Monday, December 17, 2012

பரம்பரை



பரம்பரை

கறுப்பாயிருக்கிறவங்களை என்னால அந்தளவுக்கு நேசிக்க முடியறதில்ல.சகஜமாத் தொட்டுப் பேசறதுகூட இல்லைன்னா பாத்துக்கங்களேன். அதனாலதான் என் பையன் மேல எனக்கு அந்தளவு ஈடுபாடு இல்லையோன்னு யோசிச்சதுண்டு. அது உண்மைதான்னும் மனசுக்கு தெரியுது.ஆனா, என்னால  ஏனோ மாத்திக்க முடியல.எம் பையங்கிட்ட ஒட்டுதல் இல்லாம, எப்பவும் ஒரு வெறுப்போடயே இருக்கிறன்.

எங்கம்மாவும் இப்படித்தான்.அவளப் பாத்து, பாத்து, அவ பேசறதையெல்லாம் கேட்டுக் கேட்டு வளந்ததாலயே எனக்கும் இந்தக் கொணம் வந்திருக்கலாம். அவ பொதுவா எந்தக் கொழந்தைங்களையுமே கொஞ்சி நான் பார்த்ததேயில்லை.’’ டேய்..டேய் கம்மனாட்டி..இங்கப் பார்றா. அங்க என்னாடாப் பாக்கற..ங்கொப்பனை என்னாடா பாக்கற. ங்கொப்பனை நீ பாத்ததேயில்லயா? இங்கப் பார்றா..டேய்..இங்கப் பார்றான்னா..’’ இப்படித்தான் கொஞ்சுவா.ஒரு கொழந்தையைப் பார்த்தா, நாமும் ஒரு கொழந்தையா மாறி, எறங்கி வரணும்.அவளாவது, எறங்கறதாவது! ஆனா, பாக்க சிவப்பா அழகா இருக்கிற கொழந்தைங்கள மட்டும் தொட்டுப் பேசுவா.ஆனா, கொடுமை என்னான்னா அவளுக்குப் பொறந்த நாங்க எல்லாருமே கறுப்புத்தான்.எங்கப்பன் கறுப்பு அப்படியே ஒட்டிக்கிட்டு வந்துடுச்சி. எப்படி அந்தாளை எங்கம்மா கட்டிக்கிட்டாங்கிறது இன்னும் புரியாத புதிர்தான். அவளுக்கும் இந்த ஒலகத்தில எந்தவொரு மனுசாளு மேலயாவது உண்மையிலெயே அன்பு,பாசம்லாம் இருக்குதான்னு கேட்டீங்கன்னா, அதுக்கு ஒரே ஒரு ஆள்தான் உண்டு. அது அவங்க அப்பன், குப்புசாமி கவுண்டர் மட்டுந்தான். அந்த ஆள் ஓரளவு   நல்ல செவப்பாவே இருப்பாரு.அந்தப் பட்டிக்காட்டு ஊருக்கு, அந்த ஜாதிக்கி அது பெரிய கலரு, பெரிய விஷயம். அவரோட கலருதான் நமக்கும் வந்திருக்குங்கிற பாசமோ என்னவோ?. ஆனா, அதுவும் சரிதான். அவரு காலத்துல ஊருலயே பெரிய மனுஷன் வேற. எங்க தாத்தா பாக்க ஜெயஜாண்டிக்கா இருப்பாரு. இந்திரா காந்தி மூக்கு. சோமயாஜுலுன்னு ஒரு நடிகர் இருந்தாரே அவர ஞாபகப்படுத்தற மாதிரியான மொகம். ஆனா ரங்காராவு மாதிரி கம்பீரமான உருவம், அதே மாதிரி கணீர் குரல்.அவர் வச்சிருந்த வால்வு செட் ரேடியோல ந்யூஸ் கேட்க திண்ணையில பெருசுங்கல்லாம் ஒக்காந்துருக்கும். இவருக்கு மட்டும் ஒரு சேரை காத்தோட்டமா போட்டுக்கிட்டு, கால் மேல கால் போட்டுக்கிட்டு வாசலுக்கு வெளிய தன் ஒடம்பத் தானே தடவிக்குடுத்துக்கினே ஒக்காந்திருப்பாரு. வயல் வேலை முடிச்சிட்டு போறவங்க கூட நின்னு செய்தியில என்னா சொல்றான்னு கேட்டுட்டுப் போவாங்க. டவுன்லருந்து துக்ளக் புக்லாம் வாங்கிப் படிக்கிற அளவு ஊர்லயே வெவரமான ஆளு. நான் லீவுல ஊருக்குப் போயிருக்கறப்ப துக்ளக் புக்கைக் குடுத்துப் படிக்கச் சொல்லுவார் எங்க தாத்தா. ‘ டேய் டவுன் கேடி. கேடிக்குப் பொறந்த கேடி நீ மட்டும் எப்படியிருப்ப?அப்பனாட்டந்தான இருப்ப. இந்தா , இதைப் படின்னு சொல்வார். தாத்தாவுக்கு எங்கப்பாவ புடிக்காது. எங்க அம்மா ஏன் இப்படி இருக்கிறான்னா, அதுக்கு எங்கத் தாத்தன்தான் எல்லா வகையிலயும் காரணம். அந்தாளும் எந்தப் பசங்களாயிருந்தாலும் இப்படித்தான் பேசுவார். ஆனா, இப்ப யோசிச்சுப் பாத்தா எங்க அம்மாவைவிட பல மடங்கு எங்கத் தாத்தன் எவ்வளவோ பரவாயில்லன்னுதான் சொல்வேன்.ஏன்னா, அந்தாளுக்கு பாசம்னா என்னான்னு வாசனைக்காவது தெரியும். எனக்கு எங்க அப்பாவைத் திட்டுறாரேன்னு கோவமா வரும். படிக்க மாட்டேன். அப்புறம் அங்கிருக்கிற பெருசுங்க யாராவது சொன்னப்பறந்தான் படிப்பேன்.  நாலாவது,அஞ்சாவது படிக்கிற பையன் இப்படி சரசரன்னு படிக்கிறானேன்னு எல்லாரும் ஆச்சரியமாப் பேசிக்குவாங்க.அந்த ஊர்ப் பசங்கள என்னைக் காட்டித் திட்டுவாங்க.  நான் லீவுல போயிருக்கிற சில சமயங்கள்ல அங்க இன்னும் லீவ் விட்டிருக்கமாட்டாங்க. ஒரு சின்ன ஓட்டுவீடு மாதிரி இருக்கிற பள்ளிக்கூடம் எங்க தாத்தா வீட்டுக்குப் பக்கத்துலயே இருந்தது.அந்த பள்ளிக்கூடத்தை ஆச்சரியமா பாப்பேன். இந்த மாதிரி ஸ்கூல்ல படிக்காமபோயிட்டோம்மேன்னு ஏக்கம் வரும். ஏன்னா, பசங்களுக்கு ஒரு கட்டுப்பாடுஏ இல்லாம இருந்தது.அவங்கவங்க எழுந்து இஷ்டத்துக்கு ஓடறதும், சத்தம் போட்டு விளையாடுறதுக்கும், எதிரிக்கிலிருக்கிற எங்க மாமாவோட மளிகைக் கடைக்கு வர்றதும் பாக்க நம்பவே முடியல.எங்க தாத்தா  டெல்லிக்கி அப்பப்ப எதாவது மாநாட்டுக்குல்லாம் போய்வர்ற ஆளு.தோளில எப்பவும் பச்சைத் துண்டு போட்டிருப்பாரு.வீட்டுல ஒரு தலைவர் போட்டோ இருக்கும்.அவரும் பச்சைத் துண்டு போட்டிருப்பாரு.  ஊருக்குள்ள பெரிய அதிகாரமும், அந்தக் காலத்துலயே எழுதப் படிக்கவும் தெரிஞ்ச ஆள்.

எங்க மாமா ஒருமுறை சொன்னார்.அதாவது சின்னத் தாத்தாவோட மகன்.
’’ உங்க தாத்தா அந்தக் காலத்துலயே படிச்சவன்ங்கிறதாலதான் எங்கப்பன் சொத்துல நிறைய ஏமாத்தி எழுதி வாங்கிக்கிட்டான்.’’ அப்படிச் சம்பாதிச்ச சொத்துல பொண்ணுக்கும் பங்கு குடுத்தவராச்சே. இதனால எல்லாந்தான் எங்கம்மாவுக்கு அவங்க அப்பன் மேல பாசம். அப்பனைத் தவிர அவ பொறந்த வீட்டு ஜனங்க இன்னும் சிலர் மேல பாசம் உண்டுன்னு நான் ஒரு சின்ன லிஸ்ட் மனசுல வச்சிட்டிருந்தேன்.ஆனா, அவ அந்த லிஸ்டுல இருந்த எல்லாரையும் ஒன்னொன்னா காலி பண்ணிட்டா.

நான் சின்னப்பையனா இருக்கிறப்ப அவ அடிக்கடி ஒரு சம்பவத்தைத் தெருப்பொம்பளைங்கக் கிட்ட பெருமையா சொல்லிக்கினுருப்பா.  அது அவளோட சின்ன வயசில நடந்ததாம். அவங்க  ஊர்ல  இருக்கிற ஒரு குடிகாரன், பேரு என்னமோ சொல்வா.  இவ சின்ன வயாசாயிருக்கும்போது, அவளோட பின்னாலயே  நைஸா வந்து டபக்குன்னு பாவாடையத் தூக்கிட்டு, உள்ளப் பூந்துக்குனு ‘’ கவுன்ச்சி..ஒம்பொண்ணு என்னா செவப்பு! ன்னுவானாம். சொல்லிட்டுச் சொல்லிட்டு சிரிப்பா. எனக்குப் பத்திக்கினு வரும்.மொதல்லயெல்லாம் அந்த ஆளுமேலதான் கோவம் வந்துக்கிட்டிருந்தது.ஆனா, போவப்போவ இவ மேலதான் எரிச்சல் வந்துச்சி.சனியன் புடிச்சவ.விவஸ்தைன்னா என்னன்னே தெரியாதவ. மூஞ்சியிலயே போய் காறி துப்பலாமான்னு இருக்கும்.

எங்கம்மாவ எனக்கு சுத்தமாப் புடிக்காதுன்னாலும், அவக்கிட்டருந்து இந்தக் கறுப்பு, செவப்பு கொணம் மட்டும் மனசோடக் கலந்துபோய் இருக்குதேன்னு நினைச்குவேன்.ஆனாலும், அது கறை மாதிரி ஒட்டிக்கினு போவ மாட்டேங்குது ங்கிறதுதான் உண்மை..அதேமாதிரி கறுப்புலயே கூட பணக்காரங்க கறுப்பு சரி பரவாயில்லைங்கிற மாதிரி இருக்கும்.ஏன்னா, ஷைனிங். அண்டங்காக்காவைவிட சாதா காக்கா கலரு பரவாயில்லதானேங்கிற கதைதான். வெள்ளைக்காரனுக்கு கறுப்பருங்க மேல இருக்கிற வெறுப்பு எனக்கு ஓரளவு நியாயமாத்தான் தெரியுது. ஒருமுறை எங்க காலேஜ்ல செஞ்சிக் கோட்டைக்கு டூர் போயிருந்தப்ப நடந்த  ஒரு சம்பவத்தை அடிக்கடி  நெனைச்சிப்பேன்.எங்க செட்டுல இருந்த முருகன் செம கருப்பா இருப்பான்.அவன், அங்க சுத்திக்கிட்டிருந்த வெள்ளைக்கார சின்னப் பொண்ணுக்கிட்ட, பறக்கிற மாதிரி கையை விரிச்சிக்கிட்டு, ஆஆஊஊன்னு கத்திக்கிட்டே கிட்ட ஓடினான். அது பாவம் பயந்து, பதறிப்போயிடுச்சி. முருகங்கிட்ட வெள்ளைக்காரனும், வெள்ளைக்காரிச்சியும் கன்னாமுன்னான்னு கத்தினாங்க.  

நான் கல்யாணத்துக்குப் பொண்ணு தேடுறப்பகூட செவப்பான பொண்ணா இருக்கணும்கிறதுதான் நான் போட்ட முக்கியமான கண்டிஷன். கறுப்பா இருக்கிற பொண்ணுங்க, அவங்க என்னாதான் அழகா, அமைப்பாவே இருந்தாலுமே எனக்கு ஒரு இது வர்றதில்ல.செவப்பா பொண்ணு கட்டுனா பொறக்குறது செவப்பாப் பொறக்க வாய்ப்பும் இருக்குதே.ஆனா, அதையும் மீறி பொறக்குறது என்னாட்டம் கறுப்பா பொறந்துட்டா? அதுக்கென்னா பண்ணமுடியும்? எல்லாம் ஒரு முயற்சிதான்.பாப்பமே.அதனாலதான் செவப்பா பொண்ணுதேடி கட்டுனேன்.

நான் பயந்தமாதிரியே எம் பையன் கறுப்பா, என்னைவிடவே கறுப்பாப் பொறந்துட்டான்.அப்பவே ஒரு ஏமாத்தமும், வெறுப்பும் ஸ்டார்ட் ஆகிடுச்சின்னுதான்   நெனைக்கிறன்.அதுதான் நா எம் பையங்கிட்ட இப்படியெல்லாம் நடந்துக்கிறதுக்குக் காரணமாயிருக்க முடியும்.ஆனா,அது மட்டுமேன்னு சொல்லிடவும் முடியாது. ஒரு கொழந்தைன்னா எப்படியெப்படியெல்லாம் இருக்குமோ, இருக்கணுமோ அப்படியெல்லாம் அவன் இல்லை. இதுவும் ஒரு முக்கியமான காரணம்.ஓடியாடி விளையாட மாட்டான்.துருதுருன்னிருக்க மாட்டான்.யார் எது கேட்டாலும் பேச மாட்டான்.அதுவேணும் இது வேணும்னு அடம் புடிக்கமாட்டான். வீட்டூக்கு வரவங்கள்லாம் பேசிப் பேசிப் பார்த்துட்டு நல்ல பையன், அமைதியான பையன்னுதான் சொல்லுவாங்க. முடி வேற வெட்டாம, சாமிக்கு நேந்துவுட்ட கணக்குக்குத்  தள்ளிக்கினே போய் நெறைய வளந்து குடுமியெல்லாம் போட்டு வச்சிருப்பா எம் பொண்டாட்டி. அதுவேற அசிங்கமா இருக்கும். எங்கம்மா பேரனைப் பாத்த கதையை சொல்லாம விட்டுட்டனே.

எம் பொண்டாட்டி கொழந்தை பொறந்ததும் அவங்கம்மா வீட்டுக்குப் போய் இருந்தா.  நாங்க இருக்கிறது தனிக்குடித்தனம், மெட்ராசுல. மெட்ராசுலயே பிரசவமும் பாத்துட்டோம். ரொம்ப நாள் கழிச்சி,  எங்கம்மா வெறுங்கையோட எம் மாமனார் வீட்டுக்குப்போய், கொழந்தையைப் பாத்திருக்கா.ஊர் ஒலகத்துல எல்லாரும் கேட்க ஆரம்பிச்சிட்டாங்களாம். ஏன் இன்னும் பேரப்பையனைக்கூட போய் பாக்கலியான்னு. அதான். பாத்துட்டு, ‘இதென்னாஆ? இந்தப் பையன் இப்படியிருக்குது?கன்னங்கரேல்னு பரதேசியாட்டம்.. வயித்துலயிருக்கும்போதே குங்குமப்பூவுல்லாம் வாங்கிக் குடுத்திருக்கணும்.அவன் அப்பனைவிட கறுப்பாயிருக்குது.காசி செலவாயிடுமேன்னு பாத்தா இப்படித்தான் பொறக்கும் அது இதுன்னு கன்னாபின்னான்னு பேசிட்டுப் போயிருக்கிறா.
சொந்தப் புள்ளையான என் கல்யாணத்துக்கே வரமாட்டேன்னு கிராக்கிப் பண்ணவ.வர்றதுக்கு அதுவேணும், இதுவேணும்னு இதான் சமயம்னு எங்கிட்ட காசு புடுங்கினவ.எங் கல்யாணம் அவ ராஜாங்கம் நடத்துறதுக்கு ஒரு வாய்ப்பா இருக்குமே.ஆனா, அதை நான் அவளுக்கு நான் குடுக்கல. பெரியப்பா, பெரியம்மாவ முன்ன வச்சி கல்யாணம் பண்ணேன்.அவ ஆசைப்படி விட்டிருந்தன்னா எங் கல்யாணம் கந்தக் கோலமாகியிருக்கும்.அப்பேர்ப்பட்டவ மருமவள கிட்டயிருந்து ஏதாவது பாத்துப்பாளா என்ன? கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்ச நாள்லயே அவளை பாக்கிற வாய்ப்புகூட எம் பொண்டாட்டிக்கிக் கிடைக்கல.   நான் வீட்டுக்குப் போனதும் எங்கம்மா வந்துட்டுப் போன கதைய எங்கிட்ட சொன்னாங்க. தொட்டுக்கூட பாக்கலன்னு ஆச்சரியமா சொன்னாங்க எனக்கு ஆச்சரியமெல்லாம் ஒன்னுமில்ல.நேரா வண்டியயெடுத்துனு வீட்டுக்குப் போனன்.ரொம்ப நாளு கழிச்சி ,வருஷங்களே ஆகிப்போயிருக்கும், நானே அப்பதான் எங்க வீட்டுக்குப் போனேன். அதுக்கப்புறம் இதோ இன்னவரைக்கும் மறுபடியும் போவவும் இல்ல. அன்னிக்குப் போய் மண்டைய ஒடச்சிட்டன்.மனைக் கட்டையால அடிச்சி மண்டையில ரத்தம் வந்துடுச்சி. நான்  பாட்டுக்கு திரும்பிக்கூட பாக்காம வந்துனே இருந்துட்டன். அடிபட்டவ நிலைமையை நினைச்சி லேசா ஒரு பரிதாபம், பதட்டம் பயம் எனக்காவது வந்துச்சி.ஆனா, அவ என்னா தெரியுமா பண்ணாளாம். தெரு ஆளுங்க எத்தனையோ பேர் என்னா சொல்லியும் கேக்காம ஹாஸ்பிட்டலுக்குப் போவாத. நேரா போலீஸ்டேசனுக்குப் போன்னாளாம்.ஏற்கனவே ஒருவாட்டி, எம் பேர்ல போலீஸ்ல கம்ப்லெயிண்ட் குடுக்கபோனவதான் அவ. கேஸ் குடுத்தா என் வேலைக்கே வில்லங்கமாயிடும்னு தெரிஞ்ச நாட்டு வக்கீல்தான் அவ.அப்பேர்பட்டவதான் என்னைப் பெத்த மவராசி.  எங்கூடப் பொறந்தவங்க எல்லாருமே  எங்கம்மாவ அடிச்சிருக்காங்க.அடிக்கும்போது திருப்பி அடிப்பாங்க.ஆனா, நான் மட்டுந்தான் அடிச்சதேயில்ல. அடிச்சா கையப் புடிச்சுக்குவேன், இல்ல வெளியில ஓடிடுவேன்.எப்பவாவது பாத்திரங்களைத் தூக்கிப்போட்டு ஒடைச்சிடுவேன். இன்னுங்கூட வீட்டுல நினைவுச் சின்னங்கள் இருக்கும்னு நினைக்கிறேன்.

ஆங்! எங்க வுட்டேன்? எம் பையனைப் பத்திதானே பேசிக்கிட்டிருந்தம். ஒரு நாளு நான் சிக்னல் வீக்காயிருக்குதேன்னு தெருவுல நின்னுப் பேசிக்கினிருந்தன். அப்ப இளங்கோ அவம் பையனோட தெருவில  நடந்து போய்க்கிட்டிருந்தான். என்னைப் பார்த்துட்டு நின்னான். நான் வீட்டுக்குள்ள கூட்டிக்கிட்டுப் போய் ஒக்கார வச்சிட்டு பேசிக்கிட்டிருந்தன். இளங்கோவோட பையன் யுவனும், எம் பையனும் ஒரே ஸ்கூல்ல ஃபஸ்ட் ஸ்டேண்டர்ட் படிக்கிறானுங்க. அந்தப் பையன் எம் பையனைப் பார்த்துட்டு நல்லா சிரிச்சிச் சிரிச்சிப் பேசறான். இவன் என்னாடான்னா என்னைத் திரும்பித் திரும்பிப் பாக்கறதும், முழிக்கிறதுமாவே இருக்கான்.இளங்கோவும் பேச்சுக் குடுத்துப் பாக்கறான். எம் பையன் வாயவே தொறக்க மாட்டங்கறான்.  நானும் பேசுடா பேசுடா. யுவன் உங்கூடத்தானடா படிக்கிறான்.அவன் எப்படி பேசறான். அவங்கேக்கிறதுக்காவது பதில் சொல்லுங்கிறன். ம்ஹூம். எனக்காக் கடுப்பாயிடுச்சு. அப்படியே மண்டையிலயே ஒன்னுப் போட்டன்.இளங்கோதான் தடுத்தான்.பேசி முடிஞ்சி வீட்டுக்குக் கிளம்பும்போது, வெளிய போய் தெருவாசல்ல நின்னு ‘ சின்னப் பையந்தான அவன். அடிக்காத. அவன் உன்னைப் பாத்தாலே பயப்படுறான். அவங்கிட்ட நீ ஃப்ரீயா பேசினாத்தான அவனுக்கு பயம் போகும். நீ அவங்கிட்ட பேசறதேயில்லன்னு எனக்கேத் தெரியும்.எங்கியாவது வண்டியில ஒக்கார வச்சி வெளியில கூட்டினு போ. இன்னும் ஒருவாட்டிகூட உன்னை அவங்கூட வெளியில போயி நான் பார்த்ததேயில்ல. இன்னிக்கி லீவுதான. இப்பவே கூட்டிக்கிட்டு போ.ன்னு சொல்லிட்டுப் போய்ட்டான்.  எனக்குந்தான் நல்லாவே தெரியுது.ஆனாலும், என்னால மாத்திக்க முடியலயே.எப்பவாவது  நானே ஆச்சரியப்படுற மாதிரி ஒழுங்காப் பேசுனாக் கூட அவம் பண்றதப் பாக்கும்போது கோவம் வந்துடுது. அப்புறம் திட்டுதான், அடிதான்.

என்னதான் நம்ம மனசுக்குள்ளயேயிருந்தாலும், அதை இன்னொருந்தங்க சொல்லக் கேட்கும்போதுதான் நல்லா ஒரைக்குது. பையனை வெளியில வண்டியில கூட்டிக்கிட்டுப் போறன்.அவனுக்கு நல்லதா ட்ரஸ் போட்டுவுடுன்னதும் எம் பொண்டாட்டியால நம்ப முடியாம பாக்கிறா. நேரா சில்ட்ரன்ஸ் பார்க்குக்குக் கூட்டிட்டுப் போனேன். சறுக்கா மரம், ஊஞ்சல் எல்லாம் காட்டினேன். ஊஞ்சல் ஆடச் சொன்னா மாட்டெங்கறான்.பயப்படுறான்.பொறுமையா ஒக்கார வச்சி, ‘வினோத் நல்ல பையன்.தைரியமான பையன். இனிமேல் எதுக்குமே பயப்பட மாட்டாந்தான.ன்னு சொல்லி ஊஞ்சல்  ஆட்டினன்.சிரிச்சான்.பயத்தில என்னை ஒரு கையால இறுக்கிப் புடிச்சிக்கிட்டான். அப்புறமா இறக்கி விட்டு அப்படியே நடத்திக் கூட்டிக்கிட்டுப் போனன்
‘அப்பா. அதோ அது என்னாது?
அப்பா. எங்க ஸ்கூல்லகூட ரோஸ்லாம் இருக்குது
அப்பா. யுவன் கூட எங்கக் கிளாஸ்தாம்பா
அப்பா. இனிமே நான் பயப்பட மாட்டேன் இல்லப்பா
அப்பா அப்பா அப்பான்னு நிறுத்தாம எதையாவது பேசிக்கிட்டேயிருந்தான். எவ்ளோ நாளா தேக்கி வச்சிக்கிட்டிருந்த அணைய ஒடைச்சா மாதிரி பேசிக்கிட்டேருந்தான். ஆனா, தண்ணி எங் கண்ணுலதான் வந்துக்கிட்டேயிருந்துச்சி..அப்படியே அவனுக்கு மொகங்காட்டாம திரும்பி பேச்சுக் குடுத்துக்கிட்டே வந்தன். அவனும் பேச்சை நிறுத்தவேயில்ல. 



                     

2 comments:

anujanya said...

வெகுஜனப் பத்திரிகையில் வரும் நல்ல கதை போல இருக்கு. தொடர்ந்து எழுதவும்.

ச.முத்துவேல் said...

@அனுஜன்யா
நல்ல கரு.ஆனா, நல்ல கதைக்கான உடலைப் பெறவில்லை. என்னால் மாற்றி எழுத பொறுமையில்லை.இருக்கவே இருக்கிறது ப்லாக்.

நன்றி !