Thursday, May 3, 2012

ஞாயிற்றுக்கிழமை கவிதைகள்






1.
ஞாயிற்றுக்கிழமை கோடரி
குளத்துக்குள் விழுந்துவிட்டது
தண்ணீரில் தோன்றிய கால தேவதை
திங்கட்கிழமை கோடரியை காண்பித்தாள்
இது இல்லை என்றேன்
செவ்வாய்க் கிழமை, புதன்கிழமை
வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை
சனிக்கிழமை கோடரிகளை
அடுத்தடுத்து காண்பித்தாள்
வேண்டாம் என்று மறுத்தேன்
மறைந்தேவிட்டாள் கடைசியில்
ஞாயிற்றுக்கிழமை கோடரியோடு
எல்லாவற்றையும் என் தலையில் கட்டிவிட்டு.
2
அதே சீருடையில்
அதே பேருந்துக்காக
அதே நேரத்தில்
அதே மரத்தடியில்
அதே நிழலில்
காத்திருக்கிறேன்

அதே பள்ளிப்பெண்
அதே சீருடையில்
அதே பாராமுகமாய் போகிறாள்

அதே அலுவலகப்பேருந்தில்
அதே இருக்கைகளில்
அதே முகங்கள்
அதே………

நான் நின்றுகொண்டிருப்பது
நேற்றிலா?
முந்தா நாளிலா?
இன்றிலா?
ஞாயிற்றுக் கிழமையில் அல்ல
என்பது மட்டும் தெளிவு.
3.
இந்த வருடம்
சுதந்திர நாள்
ஞாயிற்றுக்கிழமையில் வருகிறதா?
பரவாயில்லை
இந்த வருடம்
சுதந்திரத்தை
ஒரு நாள் தள்ளியே கொடு
நன்றி கல்கி 6.5.11
        கதிர்பாரதி

மேலும் சில கவிதைகள்
4.
திங்கட்கிழமையிலிருந்து

சனிக்கிழமை மாலைக்குச் செல்வது
நெடிய ரயில் பயணம்.


ஞாயிற்றுக்கிழமையோ 
தண்டவாளத்தைக்
கால்களால் நடந்து
குறுக்கில் தாண்டுவது.
5.
அலுவலகத்திலிருந்து
2 மணி நேரம் முன்னதாகவே
வீடு திரும்பிவிட்டேன்
இன்று
எனக்கு இந்த நாளில்
26 மணி நேரம்




2 comments:

நந்தாகுமாரன் said...

அருமை ... ஆனால் இன்னும் கொஞ்சம் செதுக்கலாமோ ...

ச.முத்துவேல் said...

@ நந்தா
நன்றி நந்தா.
..லாம்தான்.