Saturday, January 16, 2010

மக்கள் கலை இலக்கிய விழா- பயண அனுபவம்.


மணல் வீடு & களரி தெருக்கூத்துப் பயிற்சிப்பட்டறை இணைந்து நிகழ்த்தும் மக்கள் கலை இலக்கிய விழா சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் ஏர்வாடி என்கிற கிராமத்தில் நடைபெற்றது. மணல்வீடு ஆசிரியரும், சிறுகதையாசிரிருமான மு.ஹரிகிருஷ்ணன் மிகவும் ஆர்வத்தோடும், அர்ப்பணிப்போடும் நடத்துகிற நிகழ்ச்சி இது. கூத்துக்கலைகளுக்கும்,கூத்துக்கலைஞர்களுக்குமான அங்கீகாரத்திற்கும், மேன்மைக்காகவும் உரிமைக்குரல் எழுப்பிவருவதோடு நின்றுவிடாமல் , தாமாகவே முன் வந்து நிதி திரட்டி அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இது.டிசம்பர் 26 மாலை துவங்கி 27 காலைவரை விடிய விடிய நடைபெற்ற நிகழ்ச்சி.

நான் , அகநாழிகை இதழாசிரியர் பொன். வாசுதேவன் மற்றும் யாத்ரா மூவரும் சென்னையில் உயிர்மை புத்தகங்கள் வெளியீட்டு நிகழ்ச்சியில் சங்கமித்து பிறகு சேலம் செல்வதாக திட்டமிட்டிருந்தோம்.25-12-09 அன்று நடந்த உயிர்மை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட முடியும்வரை கலந்துகொண்டுவிட்டு இரவு தொடர்வண்டியில் புறப்பட்டோம்.

மறுநாள் காலையில் சேலத்தில் இறங்கி தொடர்வண்டி நிலையம் அருகிலுள்ள பேருந்து நிலையத்திலிருந்து , புதிய பேருந்து நிலையம் செல்ல நகரப் பேருந்து பிடித்தோம்.பேருந்தினுள்ளே பார்த்தால் குரங்குத் தொப்பியோடு நண்பர் சுவாமி நாதன்(மயில்ராவணன்) அமர்ந்துகொண்டிருந்தார் .புதிய பேருந்து நிலையத்தில் இறங்கி அருகிலேயே உள்ள ஒரு விடுதியாகப் பார்த்து அறை எடுத்து,காலைக்கடன்களை முடித்து அறையில் உற்சாகமாக கொண்டாட்டம், பாடல் என்று நேரம் கடத்தினோம். நண்பகல் உணவை முடித்துக்கொண்டு பேருந்து பிடித்து,சேலம்-மேட்டூர் பேருந்தில் ஏறி பொட்டனேரி என்கிற கிராமத்தில் இறங்கினோம்.அங்கு ஆயத்தமாக ஒரு வண்டி நின்றுகொண்டிருந்தது. அந்த 4 சக்கர வண்டி, எங்களைப் போன்றவர்களை பொட்டனேரியிலிருந்து , ஏர்வாடிக்கு அழைத்துச் செல்வதற்கானது எனபதை அந்த வண்டியைப் பார்த்தவுடனே அறிந்துகொள்ள முடிந்தது. வண்டியின் முகப்பில், விழா விளம்பர தட்டி கட்டப்பட்டிருந்தது. நாங்கள் அதிலேறி, சில கிலோமீட்டர்களே தள்ளி அமைந்துள்ள ஏர்வாடி கிராமத்தில் இறங்கும்போது சரியாக மணி பகல் 3.30. முதல் நிகழ்வு தொடங்குவதாக அழைப்பிதழில் இருந்த நேரமும் அதுவே.

image image image image image image

எங்களுக்கு முன் அங்கே சிலர் மட்டுமே வந்திருந்தனர் அதுவரை.க.சி.சிவகுமார்& இயக்குனர் பி.லெனின் அமர்ந்திருந்தனர். நல்ல இருக்கைகளுடனும், பந்தலுடனும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அவர்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, நிகழ்ச்சி துவங்க நேரமிருப்பதால் மெல்ல விழா நடக்கும் இடத்திலிருந்து சற்று தொலைவுவரை ஊர் சுற்ற கிளம்பினோம். கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்ட தீனியை, கட்டிப்போடப்பட்டிருந்த ஆடு மேய்ந்துகொண்டிருந்த காட்சியை அதிசயமாகப் பார்த்துக்கொண்டே நடந்தோம்.image image image image ஒரு கிணற்றுக்குச் சென்று அமர்ந்துகொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தோம். நண்பர் சுவாமிநாதன் ஒரு ஆகச்சிறந்த புகைப்படம் எடுக்கிறேன் என்று முயன்றுகொண்டேயிருந்தார். அவர் புகைப்படக்கருவியில் எடுத்த ஆகச்சிறந்த புகைப்படம் நிச்சயம் அவரெடுத்ததாக இருக்காது என்று நம்புகிறேன்.கிணற்றில் ஒரு பாம்பின் தோல் உரித்துப்போடப்பட்டிருந்தது, நீளமாக. கிணற்றுத் தண்ணீரிலும், கரையிலும் கோகோ கோலா போத்தல்களும், பாலிதீன் தாள்களும், சரக்கு போத்தல்களும் கிடந்தன. கிராமம் வரை ஆட்சி செய்துகொண்டிருந்த நவீனத்தின் கொடுமையை எண்ணிக்கொண்டேன்.இரண்டு சிறுவர்கள் மூங்கில் குச்சியை வெட்டி, சீராக்கி எடுத்துக்கொண்டு நடந்துவந்தார்கள். மீன் பிடிக்கவாம். மூங்கில் குச்சிகளின் பச்சை இன்னும் என் கண்ணில் பளீரென உறைந்து நிற்கிறது.அவர்களை அருகிலிருந்த சமாதியின் மேல் உட்காரச் சொல்லி, புகைப்படம் எடுக்கக் கேட்டோம். 'சவுனி மேல உட்காரக்கூடாது' என்றார்கள். சற்று நேரத்திற்குமுன் நாங்கள் அதன் மீதுதான் உட்கார்ந்திருந்தோம்.சமாதியைத்தான் சவுனி என்பார்கள் என்பது ஹரிகிருஷ்ணனின் மயில்ராவணன் தொகுப்புப் படித்திருந்தபோதே தெரிந்திருந்ததால் ஆச்சரியம் எதுவும் ஏற்படவில்லை. பின், நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்துசேர்ந்தோம்.

நண்பர் இலக்குவண் மடக்கி மடக்கிப் புகைப்படம் எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தார். சேரல் வந்து சேர்ந்திருந்தார். நிகழ்ச்சி ஆரம்பமானது. அப்போதுதான் வந்து சேர்ந்திருந்த லக்‌ஷ்மி சரவணகுமார் வரவேற்புரையாற்ற நிகழ்ச்சி தொடங்கியது. நாங்கள் எதிர்பாராதவிதமாக பாவண்ணன் வந்திருந்தார். கூத்துப்பார்க்கும் ஆர்வத்திலேயே வந்திருந்ததாக தன்னுரையில் சொன்னார்.கூத்துக் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடந்தது.ஒவ்வொருவரையும் ஹரி அறிமுகப்படுத்தி, (மூன்று வருடங்களாக தேடி அலைந்து கண்டுபிடித்திருக்கிறார்.சிலர் இறந்தேபோய்விட்டிருக்கிறார்கள்.)அவர்களின் கூத்துப்பாத்திரங்களையும், சிறப்புகளையும் சொல்லிக்கொண்டிருந்தார். நினைவுப்பரிசும், சான்றிதழும் ஒவ்வொருவராகப் பெற்றுக்கொண்டு , தன் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் சிறிய அளவில் நிகழ்த்துக்கலைகளைச் செய்தனர். ஒலிப்பெருக்கியே இல்லாமல் உரத்தக்குரலில் பாடும் திறன்பெற்றிருந்தனர்.வெள்ளந்தியான அந்தக் கலைஞர்கள் தயக்கத்துடனும், நெகிழ்ச்சியுடனும் பாராட்டும் பரிசும் பெறும்போது எனக்கும் நெகிழ்ச்சியாகி கண்களில் நீர் திரண்டது.இதை நான் வெட்கத்துடன் மறைக்கப் பாடுபட்டுக்கொண்டிருந்தேன். அப்படியும் நண்பர்கள் ஒருமுறை பார்த்துவிட்டு சிரித்தனர். பெண்கலைஞர்களும் பாராட்டுப் பெறும்போதுதான் தெரிந்தது, பெண்களூம் இதில் கலந்துகொள்வார்கள் என்ற உண்மையே.சுமார் 35 கிலோ எடைகொண்ட பொம்மைகளை தூக்கி, அசைத்து பொம்மல்லாட்ட நிகழ்ச்சி நடத்தும் வயதான பெண்மணி மேடையில் மிகவும் அமைதியாகவும், தயக்கத்துடனும் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது.பெண்கள் மேளம் அடிக்கவும் செய்வார்களாம்.

image image image image

பொதுவாகவே தெருக்கூத்து என்கிற நிகழ்த்துக்கலை வடிவம் தமிழ் நாட்டில் வட பகுதிகளில் மிகுதியாகவும், மேற்குப்பகுதியிலுமே உள்ளது. தென் தமிழ் நாட்டில் நானறிந்தவரை இல்லையென்றே அறிந்திருக்கிறேன்.மாலை தேனீர், இரவு உணவு எல்லாம் நடந்தேறியது. இரவு பொம்மலாட்ட நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து இரவு முழுவதும் மதுரை வீரன் கூத்தும் நடைபெற்றது. நான் நிகழ்ச்சியைப் பார்க்காமல் சற்றுத்தள்ளியிருந்த ஒரு மரத்தடியில் நண்பர்களுடன் 'கூத்து'ம், கும்மாளமுமாக இருந்தோம். சேரல்தான் வழக்கம்போல் நிகழ்ச்சிகளை முழுக்க பொறுப்பாகப் பார்த்து ரசித்தவர். வா.மு.கோமு வந்து சேர்ந்தார் தாமதமாக.தலைக்கவசம் அணியாததால்,வழியில் காவலர்களின் கடமையுணர்வுக்குக் கட்டுப்பட்டு நிறைய இடங்களில் சிக்கிக்கொண்டு , வந்து சேர்ந்த கதையைச் சொன்னார்.(அடுத்து இதை வைத்து ஒரு கதை இருக்குமோ?). வா.மு.கோமுவுடன் பழக நேர்ந்த இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் பிடித்துப்போனது. மனிதர் நேரிலும் கவர்ந்துவிட்டார். இரவு, அவருடன் ஒரு சிறிய நேரகாணல் நடத்தினேன். பொறுமையிழக்கச் செய்யும் கேள்விகளுக்கும் நிதானமாக பதிலுரைத்துக்கொண்டிருந்த பக்குவம் பாராட்டுக்குரியது.

image image image

ஓரளவு கொங்குவட்டார படைப்பாளிகள் முழுக்கவே வந்திருந்தனர் என்று சொல்லும் அளவுக்கு இருந்தனர். படைப்பாளிகள் மற்றும் நண்பர்களின் பெயர்களை பட்டியலிடுகிறேன்.
இசை,இளவேனில், இளஞ்சேரல்(மூவரும் ஒரே ஊர்க்காரர்கள்), நரன்,தூரன்குணா,ஆதிரன்,ஜெகன்னாதன்(வலைப்பதிவர்),ஊர்சுளா ராகவ்(யவனிகா ஸ்ரீராமின் மகன்),மணிவண்ணன், மயூரா ரத்தினசாமி, ந.பெரியசாமி, அகச்சேரன், சாஹிப்கிரான்,வே.பாபு, ஸ்னேகிதன் மற்றும் சில நண்பர்கள். கவிதாயினி சக்திஅருளானந்தம் மற்றும் சில பெண்கள் இருந்தனர். அவர்களில் வலைப்பதிவர்களோ, படைப்பாளிகளோ நிச்சயம் இருக்கக்கூடும்.

விழாவின் சிறப்பு விருந்தினர்கள் பாவண்ணன்,நாஞ்சில் நாடன், இயக்குனர் லெனின், க.சீ.சிவக்குமார், கே.ஏ.குணசேகரன் மற்றும் ஒரு உயரதிகாரி.( நாட்டுப்புறக்கலைஞர்களூக்கான துறைபோன்றது)

 

பின்னிரவில் மதுரைவீரன், நிகழ்ச்சி நடந்த மேடைக்கு சற்றுத்தள்ளீயிருந்த இடத்திலிருந்து , முதுகில் கட்டப்பட்டு கொளுத்தப்பட்ட நெருப்புப் பந்தங்களுடன் ஆவேசமாக ஆடிக்கொண்டும், உரக்கக் கத்திக்கொண்டும் கம்பீரமாக வந்துகொண்டிருந்த காட்சி நிகழ்ச்சியில் தலையாயது.மக்கள் மிகுந்த பக்தியோடும், பரவசத்தோடும், அச்சத்தோடும் கைகூப்பி வணங்கினர்.சிறுவர்கள் விலகி ஓடினர். மதுரைவீரன் ஒரு சேவலை உயிரோடு தலையைக் கடித்துத் துப்பினார். மேளச்சத்தமும் ஆரவாரமும் உச்சத்தில் ஒலித்தது. கலைஞர் எலிமேடு மகாலிங்கம்தான் வழக்கமாக இதைச்செய்வாராம்.அவர் அண்மையில் மறைந்துபோனார் என்பதால் இப்போது அவரின் தம்பியே மதுரைவீரன் வேடமிட்டிருந்தார்.

மதுரைவீரனின் தீப்பந்த வெளிச்சத்தை விழுங்குவதுபோல் மின்விளக்குகள் இருந்த இந்த நவீன காலத்தை நான் எண்ணிக் கொண்டிருக்கும்போதே, கம்பீரமான மதுரைவீரன் ஒரு இடத்தில் குனிந்து செல்லவேண்டியதாகயிருந்தது. அது மின்சார கேபிள். இன்றைய நவீன வாழ்வு கூத்துக்கலைஞர்களை வைத்திருக்கும் நிலை இதுதான் என்ற படிமம்போல் அமைந்திருந்தது அது.

(புகைப்படங்களை எடுத்தனுப்பிய ஆகச்சிறந்த புகைப்படக்கலைஞர் சுவாமினாதனுக்கு நன்றி.)

12 comments:

குப்பன்.யாஹூ said...

jeyamohan has written about the function in his blog, did he come, if so pls publish his speech too

நந்தாகுமாரன் said...

நீங்களாவது எழுதினீர்களே ... பகிர்வுக்கு நன்றி

ச.முத்துவேல் said...

@குப்பன் யாஹூ
நல்வரவாகுக.ஜெமோ அவரின் வலைத்தளத்தில் இதுபற்றி எழுதியதாக எனக்குத் தெரியவில்லை.வேண்டுமானால், நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கக்கூடும். நான் தொடர்ந்து படித்துவந்தாலும்,எதற்கும் ஒருமுறை பரிசோத்தித்துக்கொள்ளலாமே என ஜெமோ வலைத்தளத்தில் தேடினேன்.எனக்கப்படி எதுவும் தென்படவில்லை.

ஒன்று மட்டும் உறுதி. ஜெமோ அ ந் நிகழ்வுக்கு வரவில்லை. வந்திருந்தால்,ஜெமோ பெயரை என் பதிவில் தவறவிடுவேனா!

நன்றி.

@ நந்தா
உள்ளபடியே என்னை மிக வேலை வாங்கிய பதிவு இதுதான் என்று நிகைக்கிறேன். நான் இதுபோலெல்லாம் பொதுவாக எழுதுவதில்லை. சோம்பேறித்தனம்தான்.மண்குதிரை ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டிருந்தார். அவருக்காகவும் மற்றும் நம் (உறவினர்கள்லாம் வந்துருக்காக!) நண்பர்களுக்காகவும் எழுதியது.இப்போது, உங்கள் எண்ணம் எனக்கு ஆறுதலளிக்கிறது.

நன்றி!

ஆரூரன் விசுவநாதன் said...

நிகழ்வுகளை அழகாக பதிவு செய்துள்ளீர்கள். கலந்து கொள்ள முடியாமல் போனதில் வருத்தமே...


வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

அழகான தொகுப்பு.

கம்பீரமான மதுரைவீரன் ஒரு இடத்தில் குனிந்து செல்லவேண்டியதாகயிருந்தது. அது மின்சார கேபிள் //

கற்பனையில் சித்தரித்து பார்க்கும் போது மிகவும் வருத்தப்படவேண்டியிருக்கிறது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ப்ரொபைல் போட்டோவில் மகன் உங்களை மாதிரியே இருக்கிறான். வாழ்த்துக்கள் சாருக்கு :))

மண்குதிரை said...

நான் சொல்வதற்குக்கொன்றுமில்லை பின்னி எடுத்திருக்கிறீர்கள். ஹரி அவர்களிடமும் பகிர்ந்து கொண்டேன்.

மரா said...

அன்பின் முத்துவேல்,
நிகழ்ச்சியை அப்பிடியே ஞாபகம் வைத்து எழுதிவுள்ளீர்கள்.மிக்க நன்றி.அகநாழிகை வாசுவும் பதிந்துள்ளார்.அரமாலுமே இவ்விழாவின் நல்ல நிழற்படங்கள் பாக்கோனுமின்னா
இவத்திக்கா வாங்கோ:
http://picasaweb.google.com/mayilravanan

anujanya said...

நல்ல பகிர்வு முத்து. நீங்கள் மூவரும் அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லையா? :)))

அனுஜன்யா

Gowripriya said...

அழகான பகிர்வு.. நன்றி :)

யாத்ரா said...

நண்பா இனிமையான நினைவுகள், இனிமையான பயணம், அழகான பகிர்வு.

அது சரி, சாமுவேல் னு ஒருத்தர் எழுதியிருக்காரு முத்து உயிரோசைல. கலக்கியிருக்காரு :)

ச.முத்துவேல் said...

@ஆரூரன் விசுவனாதன்
நன்றி. வாய்ப்பிருந்தால் அடுத்தமுறை கலந்துகொள்வோம்.

@அமித்துஅம்மா
நன்றி.
/ப்ரொபைல் போட்டோவில் மகன் உங்களை மாதிரியே இருக்கிறான்./

:)

@மண்குதிரை
நன்றி மண்குதிரை.

@மயில்ராவணன்
அவத்த என்ற மூஞ்சியெல்லாம் இருக்குதேன்னுதான நானு லிங்க் குடுக்காம, தனித்தனியா போட்டாவ தேடித்தேடிப் போட்டிருக்கேனுங். நீங்க என்னாங் இப்டி பொசுக்குனு லிங்க் குடுத்தூட்டீங்.:)
பதிவுல கொஞ்சம் உரிமையோட விளையாடியிருக்கேன் சுவாமி. கோவமெல்லாமில்லையே.

@ அனுஜன்யா
நன்றி அனுஜன்யா. நாங்க அடிச்ச கூத்துப்பத்தி, எழுதவேயில்லங்கிறதுதான் உண்மை.இல்லன்னா மட்டும் தெரியாதான்னுதானே கேட்கறீங்க.

@கௌரிப்ரியா
நன்றி கௌரிப்ரியா.

@யாத்ரா
நன்றி யாத்ரா
/அது சரி, சாமுவேல் னு ஒருத்தர் எழுதியிருக்காரு முத்து உயிரோசைல. கலக்கியிருக்காரு :)/

அப்படியா! அதற்காகவும் நன்றி யாத்ரா.