Monday, May 30, 2011

ஜெ.மோ.பரிந்துரைத்த வி.அமலன் ஸ்டேன்லி கவிதைகள்

ரகசியக்காதல்
தன்னந்தனியனாய்
தவறவிட்ட உன்னைத்தேடி

பதற்றப்பட்டு பரபரக்க
உரத்து உன் பெயர் கூவியழைக்க
திராணி இம்மியுமில்லை
கானுயிர்கள் விழிப்புறும் பட்சத்தில்

சருகுகளின் சப்தத்தைத் தவிர்க்க
நுனிக்காலில் நகர்கிறேன்

பட்சிகளின் பொந்துகளிலும்
பட்டைகளின் இடுக்குகளிலும்
சொல்லிவைக்கிறேன் உன்னைப்பற்றி
எங்ஙேனும் கண்டால்
தகவல் அனுப்பவென்று

சளைக்காமல் தொடர்வேன்
அதுவரையில்
கானகத்தைத்
தீண்டாதிருக்க வேண்டும் தீ.

நிஜம்
எட்ட பார்த்த நீராயில்லை
இறங்கி நின்றது

இலை தழை புறந்தள்ளி
விலக்க முயன்ற நீராயில்லை
பருகச் சூழ்ந்தது

இளைப்பாறுகையில்
அள்ள முனைந்த நீராயில்லை
குடித்துத் தீர்த்தது

கயலிதழி
தேவதை மீன்களுக்கு
கீழுதடு அகழ்ந்தெடுக்கும்
ஈருதடுகளும் ஒருங்கிணைந்து
சீராகக் குவிந்து மீளும்
பொன் மீன்களுக்கு

‘கப்பி’களோடு முணுமுணுவெனும்
உதடியக்கம் புலப்படாது
‘கௌராமி’களுக்கு

உண்மையிலேயே
மீன்களின் உதடுகள்
செழுமையானவை
வனப்பும் வசீகரமும் மிக்கவை

‘கொய்கெண்டை’களோவென
குவிந்தன அவள் உதடுகள்
$$$
வாழ்தலுக்கிடையில்
அவ்வப்போது
இருத்தலை உறுதிப்படுத்திக்கொள்ள

சொற்ப நீர்த்தேங்கலின்
மேற்புறப்படலமென
மெய்சிலிர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது
வெறுங்காற்றுக்கு
@@@
அடர்வற்ற மந்தாரைச் செடியின்
இலைக்கற்றைக் கூரையின் கீழ்
தோளுக்குள் தலைசெருகி
குந்தித் தூங்கியது
ஒரு தேன்சிட்டு

காலாற நடந்துபோன ஓரிரவில்
கவனித்தோம்
பின்னர் உற்று நோக்கினோம்
சிலிர்ப்புண்டாயிற்று

இன்னும் நெருங்கினோம்
சப்தமற்று
கொஞ்சமும் சலனப்படாதிருந்தது

வசப்படுத்தும் மிக
அரிய தருணம்
கைகூடிற்று

அப்படியின்றி
மெல்லக் கடந்துபோனோம்

அப்போது அது
பறவையாகவே இல்லை
             -வி.அமலன் ஸ்டேன்லி

Wednesday, May 4, 2011

வேணு குடும்பத்தார்

வேணு குடும்பத்தார்

வேணு தனது பணி ஓய்வு நாள் பாராட்டுவிழா நடத்துவதற்குச் சம்மதிக்கவேயில்லை. யார் எவ்வளவு சொல்லியும் பிடிவாதமாக மறுத்துவிட்டார்.இப்படியிருக்கும்போது அவருடைய கடைசி பணி நாளன்று பாராட்டுவிழா நடக்கவிருப்பதாக, அதற்கு முந்தைய நாள் சொன்னார்கள். அவருக்கு  நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டும் பேசி வற்புறுத்தியிருக்கிறார்கள். அவ்வளவு பிடிவாதம் பிடித்தவர் எப்படி ஒத்துக்கொண்டார் என்று மற்றவர்களுக்கெல்லாம் ஆச்சரியம்.

நிறுவனத்துக்குள்ளாகவே நடத்தப்பட்ட பணி ஓய்வு நாள் பாராட்டுவிழா கூட்டத்தில் தீர்மானித்திருந்தபடி சிலர் மட்டும் மேடைக்குச் சென்று வாழ்த்துரை வழங்கினார்கள். மேடையில் வேணுவும், மேலாளரும் அமர்த்தப்பட்டிருந்தனர்.வேணுவோடு வேலை தொடர்பாகவும், நட்பின் அடிப்படையிலும், வயதின் அடிப்படையிலும் நெருக்கமுள்ளவர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் என்று ஒவ்வொருவராய் வந்து பேசிவிட்டு அமர்ந்தனர். வேணுவுடனான அவரவர் அனுபவங்களை, வேணுவின் சிறப்புக்களையும் ஆளாளுக்குக் குறிப்பிட்டனர். வேணுவின் பல்துறை சார்ந்த சாதனைகள், சமூகப் பங்களிப்பு, மற்றும் பன்முகத்தனமை வாய்ந்த அவருடைய குண நலன்கள் ஆகியவற்றை குறிப்பிட்டுக்கொண்டிருந்தனர். எல்லோரும் கடைசியாக சொல்லிக்கொள்வதில் மட்டும் எப்போதுமே மாற்றம் இருக்காது. ஓய்வுக்குப் பிறகு இவரும், இவருடைய குடும்பத்தாரும்   நல்ல ஆயுளும், ஆரோக்கியமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்,  இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்பதே அது. ஒருவர் துவக்கிவைத்துவிட்டால் போதும். எல்லோரும் சொல்லியே ஆகவேண்டும். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் அவருடனேயே பணியில் சேர்ந்தவர் என்பதால் மிகவும் நெருக்கம் கொண்டவர். ‘ வாழ்க்கையில்  நாம் மனைவியுடனும், உடன் பணிபுரியும் நண்பர்களுடனும்தான் பெரும்பகுதியை கழிக்கிறோம். குடும்பத்திலேயே வேறு யாருடனும் இப்படி அமைவதில்லை.வேணு 35 வருட நண்பர் எனக்கு. 35 வருடங்கள் நாள்தோறும் 8 மணி நேரம் பழகுவது என்பது சாதாரணமானதல்லவே என்றார். ‘இவ்வளவு தூரம் பழகிவிட்டு பிரிவதென்பது மிகவும் துயரம் தருவதாய் இருக்கிறது என்று அவர் சொல்லும்போது குரலில் தழுதழுப்பு வந்துவிட்டது. சிரமப்பட்டு அதைச் சமாளித்து இயல்பாக்கிக் கொண்டார். எல்லோரும் ஒரு நெகிழ்ச்சியான மன நிலையில் காணப்பட்டனர்.   சால்வை ஒன்றை பொன்னாடையாக போர்த்தி புகைப்படம் எடுத்தனர். சால்வை போர்த்தியிருந்தபோது வேணு உண்மையாகவே ஓய்வுபெறும் வயது வந்துவிட்டார் என்பதுபோல் தோற்றமளித்தது. சந்தன மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுப் பொருட்களும் வழங்கப்பட்டன. ஏற்புரை வழங்கிய வேணு, நிகழ்ச்சி முடிந்ததும் அப்படியே அனைவரும் என் வீட்டிற்கு வந்து நானளிக்கவிருக்கும் தேனீர் விருந்தில் கலந்துகொள்ள வேண்டும்என்று அன்போடு கேட்டுக்கொண்டார்.இதுவும் வழக்கமானதுதான்.

அலுவகப் பேருந்தின் முகப்புக் கண்ணாடியில் வேணுவின் வண்ணப் புகைப்படம் கொண்ட வாழ்த்துச் செய்தி பெரிதாக ஒட்டப்பட்டது. சொந்த கார்களிலும், இரு சக்கர வண்டிகளிலும் வந்தவர்கள் அவரவர் வாகனங்களில் வேணு வீட்டிற்கு புறப்பட்டனர்.மற்ற அனைவரும் வேணுவின் வீட்டுக்கு பேருந்தில்  சென்றுகொண்டிருந்தனர். வேணு எப்போதும் உட்காரும் கடைசி இருக்கை இன்று காலியாகி, அவர் முன்னாலேயே உட்கார்ந்து விட்டிருப்பதை யாரோ சத்தமாகக் குறிப்பிட்டு வேடிக்கைக் காட்டினார். எல்லோரும் சிரித்தனர்.அலுவலகத்தில் அவருக்களிக்கப்பட்ட செட்டில்மெண்ட் விபரங்களை சந்திரசேகரன் கையில் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு கோப்பில் விபரங்கள் அடங்கிய தாளும், ஒரு உறையில் காசோலையும் இருந்தது. நல்ல தொகை. இவ்வளவு தொகையை வேறு யாரும் செட்டில்மெண்டாக பெறுவது அவ்வளவு எளிதல்ல.வேணு சிக்கனத்திற்கு பெயர்போனவர். நிறைய சேமிப்பின் மூலமே இப்படியொரு தொகை கிடைத்திருக்கிறது.

சுப்ரமணிய நாயகர் இல்லம் என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்த பழங்காலத்து வீட்டு வாசலின்முன் பேருந்து சென்று நின்றதும்,வாசலில் வரவேற்கக் காத்திருந்த வேணுவின் குடும்பத்தினர் சுறுசுறுப்படைவது தெரிந்தது. வேணுவின் மனைவி அவருக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.சற்று இளமையாக இருப்பதாகவே எண்ணும் வகையில் தோற்றம். வேணுவும் அப்படித்தான்.ஓய்வுபெறும் வயது என்று கணிக்கமுடியாத தோற்றம். தலைக்கு டை அடித்துக்கொண்டால் நிச்சயம் இன்னும் இளமையாக காட்சியளிப்பார். நாள் தவறாமல் நடைப்பயிற்சியும், உடற்பயிற்சியும் செய்துவருபவர் என்று மேடையில் பேசும்போதே குறிப்பிட்டிருந்தனர். சர்க்கரை வியாதிக்கு மாத்திரை ஏதும் எடுத்துக்கொள்ளாமலே , உடற்பயிற்சி மூலமே கட்டுப்படுத்தி வருபவர் என்று பாராட்டினார்கள். வேணுவின் மனைவிக்கு தலைமுடி நரைத்திருக்கவில்லை. முன் நெற்றியில் முடி சரிந்து விழுந்துகொண்டு இருப்பதை தூக்கி வாரினாற்போல் பின்னுக்கு இழுத்து கட்டினால் இன்னும் இளமையோடு தெரிவார் என்று தோன்றியது. வேணுவின் மனைவியுடன் உறவினர்களும், அக்கம்பக்கத்து வீட்டு ஆண்களும், பெண்களுமாய் நின்றுகொண்டு வந்தவர்களை வரவேற்றனர். வாசலில் பட்டாசு சரம் வெடித்தது.  வேணுவுக்கு பட்டாசு வெடிப்பதில் உடன்பாடு இலையென்றாலும், நண்பர்கள் வழக்கத்தை கடைபிடித்தனர். பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த வேணுவின் வண்ணப்படம் தாங்கிய வாழ்த்து அட்டையை வேணுவின் வீட்டாரிடம் நினைவுப்பொருட்களுடன் சேர்த்து அளித்தனர்.வீட்டிலிருந்த ஒருவர் வேணுவுக்கு சால்வையணிவித்தார். வேணுவின் அண்ணனாம்.அவர்கள் வீட்டிலிருந்த ஒரு இளைஞன் இயன்றவரை நடக்கிற நிகழ்வுகள்  எல்லாவற்றையும் டிஜிட்டல் கேமராவில்  சிறைப்படுத்திக்கொண்டிருந்தான்.சொந்த வாகனங்களில் சென்றவர்கள் சிலர் முன்னமேயே வந்து காத்துக்கொண்டிருந்தனர். சிலர் அப்போதுதான் வந்து சேர்ந்தனர்.அப்படி வந்தவர்களில் சசிகுமார் மட்டும் வீட்டிற்குச் சென்று உடைமாற்றிக்கொண்டு, கைக்குழந்தையான தன்னுடைய மகளை காரில் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். குழந்தை பிறந்தபிறகு அண்மைக்காலங்களில் அவர் இதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இட வசதிக்காக தேனீர் விருந்து மாடியில், திறந்த வெளியில்  ஏற்பாடாகியிருந்தது. யாரும் ஷூக்களை கழற்றவேண்டிய அவசியமும் இல்லையென்பதாலும் இப்படியொரு ஏற்பாடு. எல்லோரும் மாடிக்குச் சென்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். கிழக்கே  கடல் தெரிந்தது. மாலை நேர கடற்காற்று இதமளித்தது. சசிக்குமார் தூக்கிவைத்துக்கொண்டிருந்த குழந்தையை சிலர் கொஞ்சிக்கொண்டிருந்தனர். அழகிய பெண்குழந்தை. சீனக் குழந்தை போல் தோற்றம். ஆனால் ஒல்லியாக இருக்கவில்லை. அளவான புஷ்டி. அதுவும் அவ்வப்போது சிரித்து சூழலையே இனிப்பாக்கிக் கொண்டிருந்தது.எல்லோருக்கும் தேனீர் அளிக்கப்பட்டது. வேணுவின் குடும்பத்தினர் அறிமுகப்படுத்தப்பட்டனர். வேணுவின் அண்ணன், தம்பி, வேணுமனைவியின் தம்பி மற்றும் அவருடைய மகன்,  ஆகியோர். தேனீர் அருந்திக்கொண்டிருக்கும்போது எல்லோருக்கும் ஒரு சிறிய பை வழங்கப்பட்டது. அதில் இனிப்பு, காரம், எதாவதொரு நினைவுப்பொருள் இருக்கும். இதுவும் வழக்கமாய் அனைவரும் செய்வதுதான் என்பதால் யாரும் பையை வாங்கி பிரித்துப்பார்த்துக் கொண்டிருக்கவில்லை.எல்லாம் முடிந்து ஒவ்வொருவராக வேணுவிடமும் குடும்பத்தினரிடமும் சொல்லிக்கொண்டு கைக்குலுக்கி விடைபெற்றுக்கொண்டிருந்தனர். திடீரென்று நினைவு வந்ததுபோல் யாரோ சொல்ல, வெளியில் செல்ல தயாரானவர்களையும் தடுத்து நிறுத்தி புகைப்படம் எடுக்கத் துவங்கினர். வேணுவும் அவர் மனைவியும் மையமாக நிற்க மற்ற  நண்பர்கள் சுற்றி நின்றனர். நிறைய பேர் இருந்ததால் கொஞ்சம்பேர் மட்டும் முதல் சுற்றில் நின்றனர். வேணுவின் மனைவி புகைப்படம் எடுக்கவிருந்தவரை சற்றுப் பொறுத்திருக்கும்படி கையமர்த்திவிட்டு, அடுத்த சுற்றுக்கு காத்து நின்றுகொண்டிருந்த சசிக்குமாரின் பெண்குழந்தையை ஆவலோடு கேட்டு வாங்கி தூக்கிவைத்துக்கொண்டு புகைப்படத்திற்கு காட்சியளித்தார்.

எல்லாம் முடிந்து கீழிறங்கி வந்தபோது  நண்பர்கள் கூட்டத்தில் இருவர் மட்டும் ஓரமாகச் சென்று  பேசிக்கொண்டிருந்தனர். ’’மேடையில பேசும்போது குடும்பத்தார், குடும்பத்தார்னு சொல்றப்பல்லாம் கூட அவ்வளவா கஷ்டமாத் தெரியலப்பா.ஆனா, அந்த அம்மா அப்படி குழந்தைய வாங்கி வச்சுக்கிட்டு போட்டோவுக்கு நின்னப்பதான் ரொம்ப கஷ்டமாப் போயிடுச்சிப்பா. ஆண்டவன் இவங்களுக்கு ஒரு குழந்தையக் குடுத்திருக்கக்கூடாதான்னு நினைக்காம இருக்கமுடியல?

Thursday, April 14, 2011

நீ-யும்


கேரம் போர்டில்
இப்போது உன்முறை
நீ
வெற்றிகளை அடுக்கவில்லை
வெற்றியை நோக்கி முன் நகரவில்லை
எதிராளியின் வெற்றிக்கு தடைபோடவில்லை
துணை போகவில்லை
ஒருமுறை சுண்டிவிட்டாய்
எதிலும் தொட்டுக்கொள்ளாமல்
சென்றுவந்தது
இம்முறை
விளையாடிவிட்டாய்
நீயும்

Sunday, April 10, 2011

ஜெ.மோ.பரிந்துரைத்த சுகுமாரன் கவிதைகள்


கையில் அள்ளிய நீர்

அள்ளி
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அந்நியமாச்சு
இது நிச்சலனம்
ஆகாயம் அலை புரளும் அதில்
கை நீரை கவிழ்த்தேன்
போகும் நதியில் எது என் நீர்?

உன் பெயர்

உன் பெயர்‍-

கபாலத்தின் உட்கூரையில் கிளைத்து
என் நாளங்களில் மிதக்கும் சங்கீத அதிர்வு
என் தனிமைப் பாலையில் துணை வரும் நிழல்
என் கதவருகில் நின்று தயங்கும் புன்னகை
காணி நிலத்தில் ததும்பும் நிலவின் ஒளி

உன் பெயர்-

இன்று என் உற்சாகங்களை மூடும் வலை
என் காதை அறுத்துத் தரச்சொல்லும் வினோதக் கோரிக்கை*
கொய்யப்பட்ட என் சிரசை ஏந்தும் சலோமியின் தாம்பாளம்**
என் இதயத்தைத் துளைக்கும் அன்பின் விஷம் தடவிய வாள்
நீயே என் ஆனந்தம்,அலைச்சலில் ஆசுவாசம்,குதூகலம்
நீயே என் துக்கம்,பிரிவின் வலி

காலம் அறியும்:
உன் பெயர் வெறும் பெயரல்ல எனக்கு

நீயே அறிபவள்
நான் வழியில் எதிர்ப்பட்ட வெறும் பெயரோ உனக்கு?

உன் பெயர்-
இந்த இரவில் காலி அறையில் மாட்டிய கடிகாரம்
*தனது காதலின் பரிசாகக் காதை அறுத்துத் தந்த வான்கா என்ற ஓவியன்
**யோவானின் தலையை அன்பளிப்பாக வேண்டிய பைபிள் பாத்திரம்
தனிமை இரக்கம்

வந்து போகின்றன பருவங்கள் தடம் புரண்டு
வசந்தம் நாட்கணக்கில்
எனினும்
வருடம் முழுதும் இலைகள் உதிர்கின்றன‌
வெற்றுக் கிளைகளாய் நிமிர்ந்து
கபாலத்தைப் பெயர்க்கிறது தனிமை

திசைகளில் விழித்து நிராதரவாய் வெறிக்கின்றன‌
உனது நீர்த்திரைக் கண்கள்
அலைகளின் இடைவேளைகளில் உயிர்த்துத் ததும்புகிறது
உனது சோக முகம்
காலடி மணலின் துகள்கள் பிளந்து அலைகிறது
உனது பெயரின் தொனி

வேட்டை நாய் விரட்டல்,
இளைப்பாறுதலின் சங்கீதம் என
அகல்கிறது நாட்களின் நடை

வெளியில் போகிற எப்போதும்
காயம்படாமல் என் கிளி திரும்பியதில்லை
இதோ உன்னிடமிருந்தும்
ஆனால் அலகில் நீ பரிசளித்த நெற்கதிர்

இசை தரும் படிமங்கள்
1.
விரல்களில் அவிழ்ந்தது தாளம்
புறங்களில் வீசிக் கசிந்தது குரல்

கொடித் துணிகளும்
சுவர்களும் விறைத்துக்கொண்டன‌

ஈரம் சுருங்கிய பிடிமணலாய்ப்
பிளந்தேன்
தொலைவானின் அடியில்
நூலறுந்த பலூன்

யாரோ தட்டக் -' கதவைத் திற'
வெளிக்காற்றில்
மழையும் ஒரு புன்னகையும்
(ஹரிக்கும் ஸ்ரீ நிவாசனுக்கும்)
2.
புல்லாங்குழல்
சகல மனிதர்களின் சோகங்களையும்
துளைகளில் மோதிற்று

கூரை முகட்டிலிருந்து இறங்கிய நாளங்கள்
ரத்தமாய்ப் பெய்தன‌
அறையெங்கும் இரும்பின் வாசனை

மறு நிமிஷம்
என் உப்புக் கரைந்து எழுந்தது
மல்லிகை மணம்
(ஹரிபிரசாத் சௌரஸ்யாவுக்கு)
3.
மழை தேக்கிய இலைகள்
அசைந்தது
சொட்டும் ஒளி

கூரையடியில் கொடியில் அமர‌
அலைக்கழியும் குருவி

காலம்-‍ ஒரு கண்ணாடி வெளி

எனக்கு மீந்தன‌
கண்ணீரும் சிறகுகளும்
(யேசுதாஸுக்கு)
4.
குழம்பியிருந்தது சூரியன் அதுவரை
கரை மீறிய கடல்
என் சுவடுகளைக் கரைத்தது
இசை திரவமாகப் படர்ந்து உருக்க‌
செவியில் மிஞ்சியது உயிர்
திசைகளில் துடித்த தாபம்
சகலத்தையும் பொதிந்துகொள்ள விரிந்தது

அண்ணாந்தால்
கழுவின கதிர்களுடன் வெளியில் சூரியன்
(ஸாப்ரிகானுக்கு)

முதல் பெண்ணுக்குச் சில வரிகள்
இரவின் திரைக்குள் மறையும் திசைகள்
இரண்டு அலைவேளைகளுக்கு இடையில் மௌனம்
அல்லது
இரண்டு மௌனங்களுக்கு இடையில் அலைமீட்டல் என‌
கரையின் புறங்களில் கடலின் முடிவற்ற சங்கீதம்

உனது பிம்பம்
நிலைக்கண்ணாடியிலிருந்து வெளிக்கிளம்பி வந்ததுபோல்
நடந்து மறைந்தாள் எவளோ

இதோ
நீ எதிர்ப்பட்ட அநாதி காலத்தின் ஏதோ ஒரு நொடி
ஆனந்த வெளியாக ஒளி ததும்பி
நிற்கிறது நினைவில்

இதோ
பார்வையில் அகலும் பெண்முகங்களில் எல்லாம்
உனது நீர்த்திரைக் கண்களைத் தேடி அலுக்கிறது
பொழுதின் தனிமை

பரிசுப் பொருட்களுடன் குதூகலமாய் வந்தவர்கள்
மயானம் கலைபவர்களாய்ச் சொல்லாமல் போகிறார்கள்
நட்போ, காதலோ
இப்படித்தான் வாய்க்கின்றன பெண்ணே
எனது உறவுகள்

இப்போதும்
நீ வரலாம் என்று திறந்து வைக்கும் கதவுகளில்
வெறுமையின் தாள ஒலி

இப்போதும்
மறதியின் இருளில் மெல்லச் சரியும் நாட்களின் விளிம்பில்
உனது மூக்குத்தியின் அலையும் சுடர்

உனது நேசப் பெருவெளி பசுமை தீய்ந்து
பனியில் உறைந்தது எப்போது?
உனது அன்புப் பிரவாகம் உலர்ந்து
பாறைகளின் மௌனம் திரண்டது எப்போது?

கானல்கள் உன் பதில்க‌ள்
அறிந்தும்
என்னோடு அலைகின்றன கேள்விகள்

இனி
காத்திருக்கப் பொறுக்காது கடலின் சங்கீதம்

நாளை
நமது நேசத்தை ஒப்படைக்கப் போகிறேன்
காலத்தின் காட்சி சாலையில்

எங்காவது
எப்போதாவது
வழிகள் கலைந்து பிரிகின்றன உறவுகள்

இனி
காற்றில் ஆறும் காயங்கள்
வடுவாக மிஞ்சும் உன் பெயர்

இவ்வளவும் ஏன்
இன்னும் நான் நேசிக்கும் முதல் பெண் நீ...



நதியின் பெயர் பூர்ணா

முதல் விழுங்கலில் துவர்த்தாலும்
மறுமுறௌக்குத் தவித்தது நாக்கு
இரண்டாவது மடக்கில்
தோளில் முளைத்தன சிறகுகள்
தக்கையாய் மிதந்தன கால்கள்

போதைக்கும்
கனவுக்கும் இடைப்பட்ட‌
காலமற்ற பொழுதில் வந்தாய் நீ

கருவறை விட்டெழுந்த அவ்சரத்தில்
பிருஷ்டங்கள் நடுவே சுருண்டிருந்தது உன் ஆடை
சருமத்தில் சந்தன வியர்வை
வெண்கல முலைகளில் ததும்பும் இனிமை

கனவின் படிகளில் இடறியோ
மதுவின் சிறகிலிருந்து உதிர்ந்தோ
உன் யோனிக்குள்
துளியாய் விழுந்தேன்

'யாதுமாகி நின்றாய் காளி
என்கும் நிறைந்தாய்'
2.
பூர்ணா நதியின் மடிப்புகளில்
ஒடுங்க மறுத்தது
அலைகிறது சூரிய வெளிச்சம்
ஆர்யாம்பாளின் கண்ணீரில் கரையாத‌
பிரம்மச்சாரியின் முதலைப் பிடிவாதத்தின்
காவி நொடியில்
பூமி மயங்கி
மீண்டும் விழித்தது

கற்படியின் குழியில் தேங்கிய நீர்
வெதுவெதுப்பு
காற்று உந்திய புதிய அலையில் குளிர்.
நதியும் அத்வைதிதான்‍
போதையும் கனவும் போல‌

கடவுளைப் புணர்ந்த ஆனத்தம் கொண்டாட‌
நானும்
மனிதனைப் புணர்ந்த பாவம் தொலைய‌
நீயும்
மூழ்கிக்கொண்டிருக்கிறோம் தேவி
ஒரே நதியில்


Monday, March 7, 2011

ஜெ.மோ.பரிந்துரைத்த க.மோகனரங்கன் கவிதைகள்


ஜெ.மோ.பரிந்துரைத்த கவிதைகள் க.மோகனரங்கன்
கல் திறந்த கணம்

பெயரழிந்த ஊர்
அரவமற்ற பிரகாரம்
கரையழியா சரவிளக்கு
திரியெரிந்து பிரகாசித்தது இருள்
காலடியோசைக்கு
சடசடத்துப் பறந்தது புறாக்கள்
எச்சம் வழிந்த முலையொன்றில்
எதேச்சையாய் விரல்பட்டுவிட
உறுத்துப் பார்த்தது
கருத்த சிலை
திகைப்புற்றுக் கண் திருப்ப
காதில் விழுந்தது
நூறு நூறு வருடங்கள் கடந்து
உளியின் ஒலி

பரிசில் பாடல்

அனபைச் சொல்ல‌
அநேகமிருக்கிரது வழிகள்
மலர்களைத் தருவது
மரபும் கூட
வாழ்த்துச் சொல்லி
வந்த அட்டைகளுக்கும்
வண்ணக் காகிதங்களில் சுற்றப்பட்ட‌
வெகுமதிப் பொருட்களுக்கும்
நடுவே
தானென பூத்து வீசுமுன்
முகத்தினை கசங்கச் செய்வதில்லை
என் விழைவும்
மேலும்
வசீகரத்தின் பயங்கரத்தையும்
அன்பின் குரூரத்தையும்
பரஸ்பரம் அறியாதவர்களல்ல நாம்
உப்பின் கரிந்த நீர் பரவிய‌
என் தோட்டச் சிறுவெளியில்
கருகி உதிர்ந்தவை போக‌
எஞ்சிக் கிளைத்தது
இம் முட்கள் மட்டுமே‌ ‌
முனை முறிந்துவிடாமல்
காத்துவை
அடிக்கடி நகம் கடிக்குமுனக்கு
எப்போதாவதென் முகம் கிழிக்க‌
உதவும்.

தூது

நான்
வெளியேறக் காத்திருந்தது போல‌
மூடிக்கொள்கின்றன கதவுகள்
முதுகிற்குப் பின்
எப்போதும்
முத்திரையிடப்பட்ட உறையினுள்
குறுங்கத்தியோ
நழுவ விட்ட மோதிரமோ
ஓலை நறுக்கோ
யார் விட்டுச் சென்றது
யாரிடம் கையளிக்க வேண்டும்
தெரியவில்லை
தெருக்கள் முடிந்த வெளியோ
ஆசுவாசங் கொள்ளவும் விடாது
அவசரப் படுத்துகிறது
இப்போதும்
அழைப்புமணிகள்
பொருத்தப்படாத காலத்துள் நின்று
தட்டித்
திறந்து கொண்டிருக்கிறேன்
கதவுகளின் பின் கதவுகளை‌

காகிதத்தில் கிளைத்த காடு

விளையாட்டாய்
ஓரிலையை எழுதினேன்
பசுமை நிறத்தது
வியப்புற்று
பூவரைந்தேன்
வாசம் மணத்தது
கனியெழுத‌
இனிமை தித்தித்தது
கிளைகள் வேர்களென‌
முழுமரமும் எழுதினேன்
நிழலும் குளிர்வும்
வாய்த்தது
பெயரறியாப் பறவைகள் வந்து
இசைத்திருந்தன‌
மரம் பெருகி வனம் நிறைய‌
நனி பெரும் மனிதர்
நலியும் நகர் தொலைத்து
சடை வளர்த்து
இடையில் உரி தரித்தலையும்
ஏகாங்கியானேன்
                            -க.மோகனரங்கன்

Sunday, February 20, 2011

கண்மணி குணசேகரனின் "நெடுஞ்சாலை"

கண்மணி குணசேகரனின் "நெடுஞ்சாலை" நாவலுக்கான விமர்சனம். - ச .முத்துவேல்


24 x 7 மனிதர்களின் இயலா நிலை 


அனைவருக்கும் வணக்கம்,

துப்பறியும் நாவல்கள், தோராயமாக 50 பாலகுமாரன் நாவல்கள் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் நான் வாசித்த நாவல்களின் எண்ணிக்கை 20 லிருந்து 30 வரைகூட தேறாது. அந்தளவுக்குப் புதிய வாசகனான எனக்கு நெடுஞ்சாலை நாவல் பற்றிய விமர்சனம் என்பது மிகையான சுமைதான். எனவே என் பக்குவத்தில் நெடுஞ்சாலை குறித்த வாசிப்பனுபவத்தை பகிர்ந்துகொள்கிறேன்

கண்மணி குணசேகரன் நவீனத் தமிழிலக்கிய உலகம் நன்கறிந்த பன்முகத்திறன் கொண்ட படைப்பாளி. நடு நாட்டைக் களமாகவும், நடு நாட்டு வட்டாரமொழியிலும் எழுதும் இயல்புவாதப் படைப்பாளி. அடிப்படையில் விவசாயி. இதுவரையிலும் அவர் எழுதியுள்ளவற்றில் ஒரு விவசாயியே தென்படுகிறார். ஆனால், அவர் தொழில்முறையாக கம்மியர். அதாவது மோட்டார் மெக்கானிக். அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் பணியாற்றும் தொழிலாளி. நான்கூட நினைத்ததுண்டு. வேளாண் சார்ந்தே எழுதும் கண்மணி, ஏன் தன் துறைசார்ந்து எழுதுவதில்லையென்று? நானறிந்தவகையில் வெள்ளெருக்குத் தொகுப்பில் இடம்பெற்ற கொடிபாதை சிறுகதை மட்டுமே சற்று போக்குவரத்துத் துறைக்கு நெருங்கிவருவதாக நினைவுகூர்கிறேன். இவ்வாறான சூழலில் தன் தொழில், துறை சார்ந்து எழுதியிருக்கும் நாவல்தான் நெடுஞ்சாலை. போக்குவரத்துத் துறை, ஓட்டுனர், நடத்துனர், கம்மியர் ஆகியவர்களை முதன்மையாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பது.

துறை சார்ந்த அனுபவங்களை படைப்புகளாக்குவதன்மூலம் அறியப்படாத பக்கங்களை நுட்பமாகவும், வாழ்வனுபவமாகவும் உணரமுடிகிறது. ஓர் இன்னலின் அல்லது அவலத்தின் தீவிரத்தை தொடர்பற்றவர்களும் நன்கு உணரச்செய்யும் வகையில் உணர்வுபூர்வமாக சம்பவங்களாகவும், தகவல்களாகவும், வாழ்வனுபவங்களாகவும் நீட்டிக்கச் செய்து வாசிக்கக் கிடைக்கும்போது அத்தீவிரத்தை நன்கு உணரமுடிகிறது. போக்குவரத்துத் துறை சார்ந்த இந்த நாவல் அந்தத் துறையைப் பற்றியும், அங்கு பணியாற்றும் மனிதர்களின் கொண்டாட்டங்கள், அவலங்கள் ஆகியவற்றை நமக்கு அளிக்கிறது. கண்மணி இந்த நாவலின் மூலம் சொல்லவிரும்புவதும் இவைகளாகத்தான் இருக்கமுடியும். பணிமனை, தொழிற்சாலை சார்ந்தவை இலக்கியத்தில் இடம்பெற்றிருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நெடுஞ்சாலையில் விரிவாகப் பதிவாகியிருக்கிறது. அந்தவகையில் இதைப் புதுமையான களம் என்று எண்ணுகிறேன்.இலக்கியமும் வாழ்வாதாரமும் ஒன்றாகவே அமைந்தவர்கள், அல்லது நெருக்கமாக அமையப் பெற்றவர்களைக் காட்டிலும், இயந்திரங்களோடு வாழும் அடிப்படையான தொழிலாளர்கள் இலக்கியத்தில் ஈடுபடுவது ஒப்பீட்டளவில் கூடுதல் பாராட்டுக்குரியதுதான். அந்தவகையில் கண்மணி குணசேகரன், மு.ஹரிகிருஷ்ணன் போன்றவர்களின்மீது வியப்பும் , மதிப்பும் ஏற்படுகிறது.

நெடுஞ்சாலை நாவலில் விவரிக்கப்பட்டுள்ள பணிமனை, தொழிற்சாலை , ஆட்டோமொபைல் சார்ந்த வாழ்க்கையைக் கொண்ட ஒரு தொழிலாளியாகவே நானும் இருப்பதால் இந்த நாவலில் எனக்குப் பெரிய அளவில் புதியதொரு வாழ்பனுபவம் கிடைக்கவில்லை என்பதையும் பதிவுசெய்ய விரும்புகிறேன். இது நிச்சயம் என்வரையிலானது.

நான் இங்கு கதையைச் சொல்லிவிடப்போவதில்லை. கதையென்று சொன்னால் ஓரிரு வரிகளில் சொல்லிவிடமுடியும்.எனவே, கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை நாவலின் மூலம் எழுப்பப்பட்டுள்ள சமூக விமர்சனங்கள், நுட்பங்கள் ஆகியவற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.

ESSENTIAL SERVICE எனப்படும் இன்றி அமையாதவைகளான மின்சாரம், போக்குவரத்து, பால், காவல், தொழிற்சாலைகள் போன்றவற்றில் பணிபுரிபவர்கள் கடிகாரச் சுற்றுப்பணி எனப்படும் round the clock shift duty ல் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக இயங்கவேண்டியவர்கள். பரபரப்பாக ஓடி சூடுபறக்க பணிமனைக்கு வந்து நிற்கும் வண்டியில் அந்தச் சூட்டிலும் பராமரிப்புப் பணீசெய்யவேண்டியவர்கள் இவர்கள். சாணி, மலம் ஆகியவை ஒட்டியிருக்கும் ஈரம் காயாத பகுதிகளைத் தொட்டு வேலை செய்யவேண்டிவர்கள்.பயணிகள் எடுக்கும் வாந்தியைக் கழுவித்தள்ள வேண்டிய வர்கள்..இவர்களூக்கு பண்டிகை நாட்கள், ஞாயிறு விடுமுறை, இரவுத்தூக்கம், நேரத்திற்கு உணவு என்பதெல்லாம் மற்றவர்களைப் போன்று அமையப்பெறாதவர்கள். எல்லோரும் உறங்கப்போகையில் இவன் வேலைக்குச் சென்றுகொண்டிருப்பான். செய்தித்தாள் போடுபவனுக்கு விடிகாலைத்தூக்கம் என்பது வெறும் கனவு. அரிதாகக் கிடைக்கும் விடுமுறை நாட்களிலும் உடலென்னும் இயந்திரம் வழக்கம்போல் விழித்துக்கொண்டுவிடும். எல்லோரும் உறங்கிக்கொண்டிருக்க ஓட்டுனர் விழிப்புணர்வோடு வண்டியோட்டிக்கொண்டிருப்பார். இதுபோன்ற, இன்றி அமையாத பணிபுரிபவர்களை அரசாங்கம் எப்படி நடத்துகின்றது? என்ன சிறப்புச் சலுகைகள், மரியாதைகள் அளிக்கிறது என்று பார்த்தோமானால் கசப்பே மிஞ்சும். தகுதியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பையளிக்க வேண்டிய அரசாங்கம் அவர்களைத் தற்காலிகத் தொழிலாளர்களாக நியமித்து, அத்துக்கூலிகளாக பயன்படுத்தி சுரண்டல் செய்கிறது. இந்த நிலையிலேயே பணி நாள் முழுதும் கழித்துவிட்டு ஓய்வுபெறவேண்டியவர்களும் இருக்கிறார்கள். இப்படிச் சுரண்டல் செய்வதோடல்லாமல் பணியில் நிகழக்கூடிய தவறுகளுக்குப் பொறுப்பேற்கும் வகையில் தண்டனையாக இவர்களின் கூலியையேப் பறித்துக்கொள்ளும் அவல நிலையையும் நாவலில் சுட்டிக்காட்டுகிறார்.டீசல் சிக்கனம் செய்யாதவர்களிடமிருந்து அதற்குரிய தொகையாக தண்டனைப்பணம் கூலியில், சம்பளத்தில் பிடிக்கப்படுவது போன்ற உதாரணங்களைச் சொல்லலாம்.

இந்த நாவலின் மையமாக இருப்பது பேருந்தா? ஓட்டுனர், நடத்துனர், கம்மியர் எனப்படும் தொழிலாலிகளா? போக்குவரத்துத் துறையா? தனியார் வாகனங்களா? இவை எல்லாவற்றிற்கும் பொதுவாக இருக்கும் நெடுஞ்சாலைதான். பொருத்தமான தலைப்பை இட்டிருக்கிறார் ஆசிரியர்

380 பக்கங்களைக் கொண்ட நாவலை இரண்டு பாகங்களாகப் பிரித்திருக்கிறார். முதல் 300 பக்கங்களை வீடு என்றும், எஞ்சியவற்றை நாடு என்றும் குறிப்பிட்டிருக்கிறார் ஆசிரியர். இவ்விரண்டு பாகங்களும் தனித்து நின்றாலும் முழுமையுடையதாகக் கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது. நேரடியாக இரண்டாம் பாகத்தைப் படித்தாலும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் உள்ளது. முதல் பாகம் கதையில் வரும் மூன்று முதன்மையான கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து, அவர்களோடு ஆழ்ந்த நெருக்கத்தை அளிக்கிறது. இதேபோன்று முதல் பாகத்தில் வரும் அத்தியாயங்கள் 15 மற்றும் 16 ஆகியவை மட்டுமேகூட தனித்தனியாக நின்று இரண்டு சிறந்த சிறுகதைகளாகவும் விளங்குகிறது. முதல் பாகம் அழுத்தமானதாகவும் ,உணர்வுபூர்வமாகவும் அமைந்துள்ளது.

நாவல் என்பது விரிவான களம் கொண்டது. எவ்வளவு சொன்னாலும் தீராத விரிவும், இன்னும் சொல்ல நிறைய இருக்கும் அளவிற்கும் அனுபவங்களைக் கோருவது. இன்னும் விரிவாக கண்மணி அவர்களால் எழுதிவிடமுடியும். ஆனால் அந்த விரிவு நாவலுக்கு வலுசேர்க்கும் வகையில் நெருக்கமாகவும், பொருத்தமானதாகவும் இருக்கவேண்டும். நெடுஞ்சாலையில் ஆசிரியர் கையாண்டுள்ள சில பகுதிகள் நாவலின் விரிவுக்கும், மையத்திற்கும் சற்று இடைவெளி கொண்டுள்ளது. உதாரணமாக கம்மியர் பணிக்கு எழுத்துத் தேர்வுக்குச் செல்பவனிடம் வைக்கப்படும் கேள்வித்தாளில் இடம்பெற்றுள்ள கேள்விகளையெல்லாம் எழுதிக்கொண்டிருப்பது என்பன போன்று சிலவற்றைச் சொல்லலாம். கதாபத்திரங்கள் நிகழ்த்தும் அவர்களுக்கிடையிலான உரையாடல்களின் வழியாக துணைக் கதைகள் சேர்க்கப்பட்டுள்ளது, நாவலுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. மாறாக இவற்றிற்குப் பதிலாக, essential service செய்யக்கூடியவர்களின் நிலையை, இன்னல்களை , பணிச்சூழலில் மனிதர்களுக்குள் விளங்கும் அரசியலை இன்னும் ஆழமாகவும் , நுட்பமாகவும் சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது. நன்றாகவே இதைச் செய்திருக்கிறார் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.அதேசமயம் ஆசிரியர் நிகழ்த்தும் நுட்பம் கவனத்தை ஈர்க்கிறது. உதாரணமாக சென்னையிலிருந்து வயர்லெஸ் வழியாக தகவல் சொல்லப்படுவது முதலில் திண்டிவனத்திலுள்ள பணிமனைக்குத் தெரிவிக்கப்பட்டு, பிறகு அங்கிருந்து தகவல் போக வேண்டிய இடமான விருத்தாச்சலத்திற்குத் தெரிவிக்கப்படும். அவர்கள் பயன்படுத்தக்கூடிய VHF SET வயர்லெஸ்ஸின் சக்தியின் நுட்பம் இயல்பாக பதிவாகியிருக்கிறது. இதை ஆசிரியர் உணர்ந்து பதிவு செய்திருந்தாரோ,இல்லையா என்று தெரியவில்லை.

இந்நாவல் நடைபெறும் காலக்கட்டம், நாவல் வெளியாகியிருக்கும் 2010லிருந்து குறைந்தது 10 ஆண்டுகள் பின்னோக்கிய காலக்கட்டம் என்று அறியமுடிகிறது. எனில் இந்த நாவலை ஆசிரியர் எப்போது எழுதத்துவங்கினார் என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது. செல்பேசிகள் இல்லாத காலக்கட்டம். தீரன், பெரியார், நேசமணி JJTC என்று போக்குவரத்து வட்டாரங்கள் நிலவிய காலக்கட்டம். ஹீரா, தேவயானி, ரம்பா ஆகியோர்களுக்கு நட்சத்திரத்தகுதி உச்சத்திலிருந்த கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்த காலக்கட்டம். இந்த நாவலில் கிரிக்கெட் ரசிகர்களையும் சினிமா ரசிகர்களையும் நையாண்டி செய்யும் கட்டங்கள் பதிவாகியிருக்கிறது.பொதுவாகவே இலக்கியம் அவலங்களை, சோகங்களைப் பற்றியே பேசுபவை. கொண்டாட்டம், நகைச்சுவை என்பவை திரைப்படங்களில் பெற்றிருக்கும் வரவேற்பைப்போல் இலக்கியத்தில் பெறவில்லை. நெடுஞ்சாலை நாவல் முழுக்கவே நகைச்சுவை உணர்வு மிளிர எழுதப்பட்டுள்ளது. மேலோட்டமாக சிரிப்பை வரவைத்தாலும், அடியாழத்தில் மிஞ்சும் சோகமே நம் மனதில் எஞ்சி நிற்கும். அந்தவகையில்தான் ஆசிரியரும் எழுதியிருக்கிறார்.மேலும் ஆளுங்கட்சியினரின் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள், சேவற்பண்ணை போன்று ஆண்களீன் ஓய்வறையில் சுதந்திரமாக ஒருவர் நிர்வாணமாகக் குளித்துவிட்டு ஆடை மாற்றுவது, தன் கணவன் ஓட்டுனராக இயங்கும் வேளையில் அதே வண்டியில் பயணம் செய்யத்துடிக்கும் மனைவி போன்ற பல துல்லியமான பதிவுகள். முதன்மையான கதாபாத்திரங்களான மூவரும் சேர்ந்து மதுவிடுதியில் மதுவருந்தும் கட்டம் மிகுந்த நகைச்சுவையை அளிக்கிறவகையில் அமைந்துள்ளதைப்போல் நாவல் முழுக்கவே அமைந்திருக்கிறது. நவீன இலக்கியம் என்கிற பெயரில் காமம் வெளிப்படும் தருணங்களை ,உடலுறவுக் காட்சிகளை, விலாவாரியாக எழுதித் தள்ளாமல் ,ஆசிரியர் நாசூக்காகவும், படிமங்களாகவும் எப்போதும் எழுதுபவர். அய்யனாருக்கும், சித்தாளுக்கும் இடையிலான காமம் கலந்த காதல் வாசகர்களின் நெஞ்சில் கனமாக உறைந்து நிற்கக் கூடியது.

அஞ்சலை நாவலைவிட அதிகப் பக்கங்கள் கொண்டிருந்தாலும் அஞ்சலையளவுக்கு கனம் இல்லையென்று கருதுகிறேன்.

(08-05-10 அன்று சொற்கப்பல் விமர்சனதளம் மற்றும் தக்கைச் சிற்றிதழ் ஆகியவை இணைந்து நடத்திய நாவல் விமர்சனக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை) 
நன்றி‍ -தடாகம்

Thursday, February 17, 2011

ஜெ.மோ.ப.மனுஷ்யபுத்திரன் கவிதைகள்

திசையறிதல்

எல்லா நன்றியறிதல்களும்
பதிலுபச்சாரங்களும்
உன்னைக் கொஞ்சம்
சிறுமைப்படுத்தவே செய்கின்றன‌

இன்றிலிருந்து உனது
எல்லாப் பரிசுகளையும்
நான் தரையில் விட்டுவிடுகிறேன்
ஈரம் காயாத நாய்க்குட்டிகளைப் போல‌
தம் திசைகளை
தாமே அறியட்டும்ன

மறுமுனையில்

உன் நாசியில்
விழுந்து உடைகிறது
என் பிரியத்தின்
ஒரு தனித்த மழைத் துளி

மழை வரலாம்
என்று நினைத்துக்கொண்டே நடக்கிறாய்
சாலையின் மறுமுனையில் இருக்கிறது
உன் வீடு

காற்ரை மூர்க்கமாய்
கடந்துகொண்டிருக்கின்றன‌
மறுமுனையறியாத‌
எண்ணற்ற மழைத் துளிகள்


ஒரு பெரிய அவமானத்திற்குப் பிறகு

நன்றாகக் குளிக்க வேண்டும்
வெ ந் நீராக இருந்தால் மிகவும் நல்லது
இருப்பதிலேயே நல்ல அதிகம் பயன்படுத்தாத‌
தெம்பூட்டும் ஆடையை அணியலாம்

தெருவில் இறங்கி நடக்கும்போது
அடிக்கடித் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை

அதிக இறுக்கம் அதிக இணக்கம்
இரண்டுமே நம்மைக் காட்டிக் கொடுத்துவிடும்
குழந்தைகளை இயல்பாகக் கொஞ்சவேண்டும்

மர்மமாகப் புன்னகைப்பவர்கள்
கேட்காமலேயே தம் பேச்சை மாற்றுபவர்கள்
செயற்கையாகப் பேச்சை மாற்றுபவர்கள்
எல்லோரையும் நாகரீகமாக வணங்கலாம்

சாதுரியமாக விரைவாக‌
தப்பிச் சென்றுவிட வேண்டும்
நாம் மதிக்கப்படும் ஒவ்வொரு இடத்திலிருதும்

தனித்த் அறை ஒன்றில்
மனங்கசந்து அழும்போது
கதவு தட்டும் ஓசைகேட்டு
கண்களைத் துடைத்துக்கொள்ள வேண்டும்

எல்லையற்றது
இந்த உலகின் தீமை
எல்லையற்றது
இந்த உலகின் கருணை

இறந்தவனின் ஆடைகள்

இறந்தவனின் ஆடைகளை
எப்படி பராமரிப்பதென்றே
தெரியவில்லை

இறந்தவனின் ஆடைகளை
அத்தனை சுலபமாய்
அணிந்துகொண்டுவிடமுடியாது
அதற்காகவே
காத்திருந்தது போலாகிவிடும்

அவை
இறந்தவனின் இடத்தில்
இருந்துவிட்டுப் போகட்டும்
என்றிருக்க இயலாது
இறந்தவர்களோடு
அவ்வளவு இயல்பாய்
உறவுகள் சாத்தியமல்ல

தானமெனக் கொடுக்கலாமெனில்
இறந்தவனின் சாயல்கள்
எதிர்பாரா இடங்களில்
எதிர்பாரா உடல்களிலிருந்து
நம்மை நோக்கி வரும்

இறந்தவனின் ஆடைகளை
அழித்துவிடலாம்தான்
இறந்தவனைத்
திரும்பத் திரும்ப அழிக்க‌
கைகள் நடுங்குகின்றன‌

இறந்தவனின் ஆடைகள்
ஆடைகள் போலில்லை
இறந்தவனின் தோலாக இருக்கிறது
   (அபு என்கிற பக்கீர் முஹம்மதிற்கு)

அந்தரங்கம்

எனக்குத் தெரியும்

ஓசைப்படாமல்
கதவு திறந்து வந்து

சுற்றுமுற்றும்
கவனித்துவிட்டு

பைய அருகிருந்து
குருடனின் சுயமைதுனம் பார்க்கும்
ஒரு ஜோடிக் கண்களை

என் யாசிக்கும் கைகளில்

என் யாசிக்கும் கைகளில்
வந்து கூடும் மேகக்கூட்டங்களில்
பெருகிச் செல்கின்றன‌
எல்லா மழைக் காலங்களும்

என் யாசிக்கும் கைகளில்
கருணைத் தீ பரப்பும்
முத்தங்கள் வெடித்து
ரேகைகள் நடுங்குகின்றன‌

என் யாசிக்கும் கைகளில்
வந்து புதைகிறது
சில்லிட்ட வார்த்தைகளோடு
ஒரு கசங்கிய முகம்

என் யாசிக்கும் கைகளில்
வழிந்தோடுகிறது
நோயாளியின் கசந்த வாந்தி

என் யாசிக்கும் கைகளில்
பறவைகள் இட்ட‌
எச்ச விதைகளிலிருந்து
அசைகிறது இப்பெருங் கானகம்

கொடுக்கும் கைகளின்
குரூரங்களற்ற‌
என் யாசிக்கும் கைகளைக்
கதகதப்பாய் மூடுகின்றன‌
உன் யாசிக்கும் கைகள்
               -மனுஷ்யபுத்திரன்











Thursday, February 10, 2011

ஜெமோ. பரிந்துரைத்த தேவதேவன் கவிதைகள்

நவீன தமிழிலக்கிய அறிமுகம் என்கிற நூலில் ஜெயமோகன் பல எழுத்தாளர்களின் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் ஆகியவற்றை பட்டியலிட்டு பரிந்துரைத்துள்ளது நாமறிந்ததே.அவற்றில் கவிதைகளை மட்டும் இயன்றவரை இங்கு தொகுக்கலாம் என்றொரு எண்ணம்.முதலில் தேவதேவன் கவிதைகள்


பயணம்

அசையும்போது தோணி
அசையாதபோதே தீவு

தோணிக்கும் தீவுக்குமிடையே
மின்னற்பொழுதே தூரம்

அகண்டாகார விண்ணும்
தூணாய் எழுந்து நிற்கும்
தோணிக்காரன் புஜ வலிவும்
நரம்பு முறுக்க நெஞ்சைப்
பாய்மரமாய் விடைக்கும் காற்றும்
அலைக்கழிக்கும்
ஆழ்கடல் ரகசியங்களும்
எனக்கு, என்னை மறக்கடிக்கும்!

அமைதி என்பது...

பொழுதுகளோடு நான் புரிந்த
உத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
நான் உன்னருகே வந்தேன்

அமைதி என்பது மரணத்தறுவாயோ?

வந்தமர்ந்த பறவையினால்
அசையும் கிளையோ?

வாழ்வின் பொருள் புரியும்போது
உலக ஒழுங்குமுறையின் லட்சணமும்
புரிந்துவிடுகிறது

அமைதி என்பது வாழ்வின் தலைவாயிலோ?

எழுந்துசென்ற பறவையினால்
அசையும் கிளையோ?

வீடும் வீடும்

பாதுகாப்பற்ற ஒரு மலரின் கதகதப்பிற்குள்
பாதுகாப்புடன் இருக்கிறேன் நான்
என்னை ஆசுவாசப்படுத்த முயலும் இந்த வீடு
ஒரு காலத்தில்
என்னை ஓய்வுகொள்ளவிடாது
வாட்டி எடுத்த ஓட்டைக்குடிசையிலும்
குளிருக்குப் பற்றாத
அம்மாவின் நைந்த நூல் சேலையிலும்
கருக்கொண்டது.
எப்போதும் நம் லட்சியமாயிருக்கும்
இவ்வுலகம் பற்றிய கனவு,
நம்மில் ஒருக்காலும் இதுபோல்
கருக்கொண்டதில்லை என்பதை நான் அறிவேன்
மலரோடு தன் வேலை முடிந்ததும்
விலகி வெளி உலாவும் கருவண்டைப் போல்
நாம் ஒருக்காலும் இருந்ததில்லை என்பதையும்

ஒரு பயணம்

கூட்டத்தில் ஓர் இடம் பிடிப்பதற்காகக்
காலங்கள் எவ்வளவை வீணாக்கினாய்
எஞ்சிய பொழுதுகள் எரிந்து நின்ற வெளியில்
என்ன நடந்துவிடுமென்று அஞ்சினாய்

பெற்றோர் உடன்பிறந்தோர் தவிர்த்த
உற்றோர் உறவினர்களை
உறவு சொல்லி விளிக்க
உன் நா காட்டும் தயக்கத்தில்
என்ன எச்சரிக்கையைச் சுமந்து வந்தாய்
உன் அறியாப் பருவத்திலிருந்தே

எப்போதும் உன் முகத்தில்
வெகு நீண்ட பயணத்தின் களைப்பு
இன்னும் வரவில்லையோ
நாம் வந்தடைய வேண்டிய இடம்?
இன்னும் காணவில்லையோ
நாம் கண்ணுற வேண்டிய முகங்கள்?

யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்

குப்பைத்தொட்டியோரம்
குடித்துவிட்டு விழுந்துகிடப்போனை

வீடற்று நாடற்று
வேறெந்தப் பாதுகாப்புமற்று
புழுதி படிந்த நடைபாதையில்
பூட்டு தொங்கும் கடை ஒட்டிப்
படுத்துத் துயில்வோனை

நள்ளிரவில் அரசு மருத்துவமனை நோக்கிக்
கைக்குழந்தை குலுங்க அழுதுகொண்டு ஓடும் பெண்ணை

நடைபாதைப் புழுதியில் அம்மணமாய்
கைத்தலையணையும் அட்டணக்காலுமாய்
வானம் வெறித்துப் படுத்திருக்கும் பைத்தியக்காரனை

எதனையும் கவனிக்க முடியாத வேகத்தில்
வாகனாதிகளில் விரைவோனை

காக்கிச் சட்டை துப்பாக்கிகளால் கைவிலங்குடன்
அழைத்துச் செல்லப்படும் ஒற்றைக் கைதியை

உப்பளம்

சேறு மித்துக் கூறு கட்டிய
தெப்பங்களிலும் பாத்திகளிலும்
என் நாடி நரம்புகளிலும்
நிரம்புகின்றன
பூமியிலிருந்தும் கடலிலிருந்தும்
மின்சார வேகம்
உறிஞ்சிக் கொட்டுகிற
நீர்

நீருக்கும்
சூரியனுக்கும்
நடுவே
நீரோடு நீராய்க்
காய்ச்சப்படும் மனிதன்
முதிர்கிறான்
ஒரு தானியக் கதிராய்.
ஊமை இதழ் திறந்து
எட்டிப் பார்க்கின்றன
உப்புப் பற்கள்.
இப்புன்னகை காணவோ
இத்தனை உழைப்பும்?
மனிதப் பாட்டின் அமோக விளைச்சல்
மலை மலையாய்க் குவிந்து
கண்கூச வைக்கிறது
பூமியின் மேல்தோலைப் பிறாண்டித்
தூசு போர்த்தும் பேய்க்காற்றின்
ஜம்பம் சாயாதபடி
பூமியெங்கும்
இடையறாது நீர் தெளித்துக்
கண்காணிக்கிறான் மனிதன்
மீண்டும் எடுத்துக்கொள்ளப்
பொழியும் மழையிடமிருந்து
காக்கிறது
அம்பாரங்களின் மார்மூடிய
மேலாடைக் கற்பு.
கோடானுகோடிக்
கண்சிமிட்டல்கள் ஓய்ந்து
நிலைத்த பார்வை
இருள்திரை நீங்கிய
சூர்யப் பிரகாசம்
விடிவு
நிழலற்ற பேரொளி
ஓர் உப்புக் கற்பளிங்கில்
சுடர்கிறது
கடலும் பூமியும் பரிதியோடிய
பெருங்கதை
மானுஷ்யம்
வியர்வை

எத்தனை அழுக்கான இவ்வுலகின்...

கொட்டகை நோக்கிச் செல்லும்
காலி குப்பை வண்டியின் உள்ளே
ஆற அமர கால் மடித்து அமர்ந்து
வெற்றிலை போட்டுக் கொண்டு
வண்டியசைவுக்கு அசையும்
தன் ஒத்திசைவையும் அனுபவித்தபடி
ஆடி அசைந்து ஒரு அழகான் தேவதை போல்
சென்று கொண்டிருக்கும் பெண்ணே,

முகஞ்சுளிக்கும் புத்தாடைகளுடன்
அலுவலகம் செல்லும் வேகத்தினால்
பரபரப்பாகிவிட்ட நகரச் சாலை நடுவே...
பணி நேரம் முடிந்து ஓய்வமைதியோ
மாடு கற்பித்த ஆசுவாசமோ, இல்லை
அபூர்வமாய் ஒளிரும் பேரமைதியே தானோ

எத்தனை அழுக்கான இவ்வுலகின் நடுவிலும்
நீ இரு மூலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு
வாழ்ந்தே விடுவது கண்டு
இன்பத்தாலோ துன்பத்தாலோ துடிக்கிறதேயம்மா
என் இதயம்.

தூரிகை

வரைந்து முடித்தாயிற்றா?

சரி
இனி தூரிகையை
நன்றாகக் கழுவிவிடு

அதன் மிருதுவான தூவிகளுக்கு
சேதம் விளையாதபடி
வெகு மென்மையாய்
வருடிக் கழுவி விடு

கவனம்,
கழுவப்படாத வர்ணங்கள்
தூரிகையைக் கெடுத்துவிடும்

சுத்தமாய்க் கழுவிய
உந்தூரிகையை
அதன் தீட்சண்யமான முனை
பூமியில் புரண்டு
பழுதுபட்டு விடாதபடி
எப்போதும் மேல் நோக்கிய
வெளியில் இருக்க-
இப்படிப் போட்டு வை
ஒரு குவளையில்

ஒரு சிறு குருவி

என் வீட்டுக்குள் வந்து
தன் கூட்டைக் கட்டியது ஏன்?
அங்கிருந்தும்
விருட்டென்று பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு?
பார்,ஜன்னல் கம்பிகளை உதைத்து
இப்பவும் விருட்டென்று தாவுகிறது அது
மரத்திற்கு
மரக்கிளையினை
நீச்சல் குளத்தின் துள்ளுபலகையாக மதித்து
அங்கிருந்தும் தவ்விப் பாய்கிறது
மரணமற்ற பெருவெளிக் கடலை நோக்கி

சுரீரெனத் தொட்டது அக்கடலை,என்னை,
ஒரு பெரும் பளீருடன்.
நீந்தியது அங்கே உயிரின்
ஆனந்தப் பெருமிதத்துடன்

நீந்தியபடியே திரும்பிப் பார்த்தது தன் வீட்டை:

ஓட்டுக் கூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர்சருகுகளும்
உள் அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்
- தேவதேவன்



Friday, December 17, 2010

மக்கள் கலை இலக்கிய விழா

இவ்வாண்டும் மணல் வீடு சிற்றிதழும், களரி அமைப்பும் இணைந்து நடத்தும் மக்கள் கலை இலக்கிய விழா சிறப்புற நிகழவிருக்கிறது. அது குறித்த அறிவிப்பு கீழே.





-----------------------------------------------

நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. அளிக்க விரும்புவோர்,

ஆசிரியர், மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர், சேலம் - 636 453 என்ற முகவரிக்கு பணவிடை மூலமாகவோ,

கீழுள்ள வங்கி எண்ணுக்கு நேரடியாகவோ அளிக்கலாம்.

M.HARIKRISHNAN
INDIAN BANK,
MECHERI BRANCH,
SB A/C - 534323956

தொடர்புக்கு - மு.ஹரிகிருஷ்ணன், மணல்வீடு ஆசிரியர் (9894605371)

Wednesday, November 3, 2010

பரத்தைக்கூற்றும், சாரு நிவேதிதா கூற்றும்

பரத்தை கூற்று பற்றி CSK வுக்கு நான் அனுப்பிய மின்னஞ்ச‌ல் இங்கே:

*******

அன்புள்ள நண்பர் CSK (சரவணகார்த்திகேயன்)

மிகவும் தாமதமான இந்தக் கடிதத்திற்கு முதலில் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனோ, இப்போது எதையுமே எழுதவோ, முன்பு போல் ஆர்வத்தோடு படிக்கவோ இயலாமல் ஒருவித அயர்ச்சியோடும், சோம்பலோடும் இருக்கிறேன். அதனால் தான் உடனடியாக எழுதவில்லை. பரத்தைக்கூற்று நூல் வெளியீட்டு விழாவுக்கு முந்தின நாளே நான் தொகுப்பைப் படித்து முடித்து விட்டிருந்தேன். ஆனாலும் மேற்சொன்ன காரணங்களினால் எழுத முடியவில்லை. இத்தனைக்கும் அன்று நூல் வெளியீட்டு விழா முடிந்த பின்னர், பரத்தைக்கூற்று பற்றி சாருவுக்காகவே எழுதி விட வேண்டும் என்றொரு உத்வேகம் எழுந்திருந்தது. அங்கிருந்த நண்பர்களுடன் கூட நான் இதைப் பகிர்ந்து கொண்டேன். வீடு வந்து சேர்ந்ததும் உத்வேகத்தை லௌகீக வாழ்க்கை இழுத்துக்கொண்டது.


நீங்கள் மிகவும் விரும்புகிற, மதிக்கிற சாருவே உங்கள் நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்து சிறப்பித்தது அரிய பேறு தான். அவர் அந்த மேடையை வழக்கம் போல தன் பெருமையை, தன்னைப் பற்றியே பேசும் மேடையாகப் பயன்படுத்திக் கொண்டார் என்பதில் எனக்கு வருத்தம். பரத்தைக்கூற்று பற்றி, உங்களைப் பற்றி அவர் என்ன விதமான கருத்துக்களை வேண்டுமானாலும் சொல்லட்டும். விரும்பி அழைக்கப் பட்டதாலேயே, வந்து துதி பாடிவிட்டுச் செல்லும் சந்தர்ப்பவாத மனப்பான்மை சாருவுக்கு இல்லையென்றால் அது பாராட்டத்தகுந்தது தான். ஆனால், தொகுப்பைப் பற்றி, அல்லது தமிழ் இலக்கியங்களைப் பற்றியாவது இன்னும் சற்று விரிவாகப் பேசியிருக்கலாம். கவிதை என்கிற வடிவத்தில் தமிழ் எத்தனை முன்னோடியான பாரம்பரியமும், பெருமையும் கொண்டது! நல்லவேளை, தமிழில் 5 லிருந்து 10 பேர்வரை நல்ல கவிஞர்கள் தேறுவார்கள் என்று பெரிய மனது பண்ணி வாய் உதிர்த்தாரே!

’பரத்தையர்களுக்கு குரல் கொடுக்க நீங்கள் யார்?’ என்றார். இப்படிக் கேட்க அவருக்கு உரிமை இருக்கும் காரணத்தை அவர் எழுதிக் கொண்டிருக்கும் நாவலே சாட்சி. பரத்தையர்களின் வாழ்வை, வலியை, திமிரை அவர்களே எழுதுவது தான் மிகப்பொருத்தம் என்று நானும் சொல்வேன். ஆனால், அதற்காக மற்றவர்கள் செய்யக்கூடாது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இலக்கியப் படைப்புகளின் வழியாக வாழ்பனுவத்தைப் பெற்றுக் கொள்கிறான் வாசகன். கற்பனைத்திறன் மூலம் உணர்ந்து தான் சாராத வாழ்க்கையிலிருந்தும் கூட படைப்பை உருவாக்குபவனே சிறந்த படைப்பாளி. தான் சார்ந்த அனுபவங்களை, எண்ணங்களை படைப்புகளாக்குவதை விட அறைகூவலானதாகவும், எழுத்தாளன் என்கிற அங்கீகாரத்திற்கு பொருந்துவதாகவும் இந்த கற்பனாவாதத் திறனே அமைகிறது. சில நூறாண்டுகள், ஆயிரமாண்டுகள் முன்பு நடந்த காலக்கட்டத்தைப் புனைவாக எழுதும்போது நாம் குறை சொல்கிறோமா? பெண்களின் மன நிலைகளை , சிக்கல்களை மிகவும் அந்தரங்கமானதாக உணர்ந்து எழுத்தில் வெளிப்படுத்தும் ஆண் படைப்பாளிகள் இருக்கிறார்கள். இதுவொரு உதாரணம். அந்த ஆண் படைப்பாளிகளிடம் சென்று எந்தப் பெண்களும் ’எங்களைப் பற்றி எழுத உனக்கு என்னத் தகுதியிருக்கிறது’ என்று குரலெழுப்பியதாக நான் அறியவில்லை. எனவே, பரத்தையர் பற்றிய உங்களின் குரலை நான் வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். இந்தத் தொகுப்பை ஒரு நல்ல முயற்சி என்று நான் குறுக்கிவிட விரும்பவில்லை. நிச்சயம் அதற்கும் மேலான இடம் இதற்கு உண்டு.

மறக்கவியலாது -இத்தனைக்காலம்
மலத்துளையருகே நானறியாமல்
ஒளிந்திருந்தப் பேரழகுச் சிறு மச்சம்
கண்டெடுத்த சோடாபுட்டிக்காரனை

புட்டிப்பால் வாங்கவேண்டும்
குழந்தைக்கு-முலைப்பாலையும்
விடுவதில்லையெம் புரவலர்கள்

உறக்கத்தின் அருமை கேள்
கறைபடாத இரவொன்றில்
கம்பளி போர்த்தித் துயிலும்
நிம்மதியின் சுகஸ்பரிசத்தைப்
பெருங்கனவாய் தரிசிக்கும்
ஓர் தேவடியாளிடம்.

எந்நிறுவனமாவது
எம் யோனிகளுக்குத்
தருமா காப்பீடு?

இவை போன்ற கவிதைகளில், அந்தக் கற்பனைத்திறனின் துல்லியம் நிகழ்வதை உணர முடிகிறது.

2007ம் ஆண்டில் ஆகஸ்டு இதழில் என் முதல் கவிதை இடம் பெற்றிருந்த அதே குங்குமம் இதழில் உங்கள் கவிதையும் வந்ததை, நமக்குள் இணையம் வழி அறிமுகம் ஏற்பட்டபோது பகிர்ந்துகொண்டோம். அது தான் உங்களுக்கும் முதல் கவிதை என்றும் சொல்லியிருந்தீர்கள். வைரமுத்து அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கவிதைகளில் உங்களின் கவிதை முத்திரைக்கவிதையாக சிறப்பு அங்கீகாரத்தோடு வந்திருந்ததை நான் இங்கு நினைவு கூர்கிறேன். நம் முதல் கவிதை ஒரே நாளில் வெளியிடப் பட்டிருந்தாலும், இன்று நீங்கள் ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டு விட்டீர்கள். மேலும், அறிவியல் சார்ந்த ஒரு (சந்திராயன்) நூலையும் வெளியிட்டுவிட்டீர்கள். உங்களின் ‘சகா- சில குறிப்புகள்’ நான் மிகவும் ரசித்துப் படிப்பது. தொடர்ச்சியாகவும், நிறையவும் எழுதும் வல்லமை உங்களுக்கு இருப்பதை குறிப்பிட்டு அதைப் பாராட்டும் முகமாகவே நான் இவற்றையெல்லாம் சொல்கிறேன். அதே போல், ஒரே மையப்புள்ளியில், தளத்தில் அமைந்த பல கவிதைகள் எழுதி, ஒரு தொகுப்பாக்குவது சாதனை தான் என்றே சொல்வேன். பழமலயின் குரோட்டன்களோடு கொஞ்ச நேரம் தொகுப்பை ஒரு உதாரணமாக, ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருக்கிறேன். பரத்தையர் கூற்று கவிதைகளில் நீங்கள் தன்னளவிலான தணிக்கையை கறாராகவே செய்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. தேர்ந்தெடுத்த 150 கவிதைகள் ’பத்தோடு ஒன்று பதினொன்றாக இருந்து விட்டுப் போகட்டுமே. தொகுப்புதானே’ என்று அலட்சியம் காட்டாத வகையில் இருக்கின்றன என்று சொல்வேன்.

கவிதையின் இலக்கணமாக ஒரு கொள்கை கடைபிடிக்கப்படுவதை நான் காண்கிறேன். அதாவது, கவிதை என்றாலே ஒரு அழகிய பொய் இருக்க வேண்டும். அதாவது, மிகை யதார்த்தம். நதி சிரித்தது, ரோஜாவுக்குக் காய்ச்சல் வரும், பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும்... என்பதாகவெல்லாம் சொல்லலாம். இவற்றிற்கு நான் எதிரியல்ல. இவற்றை நான் வெறுக்கவுமில்லை. எனக்கு இம்மாதிரி எழுத வரவில்லையே என்கிற ஆதங்கம் தான் எனக்குண்டு. நீங்களும் பரத்தைக்கூற்று கவிதைகளை நேரடியாகவே, எளிமையான வெளிப்பாட்டுடனேயே எழுதியிருப்பது எனக்கு நெருக்கமாயிருக்கிறது. உங்களின் எழுத்துக்களின் வழி நல்ல வாசிப்புப் பக்குவம் உங்களுக்கிருப்பது தென்படுகிறது.

செய்நன்றியறிதல் பகுதியில் என் பெயரைப் பார்த்தவுடன் முதலில் வியப்பும் பதற்றமும் ஏற்பட்டது. பின், நெகிழ்ச்சியாகவும், கூச்சமாகவும் உணர்ந்தேன். என் பெயரைக் குறிப்பிட்டதற்கு நன்றி.

’பரத்தையர் கூற்று படித்துவிட்டு, நிச்சயம் தொலைபேசி வழியாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ என் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறேன்’ என்று நானளித்திருந்த வாக்குமூலமே, நல்லவேளையாக இந்தச் சோம்பேறியை எழுதவைத்தது.

பகுத்தறிவு
யாதெனில்
கலவிக்கு
காசு கேட்பது

என்று படித்தவுடன் சிரிப்பும், சிந்தனையும் எழுகிறது. காமம் என்கிற இயற்கையின் உந்து சக்தியே, மனிதனை சீரழிக்கும் சக்தியாகவும் ஆகக் கூடியது.

’ஒவ்வொரு மனசும் ஒவ்வொரு யோசனை’ என்கிற வரியை நான் மிகவும் ரசித்தேன். பொதுவான இவ்வரிகள், நான் அடிக்கடி உணர்வதின் மொழி வெளிப்பாடு.

சாரு சொன்னது போல் நிறைய சொல்விளையாட்டுக்களை நிகழ்த்தியுள்ளீர்கள். மொழியின் வலிமையை நமக்கேற்றபடி வளைக்க முடிகிற சாமர்த்தியம் தானே இது. ’உச்சத்தினுளரல் உளரலினுச்சம்’ போன்ற நிறைய இடங்கள்.

ஊனமுற்ற ஒருவனுக்கு
தாழ்வெண்ணம் வராமல்
திகட்டத் திகட்டக்கொடு
புணர்ச்சியின் சுவையை

நிறையப் பேசுகிறது, இக்கவிதை.

என் பிரியத்திற்கும், மதிப்பிற்கும் உரிய நண்பரான சாரு, அடுத்த முறை நான் அவரைச் சந்திக்க வாய்ப்பு நேரும் போது, எப்போதும் போல் மாறாத அன்பை வழங்கக் கூடியவர் என்று உறுதியாக நம்புகிறேன். என்னுடைய வெளிப்படையான கருத்துக்களுக்கு வரவேற்பு அளித்து, உள்ளார்ந்த நன்றியும் சொல்லக்கூடியவர் சாரு என்பதே சாருவைப் பற்றிய என் புரிதல்.

இன்னும் பகிர்ந்து கொள்ள எனக்கு சங்கதி இருந்தாலும், சோம்பேறித்தனத்தோடு முடித்துக்கொள்கிறேன்.

நன்றி

ச.முத்துவேல்

தீபாவளி நல்வாழ்த்துகள்