Tuesday, March 10, 2009

பழைய சோறு-கனகராஜன்



கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கூட இருக்கும், பழையசோறு என்கிற இக்கவிதைத் தொகுப்பை வாங்கிப் படித்து. மீண்டும் ஒருமுறை படித்தேன். எல்லாமே, எளிய வாசகனையும் மிரட்டாத எளிமைத்தன்மையோடு, ஆனால், ஆழமான, கவிதைகளைக் கொண்டுள்ள தொகுப்பு. கணையாழி, தினமணிகதிர், மவ்னம்,பல்சுவை நாவல்,தமிழன் எக்ஸ்பிரஸ் போன்ற பல இதழ்களிலும் தேர்வு செய்யப்பட்டு, வெளியீடான கவிதைகளைத் தொகுத்துள்ளார் ஆசிரியர், கனகராஜன். துயரங்களையும், வறுமையையும் அனுபவப்பகிர்வோடுப்பேசும் கவிதைகள் பெரும்பான்மையாய் இருந்தாலும் அழகியல் நோக்கிலும் கவிதைகள் தென்படுகிறது(ஜன்னலோரம்). மாதிரிக்கு,சில கவிதைகள் மட்டும்…
இழவு ஆள்
எப்போதாவது வருவார்
இழவு சொல்ல சொக்கமுத்து

“சாமீயேய்ய்…” கதவிற்கு
பத்தடி தூரம் நின்ற அவர்
குரல் அடையாளமாய் ஒலிக்க
“இப்போது யாரோ..?”
பயத்துடன் முகம் தூக்கும்.

“பட்டாளத்துப் பண்ணாடி
போயிட்டாருங்க..” என்பார்.
“அடப்பாவமே ..” வேதனையில்
வெடிக்கும் அப்பாவின் குரல்

“ நேத்து ரவைக்குப்
பண்ணெண்டு மணிக்குங்கோ..
ஒரு வாரமா கெடையில
கெடந்தாருங்கோ..”
கையில் அஞ்சோ பத்தோ
வாங்கிக் கொண்டு போவார்
வழிச் செலவுக்கு

அதற்குப் பின்னால்
கிராமம் நோக்கிய
பயண ஏற்பாடுகள்

கல்வாழை இலையில்
ஈர்க்குச்சிகள் கோர்த்து
சாப்பிடுகிற சொக்கமுத்து
மொட்டையடித்து
காது குத்திய சின்ன வயதில்
அதட்டி மிரட்டி
விளையாட்டுக்காட்டியது
இன்னும் மனசுள்
நிரம்பி நிற்கிறது

இழவு சேதிக்காக மட்டுமில்லாமல்
எப்போதேனும் விசேஷ
சேதிகள் சொல்லவும்
வருகிறவர்தான்

சொக்கமுத்துவின்
வருகை நின்றுபோய்
அவரை மறந்தே போன
ஒரு நாளில்
சொக்கமுத்துவின்
மகன் மாரி வந்தான்

“தெக்காலக் காட்டு அத்தை
காலமாயிட்டாங்க..” என்றான்

“மாரி சொக்கமுத்து வரலையா?”

“அப்பன் செத்து
ஒரு மாசம் ஆச்சுங்க..” என்றான்.

(மவ்னம்-ஜனவரி 94)

மவுனக்குரல்

கடிதங்கள் வருகின்றன
எழுத்துக்களின் குரல்களைத்
தாங்கிகொண்டு

மாமா எழுதும் கடிதங்களைப்
படிக்கிறபோது
அவருடைய மென்மையான குரல்
அதில் ஒலிக்கும்

சித்தியின் கடிதங்கள்
அவளுடைய கீச்சுக் குரலில் பேசும்

அப்பாவின் அதட்டலான குரல்
எப்போதும் அவரது கடிதத்தில்

அவரவர் குரல்களை
நினைவில் கொண்டுவரும்
நண்பர்கள் கடிதங்களில்

ஊமை சங்கரன்
கடிதத்தில் மட்டும்
மனசுக்குள்ளிருந்து
ஒரு மவுனக்குரல் தொடும்

(தமிழன் எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 99)

நூல் விபரம்
பழைய சோறு-கவிதைகள்
முதல் பதிப்பு: ஜூன் 2007
விலை ரூ.20
வானம் வெளியீடு
கனகராஜன்
1/9 விவேகானந்தா காலனி
சமத்தூர்
பொள்ளாச்சி 642 123
அலைபேசி 99943 16088

8 comments:

யாத்ரா said...

“அப்பன் செத்துஒரு மாசம் ஆச்சுங்க..”

//ஊமை சங்கரன்கடிதத்தில் மட்டும்மனசுக்குள்ளிருந்துஒரு மவுனக்குரல் தொடும்//

நல்ல அறிமுகம் முத்துவேல்

தங்களின் கவிதையை உயிரோசையில் படித்தேன், வாழ்த்துக்கள்

//நீங்கள் ஊகிக்க முடியாத
ஒரு தேசத்திலும்கூட
யார்யாராலோ
எங்கெங்கோ
எப்படியெப்படியோ
உங்கள் உடல்/ அங்கங்கள்
நீங்களே அறியாமலும்
சம்பந்தமின்றியும்
சுவைக்கப்படுகிறது.//

பன்முகத்தன்மை மிளிர்கிறது

ஆதவா said...

இரு கவிதைகளுமே அபாரம்... இரண்டாம் கவிதையில் உணர்வுகள் துள்ளுகின்றன. இப்படியெல்லாம் யோசிக்க, முதலில் அவர்களாகவே மாறவேண்டும்....

அது பழைய சோறுதான்.. ஆனாலும் ஆரோக்கியமானது!!!

பகிர்தலுக்கு நன்றி முத்துவேல்.

பரிசல்காரன் said...

ஒரு காலத்தில் மிகக்குறைந்த விலைக்கு அதிக மதிப்புள்ள புத்தகங்கள் கிடைத்து வந்ததை நினைவூட்டி விட்டீர்கள்!!

நன்றி முத்துவேல்!

ச.முத்துவேல் said...

@யாத்ரா
உங்களுக்கும் பிடித்திருப்பது குறித்து மகிழ்ச்சி.
உயிரோசை கவிதை பற்றிய கருத்துக்களுக்கும் நன்றி.

ச.முத்துவேல் said...

/அது பழைய சோறுதான்.. ஆனாலும் ஆரோக்கியமானது!!!/

நல்லா சொன்னீங்க. நன்றி.

ச.முத்துவேல் said...

@பரிசல்
நல்வரவு தல.மகிழ்ச்சி.
நீங்க சொல்றது உண்மைதான்னாலும், இந்த புத்தகம் 2007 வெளியீடுதானே. நானேகூட விலை குறைவாயிருந்ததாலதான் வாங்கினேன்.
நன்றி, பரிசல்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

நான் கூட இப்படித்தான் விலை குறைவான புத்தகங்கள் தேடிப்பிடித்து வாங்குவேன்.

விலைதான் குறைவே தவிர விஷயங்களின் அடர்த்தி மிக அதிகம்,
இதோ இந்தக் கவிதைகளைப் போலவே.

ச.முத்துவேல் said...

@அமித்து அம்மா
விலை குறைவான புக் வாங்கறதுல நிறைய ஆதாயம் இருக்குது.கவிதைகள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி. நன்றி,அமித்து அம்மா.