுப்படாத
பூனைகளே இல்லையாம்

உச்சிவெயில் ஒழுகிக்கொண்டிருந்த
சன்னலோரம் ஒருநாள்
சினுவா ஆச்சிபி "சிதைவுகள்' நாவலின்
இருபதாம் அத்தியாயத்தைப்
படித்துக் கொண்டிருந்தபோது
எதேச்சையாய் அதனிடம் கேட்டேன்:
'திருட்டுத்தனமாய் நீ எலிகளைச் சாப்பிடுகிறாயாமே'

வீட்டிற்கு வருவதையே நிறுத்திவிட்டது.

எல்லாம் காற்றுவாழ்வனவே...

காற்றின் நுண் ஆய்வாளனெனக் கைகுலுக்கியவன்
தோள் மாட்டி பை முழுவதும்
எண்ணிறாத பறவைகளின்
வண்ணவண்ண இறக்கைகள் பறந்தன
காற்றில் ஒற்றையில் அலைந்து
இறக்கை எழுதும் குறிப்புகள் சுவாரஸ்யமானவை என்றவன்
நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம் என்று
கண்டறிந்ததாய்ச் சொன்னவை:
தாமரைக்கொடியின் காற்றைச் சுவாசிக்கும்
மீன்கள் அதிகம் ருசிக்கும்
வேப்ப மரக்காற்றைச் சுவாசித்து உறங்கினால்
தீரா நோயனைத்தும் திரும்பிப் பாராமல் நடை கட்டும்
ஆலமரக் காற்றைச் சுவாசித்து உறங்கினால்
ஆயுள் கொடுக்கும் செல்கள் வீர்யம் கொள்ளும்
அரச மரத்துக் காற்றால்
மூளையின் அறைகளில் புது ஊட்டம் பிறக்கும்
அழகிய பெண் சுவாசித்தைச் சுவாசித்த மரம்
அதீதமாய்ப் பூத்துக் குலுங்கும்
மரங்களில் முட்கள் முளைப்பதற்கு
முரடர்கள் சுவாசக் காற்றே காரணம்
பூச்செடி, கொடிகளில் முட்கள் முளைப்பதற்கு
முரட்டுப்பெண்ணின் சுவாசம் காரணம்
சற்று நிறுத்தியவன் தொடர்ந்து சொன்னவை:
பறத்தல் எனும் வினை
தேர்ந்த கண்கட்டு வித்தை
காற்றின் ஆழத்தில் எல்லாமே மூழ்கிக் கிடக்கின்றன
எல்லாம் காற்றுவாழ்வனவே...
துடுப்புகள் பிணைந்த பறவைகள் மிதந்தே செல்கின்றன
துடுப்படிக்காது பறவைகள் கடக்கிற இடங்களில்
பிரபஞ்ச ரகசியத்தின் பிடிபடலிருக்கும்
களைப்பைப் போக்க
கடலைச் சில்லறைத் துளிகளாக்கி
அதன் ஈரப்பதத்தில் காற்று சாய்வு கொள்ளும்
உயர மிதக்கும் பறவையின் நிழலைக்
காற்று கீழே பிரதிபலிக்கவிடுவதில்லை
ஓரிடத்தில் பறவைகள்
அதிகம் குவிவதால் நேரும் சரிவால் புயல்
பெருமூச்சுகளின் வெப்பம் கூடுவதால்தான் வெக்கை
சுவாசித்தலுறவை முறித்துக் கொள்ளும் எதையும்
காற்று கரைத்து இன்மையாக்கிக் கொள்ளும்.

நீர்மாலை

நிசி விறைத்த பனியில்
மூழ்கிக்கிடந்தது
வேலிக்கம்பிகளுக்குள் காலி மனை
அதில் சற்றுமுன் முளைவிட்ட
நெல்விதையொன்று
உள் பரவும் காற்றில்
தன் சகங்களின் வாடையை நுகரத் துடித்தது
வேரில் சுழலும் ஊற்றில்
தன் சகங்களின் உறிஞ்சோசையைக் கேட்கத் துடித்தது
ஏதும் உணராததில் சுணங்கி
இருளை நகர்த்தித் தள்ளத் தொடங்கி
துவண்டு
வெளிச்சத்துக்கு வழிவிட இறைஞ்சியது
விடி சிறகோசைகளில்
மேலும் சிறு துளிர்த்த உயரத்திலிருந்து எக்கி
பிஞ்சு பச்சையம் பதற
முன்னும்பின்னுமாக வலமும் இடமுமாக
அசைவற்ற பார்வையால் தேடித்தேடிப்பார்த்து
பெருகின தன் அடர்காடு காணாது தவித்தது
அசை செடி முட்கள்
நெருங்கி வந்துபோன திகைப்பில்
தானேவொரு களையாய் வேரிடுவதாகத் துணுக்குற்றது
அதைச் சீந்தாது கால்கள் கடந்ததும்
தனித்து உயிர்க்காது
சவத்தின் இறுதி நீராடலுக்கு
நிரப்பி வரும் நீர்போல
துளிதுளியாய் ஊற்றை
உள்ளுக்குச் சுமக்கத் துவங்கியது.

கல்யாணத்துக்குப் போகையில்...

பேருந்தில் இடம்பிடித்து
வைத்திருப்பதுபோல
வாழ்த்து அட்டையில்
இடம் ஒதுக்கி
நண்பர்கள் காத்திருக்கிறார்கள்

மண்டபத்திற்குள் நுழைவதற்குள்ளே
மாலையிலிருந்து கொட்டிய
இதழ்களெல்லாம் திரும்ப அறிவிக்கிறார்கள்
'இவர் கவிஞர்
கவிதை எழுதப் போகிறார்'

வியர்த்து சிரித்து
காற்புள்ளியைக்கூட
இட இயலாது திணறுகிறபோது
கண்டுகொள்கிறோம்
என்னை அவர்களும்
கவிதையை நானும்
அவர்களைக் கவிதையும்.

நிழல் மின்சாரம்

வெயில் வேய்ந்திருந்த சாலையில்
பெரிய சைக்கிளைத்
தாவித்தாவி
மிதித்துப் போன சிறுவன்
நாலு மின்கம்பிகளின்
நீள நிழல்களைக் கண்டான்
விளையாட்டு மனம்
சக்கரமாகச் சுழலத் தொடங்கியது
இரு மின்கம்பி நிழல்களின்
இடைப்பட்ட வெயிலை
நிழலின் மதிலாக நினைத்து
அதன் மேல்
ஒடித்தொடித்து வளைந்து
விளம்புகளில் நழுவிநழுவி
வித்தை காட்டிக் கொண்டே
சில மிதிகள் போனான்
எதிர்பாராமல்
திடுமென பின்னால் வந்தது
சிற்றுந்தின் பெருஞ் சத்தம்
அதில் நிழல் கம்பிகளில்
தொற்றிய மின்சாரம் பாய்ந்து
தூக்கியடிக்கப்பட்டான்
மதிலிலிருந்து சாலைக்கு.

தந்தைப்பால்

தளிர் விரல்களால்
குழந்தை வருடி
உடன் திகைத்துப் பின்வாங்குகிறது
சற்று நேரம் கழித்து
திரும்பவும் வந்து தடவி
ஏமாந்து வெறிக்கிறது
திரண்ட இரத்தங்கள் கட்டி
தகப்பனுக்கு
நெஞ்சு வலிக்கிறது.
**
குழிவண்டுகளின் அரண்மனை- கவிதைகள்
அருந்தகை
E-220, 12 வது தெரு, பெரியார் நகர்,
சென்னை-82
arunthagai@gmail.com

பக்கங்கள் -80
விலை ரூ.40.

நன்றி - தடாகம்


Thursday, March 18, 2010

ஜே.பி.சாணக்யாவும் என் ஆதங்கங்களும்

ஜே.பி.சாணக்யாவும் என் ஆதங்கங்களும்

1.எனக்கு மிகப்பிடித்த எழுத்தாளர்களின் முதல்வரிசையில் வைக்கத்தகுந்த ஜே.பி.சாணக்யாவை நான் ஏன் இவ்வளவு நாட்கள் அறியாமல்போனேன்?

2.எனக்கு படைப்புகளையும், படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்தும், பகிரும் நண்பர்கள் ஜே.பி.சாணக்யாவை ஏன் என்னிடம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்திப் பரிந்துரைக்கவில்லை?

3.ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு, மனுஷ்யபுத்திரன் போன்றவர்களின் அளவுக்கு ஜே.பி.சாணக்யா ஏன் பிரபலமானவராயில்லை?

4.எனக்குத் தெரிந்த இதழாசிரியர் ஒருவர் ஜே.பி.சாணக்யாவிடம் கதை கேட்டபோது,' நான் பொருளாதார நிலையில் மிகவும் நலிந்துள்ளேன். எனக்குப் பணம் கொடுத்தால் (சில நூறுகள்)மட்டுமே எழுதமுடியும். பணம் பெற்ற பிறகுதான் எழுதவேத் துவங்குவேன்' என்றாராம்.அற்புதமான கதைகளை எழுதியிருக்கிற ஜே.பி.சாணக்யா என்கிற கலைஞனிடமிருந்து மேலும் கதைகள் வருவதைத் தடுப்பதும், தீர்மானிப்பதும் சில நூறு ரூபாய்கள்தான் என்கிற நிலை தமிழ் இலக்கியத்திற்கு நல்ல சூழல்தானா?

5.என் மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்கள் கண்மணி குணசேகரன், சு.வேணுகோபால் ( அவ்வப்போது மற்றும் பலர்)ஆகியோரை தொடர்ந்து முன்னிறுத்துவதைப்போல் ஏன் ஜே.பி.சாணக்யா பற்றி எழுதவில்லை?

6.ஓடோடிப்போய் ஜே.பி.சாணக்யாவைச் சந்திக்கும் ஆர்வம் எழுந்தாலும் சந்திப்பது சரியாகுமா? ஏற்கனவே சந்தித்த சில படைப்பாளிகள் பற்றிய என் மனப்பிம்பம் நேரில் சிதைந்துபோனதைப்போல் ஜே.பி.சாணக்யா விசயத்திலும் ஏற்பட்டுவிட்டால், அதனால் நட்டம் எனக்குத்தானே?

7.அவருக்கு இதுவரை கதா விருது என்ற ஒன்றைத் தவிர ஏன் மேலும் கிடைக்கப்பெறவில்லை?

8.திரைத்துறையில் ஆண்டுகள் கணக்கில் முயற்சி செய்துகொண்டும் இப்படியொரு ஆளுமை ஏன் இன்னும் அடையாளம் பெறவில்லை?

9. தடாகம் வலைத்தள கட்டுரையில் ‘ கனவுப் புத்தகம்' தொகுப்பை படிப்பதற்கு முன்பாகவே அவசர அவசரமாக எழுதிவிட்டோமே.அதையும் படித்துவிட்டு எழுதியிருப்பதுதானே இன்னும் நன்றாக இருந்திருக்கும்?( இப்போது முடித்துவிட்டேன்)

10. இலக்கிய வாசிப்பு இல்லாத நண்பர்களிடம்கூட ஜே.பி.சாணக்யாவைப் படித்துப்பாருங்கள் என்று பிதற்றிக்கொண்டிருக்கும் என் வேலை வீணானதோ?


பின்குறிப்பு
இவையெல்லாம் உணர்வுபூர்வமான வெளிப்பாடுகள். அறிவுப்பூர்வமாக அலசினால் தக்க விடைகளும், விவாதங்களும் கிடைக்கப் பெறலாம். ஆனால், ஜே.பி.சாணக்யாவை அறிமுகப்படுத்த நான் கையாண்டிருக்கும் வெளிப்பாட்டு உத்தி மட்டுமே இது.

சாளரத்தில் தெரியும் வானம் - தொடர் -ஜே.பி.சாணக்யா

படைப்பாளிகள் அறிமுகம் - .முத்துவேல்

ஜே.பி.சாணக்யா

கவிதை எழுதுவது என்பதே முதலாளித்துவம்தான் என்று அண்மையில் எங்கோ படித்திருந்தேன். இது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்குத்தெரியவில்லை.அதற்குள் செல்ல விரும்பவுமில்லை. ஆனால், வாசிப்பிலும், எழுதுவதிலும் ஈடுபடக்கூடியவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த மனிதர்கள்தான் என்றே நான் கருதுகிறேன்.இதனால்தானோ என்னவோ, இதுவரையிலும் பதிவாகியுள்ள இலக்கியப் பதிவுகளில் அதிகமும் நடுத்தர மக்கள் வாழ்வே பதிவாகியுள்ளது. கீழ் நிலை என்று நாம் எண்ணத்தக்க மனிதர்களுக்கும் கீழான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கக் கூடிய மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள். இவர்களின் இருண்ட வாழ்வை, நிழல் உலகத்தை நாம் அவ்வளவாக அறிந்திருப்பதில்லை.

நம் கண்களில் பட்டாலும், நம்மால் கவனம் குவிக்கப்படாத, அசட்டை செய்யப்படுகிற மனிதர்களே ஜே.பி.சாணக்யாவின் பெரும்பாலான கதைகளின் மாந்தர்கள்.சமூகத்தின் பார்வையில் கீழ் நிலையில் உள்ளவர்கள், குற்றவாளிகள், புறக்கணிக்கப்பட்டவர்கள் என்பதாக உள்ள மனிதர்களை சுற்றிச் சுற்றி வந்து கதைகள் பின்னப்பட்டிருப்பதால் வாசிப்பில் ஈர்ப்பும்,ஒருவிதப் பரபரப்பும் ,அதிர்ச்சியும் இயல்பாகவே ஏற்பட்டுவிடுகிறது.இவரின் ஒவ்வொரு கதையுமே உலுக்கிவிடும் அதிர்வுகளையும், பிரமாண்டத்தையும் வெகுவாக ஏற்படுத்தக்கூடியவை. அதனாலேயே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி, நெஞ்சில் உறைந்து நின்றுவிடக் கூடியவை.இவர் கதைகளில் உள்ள சம்பவங்களும், மனிதர்களும் கற்பனையாகவே இருந்துவிடக்கூடாதா என்ற இரக்கத்தையும்,பதற்றத்தையும் உண்டாக்கக்கூடியவை.

ஒரு சிறுகதையை பொருத்தமுள்ள வகையில் நீளமாகவும், ஒலி, ஒளிக் காட்சிகளோடு பார்த்து அனுபவித்த வகையில் உணரச் செய்யும் துல்லியத்தோடும், விவரணைகளோடும் எழுதுபவர் இவர். துல்லியமாக எழுதும் அதேசமயத்தில் நவீன இலக்கியத்திற்கேயுரிய ஒரு அம்சமான புதிர்த்தன்மையோடு எழுதுவதும் வாசகருக்குக் கூடுதல் பரிமாணத்தை அளிப்பவை. பிரமாண்டமும்,வசீகரமும், கவித்துவமும் கொண்டுள்ள மொழி நடை இவருடையது. ஒழுக்கம், காமம் ஆகியவற்றின் மீதான சமூக மதிப்பீடுகளை தன் கதைகளின் வழியாகக் கேள்விக்குட்படுத்துபவர்.

ஜே.பி.சாணக்யா 1973ல் கடலூர் மாவட்டம் முடிகண்டநல்லூர் என்கிற கிராமத்தில் பிறந்தவர். பெற்றோர் எம்.அப்பாத்துரை,எம்.கே. தெய்வக்கன்னி. இருவருமே ஓய்வுபெற்ற ஆசிரியர்கள்.சிதம்பரம் நடராஜர் சன்னதியில் கர்நாடக சங்கீதத்தில் பாட்டுப் பயிற்சியும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டும் பயின்ற இவர் ஓவியரும்கூட.

தற்போது, சென்னையில் தங்கி தமிழ்த் திரைப்படத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.

இவரின் சிறுகதைத்தொகுப்புகள்

1. என் வீட்டின் வரைபடம் ( காலச்சுவடு)
2. கனவுப்புத்தகம் ( காலச்சுவடு)


தொடர்ந்து சிறுகதைத் தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறார்.கதா விருது பெற்றவர்.


இணையத்தில் வாசிக்க

1. ‘சித்திரச் சாலைகள்'- சிறுகதை

2. பூதக்கண்ணாடி- சிறுகதை



(என் வீட்டின் வரைபடம் தொகுப்பு மற்றும் சில கதைகளை மட்டுமே முன்வைத்து எழுதப்பட்டது)

நன்றி - தடாகம்

Tuesday, March 16, 2010

அகநாழிகை (மார்ச் 2010) இதழ் வெளியாகியுள்ளது


அகநாழிகை (மார்ச் 2010) இதழ் வெளியாகியுள்ளது.

இடம் பெற்றுள்ள படைப்புகள் :

நேர்காணல்

“அதிகார எதிர்ப்பும் அட்டைக்கத்தி புரட்சியும்” – மனுஷ்யபுத்திரன்

நேர்காணல் : பொன்.வாசுதேவன்

சிறுகதைகள்

  1. ரெஜியின் பூனை – ரௌத்ரன்

  2. கோழை – சாந்தன்

  3. சஷ்மலின் வினோத இரவு – சத்யஜித்ரே (தமிழில் : நதியலை)

  4. பிண ஆய்வாளன் – கமலாதாஸ் (தமிழில் தி.சு.சதாசிவம்)

  5. முதல் வேளை – மா ஃபெங் (தமிழில் : எஸ்.ஷங்கரநாராயணன்)

கட்டுரைகள்

  1. இடம் பெயர்ந்த மனிதர்கள் : எட்வர்ட் செய்த்தும் ஓரியண்டலிசமும் – எச்.பீர்முகமது

  2. கவிஞன் ஏன் காணாமல் போகிறான்? – வா.மணிகண்டன்

  3. மத்தியக்கிழக்கின் வாழ்வும் திரையும் – அய்யனார் விஸ்வநாத்

  4. கைந்நிலை சில பாடல்களும், கனிமொழியின் அகத்திணையும் – லாவண்யா சுந்தரராஜன்

  5. பின்நவீனத்துவத்தின் மறைவும் அதற்கு அப்பாலும் – ஆலன் கிர்பி (தமிழில் : மோகன ரவிச்சந்திரன்)

வாழ்க்கைத் தொடர்

  1. சமாதானத்தின் இசை : சுபின் மேத்தா – ரா.கிரிதரன்

நூல் அறிமுகம்

  1. எட்றா வண்டியெ – வா.மு.கோமு

  2. தாய்ச்சொல் – தொல்.திருமாவளவன்

  3. குதூகலப் புங்காவின் சித்திரம் – மொழி

கவிதைகள்

  1. யாத்ரா

  2. கார்த்திகா வாசுதேவன்

  3. என்.விநாயகமுருகன்

  4. தாராகணேசன்

  5. ராமலஷ்மி

  6. கதிர்பாரதி

  7. சேரல்

  8. விதூஷ்

  9. அஜயன்பாலா சித்தார்த்

  10. யாழினி

  11. நேசமித்ரன்

  12. ஹேமி கிருஷ்

  13. தர்ஷாயணி

  14. பா.ராஜாராம்

  15. ராகவன் ஸாம்ஏல்

  16. அனுஜன்யா

  17. கௌரிப்ரியா

  18. அனிதா

  19. பாரதி வசந்தன்

  20. வெய்யில்

  21. ஒழவெட்டி பாரதிப்ரியன்

  22. மணி ஜி (தண்டோரா)

  23. எம்.கார்த்திகைப்பாண்டியன்

  24. ஆதவா

  25. நந்தாகுமாரன்

  26. மதன்

  27. கென்

…………………………………………………………………………………………………………………………….….

தமிழ்ப் படைப்புலகின் தனித்துவக்குரலான ‘அகநாழிகை‘ இதழ் சிற்றிதழ்களுக்கே உரித்தான பொருளாதார சிக்கல்களை எதிர் கொண்டு வருவதால் வினியோகம் முதலிய விஷயங்களில் முழுமையாக செயல்படுவதற்கான முயற்சிகள் இன்னமும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. இப்போதைக்கு சந்தாதாரர்களே முக்கிய ஊக்கமளிப்பவர்களாக இருக்கிறார்கள். அகநாழிகை இதழ் தற்போதைக்கு சில இடங்களில் மட்டுமே கிடைக்கிறது. மேலும் பரவலான வினியோகத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. எனவே இதழ் வேண்டுவோர் நேரடியாக கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.

அகநாழிகையின் ஆண்டு சந்தா ரூ.200 இரண்டாண்டு சந்தா ரூ.350 ஆயுள் சந்தா 3000 புரவலர் நன்கொடை ரூ.2000

சந்தா மற்றும் அகநாழிகை பதிப்பக வெளியீடுகளை

ICICI வங்கிக்கணக்கு எண். 155501500097 – P.VASUDEVAN – MADURANTAKAM BRANCH என்ற கணக்கில் செலுத்தி பெறலாம்.

ONLINE வழியே புத்தகங்களை பெற :

http://www.ezeebookshop.com மற்றும் http://www.udumalai.com

அகநாழிகை விற்பனைக்கு கிடைக்கும் புத்தக கடைகள்

நியூ புக் லேண்ட்ஸ், தி.நகர், சென்னை.

டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர், சென்னை.

பாரதி புக் ஹவுஸ், பெரியார் பேருந்து நிலையம், மதுரை.

அகநாழிகை இதழை கமிஷன் அடிப்படையில் வினியோகிக்க முகவர்கள் தேவை. தொடர்பு கொள்க.

படைப்புகள் அனுப்ப சந்தா, விளம்பரம் மற்றும்

அனைத்து தொடர்புகளுக்கும் :

பொன்.வாசுதேவன் – 9994541010

ஆசிரியர் – அகநாழிகை

aganazhigai@gmail.com

Tuesday, March 2, 2010

சாளரத்தில் தெரியும் வானம் - தொடர் - கவிஞர் கரிகாலன்

படைப்பாளிகள் அறிமுகம்
கவிஞர் கரிகாலன்

எல்லோருக்கும் காணக்கிடைக்கும் சராசரிக் காட்சிகளிலிருந்துகூட கவிஞன் சில கண்டறிதல்களை அடைகிறான்.அந்த மாற்றுக் கோணத்தை, சிந்தனையை கற்பனையும், கவித்துவமும் கலந்து தருகிறான். கவிஞர் கரிகாலன் தமிழின் சிறந்த கவிஞர்களுள் ஒருவர்.அதிகாரத்தின் முன் கட்டுப்படவேண்டிய நிர்ப்பந்தம்,வஞ்சிக்கப்படும் எளிய மனிதர்களுக்கான அக்கறை,அரசியல்,காமம், அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு, பகடி, அலாதியான கற்பனை, காட்சிகளை முன்வைத்துவிட்டு ஒதுங்கி நின்றுகொள்ளுதல், தொன்மையையும் நவீனத்தையும் இணைத்து ஒரு மாயக்காலத்தை உருவாக்குதல் , சிதையும் தொன்மம் பற்றிய கவலை, குழந்தைகள் உலகம் என இவரின் கவிதைகளின் தன்மைகள் பலதரப்பட்டது. 90 களுக்குப் பின் நவீன தமிழ்க்கவிதையின் போக்குகள் என்கிற இவரின் திறனாய்வுக் கட்டுரைகள் கொண்ட நூல் இவரின், திறனாய்வு ஆளுமையை நன்கு வெளிப்படுத்தும் சிறந்தவொரு நூல்.கவிதைகளோடு நின்றுவிடாமல் திறனாய்வு, கட்டுரைகள், நாவல் எழுதுவது, சமூக நலன் சார்ந்த செயல்களில் ஈடுபாடு என இயங்குகிறார்.மேலும் களம் புதிது என்கிற சிற்றிதழ் நடத்தியிருக்கிறார். தற்போது மீண்டும் இதழைத் தொடர இருப்பதாக அறிய நேர்ந்தது.

தொன்னூறுகளிலிருந்து இலக்கியவெளியில் இயங்கிவரும் கரிகாலன் 1965ல் கடலூர் மாவட்டம் மருங்கூரில் பிறந்தவர்.ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் இவர் ஆசிரியராகப் பணுபுரிகிறார். இவரது கவிதைகளில் சில ஆங்கிலம், இந்தி, வங்காளம் போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.புனை
விலக்கியத்திற்காக கதா விருதும், கவிதைக்காக ஏலாதி இலக்கிய விருதும் பெற்றுள்ளார். இவரது மனைவி சு.தமிழ்ச்செல்வி தமிழின் முன்னணிப் புதின எழுத்தாளர்களுள் ஒருவர்.இவரது தம்பி இரத்தின.புகழேந்தி அவர்களும் கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.

கரிகாலனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் எனும் 100 கவிதைகள் அடங்கிய தொகுப்பு உயிர் எழுத்து வெளியீடாக வந்துள்ளது. அதன் பின்னைட்டையில் காணப்படும் வரிகளே, இவரைப் பற்றின செறிவான, ஆழ்ந்த திறனாய்வுக்கு சான்றாக அமைந்துள்ளது. அது பின்வருமாறு

தொன்னுறுகளில் உருவான தனித்துவம் மிக்க கவி ஆளுமைகளுள் ஒருவரான கரிகாலனின் கவிதைகள் அதிகார எதிர்ப்பை மையச் சரடாகக் கொண்டவை.தொன்மமும், புனைவும், மர்மமும் மிகுந்த இவரது கவிதைகள் தமிழ்க் கவிதை மரபின் தொடர்ச்சியும், மேலைத்தேயக் கவிதைகளின் புதுமையும் இணையப் பெற்றவை.ஐவகை நில அடையாளங்கள் திரிந்து உருவாகிக்கொண்டிருக்கும் ஆறாவது நிலத்தையும், அபத்தங்களின் கூட்டிசையாக மலர்ந்திருக்கும் நம் நலவாழ்வையும் கேலிசெய்யும் இத்தொகுப்பு இதுவரை வெளிவந்துள்ள அவரது தொகுப்புகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நூறு கவிதைகளை உள்ளடக்கியிருக்கிறது'

இவரின் படைப்புகளாவன

1.அப்போதிருந்த இடைவெளியில்- கவிதைகள்
2.புலன்வேட்டை- கவிதைகள்
3.தேவதூதர்களின் காலடிச்சத்தம்- கவிதைகள்
4.இழப்பில் அறிவது- கவிதைகள்
5.ஆறாவது நிலம்- கவிதைகள்
6.அபத்தங்களின் சிம்பொனி- கவிதைகள்
7.கரிகாலனின் தேர்ந்தெடுத்த கவிதைகள்
8.நவீனத்தமிழ்க் கவிதையின் போக்குகள்- கவிதைத் திறனாய்வுக் கட்டுரைகள்
9. நிலாவை வரைபவன் - நாவல்

தொடர்ந்து இதழ்களிலும், இணைய இதழ்களிலும் இயங்கிக்கொண்டு வருகிறார்.இவர் பற்றி எழுத எனக்கு ஏற்பட்ட அளவுக்கு, சொற்களும் சிந்தனையும் பக்குவமும் ஏற்படவில்லை என்றே உணர்கிறேன்.எனவே, அது குறித்துப் பேச இவரின் கவிதைகளையே கூடுதலாகத் தருகிறேன்.

கரிகாலன் கவிதைகள்

டயானா மரணமும்
கிளிண்டன் காதல் லீலைகளும்
பஞ்சாயத்து தொலைக்காட்சியில்
பார்த்தபின் விவாதமாயிற்று
டீக்கடை பெஞ்சுகளில்

முதிர்ந்த கரும்பு காய்ந்து கருக
ஆலை திறக்குமா
நிலுவை கிடைக்குமா
இருள் சூழ் மர்மமாயிற்று

கழிப்பறைக்கு வழியற்று
ஒழுங்கிகளில் புதர் தேடும் பெண்கள்
பிரியங்கா அப்படியே பாட்டி ஜாடை
துணிமழித்து உட்கார்ந்தபடி
பேசிக்கொண்டார்கள்

வீட்டுக்கொரு தொலைக்காட்சிப் பெட்டி
லட்சியமானபோது
மருங்கூருக்குள் வந்துவிட்டது உலகம்
உலகத்துக்குத்தான் கவலையில்லை
மருங்கூர் பற்றி
***

ஹிட்லர் முசோலினியென கலிங்கத்திற்கு முந்தைய
அசோகர்களைக் கடந்து வரும் வரலாற்றின்
உருளும் பாதங்கள் சமகாலத்தில் வந்து நிற்கிறது
வாஷிங்டன் நகரின் பிரதான வீதியில்
வெள்ளை மாளிகையினுள் அமைதியிழந்து
திரியும் மன நோயாளி
பாவம் புத்தனால் கைவிடப்பட்டவன்
விதம்விதமான ரத்தக் குழம்புகள் கொண்டு
அவன் உலகப்படத்தை
அமெரிக்காவாய் வரைந்து பழகுகிறான்

நிலா

கிணற்றுக்குள்
விழுந்த நிலவை
சிறுவர்கள்
வாளியால் இழுத்தார்கள்
கனம் தாங்காது
கயிறறுந்து
நிலா மீண்டும்
கிணற்றுக்குள் விழுந்தது
பாதிக்கிணறுவரைத் தூக்கியதை
பெருமையோடு
பார்ப்பவர்களீடமெல்லாம்
சொன்னார்கள்
அச்சிறுவர்கள்

விடுதலை

பள்ளிக்கூடம் போக
அவசியமற்ற பூனைமீது
பொறமை சிறுவன் கார்க்கிக்கு
ஒரு நாள் ஒப்பந்தமாக
பூனைவால் அவனுக்கும்
புத்தகப்பை பூனைக்கும் மாறியது
சீருடை அணிந்து பூனை பள்ளிக்குப்போக
நாள்முழுதும்
கொய்யாமரத்தில் ஏறித்தாவினான்
சன்னல் கிராதிகளைப் பற்றி
வீட்டைக் குறுக்குவாட்டில் சுற்றினான்
கரப்பான் பூச்சிகளையும்
எலிக்குட்டிகளையும் துரத்தித் திரிந்தான்
கடிகாரத்தில் பள்ளி முடியும் நேரத்தைப்
பார்த்த பூனைக்கார்க்கி
விசனம் கொண்டான்
கார்க்கியாய்த் திரும்புவதற்கு விருப்பமற்று
தான்தான் பூனையென்று
வீட்டைத் துறந்து வெளியேறினான்
பள்ளீக்கூடத்திலிருந்து திரும்பிய பூனை
கார்க்கியைக் காணாமல் திடுக்கிட்டது
பின் அழுதுகொண்டே ஹோம் வொர்க்
செய்யவும் ஆரம்பித்தது.

மயக்கம்

ஆடுகளத்து நியான் சூரியன்
பெருவிரலின் முனைவழியே
எல்லா வீடுகளுக்குள்ளும்
பகலை அழைத்துவரும்
சோடியம் மினுங்கலை
நட்சத்திரமென மயங்கும்
அயல்தேசப் பறவை திசைகுழம்ப
உயிர்விடும் சுவர்மோதி
அசல்சூரியன் தலைகாட்டும்போது
மின்னொளியென நம்பி
அசட்டு ஆமைக்குட்டி
கடற்கரைப் பரப்பெங்கும்
பாதம்வேக அலையும்
இரண்டும் கெட்டான் பொழுதில்
மருத்துவமனையொன்றில்
தேவையில்லாத விசயங்களில்
நுழைத்துவிடுவதுபோல்
துருத்திக்கொண்டிருக்குமென் மூக்கை
கொஞ்சமாய் வெட்டிக்கொண்டு
வெளியேறுகையில்
வரவேற்க வாசலில் வளர்ந்து நிற்கிறது
பறவைகளின் புழக்கமற்ற சிறுகுன்று
அதனின்றும் வீழுகின்ற அருவியுடன்
***

இசைவற்று
அசைகிறது
சிறகுகள்
பறவை உடலின்
வலி தெரியாமல்
***

தென்னங் குருத்துகளை
அழிக்கும் ஆனைக்கொம்பு
வண்டுகள் பற்றி அறியாத கவிஞனுக்கு
இளநீரையருந்தும்
உரிமை இருப்பதுபோலவே
குடும்பம் நடத்தத் தெரியாத அவன்
சம்சாரியாகவுமிருக்கிறான்
***
சாகச விரும்பிகளின்
கரவொலிக்கிடையில்
காற்றில் அலைந்து
புறா கொண்டுவரும்
மேஜிக் நிபுணர்
அடுத்த காட்சி துவங்குமுன்
வேர்வை நெடிவீசும்
கருப்பு அங்கியை அகற்றி
அரங்கின் பின்புறம் செல்கிறார்
சாதாரண மனிதராக
நின்று கொண்டிருக்கும்போது
சுதந்திரமாக உண்ர்கிறார்
அவ்வெண்ணத்தின் குறியீடாகவொரு
சிகரெட் பற்றவைத்து
புகைவளையங்களைக்
காற்றில் செலுத்துகிறார்
***
குளிருக்கு இதமாக
வயிற்றை
எரியும் இண்டிகேட்டரில்
வைத்திருக்கும்
கருவுற்ற பல்லி.
***

நாயும் பிழைக்கும்

கறக்கும் பசுவை விற்று
தொலைக்காட்சிப் பெட்டியை
வாங்கிவருகிறான் குடியானவன்
தொழு நோயாளியின் பிச்சைப்
பாத்திரத்தில் சில்லறைகளை
திருடிக் கொண்டிருக்கிறான் போலீஸ்காரன்
துப்பாக்கியை அடகுவைத்து
மதுப்போத்தல்களைப் பெறுபவன்
ராணுவவீரன்
சாதகமான தீர்ப்பொன்றிற்காக
வேசியை இனாம் பெறுகிறான்
அறங்கூறுபவன்
தனது கழிப்பறையை நவீனப்படுத்த
தேசத்தின் ஒரு பகுதியை உலகவங்கியில்
அடகுவைக்கிறாள் அரசி
முச்சந்தியில் எழுந்தருளியிருக்கும்
தெய்வத்தின் முகத்தில்
சிறு நீரைப் பெய்துவிட்டு ஓடுகிறது
தெரு நாயொன்று.
***
ஒரு வார்த்தையை
வீசியெறியுங்கள்
உங்களுக்கு ஆதரவாகவோ எதிராகவோ
அது ஒரு வேலையை
செய்துகொண்டிருக்கும்.



Monday, February 15, 2010

சாளரத்தில் தெரியும் வானம்-தொடர்- அ.வெண்ணிலா

என் பார்வையில் படைப்பாளிகள்- ச.முத்துவேல்
கவிஞர் அ.வெண்ணிலா
vennila
பெண்ணாகப் பிறந்துவிடுவதாலேயே உடல் சார்ந்தும், சமூக நியதிகள் சார்ந்தும் ஒருவர் அடையக்கூடிய இன்னல்களும் பெருமைகளும் ஆணுடன் ஒப்பிடும்போது வெகுவாக வேறுபடுகிறது.அன்னிய ஆடவர்களின் முன்னால் பெண்குழந்தைகளைக் கூட நிர்வாணமாக தோன்ற அனுமதிப்பதில்லை.ஆனால்,ஆண் குழந்தைகளை பெண்கள் முன் தோன்ற அனுமதிப்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.காட்சி ஊடகங்களிலும் இவ்வாறே.உடல் சார்ந்த இன்னல்கள் இயற்கையானது. மாதவிடாய், கருத்தரிப்பு,பிரசவம் என்பதாக நீளும் பட்டியல்.ஆனால், குடும்பங்களிலும், சமூகத்திலும் பெண்ணுக்கு ஏற்படும் இன்னல்களும், கட்டுப்பாடுகளும் இயற்கையானதல்லாமல் நாம் ஏற்படுத்திக்கொண்டவை. இவைகளை உணர்வுபூர்வமாகவும், அனுபவபூர்வமாகவும் பட்டியலிட்டு , பெண்ணியம் உரத்துப்பேசும் கவிதைகளை எழுதிவருபவர் அ.வெண்ணிலா.தமிழின் பெண் கவிஞர்களுள் குறிப்பிடத்தகுந்தவர்.

ஆணை நோக்கிய அதிருப்தியை வெளிப்படுத்துவதாக உள்ளது, கவிதைகளில் இவர் குரல். இக் குரலில் பெண்பற்றிய சரியான புரிதலை ஆணுக்கு ஏற்படுத்துவதும், பெண்களீடம் இணக்கமான, பரிவான சூழலை ஆணிடம் ஏற்படுத்தும் விழைவுமே இருக்கிறது.'பெண்களை சரியாக புரிந்துகொள்ளுங்கள், அவளிடம் அன்பு காட்டுங்கள், அவளை சமமாய், உயர்வாய் நடத்துங்கள்' என்கிற கோருதலை முன்வைப்பவை இவர்தம் பெரும்பாலான கவிதைகள். இவர் பட்டியலிடும் இன்னல்கள் தமிழ்ச்சூழல் சார்ந்தவை, உலகளாவியவை எனப் பிரிக்கமுடியும்.
கவிதைகளின் படைப்பூக்கத்திற்கு மதி நுட்பத்தை பெரிதும் சாராமல், உணர்வுபூர்வமான அணுகுமுறையை கொண்டிருக்கிறார். இவரின் கவிதைகள் நேரடியானவை. பெரும்பாலானவை ஒற்றைத்தன்மை கொண்டவை.சொல்லவிரும்புவதை எளிதாக நேரடியாக முன்வைப்பவை.பன்முகத்தன்மையளிக்கும் வாய்ப்பிருக்க ஏதுவாக ,தலைப்புகள் இல்லாமல் கவிதைகள் எழுதுவதாக சொல்கிறார்.

''உபயோகமற்றுப்போன
கூர் நகங்களின் அவஸ்தைகளை
கூண்டுக்கம்பி பிறாண்டித் தணிக்கும்
புலிகள்''
என்ற வரிகள் வருகிற கவிதையில் இவ்வரிகளுக்கு முன்னும் பின்னுமான வரிகள் விரயமாகவேத் தோன்றி, பன்முகத்தன்மையையும் சேதப்படுத்திவிடுகிறது.மாறாக மேற்சொன்ன வரிகளோடு மட்டுமே அக் கவிதையை நிறுத்திவிட்டிருந்தால் ஒரு சிறந்த படிமக்கவிதையாக அது மிளிரும். கவிதையின் நீளம் பற்றி கவலை கொள்ளாமல் செறிவாகவே அமையும் வகையில் இவர் எழுதலாம் என நினைக்கும்படியாக சில கவிதைகள் அமைந்துள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகிலுள்ள அம்மையப்பட்டு என்கிற கிராமத்தில் வசிக்கும் இவர் ஆசிரியையாக பணிபுரிகிறார். கவிதைகள் மட்டுமல்லாது சிறுகதைகள், கட்டுரைகள், ஆகியவையும் எழுதிவருகிறார்.பெண்ணெழுத்தாளர்களின் வாழ்க்கை பற்றிய ஆவணத்தொகுப்பு ஒன்று இவரின் பெருமுயற்சியில் உருவாகியிருக்கிறது. பெண்ணியம் சார்ந்த செயல்பாடுகள், சமூக நலன் சார்ந்த செயல்கள், ஆகியவற்றில் ஈடுபடுகிறார்.தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க பொறுப்பு வகிக்கிறார்.
இவரின் படைப்புகளாவன

1.நீரில் அலையும் முகம்- கவிதைகள்
2.
ஆதியில் சொற்கள் இருந்தன-கவிதைகள்
3.கனவை போலொரு மரணம்- கவிதைகள்
4.
பட்டுப்பூச்சிகளை தொலைத்த ஒரு பொழுதில் -சிறுகதைகள்
5.கனவிருந்த கூடு-காதல் கடிதங்களின் தொகுப்பு
6.மீதமிருக்கும் சொற்கள்-பெண் எழுத்தாளர்களின் வாழ்க்கை பற்றிய ஆவணத்தொகுப்பு.




'நீரில் அலையும் முகம்','ஆதியில் சொற்கள் இருந்தன' ஆகிய தொகுப்புகளிலிருந்து சில கவிதைகள்...

மூஞ்சூறு,பசு
மயில்,எருமை என
விதவிதமான
வாகனமேறி உலகம்
காக்கிறார்கள்
ஆண் கடவுள்கள்
பெண்கடவுள்கள் மட்டும்
பின் தொடர்ந்தே நடந்திருக்கிறார்கள்
சினந்து வெகுண்டெழுந்த காளிக்கு
சிங்கத்தை வாகனமாக்க
துரதிர்ஷ்டவசமாக
சிங்கத்தை அடக்குவதே
காளியின் வேலையாயிற்று.
***
மணமிக்க
பூச்சூடிக்கொள்கிறேன்
கூடுதலாய்
முகப்பவுடரும்
புடவைகளுக்குக்கூட
வாசனை திரவியம்
பூசி வைத்துள்ளேன்
வியர்வையை
கழுவிக் கழுவி
சுத்தமாய் வைத்திருப்பதாய்
நினைத்துக்கொள்கிறேன்
என்னை
அத்தனையையும் மீறி
ஆடைகளுக்குள்ளிருந்து
தாயின் வாசம்
சொட்டு சொட்டாய்
கோப்புகளில் இறங்குகிறது
அவசரமாய்
அலுவலகக் கழிப்பறையில் நுழைந்து
பீச்சி விடப்படும் பாலில் தெறிக்கிறது
பசியைத் தின்று அலறும்
குழந்தையின் அழுகுரல்.
*****
அன்பு செய்து
அல்லாடுவதைக்காட்டிலும்
வாய்க்கால் கரையோரம்
புழுவில்லா தூண்டிற்போட்டு
உட்கார்ந்திருக்கலாம்
நீரில் அலையும் முகம் பார்த்து.
****
சுக இருப்புக்காக
கால் மேல் உள்ள காலைக் கண்களால்
நெருடிப்போகாத
பார்வையைச் சந்தித்தவுடன்
சரியாய் இருக்கும்
முந்தானையைக் கூட
இழுத்துவிட்டுக்கொள்ளவைக்காத
குழந்தைக்குப் பாலூட்டும்
வினாடிகளில்...
தரைபிளந்து உள் நுழையும்
அரைப்பார்வை வீசாத
காற்றில் ஆடை விலகும்
நேரங்களில்
கைக்குட்டை எடுத்து
முகம் துடைத்துக்கொள்ளாத
ஆண்களுக்கு
நண்பர்கள் என்று பெயர்.
****
சாப்பிடும் சோறு
பேசும் பேச்சு
சிரிக்கும் சிரிப்பு
எல்லாம் குழந்தைக்காக என
கரு சுமந்து...
நாளை
உன்னோட வண்டியில்
முன்நின்று சிரித்து வர
உன் இனிசியல் போட்டுக்கொள்ள
உனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன்
நான்கைந்து மணிநேரம்
ரத்த வெள்ளத்தில் மிதந்து
கேட்டால் கிடைக்கும்தான்
உன் முத்தம்
உன் அரவணைப்பு
உன் ஆறுதல்
பச்சப்புள்ள கேட்டா
பாலூட்டுகிறோம்
கரு சுமந்து
குழந்தை தவமிருக்கும் பெண்களை
சுமக்க
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.
நன்றி- தடாகம்
Thadagam_Logo_Eng