Wednesday, May 4, 2011

வேணு குடும்பத்தார்

வேணு குடும்பத்தார்

வேணு தனது பணி ஓய்வு நாள் பாராட்டுவிழா நடத்துவதற்குச் சம்மதிக்கவேயில்லை. யார் எவ்வளவு சொல்லியும் பிடிவாதமாக மறுத்துவிட்டார்.இப்படியிருக்கும்போது அவருடைய கடைசி பணி நாளன்று பாராட்டுவிழா நடக்கவிருப்பதாக, அதற்கு முந்தைய நாள் சொன்னார்கள். அவருக்கு  நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டும் பேசி வற்புறுத்தியிருக்கிறார்கள். அவ்வளவு பிடிவாதம் பிடித்தவர் எப்படி ஒத்துக்கொண்டார் என்று மற்றவர்களுக்கெல்லாம் ஆச்சரியம்.

நிறுவனத்துக்குள்ளாகவே நடத்தப்பட்ட பணி ஓய்வு நாள் பாராட்டுவிழா கூட்டத்தில் தீர்மானித்திருந்தபடி சிலர் மட்டும் மேடைக்குச் சென்று வாழ்த்துரை வழங்கினார்கள். மேடையில் வேணுவும், மேலாளரும் அமர்த்தப்பட்டிருந்தனர்.வேணுவோடு வேலை தொடர்பாகவும், நட்பின் அடிப்படையிலும், வயதின் அடிப்படையிலும் நெருக்கமுள்ளவர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் என்று ஒவ்வொருவராய் வந்து பேசிவிட்டு அமர்ந்தனர். வேணுவுடனான அவரவர் அனுபவங்களை, வேணுவின் சிறப்புக்களையும் ஆளாளுக்குக் குறிப்பிட்டனர். வேணுவின் பல்துறை சார்ந்த சாதனைகள், சமூகப் பங்களிப்பு, மற்றும் பன்முகத்தனமை வாய்ந்த அவருடைய குண நலன்கள் ஆகியவற்றை குறிப்பிட்டுக்கொண்டிருந்தனர். எல்லோரும் கடைசியாக சொல்லிக்கொள்வதில் மட்டும் எப்போதுமே மாற்றம் இருக்காது. ஓய்வுக்குப் பிறகு இவரும், இவருடைய குடும்பத்தாரும்   நல்ல ஆயுளும், ஆரோக்கியமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்,  இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்பதே அது. ஒருவர் துவக்கிவைத்துவிட்டால் போதும். எல்லோரும் சொல்லியே ஆகவேண்டும். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் அவருடனேயே பணியில் சேர்ந்தவர் என்பதால் மிகவும் நெருக்கம் கொண்டவர். ‘ வாழ்க்கையில்  நாம் மனைவியுடனும், உடன் பணிபுரியும் நண்பர்களுடனும்தான் பெரும்பகுதியை கழிக்கிறோம். குடும்பத்திலேயே வேறு யாருடனும் இப்படி அமைவதில்லை.வேணு 35 வருட நண்பர் எனக்கு. 35 வருடங்கள் நாள்தோறும் 8 மணி நேரம் பழகுவது என்பது சாதாரணமானதல்லவே என்றார். ‘இவ்வளவு தூரம் பழகிவிட்டு பிரிவதென்பது மிகவும் துயரம் தருவதாய் இருக்கிறது என்று அவர் சொல்லும்போது குரலில் தழுதழுப்பு வந்துவிட்டது. சிரமப்பட்டு அதைச் சமாளித்து இயல்பாக்கிக் கொண்டார். எல்லோரும் ஒரு நெகிழ்ச்சியான மன நிலையில் காணப்பட்டனர்.   சால்வை ஒன்றை பொன்னாடையாக போர்த்தி புகைப்படம் எடுத்தனர். சால்வை போர்த்தியிருந்தபோது வேணு உண்மையாகவே ஓய்வுபெறும் வயது வந்துவிட்டார் என்பதுபோல் தோற்றமளித்தது. சந்தன மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுப் பொருட்களும் வழங்கப்பட்டன. ஏற்புரை வழங்கிய வேணு, நிகழ்ச்சி முடிந்ததும் அப்படியே அனைவரும் என் வீட்டிற்கு வந்து நானளிக்கவிருக்கும் தேனீர் விருந்தில் கலந்துகொள்ள வேண்டும்என்று அன்போடு கேட்டுக்கொண்டார்.இதுவும் வழக்கமானதுதான்.

அலுவகப் பேருந்தின் முகப்புக் கண்ணாடியில் வேணுவின் வண்ணப் புகைப்படம் கொண்ட வாழ்த்துச் செய்தி பெரிதாக ஒட்டப்பட்டது. சொந்த கார்களிலும், இரு சக்கர வண்டிகளிலும் வந்தவர்கள் அவரவர் வாகனங்களில் வேணு வீட்டிற்கு புறப்பட்டனர்.மற்ற அனைவரும் வேணுவின் வீட்டுக்கு பேருந்தில்  சென்றுகொண்டிருந்தனர். வேணு எப்போதும் உட்காரும் கடைசி இருக்கை இன்று காலியாகி, அவர் முன்னாலேயே உட்கார்ந்து விட்டிருப்பதை யாரோ சத்தமாகக் குறிப்பிட்டு வேடிக்கைக் காட்டினார். எல்லோரும் சிரித்தனர்.அலுவலகத்தில் அவருக்களிக்கப்பட்ட செட்டில்மெண்ட் விபரங்களை சந்திரசேகரன் கையில் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு கோப்பில் விபரங்கள் அடங்கிய தாளும், ஒரு உறையில் காசோலையும் இருந்தது. நல்ல தொகை. இவ்வளவு தொகையை வேறு யாரும் செட்டில்மெண்டாக பெறுவது அவ்வளவு எளிதல்ல.வேணு சிக்கனத்திற்கு பெயர்போனவர். நிறைய சேமிப்பின் மூலமே இப்படியொரு தொகை கிடைத்திருக்கிறது.

சுப்ரமணிய நாயகர் இல்லம் என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்த பழங்காலத்து வீட்டு வாசலின்முன் பேருந்து சென்று நின்றதும்,வாசலில் வரவேற்கக் காத்திருந்த வேணுவின் குடும்பத்தினர் சுறுசுறுப்படைவது தெரிந்தது. வேணுவின் மனைவி அவருக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.சற்று இளமையாக இருப்பதாகவே எண்ணும் வகையில் தோற்றம். வேணுவும் அப்படித்தான்.ஓய்வுபெறும் வயது என்று கணிக்கமுடியாத தோற்றம். தலைக்கு டை அடித்துக்கொண்டால் நிச்சயம் இன்னும் இளமையாக காட்சியளிப்பார். நாள் தவறாமல் நடைப்பயிற்சியும், உடற்பயிற்சியும் செய்துவருபவர் என்று மேடையில் பேசும்போதே குறிப்பிட்டிருந்தனர். சர்க்கரை வியாதிக்கு மாத்திரை ஏதும் எடுத்துக்கொள்ளாமலே , உடற்பயிற்சி மூலமே கட்டுப்படுத்தி வருபவர் என்று பாராட்டினார்கள். வேணுவின் மனைவிக்கு தலைமுடி நரைத்திருக்கவில்லை. முன் நெற்றியில் முடி சரிந்து விழுந்துகொண்டு இருப்பதை தூக்கி வாரினாற்போல் பின்னுக்கு இழுத்து கட்டினால் இன்னும் இளமையோடு தெரிவார் என்று தோன்றியது. வேணுவின் மனைவியுடன் உறவினர்களும், அக்கம்பக்கத்து வீட்டு ஆண்களும், பெண்களுமாய் நின்றுகொண்டு வந்தவர்களை வரவேற்றனர். வாசலில் பட்டாசு சரம் வெடித்தது.  வேணுவுக்கு பட்டாசு வெடிப்பதில் உடன்பாடு இலையென்றாலும், நண்பர்கள் வழக்கத்தை கடைபிடித்தனர். பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த வேணுவின் வண்ணப்படம் தாங்கிய வாழ்த்து அட்டையை வேணுவின் வீட்டாரிடம் நினைவுப்பொருட்களுடன் சேர்த்து அளித்தனர்.வீட்டிலிருந்த ஒருவர் வேணுவுக்கு சால்வையணிவித்தார். வேணுவின் அண்ணனாம்.அவர்கள் வீட்டிலிருந்த ஒரு இளைஞன் இயன்றவரை நடக்கிற நிகழ்வுகள்  எல்லாவற்றையும் டிஜிட்டல் கேமராவில்  சிறைப்படுத்திக்கொண்டிருந்தான்.சொந்த வாகனங்களில் சென்றவர்கள் சிலர் முன்னமேயே வந்து காத்துக்கொண்டிருந்தனர். சிலர் அப்போதுதான் வந்து சேர்ந்தனர்.அப்படி வந்தவர்களில் சசிகுமார் மட்டும் வீட்டிற்குச் சென்று உடைமாற்றிக்கொண்டு, கைக்குழந்தையான தன்னுடைய மகளை காரில் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். குழந்தை பிறந்தபிறகு அண்மைக்காலங்களில் அவர் இதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இட வசதிக்காக தேனீர் விருந்து மாடியில், திறந்த வெளியில்  ஏற்பாடாகியிருந்தது. யாரும் ஷூக்களை கழற்றவேண்டிய அவசியமும் இல்லையென்பதாலும் இப்படியொரு ஏற்பாடு. எல்லோரும் மாடிக்குச் சென்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். கிழக்கே  கடல் தெரிந்தது. மாலை நேர கடற்காற்று இதமளித்தது. சசிக்குமார் தூக்கிவைத்துக்கொண்டிருந்த குழந்தையை சிலர் கொஞ்சிக்கொண்டிருந்தனர். அழகிய பெண்குழந்தை. சீனக் குழந்தை போல் தோற்றம். ஆனால் ஒல்லியாக இருக்கவில்லை. அளவான புஷ்டி. அதுவும் அவ்வப்போது சிரித்து சூழலையே இனிப்பாக்கிக் கொண்டிருந்தது.எல்லோருக்கும் தேனீர் அளிக்கப்பட்டது. வேணுவின் குடும்பத்தினர் அறிமுகப்படுத்தப்பட்டனர். வேணுவின் அண்ணன், தம்பி, வேணுமனைவியின் தம்பி மற்றும் அவருடைய மகன்,  ஆகியோர். தேனீர் அருந்திக்கொண்டிருக்கும்போது எல்லோருக்கும் ஒரு சிறிய பை வழங்கப்பட்டது. அதில் இனிப்பு, காரம், எதாவதொரு நினைவுப்பொருள் இருக்கும். இதுவும் வழக்கமாய் அனைவரும் செய்வதுதான் என்பதால் யாரும் பையை வாங்கி பிரித்துப்பார்த்துக் கொண்டிருக்கவில்லை.எல்லாம் முடிந்து ஒவ்வொருவராக வேணுவிடமும் குடும்பத்தினரிடமும் சொல்லிக்கொண்டு கைக்குலுக்கி விடைபெற்றுக்கொண்டிருந்தனர். திடீரென்று நினைவு வந்ததுபோல் யாரோ சொல்ல, வெளியில் செல்ல தயாரானவர்களையும் தடுத்து நிறுத்தி புகைப்படம் எடுக்கத் துவங்கினர். வேணுவும் அவர் மனைவியும் மையமாக நிற்க மற்ற  நண்பர்கள் சுற்றி நின்றனர். நிறைய பேர் இருந்ததால் கொஞ்சம்பேர் மட்டும் முதல் சுற்றில் நின்றனர். வேணுவின் மனைவி புகைப்படம் எடுக்கவிருந்தவரை சற்றுப் பொறுத்திருக்கும்படி கையமர்த்திவிட்டு, அடுத்த சுற்றுக்கு காத்து நின்றுகொண்டிருந்த சசிக்குமாரின் பெண்குழந்தையை ஆவலோடு கேட்டு வாங்கி தூக்கிவைத்துக்கொண்டு புகைப்படத்திற்கு காட்சியளித்தார்.

எல்லாம் முடிந்து கீழிறங்கி வந்தபோது  நண்பர்கள் கூட்டத்தில் இருவர் மட்டும் ஓரமாகச் சென்று  பேசிக்கொண்டிருந்தனர். ’’மேடையில பேசும்போது குடும்பத்தார், குடும்பத்தார்னு சொல்றப்பல்லாம் கூட அவ்வளவா கஷ்டமாத் தெரியலப்பா.ஆனா, அந்த அம்மா அப்படி குழந்தைய வாங்கி வச்சுக்கிட்டு போட்டோவுக்கு நின்னப்பதான் ரொம்ப கஷ்டமாப் போயிடுச்சிப்பா. ஆண்டவன் இவங்களுக்கு ஒரு குழந்தையக் குடுத்திருக்கக்கூடாதான்னு நினைக்காம இருக்கமுடியல?

2 comments:

Ki.charles said...

Nalla irukku nanba!

ச.முத்துவேல் said...

நன்றி சார்லஸ்.