Sunday, November 1, 2009

சாளரத்தில் தெரியும் வானம்-கண்மணி குணசேகரன்

என் பார்வையில் படைப்பாளிகள் - ச.முத்துவேல்


      Thadagam : Muthuvel - Saalarathil Theriyum Vaanam
சாளரத்தில் தெரியும் வானம்

கண்மணி குணசேகரன்

'இந்த உலகத்தில்
ஒரு கோடியே நூற்றியெட்டு
துயரங்கள் இருக்கின்றன.
வரலாறு,தத்துவம் மற்றும்
இலக்கியங்களால்
இன்னும் ஆயிரத்திற்கும் அதிகமான
துயரங்களைக் கண்டறிய முடியவில்லை.
(கவிஞர் இசையின் கவிதையிலிருந்து)


இவ்வுலகில் இன்னும் அறியப்படாத துயரங்கள் நிறையவே இருக்கின்றன.இலக்கிய வாசிப்பு என்பது நடுத்தர மக்களிடையேதான் அதிகம் என்று கணிக்கமுடிகிறது. நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களைப் பற்றிய வாழ்வியல் பதிவுகளே இதுவரை பதிவாகிக்கொண்டு வந்துள்ளது. ஏனெனில், எழுதியவர்களின் பின்புலம் அவ்வாறானதாய் இருந்திருக்கிறது.கல்வி வாய்ப்புகள் ஓரளவு பெருகியுள்ள தற்போதைய சூழலில், இலக்கியம் என்பதும் பல்வேறு தரப்பட்ட மனிதர்களிடமிருந்து வெளிப்பட்டு செழுமையாகத் திகழ்கிறது.ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களும் ஓரளவு கல்வி கற்று எழுதத்துவங்கியுள்ளனர்.இவர்களின் எழுத்து அனுபவப்பூர்வமானதாகவும்,புதிய வீச்சோடும் திகழ்கிறது.கண்மணி குணசேகரன் என்கிற படைப்பாளி இவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.


இவரின் கதை மாந்தர்கள் விளிம்பு நிலை மனிதர்கள்.கிராமத்து விவசாயக்கூலிகள், பன்றி மேய்ப்பவர், சாவு மேளம் அடிப்போர், நலிந்து வரும் கூத்துக்கலைஞர்கள் போன்றவர்களாவர். இந்த மனிதர்களின் அகவுலகம் பற்றி,இவர்களின் உலகம் சொற்பமானதாயிருப்பதை அறியச் செய்யும் எழுத்து.இவர் கதைகள் பேசுவது இம்மாந்தர்களின் வாழ்வு இன்னல்களை, சிக்கல்களை.ஒரு செய்திக்கும், இலக்கியப் படைப்புக்கும் இருக்கும் வேறுபாடு என்னவாக இருக்க முடியும்? அந்த வேறுபாட்டை இவர் தன் எழுத்தில் மிகவும் இயல்பாகத் தக்கவைக்கிறார்.ஒரு முதியவருக்கு இருக்கும் அனுபவத்தோடு இவரின் படைப்புகளைப் பார்க்கும்போது இவரின் அவதானிப்புத் திறன் ஆச்சரியமளிக்கும்.ஒரு கதையில் கதைசொல்லியின் குரல், உணர்வு ஆகியவற்றோடு நின்றுவிடாமல் அக் கதையில் வரும் எல்லாக் கதாபத்திரங்களின் உணர்வுகளையும்,சூழல்களையும்,அவர்களின் பார்வையையும் பதிவு செய்திருப்பார்.பெண்களின் மனவுணர்வுகளையும், அவர்களின் அந்தரங்கச் சிக்கல்களையும்கூட மிகத் துல்லியமாய் எழுதியிருக்கிறார்.இவரின் எழுத்துக்களம் கிராமங்கள். நடு நாடு என்று வர்ணிக்கப்படும் கடலூர்,விருத்தாச்சலம் சுற்றுவட்டார செம்புலக் கிராமங்கள். கிராம, வேளாண் வாழ்வின் நுண்தகவல்கள் அனுபவத்தின் விளைவால் இவருடைய ஆக்கங்களில் விரவிக்கிடக்கும். நவீன இலக்கியம் என்கிற பெயரில் உடலுறவுக்காட்சிகளை விலாவாரியாக எழுதிக்குவிப்பவர்கள் மத்தியில் அதுபோன்ற சூழலை எழுதும்போதுகூட மிக நாசூக்காக ஆபாசமில்லாமல் எழுதும் பண்பு இவரிடம் இருக்கிறது. நடு நாட்டு வட்டார மொழியிலும், யதார்த்தவாதத்தையும் எழுதுபவர்.சிறுகதை,கவிதை, புதினம், கட்டுரைகள், எனப் பன்முகத்திறன்கொண்ட, தமிழின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளி.


கண்மணி குணசேகரன் கடலூர் மாவட்டம், திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), அருகிலுள்ள மணக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர்.இயற்பெயர் அ.குணசேகர்.1971 ல் பிறந்த இவர் ,அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(I T I), இயந்திர வாகனப் பராமளிப்பாளராகப் பயிற்சி பெற்று,தற்போது,அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில்,பணி புரிகிறார்.திறந்த வெளிப் பல்கலைக் கழகம் மூலம்,இளநிலை வணிகம் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்.


நடு நாட்டு சொல்லகராதி என்ற ஒன்றைத் தன் தனிப்பட்ட முயற்சியால் உருவாக்கியிருக்கிறார். ஒரு பல்கலைக்கழகமோ, பெரிய குழுவோ செய்ய வேண்டிய வேலையை தனி மனிதராகச் சாதித்திருக்கிறார். அதுவும், விளம்பர நோட்டீசுகள் போன்ற தாள்களைப் பயன்படுத்திப் பின்னால் வெள்ளைப் பக்கங்களில் எழுதித் தகவல் திரட்டியிருக்கிறார். எனவேதான், அவரே தன்னுடைய அஞ்சலை மற்றும் நடு நாட்டு சொல்லகராதி ஆகிய இரண்டையும் முத்திரைப் படைப்புகளாக குறிப்பிடுகிறார். அஞ்சலைப் போன்றொரு புதினத்தை ஒரு கிராமத்தான்தான், விவசாயிதான் எழுத முடியும். கண்மணி அப்படிப்பட்டவர்தான்.செம்புலத்தின்மீது வலிந்து படியும் (நெய்வேலியின்) சாம்பல் கரியைப் பற்றிய கதைகளையும் நிறைய எழுதியிருக்கிறார்.


இவரின் ‘அஞ்சலை’ என்கிற புதினம் கோழிக்கோடு பல்கலைக் கழகத்தில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டுக்கான,இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது பெற்றவர்.


இவரின் படைப்புகளாவன;


1.தலைமுறைக் கோபம்- கவிதைகள்
2.காட்டின் பாடல் கவிதைகள்
3.கண்மணி குணசேகரனின் கவிதைகள் (முழுத் தொகுப்பு)
(காலடியில் குவியும் நிழல் வேளை)
4.வெள்ளெருக்கு - சிறுகதைகள்
5.ஆதண்டார் கோயில் குதிரை - சிறுகதைகள்
6.உயிர்த் தண்ணீர் - சிறுகதைகள்
7.அஞ்சலை - புதினம்
8.கோரை - புதினம்
9.நடு நாட்டு சொல்லகராதி


மேலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.கவிதைகளைவிட உரை நடையே இவரின் ஆகச் சிறந்த படைப்புக்களமாக இருக்கிறது.


அவரின் சில குறுங்கவிதைகள்


பாம்புச் சுவடு மீது
பதிந்து கிடக்கிறது
அழகாய்
பிஞ்சுப் பாதம்.
*
பள்ளிக் காலம்
கள்ளிக் கிறுக்கல்
இன்னும்
காயாத
பால் எழுத்து.
*
உதிர்ந்து கிடந்த
பூக்கள்...
அழகு.
கூட்டும்போதுதான்
குப்பையாகிவிட்டது.
*
ஏற்றிவிட்டுத்தான்
கரைத்தாள்.
கூழ் குடிக்கும் ஆசையில்
இறங்கி வந்துவிட்டது
வளையல்
*
கொலுசு இல்லா
பாத வெறுமையை
வளைத்து
நிறைவு செய்தது
வரப்பில் சாய்ந்த
தங்க மணிக் கதிர்.
*
கருவறை
சேதியறியா
பால் தாரை
சுரக்கிறது
இறந்தே பிறந்த
குழந்தைக்கும்
*
வாசலுக்கே வந்து
கதவைத் தட்டுகின்றன
கூடை அரும்புகள்.
கொடுத்துவைத்தவைதான்
நகரத்துத் தேனீக்கள்
*
கட்டு
காம்புகளுக்குத்தான்
இதழ்களுக்கல்ல
இடமாற்றத்திலும்
அழகாய்த்தான் பூத்தன
சரக்கூந்தல்
அரும்புகள்

நன்றி - தடாகம்
*

Thadagam_Logo_Eng

9 comments:

நிலாரசிகன் said...

என் மனம் கவர்ந்த எழுத்தாளரை பற்றிய அறிமுகத்திற்கு மிக்க நன்றி நண்பரே :)

நந்தாகுமாரன் said...

உங்கள் எழுத்துகளில் தெரியும் முதிர்ச்சி என்னை பிரம்மிக்க வைக்கிறது, குறிப்பாக படைப்பாளிகள் குறித்த இந்த தொடரின் உரைநடை லாவகம்.

கண்மணி குணசேகரனின் ‘வெள்ளெருக்கு’ எப்போதோ படித்த ஞாபகம் ...

Ashok D said...

முக்கியமானதொரு அறிமுக பதிவு
//கருவறை
சேதியறியா
பால் தாரை
சுரக்கிறது
இறந்தே பிறந்த
குழந்தைக்கும்//

குறுங்கவிதைகள் ஒவ்வொன்றும் அழகிய நெல்மணிகள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நவீன இலக்கியம் என்கிற பெயரில் உடலுறவுக்காட்சிகளை விலாவாரியாக எழுதிக்குவிப்பவர்கள் மத்தியில் அதுபோன்ற சூழலை எழுதும்போதுகூட மிக நாசூக்காக ஆபாசமில்லாமல் எழுதும் பண்பு இவரிடம் இருக்கிறது. //

மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் முத்துவேல். சொல்லகராதியைப் பற்றி நீங்கள் சொல்லிய தகவலும் இதுவரை அறியாததே.

எனக்கு(ம்) மிகவும் பிடித்த எழுத்தாளர் திரு. கண்மணி குணசேகரன்.

உயிரோடை said...

க‌விதைக‌ள் எல்லாம் ந‌ன்றாக‌ இருக்கின்ற‌ன‌. குறிப்பாக‌
//ஏற்றிவிட்டுத்தான்
கரைத்தாள்.
கூழ் குடிக்கும் ஆசையில்
இறங்கி வந்துவிட்டது
வளையல்
**
கொலுசு இல்லா
பாத வெறுமையை
வளைத்து
நிறைவு செய்தது
வரப்பில் சாய்ந்த
தங்க மணிக் கதிர்.//

முனைவர் இரத்தின.புகழேந்தி said...

கண்மணியை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி முத்துவேல்.தொடர்க உங்கள் அறிமுகம்.

ச.முத்துவேல் said...

நன்றி இரத்தினப்புகழேந்தி அவர்களே.

Karthikeyan G said...

Can u pls provide me the detail of which publication has published Mr. Gunasekaran's books.. this might be helpful while buying books.

thnks

ச.முத்துவேல் said...

நன்றி கார்த்திகேயன்
நானே அவ்விபரங்களை எழுதிவிடத் தீர்மானித்திருந்தேன் . தவறிவிட்டது.தமிழினியில் (united writers..?)அவரின் (எல்லா) நூல்களும் கிடைக்கிறது.அஞ்சலை இரணடாவது பதிப்பும் தீர்ந்துவிட்டது என்று அறிந்தேன். இப்போது ஒருவேளை கிடைக்கலாம்.