Tuesday, May 26, 2009

“ஆம் நண்பர்களே அதுதான் நடந்தது”- மகாதேவன்

நண்பர் அகநாழிகை பொன். வாசுதேவன் என்னை நீயூ புக் லேண்ட்ஸ் அழைத்துச் சென்றார். அங்குபோவது எனக்கு இதுதான் முதன்முறை. அவர் நிறைய புத்தகங்கள் வாங்கினார். என்னிடம் படித்துமுடிக்கப்படாத புத்தகங்களே நிறைய இருப்பதாலும், அவற்றிலேயே சிலவற்றை மீள் வாசிப்பு செய்து புரிந்துகொள்ள வேண்டிய வகையில் இருப்பதாலும் புத்தகங்கள் வாங்கிவிடக்கூடாது என்கிற தீர்மானமான முன்முடிவோடு சென்றிருந்தேன். ஆர்வக்கோளாறில், புரட்டிப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருக்க, வாசு சொன்னாரென இரண்டு கவிதைத் தொகுப்பு புத்தகங்கள் , சிறிய அளவிலானது மட்டும் வாங்கினேன். அவற்றில் ஒன்றுதான் மகாதேவனின் “ஆம் நண்பர்களே அதுதான் நடந்தது”. இவரை நான் இதற்குமுன்பு கேள்விப்பட்டதில்லை.

எல்லாமே நல்ல கவிதைகள்.ஒரு அனுபத்தை மட்டும் பகிர்வதாக நிறைய கவிதைகள் சிறுகதைத் தன்மையோடு அமைந்திருந்தது. ஆனால், ஒவ்வொன்றும் வித்தியாசமான, பகிரப்படவேண்டிய அனுபவங்கள், நிகழ்வுகள். சிறுகதைத் தன்மையோடானவை.சுயம் பற்றிய பிம்பம் குறித்து கவலையில்லாமல் வெளிப்படையாக, நேர்மையாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார்.எல்லாமே எளிமையாக புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருப்பதும், மொழி நன்றாக கூடி வந்திருப்பதும் இக் கவிதைகளின் சிறப்பு.

எல்லாமே பெரிய நீண்ட கவிதைகள். எனவே தட்டச்ச எளிதாக இல்லாதபடியாலும், நீங்களும் பார்த்ததும் பயந்து ஓடிவிடக்கூடாது என்பதாலும் ஒரே ஒரு கவிதையை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.இக் கவிதைகூட தேர்ந்தெடுத்த ஒன்று அல்ல.எதேச்சையாக எடுத்த ஒன்றுதான்.

வெளிச்சம் வெப்பமாகத் தொடங்கும் வேளையில்
உடைந்த நடைபாதை வழியே
ஓடி ஓடி வருவாய்
ஷட்டர்களுக்கான திறவுகோல்களுடன்

வாடிக்கையாளர் அற்ற மதிய வேளைகளிலும்
ஷோகேஸ் பொம்மைக்கருகில் நின்றபடி
வெறித்துப் பார்த்திருப்பாய் தகிக்கும் தார்ச்சாலையை

இரவுச்சூடன் ஏற்றி திருஷ்டிக் காய் உடைத்த பின்
மதிய உணவு டிபன் பாக்ஸைக்
கக்கத்தில் இடுக்கியபடி மறைந்து போவாய்
அருகிலிருக்கும் இருளொன்றின் வழியாக

வண்ணத்துணிகளை விரித்துப் போடுவதிலும்
மடிப்புக் கலையாமல் அடுக்கி வைப்பதிலும்
நிபுணத்துவம் அடைந்துவிட்டிருக்கிறாய்

குளிர்சாதன கண்ணாடி அறையிலிருந்து
புன்னகையுடன் மீள கற்றுக்கொண்டுவிட்டிருக்கிறாய்

உனக்குத் தெரியுமா
உன் முதலாளி வீட்டில்
இன்னொரு முதலாளி பிறந்திருப்பது.



தமிழினி வெளியீடு
ரூ.20.
முதல் பதிப்பு டிசம்பர் 2000

22 comments:

நந்தாகுமாரன் said...

கவிதை நல்லாயிருக்கு முதலாளி ... இதுவும் உயிரோசையில் வெளியானதும் ... :)

Anonymous said...

நல்லா இருக்கு முத்துவேல். உயிரோசைக் கவிதையும் எனக்குப் பிடித்தது.

ny said...

தேர்ந்த வரிகள்..
ஒண்ணு வாங்கி வைங்க எனக்கும் :)

ஆ.சுதா said...

நல்லக் கவிதை, அறிமுகத்திற்கு நன்றி. புத்தக விலைதன் ரொம்ப சினது.

உயிரோசைக் கவிதை படித்தேன்.
நல்லா இருந்தது.

அகநாழிகை said...

முத்துவேல்,
இந்த தொகுப்பை நான் நீண்டநாட்கள் முன்பாகவே படித்திருக்கிறேன், அருமையான தொகுப்பு. சிறந்த வாசிப்பனுபம் தரும், உயிரோசை கவிதைக்கு வாழ்த்துக்கள் என்று சொல்ல எனக்கும் ஆசைதான், நீ அடிக்க வந்து விடுவாய்,

வாழ்த்துக்கள் வெறும் வார்த்தைகள்தானே, இன்னும் பலபேர் வாழ்த்த எனது வாழ்த்துக்கள், முத்துவேல் கவிஞன்தான் என்பதை நான் அறிவேன்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

உயிரோடை said...

என்ன‌ திடிரென‌ முத‌லாளி தொழிலாளித்துவ‌ம் பேச‌றீங்க‌.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல பகிர்வு

நானும் வாங்கி படித்திருக்கிறேன், மீள் வாசிப்பும் நேற்றைய முன் தினம் ஆகிற்று.

நன்றாக தேர்ந்தெடுத்து பகிர்ந்தளித்திருக்கிறீர்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆனால், ஒவ்வொன்றும் வித்தியாசமான, பகிரப்படவேண்டிய அனுபவங்கள், நிகழ்வுகள். சிறுகதைத் தன்மையோடானவை.

அந்த கவிதைத் தொகுப்பை படித்து முடிததவுடன் எனக்கு தோன்றியதும் இதுதான், ஆனால் 4 வருடங்களுக்கு முன்னர் தோணவில்லை, மீள்வாசிப்பின் போதுதான் தோன்றியது. வாசிப்பு ஒன்றேதான் எனினும், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு புரிதல். புரிதலுக்கான கால கட்டங்கள் எவ்வளவு தூரம் என்று நினைக்கும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை.

Anonymous said...

தீவிரமான வாசிப்பில் இருக்கிறேர்கள்.

உயிரோசை கவிதைக்கு என்னுடைய வாழ்த்துக்களும்.....

mankuthiray

குடந்தை அன்புமணி said...

கவிதை பகிர்வுக்கு நன்றி தோழரே!

Venkatesh Kumaravel said...

புக்லேண்ட்ஸ் அருமையான இடம். நல்ல இதழ்களும் வைத்திருப்பார்கள். திரைப்படம் குறித்த புரிதலுக்கான நூல்களும் நிறைய கிடைக்குமிடம். அறிமுமாயிருந்தாலும் நினைவுபடுத்தியதற்கு நன்றி. ஆசான் வாசுதேவன் இதுபோன்ற சேவைகள் புரிந்துகொண்டிருப்பதில் மகிழ்ச்சி! உங்கள் வலைத்தளமும் நல்லா இருக்கு. தொடர்ந்த வாசிப்பு... எப்போதும் என் பக்கமிருந்து!

ஆதவா said...

இந்த கவிதையைப் படித்ததுமே ஏதோ ஒரு உணர்வு.... நான் ஒருவரை நினைத்துக் கொண்டேன்!!!! மிக இயல்பாய் அழகாய் முடித்துவிட்டார்!!!!!

இருபது ரூபாய் இந்த புத்தகத்திற்கு ரொம்ப குறைவு!!!

யாத்ரா said...

நல்ல கவிதை பகிர்வு முத்துவேல்

பிரவின்ஸ்கா said...

நல்லதொரு பகிர்வு.

உயிரோசைக் கவிதை படித்தேன்.
அருமையாக இருக்கிறது .

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

சந்தனமுல்லை said...

நல்ல பகிர்வுக்கு நன்றி!

ச.முத்துவேல் said...

நந்தா,
என்ன முதலாளி என்னை முதலாளின்னு சொல்லிக்கிட்டு. நன்றி. உயிரோசை கவிதையை பதிவிடுகிறேன். அப்பவும் ஒரு முறை வந்து இதேமாதிரி..ஹி.. ஹி

நன்றி அண்ணாச்சி

நன்றி கார்த்தி. தயாரா இருக்குது.

முத்துராமலிங்கம் சின்னதுன்னுதான் வாங்கினேன். ஆனா சிறப்பானது. முடிஞ்சா வாங்கிப் படிங்க. நன்றி.

வாசு! ஓ, வாழ்த்துறதுல இப்படி ஒரு யுக்தியா? நன்றி.

ச.முத்துவேல் said...

மின்னல்
திடீர்னெல்லாம் இல்லை. எப்பவுமே நான் இப்படித்தான். ஏன்னா, நானும் ஒரு தொழிலாளி.

அமித்து அம்மா
நீங்களும் இதைப் படித்திருப்பது மகிழ்ச்சி.

நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். உங்களின் வியப்பு எனக்கும் பொருந்தக்கூடியதே. நவீன இலக்கியத்தின் சிறப்பம்சங்களுள் ஒன்று, அதன் பன்முகத்தன்மை.

மண்குதிரை
தீவிரமா வாசிக்கணும்னுதான் ஆசைப்படுறேன்.அவ்வளவு தூரம் சாத்தியமாகல. நன்றி.

அன்புமணி நன்றி.

வெங்கிராஜா
தொடர்ந்த வாசிப்பை நானும் அறிகிறேன். நன்றி. திரைப்படங்கள் குறித்த உங்கள் ஆர்வத்தை உங்களின் ஒரு வலைப்பூவில் பார்த்தேன்.

ஆமாம், வாசு எனக்கு இலக்கியரீதியா நல்ல உதவி பண்றார்.

ச.முத்துவேல் said...

ஆதவா
ஆமாம், நன்றி.

நன்றி யாத்ரா

நன்றி பிரவின்ஸ்கா

நன்றிங்க சந்தன முல்லை.

Anonymous said...

புக் லேண்ட்ட அலசிட்டாரா அகநாழிகை :)

உயிரோசை கவிதை அருமை முத்து!!!

ச.முத்துவேல் said...

ஷீ நிசி
ஆமாம்.அள்ளிக்கிட்டு வந்தாரு அன்னிக்கு. நன்றி.

anujanya said...

ரொம்ப நல்லா இருக்கு இந்த கவிதை. மற்றவையும், நீங்கள் படித்த பின்பு, முடிந்தால் பதிவில் சொல்லுங்கள்.

அமித்து.அம்மாவின் பின்னூட்டமும் நிறைய சிந்தனை தந்தது.

அனுஜன்யா

ச.முத்துவேல் said...

நன்றி அனுஜன்யா.